Showing posts with label சந்திப்புகள். Show all posts
Showing posts with label சந்திப்புகள். Show all posts

Monday, November 26, 2018

பிப்ரவரி 11 ஆம் தேதி, 2017 சிங்கப்பூருக்கு வருகை தந்த இயக்குனர் திரு.தங்கர்பச்சான் அவர்களைச் சந்தித்து தி சிராங்கூன் டைம்ஸ் ஆசிரியர் குழு எடுத்த சிறு நேர்காணல். 
(கேள்விகள் – சிவானந்தம் நீலகண்டன், நேர்காணல் -  ஷாநவாஸ், அழகுநிலா)

1. தற்போது ஏதாவது படம் இயக்கி கொண்டிருக்கிறீர்களா? உங்களிடம் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது? ஏன்?     

மக்கள் அதற்குத் தயாராக இல்லை. மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு தொடர்பான படங்களைப் மக்கள் ஆதரிப்பதில்லை. அதுபோன்ற படங்களைத் தொலைக்காட்சிகளிலும் திருட்டு சிடிக்களிலும் பார்க்கிறார்கள். ஆனால் மோசமான படங்களைத் திரையரங்குகளுக்குச் சென்று ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்துப் பார்க்கிறார்கள். இந்த மக்கள் மாறாதவரை நான் அதுபோன்ற படம் எடுத்து என்ன செய்வது?

2. இப்படி மக்களைக் குறை சொல்லி உங்களைப் போன்ற கலைஞர்கள் ஒதுங்கிக்கொள்வது நியாயம்தானா?

நீங்கள் தயாரிக்கிறீர்களா? முடியாது அல்லவா? இதுதான் பிரச்சனை. மக்கள் பார்ப்பதில்லை. மக்கள் பார்த்தால்தான் தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள். நான் தயாராகத்தான் இருக்கிறேன். அதே நேரத்தில், நானும் ஆயிரம், இரண்டாயிரத்தை அதாவது மக்களின் பணத்தை மட்டும்  குறிவைத்து மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைச் சிதைத்து படம் எடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? முடியாதல்லவா?       

3. ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி, அழகி, தலைகீழ் விகிதங்கள் என இலக்கியப்பிரதிகளை திரைப்படமாக்கியவர் நீங்கள். இலக்கியத்துக்கும் திரைப்படத்துக்குமான இடைவெளி அதிகரித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

மீண்டும் சொல்கிறேன். உங்களுக்கு வாக்குரிமை கொடுத்திருக்கிறார்கள். வாக்குரிமை எவ்வளவு முக்கியமானது? அதைக் கொண்டு போய் முன்னூறு ரூபாய்க்கும் நானூறு ரூபாய்க்கும் விற்கும் மக்களிடமிருந்து நீங்கள் எந்த கலை படைப்பை அடையாளம் காணமுடியும்? என்ன செய்ய முடியும்? திருடிவிட்டு ஒரு கூட்டம் சென்று சிறையில் இருக்கிறது. மீண்டும் மூவாயிரம் கார்களைக் கொண்டு சென்று வரவேற்கிறார்கள்.  மீண்டும் அவர்களையே ஆட்சிக்கு கொண்டு வரப் பார்க்கிறார்கள். இந்த மக்களுக்கு எதற்கு இலக்கியம்? எதற்கு திரைப்படம்? இவர்களிடம் என்ன ரசனை இருக்கிறது? அரசியில் விழிப்புணர்ச்சி வராத மக்களிடம் எவ்வாறு கலை இலக்கிய ரசனை மேம்படும்? அதுதான் பிரச்சனை.

4. 20 ஆண்டுகளாக நீங்கள் எழுதிய கதைகளைத் தொகுத்து தங்கர் பச்சான் கதைகள் என்று வெளியிட்டீர்கள். அத்தொகுப்பு எந்த மாதிரியான எதிர்வினைகள், பாராட்டுகளைப் பெற்றது?

எளிமையாக சொல்லவேண்டும் என்றால் சினிமாக்காரனுக்கு அறிவில்லை என நினைக்கிறான் இலக்கியவாதி. இது மிக முக்கியம். சத்யஜித் ரே, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் எல்லோரும் சினிமாவுக்குள் வந்தவர்கள்தான். அப்படித்தான் நானும் வந்தேன். முதலில் இலக்கியம். பிறகு ஒளிப்பதிவு. பிறகுதான் திரைப்படம். திரைத்துறையில் இருப்பதாலேயே அதை சாதகமாக நினைக்கிறார்கள். பிரச்சனையே அதுதான். நான் திரைப்படத்துறையில் இல்லாமல் இந்தத் தொகுப்போ, வேறு நாவல்களோ வந்திருந்தால் அதற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு நிச்சயம் பெரிய அளவில் இருந்திருக்கும். ஐயாயிரம் படிகள் விற்பதே பெரிய எழுத்தாளர்களுக்கு கடினமாக இருக்கையில் என் நூல் இலட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளது. என் எழுத்தின் தாக்கம் நிச்சயம் இருக்கிறது. ஆனால் அதை திறனாய்வாளர்கள் வெளிக்காட்டமாட்டார்கள். ஏனென்றால் நான் திரைத்துறையில் இருப்பது தடையாக இருக்கிறது.            

5. பள்ளிக்கூடம் திரைப்படத்திலும் தொடர்ந்து உங்கள் செயல்பாடுகளிலும் அரசுப்பள்ளிகள் மற்றும் தாய்மொழி வழிக்கல்வி, இவை மங்கிக்கொண்டிருக்கும் தமிழகச் சூழலை கவனப்படுத்தி வருகிறீர்கள். அதிகமாக மாணவர்களைச் சந்தித்து உரையாடும் ஒருவராகவும் இருக்கிறீர்கள். இவ்விஷயங்களில் நம்பிக்கை அளிக்கும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றனவா? கிராமத்து மாணவர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது?

அந்த மாற்றம்தான் இப்போது ஜல்லிக்கட்டு போராட்டம். கிட்டத்தட்ட நூறு கல்லூரிகளுக்கு மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகப் போயிருக்கிறேன். திட்டமிட்டே போய் பேசி, திட்டியிருக்கிறேன். எல்லோரும் தலைகுனிந்துதான் அமர்ந்திருப்பார்கள். பதிலே இருக்காது. ஏனென்றால் அந்தக் கேள்வியின் நியாயம் அவர்களுக்குப் புரிகிறது. முகத்திலேயே காறித் துப்புகிறான். உங்கள் மேலே அழுகின குப்பையை அள்ளி வீசுகிறான். உணர கூட மாட்டீர்களா? அப்படியே பார்த்துவிட்டு போய்க்கொண்டே இருப்பீர்களா? ஏற்கனவே இலட்சக்கணக்கில் படித்து சாலையில் நிற்கிறார்கள் வேலை இல்லாமல். இந்தச் சான்றிதழை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்? வங்கி கல்விக்கடன் என்று சொல்லி உங்களை அவமானப்படுத்துகிறது. வேலை கிடைக்காமல் எப்படி கடனைத் திருப்பிக் கட்டமுடியும். எந்த எதிர்ப்பையும் காட்டாமல் உட்கார்ந்திருக்கிறீர்கள். எதற்கு இந்த படிப்பு? என்று கேட்டிருக்கிறேன். அதனுடைய வெளிப்பாடுதான் இது எல்லாம். திடீரென்று அது ஒருநாளில் வந்தது இல்லை.    

6. இதுபோன்ற இயக்கங்கள் மாணவர்களின் எழுச்சியை ஓர் அரசியல் நிலைப்பாட்டை நோக்கி இட்டுச் செல்லும் என்று நினைக்கிறீர்களா?

