சிங்கப்பூர்
தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘கண்ணதாசன்
விழா 2016’ க்கு
சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த இயக்குனர் மகேந்திரனிடம் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ சார்பாக
கேட்கப்பட்ட கேள்விகளும் அவரது பதில்களும்.
1. கதாசிரியர், இயக்குனர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், நடிகர்
என்று திரைத்துறையில் பல பணிகளைச் செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த
பணி எது?
எனக்கு கொடுக்கப்படும் அனைத்து பணிகளையும்
விரும்பி, மனம் ஒன்றிதான் செய்து வருகிறேன். எந்த ஒரு காரியத்தையும் அரைகுறையாக
செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு செயலை மற்றவர்களை விட ஏதோ ஒரு வகையில்
சிறப்பாகச் செய்ய வேண்டுமென விரும்புவேன். கழிவறையைச் சுத்தம் செய்யும் வேலையாக
இருந்தாலும் கூட அதிலும் என் முத்திரையைப் பதிக்கவே முனைவேன்.
படப்பிடிப்பில் இருந்த நாட்கள்தான் நான்
மிக மகிழ்ச்சியாக இருந்த காலகட்டம் எனச் சொல்லலாம். ஒன்றை உருவாக்கும்போது அல்லது
படைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனிதான். தாய்மையில் ஒரு பெண் அடையும்
சந்தோஷத்திற்கு இணையானது அது. தாய்க்கு ஒப்பானது இயக்குனரின் ஸ்தானம். உருவாக்குபவன்
பிரம்மா என்றால் நாம் அனைவருமே ஒருவகையில் பிரம்மாக்கள்தான்.
2. தற்போதைய
நடிகர் என்ற அவதாரத்தை விரும்பிதான் ஏற்றுக்கொண்டீர்களா?
சினிமாவையே நான் விரும்பவில்லையே....(சிரிக்கிறார்).
திரைத்துறையில் பெரும்பாலானோர் சினிமாவைக் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
சினிமாவை மனப்பூர்வமாக காதலித்து பல போராட்டங்களுக்குப் பிறகு சாதித்து வெற்றி
பெற்றவர்கள். ஆனால் என் கதை வித்தியாசமானது. எனக்கும் சினிமாவுக்கும் கட்டாயக்
கல்யாணம் நடந்தது. ஆனால் அதற்காக நான் மனைவியை வெறுக்கவில்லை. இயக்குனர் ஆனவுடன்
என் மனைவியை மனதார நேசிக்க ஆரம்பித்தேன்.
சினிமாவின் பெருமையை மிக தாமதமாகத்தான்
புரிந்துகொண்டேன். உலகின் வலிமையான ஓர் ஆயுதம், ஊடகம் சினிமாதான்
என்பது இயக்குனராக இருந்தபோது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் இன்னும்
அதிகமான, ஆழமான படங்களை எடுத்திருக்கலாம். பரவாயில்லை.
அதனால் என்ன? இதுவரை நான் கொடுத்த படங்களே என் மனதுக்கு மிகவும்
திருப்தியாகத்தான் உள்ளன.
3. தமிழ்
சினிமா தற்காலத்திலும் நாடகத்தனமாக இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனர் சத்யஜித்ரேவின்
படங்கள் பாடல்கள் இல்லாமல் யதார்த்த வாழ்க்கையை மிக அழகாக பதிவு செய்தன. அவரை
முன்மாதிரியாகக் கொண்டு படம் எடுத்தவர்களால் கூட ரே போல் கொள்கை பிடிப்போடு இயங்க முடியவில்லை. அவர்களும்
ஒரு காலகட்டத்திற்குப் பிறகு வணிக உலகில் சமரசம் செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.
நான் மாணவனாக இருந்தபோதே சினிமாவின் பாடல்
காட்சிகள், மிகையான நாடகப்பாணி காட்சிகள் மீது கடுமையான
விமர்சனத்தை முன்வைத்தேன். இப்போதும் அதே விமர்சனத்தை முன்வைக்க வேண்டியிருப்பது
துரதிர்ஷ்டம்தான்.
