Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, October 22, 2016

ஆடுகளம்

அம்மா! ட்ரக் வந்திருச்சு! ட்ரக் வந்திருச்சு!என்று கத்திக்கொண்டே குதியாட்டம் போட்ட ஐந்து வயது மகன் கண்ணனைப் பார்த்த ஆனந்தியின் முகத்தில் புன்முறுவல் எழுந்தது. நான்காவது தளத்திலுள்ள தனது வீட்டின் முன்புற தாழ்வாரத்தில் காயப்போட்டிருந்த துணிகளை எடுத்துக்கொண்டே கீழே எட்டிப்பார்த்தாள். செம்ப்கார்ப் நிறுவனத்தின் குப்பை அள்ளும் வண்டி குப்பை அறையின் எதிரில் வந்து நின்றது. கண்ணன் தாழ்வாரத்தில் இருந்த சிறிய இடைவெளியின் வழியாக வண்டியை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான். காய்ந்த துணிகளை வீட்டிற்குள் சென்று வைத்துவிட்டு வெளியே வந்த ஆனந்தி, குப்பை அறையிலிருந்து மேலெழுந்து வந்த கெட்ட நாற்றத்தைச் சகிக்க முடியாமல் முகம் சுளித்தாள். ஆனால் கண்ணனோ நாற்றத்தைப் பொருட்படுத்தாமல், வைத்த கண் வாங்காமல் குப்பை அள்ளுவதைப் பார்த்துக்கொண்டு நின்றான்.  

வண்டி புறப்பட்டு போகும்வரை அவன் வீட்டிற்குள் வரமாட்டான் என்பதும் வண்டி நகர்ந்த மறுநொடி அவன் என்ன கேட்பான் என்பதும் ஆனந்திக்குத் தெரியும். இது வழக்கமாக நடப்பதுதான். வண்டி கிளம்பியவுடன் அவன் கேட்கும் கேள்வி அம்மா! விளையாட போகலாமா?” என்பதுதான். கடிகாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் சூரிய கடிகாரம் இருந்தது போல, நேரம் பார்க்கத் தெரியாத கண்ணனுக்கு குப்பைவண்டி ஒரு கடிகாரம். குப்பைவண்டி வந்து போனவுடன் அம்மா தன்னை விளையாட கீழே அழைத்துச் செல்வாள் என்பது அவனது மனதில் ஆழப் பதிந்து போய்விட்டது. சில சமயங்களில் வண்டி வரும் நேரத்தில் வீட்டிற்குள் இருக்க நேர்ந்தால் கூட, காற்றில் வரும் வாடையை வைத்தே வண்டியின் வருகையை உறுதி செய்து ஆனந்தியை நச்சரிக்கத் தொடங்கிவிடுவான்.

பள்ளி இருக்கும் நாட்களில் அவனது பிடிவாதம் குறைவாக இருக்கும்.  ஆனால் பள்ளி விடுமுறை நாட்களில் அவனைச் சமாளிப்பது சற்று கடினம். வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் அவனைப் பார்க்க ஆனந்திக்கு பாவமாக இருக்கும். அதனால் எவ்வளவு வீட்டு வேலை இருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு ஒரு மணி நேரமாவது அவனைக் கீழே அழைத்துச் சென்றுவிடுவாள். இப்போது நாற்றம் குறைந்திருந்தது. வண்டி கிளம்பிப்போகும் சத்தம் கேட்டது. ஆனால் கண்ணனோ அந்த இடத்தை விட்டு நகராமல் தொடர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். எதை இப்படி பார்த்துக்கொண்டு நிற்கிறான்?” என்ற கேள்வி எழ ஆனந்தி கீழே எட்டிப்பார்த்தாள். குப்பை வண்டி நின்ற இடத்தில் இப்போது இரண்டு சிறுவர்கள் பந்தை எட்டி உதைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

கண்ணா! வீட்டுக்குள் வா. அம்மா கதவைப் பூட்டப் போறேன்” திரும்பிப் பார்த்த கண்ணன் எதுவும் பேசாமல் அவளைப் பின்தொடர்ந்து வந்தான். மறந்துட்டானோ! வழக்கமாக கேட்கிற கேள்வியை இன்னும் கேட்கலையே!என்ற வியப்புடன் ஆனந்தி வாசல் கதவைச் சாத்திவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள். வேகமாக அவனது அறைக்குள் ஓடிய கண்ணன், ஓடிய வேகத்தில் திரும்பி அவளிடம் வந்தான். அம்மா! விளையாடப் போகலாமா?” என்று கேட்டவனின் கையில் போன மாதம் புதிதாக வாங்கிய பந்து இருந்தது.