செல்ல வேண்டும். இது தொடக்க நிலைதான். நிச்சயமாக  அங்கிருந்துதான் மாற்றம் வரவேண்டும். மக்களிடமிருந்து அது வராது. மக்கள் ஏற்கனவே விலைபோய்விட்டார்கள். அடுத்த தலைமுறையிடம்தான் விழிப்புணர்ச்சி வரவேண்டும். வெற்றியா, தோல்வியா என்று பார்ப்பதைவிட போராட முன்வந்ததுதான் பெரிய வெற்றி.

மாணவர்கள் போராடினார்கள் சரி. ஆனால் இந்தப் போராட்டத்தில் எவன் பண்பாடு, கலாச்சாரத்தைச் சீரழித்து பணம்தான் முக்கியம் என சினிமா எடுத்தானோ அவன் சென்று தலைமை தாங்குகிறான். அந்த இடத்தில் அவனை விரட்டி அடித்திருக்க வேண்டுமா இல்லையா? அதை செய்யவில்லை.

மிகவும் கொச்சையான சொற்களைக் கையாண்டு, பெண்களை இழிவுபடுத்தி நமது கலாச்சாரத்தை மிகவும் சீர்கேட்டிற்கு ஆளாக்கியவன் அவன். பேய்ப் படங்களையே ஒன்று, இரண்டு, மூன்று என தொடர்ந்து இருபது வருடங்களாக எடுத்துக்கொண்டிருப்பவன். பேய்ப்படம் என்றால் அறிவை மழுங்கடிக்கக்கூடிய, மூட நம்பிக்கைகளை குழந்தைகள் நிலையிலேயே ஊக்குவிக்கின்ற அவனை நீங்கள் உங்களுக்கான இடத்தில், உங்கள் சார்பாக பேச வைக்கின்றீர்கள். இது என்ன அரசியல்? அவனை வெளியே போகச் சொல்ல உங்களால் முடியவில்லை. அரசியல்வாதியை வெளியே போகச் சொல்கிறீர்கள். அரசியல்வாதியையாவது நாம் தேர்ந்தெடுத்தோம். இது அதைவிட மோசம் இல்லையா? மாணவர்கள் நிச்சயம் வரவேண்டும். ஆனால் இதை முதலில் வெளியேற்றவேண்டும். இதற்குப்பிறகுதான் அது நடக்கும்.

7. தமிழ் தேசியத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ் தேசியம் வந்து நிற்கும். வரும். அதற்கான முன்னெடுப்பு நடந்துவிட்டது. தொடங்கியாகிவிட்டது. அந்த ஏறு தழுவுதல் போராட்டமே தமிழ் தேசிய உணர்வுதானே. அதனுடைய அடிப்படைதானே அது.

இங்கு நடந்த ஓர் அருவறுப்பான அரசியல் நிலையைப் பொறுக்க முடியாமல், இதற்கும் மேலே அவமானத்தைத் தாங்க முடியாமல் எல்லோரும் ஒன்றிணைந்ததுதானே அது. எல்லோரும் அவமதிப்பதைத் தாங்கமுடியாமல் தமிழனாக எழுந்த அரசியல் எழுச்சிதான் அது.      

8. மொழி, தண்ணீர், கலாச்சாரம், விவசாயிகள்  வாழ்வாதாரம் போன்ற பிரச்சனைகளைப் பேசும்போது தொழில்மயம், ஆங்கிலமயம், கடனட்டை, கணினி மற்றும் நகரமயம் போன்றவற்றுக்கு எதிராகப் பேசுவது தவிர்க்க முடியாததாகிறது. விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் அப்படிச் செய்யப்படுவதால்தான் மக்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை என்று கருத இடமிருக்கிறது. உங்கள் கருத்து என்ன? இந்த விஷயத்தில் கலை, இலக்கியத்தின் பங்கு என்ன?

அப்படி அல்ல. முதலில் மக்களின் வரிப்பணத்திலேயே படித்துவிட்டு அந்த மக்களுக்கும் மண்ணுக்கும் எந்த பங்களிப்பும் செய்யாமல் மண்ணை விட்டு வெளியேறுவது முதலில் குறைய வேண்டும். நமது அறிவு முழுக்க வெளியே போய் யாருக்கோ பயன்படுகிறது. இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு விவசாயம் செய்ய ஆள் இல்லை. அப்படியென்றால் அதை யார் செய்வது? அது ஒரு அசிங்கமான தொழிலா? தொழில் இல்லை. மூன்று வேளையும் விதவிதமாக எப்படி சமைக்கிறது என்பதைக் காட்டுகிறார்கள். ஆனால் எப்படி விவசாயம் செய்வது என்று யாரும் சொல்வதில்லை. அரசாங்கம் செய்யவில்லை. அப்பா அம்மாக்களும் தன் பிள்ளை டாக்டர், என்ஜினியர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படியென்றால் யார்தான் அதை செய்வது? கலை மட்டும் அதை செய்துவிட முடியாது. ஒவ்வொரு தாய் தகப்பனுக்கும் அதில் பங்கு இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் அதில் பங்கு உண்டு. அப்படி நாம் செய்தால் இது இரண்டாம் பட்சம் ஆகிவிடும். அதுதான் நாம் செய்ய வேண்டியது.          

9. எழுத்தாளர் திரு கி.ராஜநாராயணனை நேர்காணல் செய்து நீங்கள் எடுத்திருந்த ஆவணப்படம் நேர்த்தியாகவும் அருமையாகவும் இருந்தது. வாழ்த்துகள்.

நன்றி. நன்றி.

10. நீங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்

இயங்க வேண்டும் என்றால் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கிறார்கள் அல்லவா? நான் திரும்ப, திரும்ப சொல்லிக் கொண்டிருப்பது இதுதான். எத்தனை பேருடைய உழைப்பில், மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு வெளியேறிவிட்டு தனது குடும்பத்திற்காக மட்டுமே உதவ வேண்டும் என்று ஒதுங்கிவிடுகிறார்கள்.

அதில் ஒரு பத்து விழுக்காடு பணத்தை இப்போது சொன்ன எல்லாவற்றிற்காகவும் உலகம் முழுவதிலிருந்தும் கொண்டு வர வேண்டும். விவசாயத்தை முன்னெடுக்க பலதரப்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டி உள்ளது. அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைகளை நாம் கேட்டுப் பெற வேண்டி உள்ளது. இளையர்களுக்குப்  பயிற்சி அளிக்க வேண்டி உள்ளது. விவசாயிகளையே மாற்ற வேண்டி உள்ளது. இயற்கையைச் சிதைக்காத வேளாண்மையைச் சொல்லித் தர வேண்டி உள்ளது. பொதுமக்களைக் முதலில் உதைக்க வேண்டும். விவசாயி என்றால் யாரோ என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். காசு கொடுத்தால் பொருள் வரும் என்று நினைக்கிறார்கள். பொருள் இல்லாவிட்டால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். ஏற்கனவே விளையும் பொருள்களையும் கமிஷனுக்காக இறக்குமதி செய்கிறார்கள். இறக்குமதி செய்ய, செய்ய ஒருகட்டத்தில் அந்தப் பொருள் இல்லை என்றால் வாழ முடியாது. அவன் சொல்வதுதான் விலை. இதற்குப் பெரிய பிரச்சாரம் தேவை. அதற்கு பெரிய அளவில் பணம் தேவைப்படுகிறது. இது எல்லாம் வராமல் விவசாத்தை உயிர்ப்பிக்க முடியாது. தமிழினத்தைப் பற்றி பேச முடியாது.  விவசாயிகளைக்   காக்காமல் தமிழ் தேசியம் வராது. அது அவசியமும் இல்லை. அப்படிப்பட்ட தமிழ் தேசியத்தை வைத்துக்கொண்டு நாக்கு கூட வழிக்க முடியாது. 