தயாரிப்பாளர்களுக்கு ஆடியோ ரைட்ஸ் மூலம் வரும்
லாபத்தைத் தடுக்க வேண்டாமே என்பதுதான் நான் பாடல்களை வைத்ததற்கான காரணம். என் படங்களில்
பெரும்பாலும் காட்சியின் பிண்ணனியில் பாடல்கள் ஒலிப்பது போலத்தான்
எடுத்துள்ளேன்.
நோயாளிக்கு அறுவைசிகிச்சை செய்யும்போது
தரப்படும் மயக்கமருந்து போலத்தான் மாற்று சினிமா எடுப்பவர்கள் பாடல்களைப்
பயன்படுத்துகிறார்கள் என நான் கருதுகிறேன். அந்த மயக்கமருந்து மோசமான
பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் நான் மிக கவனமாக இருந்தேன். எனது
படங்களில் பாடல்கள் கதைக்குத் தேவையானதாகவும் அந்தக் காட்சியை ஒரு படி மேலே
தூக்குவதாகவும் இருக்கும்.
4.
பெரும்பாலும் இலக்கிய படைப்புகளின் அடிப்படையில் உங்கள் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது திரைப்படங்களுக்கும் இலக்கிய படைப்புகளுக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது. இது
எதனால்?
இலக்கியம் படிக்காவிட்டாலும் கூட நம்மைச்
சுற்றி இருக்கும் சமூகத்தையும் அங்கு வாழும் மக்களையும் சரியாக அவதானித்தாலே ஒரு
சிறந்த திரைப்படத்தை எடுக்கமுடியும். பார்க்காத, கேட்காத, உணராத அனுபவங்களைப் படமாக எடுப்பது சற்று சவாலான பணி.
இலக்கியத்தை வாசிப்பதன் வழியாக ஒருவன்
சிறந்த அனுபவங்களைப் பெற முடியும். அதற்காக கண்ணில் கண்டதையெல்லாம் வாசிக்ககூடாது.
எதை படிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்து வாசிப்பது மிக முக்கியம். நான் இலக்கிய
வாசிப்பிற்குள் வந்தது அதன்மீது இருந்த காதலாலோ ஈடுபாட்டாலோ கிடையாது.
நான் ஒரு குறைமாதக் குழந்தை. பள்ளிப் பருவத்தில்
மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அவர்கள் செய்யும் காரியங்களை என்னால் செய்ய
இயலாது என்ற தாழ்வு மனப்பான்மை என்னை ஆட்கொண்டது. அதிலிருந்து மீள, அவர்கள் செய்யாத ஒன்றில் ஈடுபடவேண்டும்
என்ற எண்ணம் தோன்றியது. அப்போது பள்ளி நூலகம் கண்ணில்பட்டது. மற்றவர்கள் செய்யாத
வாசிப்பை நான் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படவேண்டும்
என்ற காரணத்தால் நான் படிக்கத் தொடங்கிய இலக்கியம் நாட்கள் நகர, நகர என்னை விடாமல் இறுகப் பற்றிக்கொண்டது.
நல்லவேளையாக அப்போது நான் வாசித்த நூல்கள் அனைத்தும் சிறந்த ஆசிரியர்களால்
எழுதப்பட்ட அற்புதமான படைப்புகள். இன்றுவரை எனது வாசிப்பு தொடர்கிறது. இன்னும்
படிக்கவேண்டியவை ஏராளமாக உள்ளன. இந்த வாசிப்பு வியாதி எனக்கு ஓர் உன்னதமான அனுபவத்தைத்
தருகிறது.
5.
இலக்கியப் படைப்பிலிருந்து ஒரு பொறியை மட்டும் எடுத்துக்கொண்டு திரைக்கதையை
அமைத்திருந்தாலும் அந்த படைப்பை எழுதியவருக்கு உரிய அடையாளத்தையும்
அங்கீகாரத்தையும் அளித்தவர் நீங்கள்.
ஆனால் இன்று தமிழ் திரை உலகில் கதைத்திருட்டு சர்வ சாதாரணமாகிவிட்டது. எதனால் இந்தக்
கற்பனை வறட்சி?
எனக்கும் இது எதனால் என்று புரியவில்லை.
விரைவாக பணமும் புகழும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைதான் இதற்கான காரணம் என்று
நினைக்கிறேன். உலக சினிமாவைப் பற்றி அறிந்தவர்கள் கூட சினிமாவை ஒரு
சூதாட்டமாகத்தான் பார்க்கிறார்கள். எத்தனை கோடி லாபம் வரும் என்றுதான்
யோசிக்கிறார்களே ஒழிய இந்தப் படம் மக்கள் மனதில் நிலைத்து நிற்குமா என்பதைப்
பற்றிய அக்கறை அவர்களுக்கு இருப்பதில்லை.
வெற்றிப்படங்கள், மறக்க
முடியாத படங்கள் என்று இரண்டு வகை படங்கள் உள்ளன. மாற்று சினிமா எடுப்பவர்களும்
வியாபார ரீதியாக வெற்றி அடையும் படங்களை எடுக்கவேண்டியது அவசியமாகிறது. பணத்திற்கு
நான் விரோதி இல்லை. ஆனால் அதிகப்படியான, தவறான
வழியில் வரும் பணத்திற்கு ஆசைப்படவேண்டாம் என்றுதான் சொல்கிறேன். எல்லாமே
வியாபாரம்தான். வியாபாரத்தை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்யலாம். கலப்படமாகவும்
செய்யலாம். இரண்டிலும் லாபம் உண்டு. ஆனால் உண்மைக்குத்தான் எப்போதுமே மதிப்பு என்பதை
நாம் உணரவேண்டும்.
6. தங்களின்
‘சினிமாவும் நானும்’
நூலுக்குப் பிறகு இன்னும் ஏதாவது எழுதும் எண்ணம் இருக்கிறதா?
‘சினிமாவும் நானும்’ முதல் பதிப்பில் சொல்லாமல் விட்டதை
எல்லாம் சேர்த்து தற்போது இரண்டாவது பதிப்பு வெளிவந்துள்ளது. ஒரு சில நாவல்கள்
எழுதியிருக்கிறேன். இட்டுக்கட்டி எழுதுவதைவிட அனுபவங்களை எழுதுவது எனக்கு எளிதாக
உள்ளது.
எல்லா இலக்கியப் படைப்புகளையும் படமாக எடுக்க முடியாது. சில
படைப்புகள் வாசிக்க நன்றாக இருக்கும். ஆனால் அதை படமாக்கும் சாத்தியக்கூறுகள்
குறைவாகவே இருக்கும். ஆனால் ஒரு மோசமான கதையில் ஏதோ இரண்டு வரிகள் நமக்குள் தாக்கத்தை
ஏற்படுத்தும். அந்தப் பொறியைக் கொண்டே ஒரு படத்தை உருவாக்கிவிடாலம்.
7. ஒரு
இயக்குனராக தமிழ் திரை உலகிற்குத் தங்கள் பங்களிப்பைச் சரியாக செய்திருப்பதாக உணர்கிறீர்களா?
இல்லை. நான் அப்படி உணரவில்லை. ஓர் இயக்குனராக மாற நான்
எந்த ஆசிரியரிடமும் பயிலவில்லை. என் அனுபவங்களே என் ஆசிரியர். நிறைய
சம்பாதிக்கவேண்டும், என் நிறுவனத்தை
விரிவுபடுத்தவேண்டும் போன்ற வியாபார எண்ணங்கள் எனக்கு இருந்தில்லை. ஆத்மார்த்தமாக
என் படங்களுக்காக உழைத்தேன். மிக தாமதமாகத்தான் சினிமாவின் மேன்மையை அறிந்து
கொண்டேன். ஒன்றும் தெரியாமல் நான் எடுத்த படங்களே இன்றளவும் பேசப்படும்போது நான்
இன்னும் முறையாக,
சரியாக
எடுத்திருத்திருக்கலாமோ என எண்ணுகிறேன்.
சமீபத்தில் எனது சாசனம் படம் வெளிவந்தது. 27 நாட்களில்
எடுத்து முடித்த அந்தப் படம் வெளிவர ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலைமை
ஏற்பட்டது. என் வாழ்க்கையில் நான் அதிக மன உளைச்சலுக்கு ஆளானது அந்த ஏழு
ஆண்டுகளில்தான். இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தி இருந்தாலும்
என் சுய நினைவு உள்ளவரை நல்ல, தரமான படங்களைக் கொடுப்பேன் என்ற
நம்பிக்கை எனக்கு உள்ளது.