Tuesday, February 21, 2017

கானகனோடு கழித்த கணங்கள்

எழுத்தாளரும் நண்பருமான லஷ்மி சரவணகுமார் அவர்களை முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு நடந்த புத்தகக் கண்காட்சியில் சந்தித்தேன். பிறகு சிங்கைக்குப் புறப்படுமன்று விமான நிலையத்திற்கு வழியனுப்ப வந்திருந்த அவருடன் நடந்த உரையாடல் மறக்கவே முடியாத ஒன்று. அதன் பிறகு உரையாடல் வாட்ஸ்அப்பில் தொடர்ந்தது. சமீபத்தில் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா ஆகிய இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போகிறேன் என்று அவர் சொன்னவுடன் அவருடனான அடுத்த சந்திப்புக்கு ஆவலாக காத்திருந்தேன்.

பொதுவாக இங்கே எழுத்தாளர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களது நூலை எடுத்து வாசிப்பது என் வழக்கம். அதனால் லஷ்மியின் மயான காண்டத்தோடும், யானையோடும் அலைந்து கொண்டிருந்தேன். ஏற்கனவே கானகன் நாவலை வாசித்து வாசிப்பனுபவத்தை அவரிடம் பகிர்ந்திருக்கிறேன். அவரது சிறுகதைத் தொகுப்புகள் லஷ்மியை வேறு ஓர் ஆளாக எனக்கு அறிமுகப்படுத்தின என்றுதான் சொல்லவேண்டும். நாவல் என்ற களத்தைவிட சிறுகதை என்ற களத்தில் லஷ்மி அதிகமாக ஸ்கோர் செய்கிறார் என்பதை உணர்ந்தேன்.

அவர் வந்தவுடன் சந்திக்கலாம் என்று பேசி முடிவு செய்த நாளில் என் உடல்நலக்குறைவு காரணமாக சந்திக்க இயலாமல் போனது மிகுந்த வருத்தத்தை அளித்தது. நல்லவேளையாக, பிப்ரவரி 12 ஆம் தேதி ஞாயிறு மாலை தங்கமீன் வாசகர் வட்டத்தில் அவர் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்முறை தவறவிடக்கூடாது என்று நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் முன்பாகவே சில நண்பர்களோடு அவரைச் சந்தித்தேன். லேசான மழைச்சாரலோடும்   சூடான தேநீரோடும் ஒரு மணி நேரம் சென்றதே தெரியாமல் அற்புதமான உரையாடல் நடந்தேறியது. அதன்பிறகு அனைவரும் தங்கமீன் வாசகர் வட்ட நிகழ்ச்சிக்குச் சென்றோம். அங்கும் வாசகர்களின் கேள்விகளுக்கு லஷ்மி உற்சாகமாக பதிலளித்தார்.

குடும்பச்சூழலின் காரணமாக அனாதை ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டதையும் அங்கு தனது முதல் வாசிப்பாக பைபிள் இருந்ததையும் (கடந்த வருடம் சிங்கை வந்திருந்த எழுத்தாளர் திரு.ஷோபாசக்தி தான் அதிக முறை வாசித்தது பைபிள்தான் என்று சொன்னது நினைவுக்கு வந்து மீண்டது) குறிப்பிட்டவர் வாசிப்பிலிருந்து எழுத்துக்கு வந்ததற்கு முக்கிய காரணமாக தனது ஆசிரியர்களைக் குறிப்பிட்டார். அவர்கள் அறிமுகப்படுத்திய இலக்கியம் குறிப்பாக ரஷ்ய இலக்கியம் அதுவரை பைபிள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த தனக்கு முற்றிலும் புதுமையான, வித்தியாசமான அனுபவமாக அமைந்தது என்றார்.

உலக அளவில் பரவலான கவனத்தைப் பெற்றதும் இந்தியாவில் அதிர்வுகளை ஏற்படுத்தி சில ஆண்டுகள் தடை செய்யப்பட்டதுமான RAM KE NAAM (ANAND PATVARDAN) என்ற ஆவணப்படத்தைப் பார்க்க நேரிட்டதையும் அதன் மூலம் வாசிப்பது, புத்தகம் படிப்பது மட்டுமே அல்லாமல் PRESENTATION  என்பது முக்கியம் என்பதையும்  எதைப் படைக்க வேண்டும், நாம் யோசிக்கும் ஒரு விஷயத்தை எப்படி மக்கள் முன்வைக்க வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டதாக சொன்னார். ஆரம்பத்தில் இடதுசாரி இயக்கம் சார்ந்த, தத்துவங்கள் சார்ந்த நூல்களை வாசித்ததால் தொடக்கத்தில் கட்டுரைகள்  எழுதிக்கொண்டிருந்ததாகவும் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அதில் ஏற்பட்ட சோர்வாலும் அது தனக்கான வடிவம் இல்லை என்ற தெளிவாலும் சிறுகதை எழுத ஆரம்பித்ததாக கூறினார்.

விமர்சனத்தைப் பற்றிய கேள்வி எழுந்தபோது யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால் விமர்சனம் என்று வரும்போது குறைந்தபட்சம் சில அடிப்படைகளையாவது விமர்சகர் அறிந்திருக்க வேண்டும் என்றார். க.ந.சு. தமிழுக்கு செய்தது மாபெரும் கொடை என்றாலும் ஒரு படைப்பை முற்றிலும் ஆதரிப்பது அல்லது முற்றிலும் நிராகரிப்பது என்ற அவரது விமர்சனப் பார்வையில் தனக்கு உடன்பாடில்லை என்றார். தமிழ் விமர்சன வரலாற்றில் ஈழ எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது என்றவர் அங்கிருந்துதான் ஒரு படைப்பைக் கோட்பாட்டின் அடிப்படையில் (மார்க்சியம், பின்நவீனத்துவம்......) எப்படி அணுகுவது என்பது தொடங்கியது என்று குறிப்பிட்டார்.

சில குறிப்பிட்ட வார்த்தைகளை வைத்துக் கொண்டு அவற்றை மாற்றி போட்டோ,  கலைத்துப் போட்டோ ஒரு கவிதையை உருவாக்க முடியும். அதே போல ஒரு தமிழ் அகராதியும், பத்து புகழ்பெற்ற சிறுகதைகளையும் வைத்துக்கொண்டு ஒரு சிறுகதையை உருவாக்கி விட முடியும். கவிதைகள், சிறுகதைகள் ஆகியவை TECNIQUE ஆக மாறி வருவது போல விமர்சனமும் ஒரு TECNIQUE ஆகிவிடுமோ என்ற கவலை தனக்குண்டு என்றார்.   

எல்லாக் கலை வடிவங்களுக்கும் ஒரு கோட்பாடு அவசியம், கோட்பாட்டின் ரீதியாக ஒரு கலையைப் பார்க்கும்போது அது முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தை அடைகிறது. அனைவருக்கும் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லாவிட்டாலும் ஆர்வம் இருப்பவர்கள் அதை தேடிச் சென்று படிக்கலாம். இங்கு பெரும்பாலானோர் கோட்பாடு என்பதற்கும் இலக்கியத்திற்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறார்கள். அது தவறு. கோட்பாடு என்பது ஓர் அனுமானம். நாம் வாழும் காலத்தில் சமூகத்தில் வாழ்க்கை முறை எவ்வாறு உள்ளது. அந்த வாழக்கை முறையைப் பிரதிபலிக்கும் கலை எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்வதுதான் கோட்பாட்டின் அடிப்படை. ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்க்கை முறை மாறும்போது கோட்பாடு மாறும். இப்படித்தான் இருத்தலியம், போஸ்ட் காலனிசம், போஸ்ட் மாடர்னிசம் என்று மாறிக்கொண்டே உள்ளன. தற்போது ஓவியக் கோட்பாடுகளைப் பற்றி சி.மோகன் எழுதுகிறார். இசைக் கோட்பாடுகளை பற்றி எழுத தனி பயிற்சி தேவை. சினிமாக் கோட்பாடுகளைப் பற்றி எழுதுபவர்கள் இப்போது வர ஆரம்பித்திருக்கிறார்கள் என்று கோட்பாட்டைப் பற்றி தனது பார்வையை விரிவாக முனைவைத்தார்.

அதிகமாக எழுதுவதோ குறைவாக எழுதுவதோ ஓர் எழுத்தாளனின் ஆளுமையைப் பொறுத்தது என்றவர் அதிகமாக எழுதும்போது சொந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட அது ஒரு சுயவதையாக இருந்தாலும் எழுத்தாளனை வதைக்கும் விஷயங்களைக் எழுத்தில் கொட்டிய பிறகு கிடைக்கும் விடுதலை அதில் உள்ள அனுகூலம் என்றார்.

என்னைப் போன்று கோணங்கியைப் போன்று ஒரு நாடோடித்தனமான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு நிறைய வாழ்க்கை வாழவும் நிறைய மனிதர்களைச் சந்திக்கவும் வாய்ப்பு கிட்டுகிறது. என் கதைகள் என் அனுபவம் மட்டுமல்ல. நான் சார்ந்த மனிதர்களின் அனுபவங்களும்தான் என்றார். நாடக கலைஞர்களைப் பற்றிய கதையில் நீங்கள் எழுதியிருப்பது போல அவ்வளவு மோசமான வாழ்க்கையா அவர்களுடையது?” என்று எழுந்த கேள்விக்கு உங்களுக்கு அது மோசமான வாழ்க்கையாகத் தெரியலாம். என்னுடைய, அவர்களுடைய பார்வையில் அது மோசமான வாழ்க்கை கிடையாது. உலகில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் வழிபாடு என்பது அடிப்படை காரணமாக இருப்பதால் அதற்கு எதிராக என் கதையை முன்வைக்க விரும்பினேன்”, என்றார். அதே சமயம் குறுகிய காலத்தில் நடக்கும் ஒரு சிறுகதையில் அதிர்ச்சியூட்டும் வகையில் திணிக்கப்பட்ட பாலியல் விஷயங்கள் அவசியம்தானா என்ற கேள்விக்கு அதை கருத்தில் கொள்வதாக பதிலளித்தார்.

எழுதுவதே மட்டுமே அல்ல நான். இந்த சமூகம் சார்ந்த மனிதனும்தான் நான். ஒரு பிரச்சனை நடக்கப்போகிறது என்று கைகாட்டுபவன் எழுத்தாளன் அல்ல. அந்தப் பாதையில் முன்னால் சென்று அதன் சாதக, பாதகங்களை முன்கூட்டியே சொல்பவன் எழுத்தாளன். அப்படி இருக்கவே நான் விரும்புகிறேன் என்றார். ஏற்கனவே பல தகவல்களையும் செய்திகளையும் சேகரித்து வைத்திருந்தாலும் பண நெருக்கடியான சூழலில் போட்டியில் கிடைக்கும் பரிசுத் தொகைக்காக இரண்டே நாளில் கானகனை எழுதி முடித்தேன் என்றார்.

மொழி சார்ந்து இயங்கும் ஓர் எழுத்தாளன் மொழி சார்ந்த ஒரு சிக்கலை சமூகம் எதிர்கொள்ளும்போது அதிகார மையம் தனக்கு அளித்த அங்கீகாரத்தைத் திருப்பி தருவதன் மூலம் தனது எதிர்ப்பை பதிவு செய்வது தார்மீக கடமை என்று உணர்ந்ததால் யுவபுரஸ்கார் விருதை திருப்பி அளித்தேன். எந்த ஒரு கவன ஈர்ப்புக்காகவும் நான் அதை செய்யவில்லை என்றார்.

எழுத்தாளனைக் கொண்டாடுவது, புத்தக வாசிப்பு போன்றவற்றில் தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் உள்ள பெரிய வேறுபாட்டை கூறியவர் கேரளாவில் சமூகப் பிரச்சனைக்கு முதலில் தெருவில் இறங்குபவன் எழுத்தாளன்தான். ஆனால் தமிழகச்சூழலில் எந்தவித செயல்பாடுமற்ற எழுத்தாளர்கள் சமூகத்தைக் குறை சொல்வது தவறு. மக்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான நெருக்கம் இதுபோன்ற செயல்பாடுகளால்தான் அதிகரிக்கும் என்றார்.

சமகாலத்தைத்தான் எழுதவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் கடந்தகாலத்தை எழுதும்போது அதை யாருடைய பார்வையில் எழுதுகிறோம் என்பது முக்கியமாகிறது. இங்கு எழுதப்பட்ட அத்தனை வரலாறும் அரசர்களின் பார்வையில்தான் இருக்கிறது. ஓர் எளிய குடிமகனின் பார்வையில் கடந்த கால வரலாற்றைப் பதிவு செய்வது எழுத்தாளனின் கடமையாகிறது என்றார். 

சிங்கை, மலேசிய இலக்கியங்களைப் பற்றிய கேள்விக்கு தான் அதிகம் வாசித்ததில்லை என்றாலும் ஒன்றிரண்டு வருடங்கள் கவனித்ததில் என்னால் சிலவற்றை உணர முடிந்தது என்றார். மலேசிய இலக்கியத்தில் குறைகள் இருந்தாலும் சிறிய வளர்ச்சி தென்படுகிறது. ஆனால் சிங்கையில் எழுதுபவர்களிடம் ஓர் அடையாளச் சிக்கல் காணப்படுகிறது. கவிதைகள், கதைகள் எல்லாவற்றிலும் பெரும்பாலும் NOSTALGIA தான் பிரதிபலிக்கிறது. கிட்டத்தட்ட தமிழகச் சூழலைத்தான் பிரதிபலிக்கிறது. எழுதப்பட்ட இடத்தில் உள்ள வாழ்க்கையைப் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் எழுகிறது. இச்சூழலுக்கு வெளியே இருப்பவர்கள் சொல்லும் கருத்துகளைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி நடக்கும் இடத்தில் கலாச்சாரச் சிக்கல்கள் அதிக அளவில் உண்டாகும். ஆனால் இங்குள்ள கலை அதை சரியாகப் பிரதிபலிக்கவில்லை. மற்ற இனத்தவர்களுடனான கலை இலக்கிய உரையாடல்கள் நிகழாதது குறையாகத் தோன்றுகிறது. ஒரு நாளில் ஓர் எழுத்தாளனை மதிப்பிட முடியாது. தொடர்ந்து எழுத்தில் அவனது செயல்பாட்டை வைத்துதான் அவனை மதிப்பிட முடியும். எந்த வடிவம் (கவிதை, சிறுகதை, நாவல்) தனக்குச் சரியாக வருகிறது என்பதை ஓர் எழுத்தாளன் தொடர் செயல்பாட்டில் மட்டுமே கண்டறிய முடியும் என்றார்.