திரை உலகில் நானும் இருக்கிறேன் என்பதை அறிவிப்பதற்காக ஒரு
படமெடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் பேசப்படுவதைவிட என் படங்கள் பேசப்படவேண்டும்
என விரும்புகிறேன். இப்போதும் நிறைய பேர் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு
படமெடுத்து தரச்சொல்லி அணுகுகிறார்கள். “பண
நிர்வாகத்தில் எனக்கு அனுபவம் குறைவு. எழுதுவதும் இயக்குவதும் மட்டுமே என் பணிகள்.
மிக முக்கியமாக என் படங்களில் பாடல்கள் இடம்பெறாது. இதற்கு ஒத்துவந்தால் இணைந்து
பணிபுரியலாம்” என்று அவர்களிடம் சொல்லி அனுப்புகிறேன். சில நேரங்களில்
மற்றவர்கள் மீது நான் காட்டும் இரக்கமே எனக்கு ஆபத்தைக் கொண்டு வந்துள்ளது. முடிந்த
அளவு சினிமாவுக்கு நேர்மையாக இருக்க முயல்கிறேன்.
8. எல்லாத்
துறைகளிலும் வணிகம், கலை என இரு
நடைமுறைகள் உள்ளன. ஒரு சிறந்த கலைஞன் சமரசம் செய்துகொள்வது அவசியமா?
உண்மையை மட்டுமே பேசவேண்டும் என்ற கூறும் அதே வள்ளுவர்தான்
ஒருவனுக்கு நன்மை ஏற்படுமென்றால் பொய் பேசுவதில் தவறில்லை என்கிறார். சமரசம் ஒரு நல்ல
நோக்கத்திற்காக செய்யப்படுமென்றால் அதில் தவறில்லை. சுயநலத்திற்காக சமரசங்கள்
செய்யக்கூடாது. சமரசம் என்பது விட்டுக்கொடுத்தல்தானே. ஈகோ தலை தூக்கும்போது சமரசம்
ஏற்பட வாய்ப்பில்லை.
ஒரு சினிமாவின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க யாராலும்
முடியாது. தமிழ்நாட்டில் மக்கள் பொழுதுபோக்கிற்காக சில மோசமான படங்களை கூட
ஓடவைத்துவிடுகிறார்கள். ஆனால் அண்டைய மாநிலங்களில் மாற்று திரைப்படங்களையும், உண்மையான கலைப்படைப்புகளையும் கொண்டாடுகிறார்கள்.
9. தமிழர்கள்
புலம்பெயர்ந்து வாழும் சில நாடுகளில் இன்று திரைப்படம் மொழியை வளர்க்கும் ஊடகமாக
உள்ளது. இதை இன்றைய தமிழ் இயக்குனர்கள் உணர்ந்துதான் படம் எடுக்கிறார்களா?
தமிழ்நாட்டை விட்டு விலகி போக, போகத்தான் மொழியின் மீது அதிக ஈடுபாடு
வருகிறது போலும் (சிரிக்கிறார்). சில தமிழ் படங்களின் தலைப்புகளைப் பார்த்தாலே வேதனையாகத்தான்
உள்ளது. சில வார்த்தைகளுக்குப் புது,
புது அர்த்தமே தருகிறார்கள். இன்று சம்பவம் என்றால் கொலை செய்வதைக் குறிக்கிறது.
மொழியின் அடிப்படையில் பார்த்தால் இது ஒரு மோசமான சூழல்தான். யானைக்குத் தன் பலம்
தெரியாது என்று சொல்வார்கள். அது போல திரைத்துறையில் இருக்கும் சிலருக்கு
சினிமாவின் பலம் தெரியாமல் போவது வருத்தம் அளிக்கிறது.
10.
உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ் பேட்டிக்காக
உங்கள் நேரத்தை ஒதுக்கியமைக்கு ஆசிரியர் குழு
சார்பாக நன்றி.
உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.
சிங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் என் வாழ்த்துகளும் நன்றிகளும்.
No comments:
Post a Comment