கதைகளில் கவித்துவமாக தருணங்களை எழுதிக்கொண்டு வரும்போது சட்டென்று நாடகத்தனமான காட்சிகளை முன்வைப்பது அவசியம்தானா என்று எழுந்த கேள்விக்கு நிறைய எழுதும்போது வரும் சிக்கல் இது என்றவர், வாசகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக செய்யும் சில கிம்மிக்ஸ்கள்தான் இவை. கட்டாயம் இவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பதை ஒப்புக்கொண்டார்.

தமிழ்நாட்டில் இருக்கும் சில எழுத்தாளர்கள் மீது இங்கிருப்பவர்களுக்கு அதிக மயக்கம் இருப்பது போலத் தெரிகிறது என்றார். திருமணம் முடிந்தவுடன் மனைவியை அழைத்துக்கொண்டு மலையாள எழுத்தாளர் பஷீரைச் சந்திக்க லஷ்மி சென்றதும் அப்படியான ஒரு மயக்கத்தில்தான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பல விஷயங்களை வெளிப்படையாகவும் சரியான தரவுகளோடும் முன்வைத்த லஷ்மி உடனான கலந்துரையாடல் மனதுக்கு நிறைவாக இருந்தது.        


 புகைப்பட உதவிதிருமதி.ரமா சுரேஷ் 

        

Wednesday, February 15, 2017

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்திருந்த கண்ணதாசன் விழா 2016க்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த இயக்குனர் மகேந்திரனிடம் தி சிராங்கூன் டைம்ஸ் சார்பாக கேட்கப்பட்ட கேள்விகளும் அவரது பதில்களும்.  

1. கதாசிரியர், இயக்குனர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், நடிகர் என்று திரைத்துறையில் பல பணிகளைச் செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த பணி எது

எனக்கு கொடுக்கப்படும் அனைத்து பணிகளையும் விரும்பி, மனம் ஒன்றிதான் செய்து வருகிறேன். எந்த ஒரு காரியத்தையும் அரைகுறையாக செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு செயலை மற்றவர்களை விட ஏதோ ஒரு வகையில் சிறப்பாகச் செய்ய வேண்டுமென விரும்புவேன். கழிவறையைச் சுத்தம் செய்யும் வேலையாக இருந்தாலும் கூட அதிலும் என் முத்திரையைப் பதிக்கவே முனைவேன்.  
படப்பிடிப்பில் இருந்த நாட்கள்தான் நான் மிக மகிழ்ச்சியாக இருந்த காலகட்டம் எனச் சொல்லலாம். ஒன்றை உருவாக்கும்போது அல்லது படைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனிதான். தாய்மையில் ஒரு பெண் அடையும் சந்தோஷத்திற்கு இணையானது அது. தாய்க்கு ஒப்பானது இயக்குனரின் ஸ்தானம். உருவாக்குபவன் பிரம்மா என்றால் நாம் அனைவருமே ஒருவகையில் பிரம்மாக்கள்தான்.   

2. தற்போதைய நடிகர் என்ற அவதாரத்தை விரும்பிதான் ஏற்றுக்கொண்டீர்களா?
சினிமாவையே நான் விரும்பவில்லையே....(சிரிக்கிறார்). திரைத்துறையில் பெரும்பாலானோர் சினிமாவைக் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். சினிமாவை மனப்பூர்வமாக காதலித்து பல போராட்டங்களுக்குப் பிறகு சாதித்து வெற்றி பெற்றவர்கள். ஆனால் என் கதை வித்தியாசமானது. எனக்கும் சினிமாவுக்கும் கட்டாயக் கல்யாணம் நடந்தது. ஆனால் அதற்காக நான் மனைவியை வெறுக்கவில்லை. இயக்குனர் ஆனவுடன் என் மனைவியை மனதார நேசிக்க ஆரம்பித்தேன்.
சினிமாவின் பெருமையை மிக தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன். உலகின் வலிமையான ஓர் ஆயுதம், ஊடகம் சினிமாதான் என்பது இயக்குனராக இருந்தபோது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் இன்னும் அதிகமான, ஆழமான படங்களை எடுத்திருக்கலாம். பரவாயில்லை. அதனால் என்ன? இதுவரை நான் கொடுத்த படங்களே என் மனதுக்கு மிகவும் திருப்தியாகத்தான் உள்ளன. 
  
3. தமிழ் சினிமா தற்காலத்திலும் நாடகத்தனமாக இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனர் சத்யஜித்ரேவின் படங்கள் பாடல்கள் இல்லாமல் யதார்த்த வாழ்க்கையை மிக அழகாக பதிவு செய்தன. அவரை முன்மாதிரியாகக் கொண்டு படம் எடுத்தவர்களால் கூட ரே போல்  கொள்கை பிடிப்போடு இயங்க முடியவில்லை. அவர்களும் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு வணிக உலகில் சமரசம் செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.
நான் மாணவனாக இருந்தபோதே சினிமாவின் பாடல் காட்சிகள், மிகையான நாடகப்பாணி காட்சிகள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தேன். இப்போதும் அதே விமர்சனத்தை முன்வைக்க வேண்டியிருப்பது துரதிர்ஷ்டம்தான்.  
தயாரிப்பாளர்களுக்கு ஆடியோ ரைட்ஸ் மூலம் வரும் லாபத்தைத் தடுக்க வேண்டாமே என்பதுதான் நான் பாடல்களை வைத்ததற்கான காரணம். என் படங்களில் பெரும்பாலும் காட்சியின் பிண்ணனியில் பாடல்கள் ஒலிப்பது போலத்தான் எடுத்துள்ளேன். 
நோயாளிக்கு அறுவைசிகிச்சை செய்யும்போது தரப்படும் மயக்கமருந்து போலத்தான் மாற்று சினிமா எடுப்பவர்கள் பாடல்களைப் பயன்படுத்துகிறார்கள் என நான் கருதுகிறேன். அந்த மயக்கமருந்து மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் நான் மிக கவனமாக இருந்தேன். எனது படங்களில் பாடல்கள் கதைக்குத் தேவையானதாகவும் அந்தக் காட்சியை ஒரு படி மேலே தூக்குவதாகவும் இருக்கும்.

4. பெரும்பாலும் இலக்கிய படைப்புகளின் அடிப்படையில் உங்கள் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது திரைப்படங்களுக்கும் இலக்கிய படைப்புகளுக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது. இது எதனால்?
இலக்கியம் படிக்காவிட்டாலும் கூட நம்மைச் சுற்றி இருக்கும் சமூகத்தையும் அங்கு வாழும் மக்களையும் சரியாக அவதானித்தாலே ஒரு சிறந்த திரைப்படத்தை எடுக்கமுடியும். பார்க்காத, கேட்காத, உணராத அனுபவங்களைப் படமாக எடுப்பது சற்று சவாலான பணி.
இலக்கியத்தை வாசிப்பதன் வழியாக ஒருவன் சிறந்த அனுபவங்களைப் பெற முடியும். அதற்காக கண்ணில் கண்டதையெல்லாம் வாசிக்ககூடாது. எதை படிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்து வாசிப்பது மிக முக்கியம். நான் இலக்கிய வாசிப்பிற்குள் வந்தது அதன்மீது இருந்த காதலாலோ ஈடுபாட்டாலோ கிடையாது.

நான் ஒரு குறைமாதக் குழந்தை. பள்ளிப் பருவத்தில் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அவர்கள் செய்யும் காரியங்களை என்னால் செய்ய இயலாது என்ற தாழ்வு மனப்பான்மை என்னை ஆட்கொண்டது. அதிலிருந்து மீள, அவர்கள் செய்யாத ஒன்றில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அப்போது பள்ளி நூலகம் கண்ணில்பட்டது. மற்றவர்கள் செய்யாத வாசிப்பை நான் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படவேண்டும் என்ற காரணத்தால் நான் படிக்கத் தொடங்கிய இலக்கியம் நாட்கள் நகர, நகர என்னை விடாமல் இறுகப் பற்றிக்கொண்டது. நல்லவேளையாக அப்போது நான் வாசித்த நூல்கள் அனைத்தும் சிறந்த ஆசிரியர்களால் எழுதப்பட்ட அற்புதமான படைப்புகள். இன்றுவரை எனது வாசிப்பு தொடர்கிறது. இன்னும் படிக்கவேண்டியவை ஏராளமாக உள்ளன. இந்த வாசிப்பு வியாதி எனக்கு ஓர் உன்னதமான அனுபவத்தைத் தருகிறது. 

5. இலக்கியப் படைப்பிலிருந்து ஒரு பொறியை மட்டும் எடுத்துக்கொண்டு திரைக்கதையை அமைத்திருந்தாலும் அந்த படைப்பை எழுதியவருக்கு உரிய அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் அளித்தவர்  நீங்கள். ஆனால் இன்று தமிழ் திரை உலகில் கதைத்திருட்டு சர்வ சாதாரணமாகிவிட்டது. எதனால் இந்தக் கற்பனை வறட்சி?
எனக்கும் இது எதனால் என்று புரியவில்லை. விரைவாக பணமும் புகழும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைதான் இதற்கான காரணம் என்று நினைக்கிறேன். உலக சினிமாவைப் பற்றி அறிந்தவர்கள் கூட சினிமாவை ஒரு சூதாட்டமாகத்தான் பார்க்கிறார்கள். எத்தனை கோடி லாபம் வரும் என்றுதான் யோசிக்கிறார்களே ஒழிய இந்தப் படம் மக்கள் மனதில் நிலைத்து நிற்குமா என்பதைப் பற்றிய அக்கறை அவர்களுக்கு இருப்பதில்லை.  
     
வெற்றிப்படங்கள், மறக்க முடியாத படங்கள் என்று இரண்டு வகை படங்கள் உள்ளன. மாற்று சினிமா எடுப்பவர்களும் வியாபார ரீதியாக வெற்றி அடையும் படங்களை எடுக்கவேண்டியது அவசியமாகிறது. பணத்திற்கு நான் விரோதி இல்லை. ஆனால் அதிகப்படியான, தவறான வழியில் வரும் பணத்திற்கு ஆசைப்படவேண்டாம் என்றுதான் சொல்கிறேன். எல்லாமே வியாபாரம்தான். வியாபாரத்தை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்யலாம். கலப்படமாகவும் செய்யலாம். இரண்டிலும் லாபம் உண்டு. ஆனால் உண்மைக்குத்தான் எப்போதுமே மதிப்பு என்பதை நாம் உணரவேண்டும்.   

6. தங்களின் சினிமாவும் நானும் நூலுக்குப் பிறகு இன்னும் ஏதாவது எழுதும் எண்ணம் இருக்கிறதா?
சினிமாவும் நானும் முதல் பதிப்பில் சொல்லாமல் விட்டதை எல்லாம் சேர்த்து தற்போது இரண்டாவது பதிப்பு வெளிவந்துள்ளது. ஒரு சில நாவல்கள் எழுதியிருக்கிறேன். இட்டுக்கட்டி எழுதுவதைவிட அனுபவங்களை எழுதுவது எனக்கு எளிதாக உள்ளது.
எல்லா இலக்கியப் படைப்புகளையும் படமாக எடுக்க முடியாது. சில படைப்புகள் வாசிக்க நன்றாக இருக்கும். ஆனால் அதை படமாக்கும் சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருக்கும். ஆனால் ஒரு மோசமான கதையில் ஏதோ இரண்டு வரிகள் நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தப் பொறியைக் கொண்டே ஒரு படத்தை உருவாக்கிவிடாலம். 
 
7. ஒரு இயக்குனராக தமிழ் திரை உலகிற்குத் தங்கள் பங்களிப்பைச் சரியாக செய்திருப்பதாக உணர்கிறீர்களா?
இல்லை. நான் அப்படி உணரவில்லை. ஓர் இயக்குனராக மாற நான் எந்த ஆசிரியரிடமும் பயிலவில்லை. என் அனுபவங்களே என் ஆசிரியர். நிறைய சம்பாதிக்கவேண்டும், என் நிறுவனத்தை விரிவுபடுத்தவேண்டும் போன்ற வியாபார எண்ணங்கள் எனக்கு இருந்தில்லை. ஆத்மார்த்தமாக என் படங்களுக்காக உழைத்தேன். மிக தாமதமாகத்தான் சினிமாவின் மேன்மையை அறிந்து கொண்டேன். ஒன்றும் தெரியாமல் நான் எடுத்த படங்களே இன்றளவும் பேசப்படும்போது நான் இன்னும் முறையாக, சரியாக எடுத்திருத்திருக்கலாமோ என எண்ணுகிறேன்.

சமீபத்தில் எனது சாசனம் படம் வெளிவந்தது. 27 நாட்களில் எடுத்து முடித்த அந்தப் படம் வெளிவர ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. என் வாழ்க்கையில் நான் அதிக மன உளைச்சலுக்கு ஆளானது அந்த ஏழு ஆண்டுகளில்தான். இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தி இருந்தாலும் என் சுய நினைவு உள்ளவரை நல்ல, தரமான படங்களைக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

திரை உலகில் நானும் இருக்கிறேன் என்பதை அறிவிப்பதற்காக ஒரு படமெடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் பேசப்படுவதைவிட என் படங்கள் பேசப்படவேண்டும் என விரும்புகிறேன். இப்போதும் நிறைய பேர் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு படமெடுத்து தரச்சொல்லி அணுகுகிறார்கள். பண நிர்வாகத்தில் எனக்கு அனுபவம் குறைவு. எழுதுவதும் இயக்குவதும் மட்டுமே என் பணிகள். மிக முக்கியமாக என் படங்களில் பாடல்கள் இடம்பெறாது. இதற்கு ஒத்துவந்தால் இணைந்து பணிபுரியலாம்என்று அவர்களிடம் சொல்லி அனுப்புகிறேன். சில நேரங்களில் மற்றவர்கள் மீது நான் காட்டும் இரக்கமே எனக்கு ஆபத்தைக் கொண்டு வந்துள்ளது. முடிந்த அளவு சினிமாவுக்கு நேர்மையாக இருக்க முயல்கிறேன். 

8. எல்லாத் துறைகளிலும் வணிகம், கலை என இரு நடைமுறைகள் உள்ளன. ஒரு சிறந்த கலைஞன் சமரசம் செய்துகொள்வது அவசியமா?
உண்மையை மட்டுமே பேசவேண்டும் என்ற கூறும் அதே வள்ளுவர்தான் ஒருவனுக்கு நன்மை ஏற்படுமென்றால் பொய் பேசுவதில் தவறில்லை என்கிறார். சமரசம் ஒரு நல்ல நோக்கத்திற்காக செய்யப்படுமென்றால் அதில் தவறில்லை. சுயநலத்திற்காக சமரசங்கள் செய்யக்கூடாது. சமரசம் என்பது விட்டுக்கொடுத்தல்தானே. ஈகோ தலை தூக்கும்போது சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை.

ஒரு சினிமாவின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க யாராலும் முடியாது. தமிழ்நாட்டில் மக்கள் பொழுதுபோக்கிற்காக சில மோசமான படங்களை கூட ஓடவைத்துவிடுகிறார்கள். ஆனால் அண்டைய மாநிலங்களில் மாற்று திரைப்படங்களையும், உண்மையான கலைப்படைப்புகளையும்   கொண்டாடுகிறார்கள்.  

9. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் சில நாடுகளில் இன்று திரைப்படம் மொழியை வளர்க்கும் ஊடகமாக உள்ளது. இதை இன்றைய தமிழ் இயக்குனர்கள் உணர்ந்துதான் படம் எடுக்கிறார்களா?
தமிழ்நாட்டை விட்டு விலகி போக, போகத்தான் மொழியின் மீது அதிக ஈடுபாடு வருகிறது போலும் (சிரிக்கிறார்). சில தமிழ் படங்களின் தலைப்புகளைப் பார்த்தாலே வேதனையாகத்தான் உள்ளது. சில வார்த்தைகளுக்குப் புது, புது அர்த்தமே தருகிறார்கள். இன்று சம்பவம் என்றால் கொலை செய்வதைக் குறிக்கிறது. மொழியின் அடிப்படையில் பார்த்தால் இது ஒரு மோசமான சூழல்தான். யானைக்குத் தன் பலம் தெரியாது என்று சொல்வார்கள். அது போல திரைத்துறையில் இருக்கும் சிலருக்கு சினிமாவின் பலம் தெரியாமல் போவது வருத்தம் அளிக்கிறது.

10. உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ் பேட்டிக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கியமைக்கு ஆசிரியர்  குழு சார்பாக நன்றி.

உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி. சிங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் என் வாழ்த்துகளும் நன்றிகளும். 



Tuesday, February 7, 2017

சாத்தானைச் சந்தித்த சந்தோஷ தருணங்கள்

அமைப்பு சார்ந்து இயங்காமல் 'தனி' ஆளாக  சில இலக்கிய நண்பர்களின் உதவியோடு நண்பர் நீதிபாண்டி இலக்கிய ஆளுமைகளைச் சிங்கப்பூருக்கு அழைத்து வருகிறார். முதலில் வந்தவர் கவிஞர் அய்யப்ப மாதவன். அப்போது நான் சென்னையில் இருந்ததால் அவரைச் சந்திக்கும் வாய்ப்பை இழந்தேன். இரண்டாவதாக வந்தவர் கவிஞர் யவனிகா ஸ்ரீராம். அவருடனான செறிவான உரையாடல் மறக்க முடியாததாக அமைந்தது.  அந்த வரிசையில் அடுத்ததாக யூமா வாசுகி வரப்போகிறார் என்று நீதி சொன்னபோது இரட்டிப்பு மகிழ்ச்சி.  சிறார் இலக்கியம் என்ற பிரிவில் தொடர்ந்து இயங்கும் ஒரு படைப்பாளியைச் சந்திக்கப் போகிறேன் என்பதும் அவர் என் ஊர்க்காரர் என்பதும்தான் அந்த இரட்டிப்பு மகிழ்ச்சிக்கான காரணம்.

பிப்ரவரி 4, சனிக்கிழமை மாலை பீஷான் நூலகத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் எழுத்தாளர் யூமா வாசுகியைச் சந்தித்தேன். குழந்தைகளுக்கு அவர் கதைகளைச் சொல்ல அதன்பிறகு குழந்தைகள் அவருக்கு கதைகள் சொல்ல நிகழ்ச்சி இனிமையாக கழிந்தது. (என் மகள் மதியரசி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய வெள்ளை ராணி கதையைச் சொல்லி கேட்டது மனதுக்கு உற்சாகமாக இருந்தது). எத்தனை வயதானலும் கதை கேட்கும்போது நமக்குள் இருக்கும் குழந்தமை வெளிவந்து கைதட்டி குதுகலிக்கத்தான் செய்கிறது





இறுதியில் தோழி பாரதி மூர்த்தியப்பனின் ஏற்பாட்டில் குல்லா வியாபாரியும் குரங்குகளும்'  கதை பாடலாகவும் காட்சியாகவும் விரிந்தது. நான், பாரதி மற்றும் தோழி சுபா செந்தில்குமார் மூவரும் பாடலைப் பாட தோழி பானு சுரேஷ் குல்லா வியாபாரியாக நடித்தார். தோழி ரமா சுரேஷும் குழந்தைகளும் குரங்குகளாக மாறிப்போயினர்.  பார்வையாளர்கள்தான் பாவம். நாங்கள் பாடி கேட்க வேண்டிய நிலைமை. ஆனாலும் நாங்கள் விடுவதாக இல்லை. பாடி, ஆடி முடித்தோம். உண்மையில் அந்த சில நிமிடங்கள் நாங்கள் அனைவருமே குழந்தைகளாக மாறிப்போனோம் என்றுதான் சொல்லவேண்டும்.

பிப்ரவரி 5, ஞாயிறு மாலை அங் மோ கியோ நூலகத்தில் நடைபெற்ற வாசகர் வட்ட வட்ட சந்திப்பிற்கு நான் எதிர்பார்த்ததைவிட அதிக பேர் வந்திருந்தார்கள். மறைந்த எழுத்தாளர் .சீ.சிவக்குமாருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு யூமா தன்னைப் பற்றியும் இலக்கியத்தில் தனது இயங்குதளம் பற்றியும்  சிறு அறிமுகம் தந்தார். அதன்பிறகு வாசகர்களுடனான கலந்துரையாடல் நடந்தது.  




மாரிமுத்து என்ற இயற்பெயரைக் கொண்ட யூமா  சிறுவயதில் தந்தையை இழந்து தாயுடனும்  உடன்பிறந்தவர்களுடனும் சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் வசித்திருக்கிறார். மூன்று தாய் மாமன்களும் கலைஞர்கள். ஒரு மாமா ஓவியர். இன்னொருவர் நாடகக்கலைஞர். மற்றொருவர் கர்நாடக இசைக்கலைஞர். பயங்கரவாதிகள் குழு போல சிறுவர்கள் இணைந்து  குழுவாகவும் இரகசியமாகவும் காமிக்ஸ் நூல்களை வாசித்த அனுபவத்தை யூமா சொன்னபோது கோகுலம் இதழைக் கடன் வாங்கி படிக்க நான் சிறுவயதில் பட்டபாடு கண்முன் நிழலாடியது.

ஜெயகாந்தனின் ஒரு கதை காமிக்ஸ் தளத்திலிருந்து சிறுகதை வாசிப்பிற்கு யூமாவை நகர்த்தியுள்ளது. அக்கதை தந்த வியப்பும், அதிர்ச்சியும் அவரது பார்வையை மற்ற எழுத்தாளர்களை நோக்கி திருப்பி உள்ளது. சுந்தர ராமசாமி, கு.அழகிரிசாமி என்று எந்தவித வரிசையோ தேர்வோ இல்லாமல் பலதரப்பட்ட எழுத்துகளை வாசிக்கத் தொடங்கி இருக்கிறார் யூமா.

இவரது முதல் கவிதை மா.அரங்கநாதன் அவர்கள் நடத்திய முன்றில்என்ற இதழில் வெளியாகி உள்ளது. அதன்பிறகு நிறைய கவிதைகளை எழுதி யாரிடமும் காட்டாமல் வைத்துக்கொள்கிறார் யூமா. ஓவியக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அலைகள்பதிப்பகத்திற்கு புத்தகத்திற்கான அட்டைப்படம் வரைந்து கொடுக்கும் பணி செய்கிறார். அப்போது அலைகள்பதிப்பகத்தின் உரிமையாளர் சிவம் இவரது கவிதைகளைப் படித்துவிட்டு அதை நூலாக வெளியிடுகிறார். அந்நூலின் தலைப்பு தோழமை இருள்’.

எழுத்தாளர் ஜெயமோகன் உடனான நட்பும் அதன் மூலம் நிகழ்ந்த குரு நித்ய சைதன்ய யதி உடனான சந்திப்பும் யூமாவிற்கு வேறு ஓர் உலகை அறிமுகப்படுத்துகின்றன. குரு நித்யாவின் இடத்தில் வாசிக்க நேர்ந்த மலையாள சிறார் நூல் ஒன்று இவரது இன்றைய இலக்கிய இயங்குதளத்திற்கு வித்து என்று சொல்லலாம். அந்நூலைப் படித்த பிறகு மலையாள சிறார் இலக்கியத்தை பற்றி அறிய  வேண்டும் என்ற ஆர்வத்திலும் உந்துதலிலும் மலையாள மொழியைக் கற்றுக்கொண்டுள்ளார். மலையாளத்தில் உள்ள பெரும் எழுத்தாளர்கள் அனைவரும் சிறார் இலக்கியத்திற்குத் தங்கள் பங்கை ஆற்றியிருப்பதைக் கண்ட யூமா தமிழில் அப்படியான சூழல் இல்லாததால் வருத்தமுற்று மலையாள சிறார் நூல்களை மொழிபெயர்த்து தமிழ் சூழலில் வைத்தால் இவற்றை முன்மாதிரியாக கொண்டு படைப்பாளிகள் சிறுவர் இலக்கியம் எழுதலாம் என்ற நம்பிக்கையில் தனது பணியைத் தொடங்கியதாக கூறினார். 

ஐம்பதுகளில் பூவண்ணன், முல்லை தங்கராசன், அழ.வள்ளியப்பா போன்ற பலரது முயற்சியாலும் தீவிர செயல்பாட்டாலும் பூத்துக் குலுங்கிய  சிறார் இலக்கியம் இன்றைய சூழலில் வறண்டும், ஒருவித செயற்கைத் தன்மையோடும் விளங்குகிறது என்றும் வளமான கலை, இலக்கியமற்று வளரும் அடுத்த தலைமுறையின் சிந்தனையில் பெரும் தேக்கம் நிகழும் என்றும் தனது வருத்தத்தை யூமா பதிவு செய்தார்.

எந்த இலக்கிய வடிவமும் தன்னகத்தே ஒரு கவித்துவத்தைக் கொண்டிருக்கும்போதுதான் அதன் உச்சத்தை அடைகிறது என்றவர் தற்காலத்தில் நவீன கவிதைகளின் பாய்ச்சல் நம்பிக்கை தரக்கூடியதாக உள்ளது என்றார். சிறார் இலக்கியத்தில் இயங்குபவர்கள் குழந்தைகளைப் பார்த்து படைப்புகளை எழுதாமல் குழந்தையாக மாறி எழுதுவது அவசியம் என்றவர் குழந்தைகளின் மொழியில் அவர்கள் உலகத்தைப் பதிவு செய்யவது மிக அவசியம் என்றார்.

கவிதை நூலுக்கு வரையப்படும் ஓவியங்கள் பற்றிய கேள்வி எழுந்தபோது சில நேரங்களில் கவிதையின் திறப்பை ஓவியம் குறுக்கிவிடும் அபாயம் இருப்பதால் அது மிக, மிக கவனமாக செய்யவேண்டிய பணி என்று பதிலளித்தார்.

கவிதைகளில் வார்த்தை தேர்வு பற்றிய கேள்விக்கு கவிதை எழுதுவதை ஒரு PROCESS மாதிரி செய்பவர்கள் இருக்கிறார்கள் என்றாலும் தான் ஒருபோதும் அப்படி செய்வதில்லை என்றும் தனது ஆழ்மனதின் கொந்தளிப்புகள் கவிதைக்கான வார்த்தைகளை தானாகவே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன என்றும் கூறினார்.

மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கும்போது நிலம் மற்றும் பண்பாடு சார்ந்த நுட்பமான விஷயங்களைத் தமிழுக்கு  கொணர்வதில் உள்ள சிக்கல் பற்றிய கேள்வி எழுந்தபோது  சி சமயங்களில் அந்த  நுட்பமான செய்திகள் பொருந்தாமல் போனாலும் அதனால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றும் குழந்தைகளின் இயல்பும் உணர்ச்சிப்பெருக்கும் உலகெங்கும் ஒரே மாதிரியாக இருப்பதால் படைப்பை எளிதாக அவர்களுக்குப் புரியவைத்துவிடலாம் என்றும் உரைத்தார்.

அதிகமான மொழிபெயர்ப்பு செய்யும்போது சுயம் தொலைப்பதும் அடுத்தவரின் சாயலில் எழுதும் ஆபத்தும் இருப்பதாக கேள்வி எழுந்தபோது ஓரளவு அது உண்மைதான் என ஒத்துக்கொண்டவர் தொடக்கத்தில் இந்தப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருந்தாலும் நாட்கள் செல்ல, செல்ல சுயத்தை மீட்டெடுத்துவிடலாம் என்றார்.

இலக்கிய கோட்பாடுகள் பற்றிய கேள்விக்கு கோட்பாடுகள் இருந்தால் அது எப்படி கலையாக முடியும்? என்று எதிர் கேள்வி கேட்டவர் கோட்பாடுகள் ஆபத்தானவை என்றும் அவற்றை தான் முற்றிலும் நிராகரிப்பதாகவும் சொன்னார். கலகம் செய்யும் இடது கைஎன்ற பிரெஞ்சு சிறுகதைத்தொகுப்பு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமான கதையைத் தன்னகத்தே கொண்டிருப்பது போல தமிழில் இருதரப்பினருக்கும் பொதுவான படைப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்பதுதான் அவரது பதிலாக இருந்தது.

வாண்டுமாமா போன்ற ஆளுமைகள் தற்போது இல்லை என்று வருந்தியவர் அமர்சித்ராவைப் பற்றிய கேள்விக்குத் தற்போது பூவுலகின் நண்பர்களால் வெளிவரும் மின்மினிஇதழ் நல்ல முயற்சி என்று குறிப்பிட்டார். மஞ்சள் வெயில்நாவலைப் படித்த ஒரு வாசகர் அந்நாவலில் பெரும்பாலான இடங்களில் கதாநாயகன் இறைஞ்சும் தோணியில் பேசுவதாகவும் அதுதான் உங்கள் குணாதிசயமா என்று கேட்க சாத்தானும் சிறுமியும்கவிதைத் தொகுப்பில் வரும் சாத்தான்தான் நான் என சிரித்துக்கொண்டே கூறினார்

அந்தத் தொகுப்பில் வரும் குடிகாரர்களின் கவிதையைத் தோழி சுபா செந்தில்குமார் வாசித்து எந்த சூழலில் இதை எழுதினீர்கள்?  என்று கேட்க நான் குடிப்பேன்மாஎன்றார் யூமா. அந்தக் கவிதை தன்னை மிகவும் பாதித்த கவிதை என்றும் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் தன் அண்ணனை நினைவூட்டுகிறது என்றும் கூறிய நண்பர் எம்.கே.குமார் எழுந்து சென்று யூமாவின் கைகளுக்கு முத்தமிட நெகிழ்வான ஒரு தருணமாக அது அமைந்தது. குழந்தையாக மாறிய ஒரு வாசகன் கண்களில் ஈரம் பனிக்க தந்த அந்த முத்தத்தைவிட சிறந்த பரிசாக அந்த குழந்தை எழுத்தாளனுக்கு வேறென்ன கிடைத்து விடக்கூடும்?