******************************************

ஆனந்தியும், கண்ணனும் விளையாட்டுத் திடலுக்கு வந்தபோது, மணி மாலை ஐந்தை நெருங்கிக்கொண்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தைவிட கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. மற்ற நாட்களில் அத்தி பூத்தாற் போல எப்போதாவது ஒன்றிரண்டு சிறுவர்கள் பள்ளி விட்டு போகும் வழியில் சில நிமிடங்கள் விளையாடிவிட்டுக் கடந்து போவார்கள்.
புளோக்கின் அருகில் இருந்த திடல் அளவில் பெரியதாக இருந்தாலும், பத்து நிமிட நடை தூரத்தில் இருந்த இந்தச் சிறிய திடல்தான் கண்ணனுக்குப் பிடித்திருந்தது. அதற்கு முக்கிய காரணம் இங்கிருந்த ஊஞ்சல்கள்தான். சிறியதும், பெரியதுமாய் மூன்று சறுக்கு மரங்கள், இரண்டு ஊஞ்சல்கள், ஒரு சீசா பலகை என்று இருக்கும் இந்த திடலுக்கு வந்தால் ஆனந்திக்கு அம்மா சொன்னது தவறாமல் ஞாபகத்துக்கு வந்துவிடும்.

மலேசியா கம்போங்கில் பிறந்து வளர்ந்த அம்மா ஒருமுறை இதைப் பார்த்துவிட்டு இதைத்தான் பிளேகிரவுண்ட்ன்னு நீயும், உன் பிள்ளையும் சொன்னிங்களா! புறாக்கூடு அளவுக்குத்தான் இருக்கு. நான் என்னமோ நம்ம கம்போங் பக்கத்தில் இருக்கிற மாதிரி பெரிய மைதானமா இருக்கும்ன்னு நினைத்தேன்என்றாள். சிறியதாக இருந்தால் என்ன! பத்து புளோக்குகளுக்கென்று பொதுவாக விளையாட ஓர் இடம் இருக்கிறதே! அதுவே பெரிய விஷயம்தானே! என்று ஆனந்தி நினைத்துக்கொள்வாள்.

மாலை நேரத்தில் திடலின் மூலையில் இருந்த அந்த மரத்திலிருந்து ஒலிக்கும் பறவைகளின் ரம்மியமான சத்தம் ஆனந்திக்குப் பிடித்தமான ஒன்று. சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய கண்கவர் வண்ணங்களோடு இருந்த திடலில் பெரியவர்கள் உட்கார ஏதுவாக இரண்டு நீல நிற இருக்கைகள் இருந்தன. வழக்கம்போல, கண்ணன் வேகமாக ஓடிப்போய் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடத்தொடங்கினான். அவன் ஆடிமுடித்து எழுந்து வர குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும் என்பதால் கையில் வைத்திருந்த பந்து, தண்ணீர் பாட்டிலோடு ஆனந்தி இருக்கையில் சென்று அமர்ந்தாள். மாலை நேரத்து சூரியன் எட்டிப்பார்ப்பதும், மறைவதுமாக அவன் பங்குக்குத் தனது விளையாட்டைக் காட்டிக்கொண்டிருந்தான். உட்கார்ந்தவள், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மெதுவாக சுற்றும் முற்றும் தனது பார்வையைச் சுழலவிட்டாள்.

கண்ணன் வயதையொத்த குழந்தை ஒன்று கூட இல்லை. குறைந்தது எட்டு வயதுக்கு மேலிருந்த சிறுவர்கள் குழு, குழுவாக பிரிந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். மூன்று சிறுவர்கள் கொண்ட குழு காற்பந்து விளையாடிக் கொண்டிருந்தது. திடலின் எதிர்ப்புறத்தில் கார்களை நிறுத்தும் புளோக் இருந்ததால் வண்டிகள் வருவதும் போவதுமாக இருந்த பக்கத்து சாலையில் உதை வாங்கிய பந்து பறந்து போய் விழுவதும், அதை எடுக்க சிறுவர்கள் ஓடுவதும் ஆனந்தியின் மனதை பதைபதைக்கச் செய்தது. ஆனால் சிறுவர்கள் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம்கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அர்ச்சுனனுக்கு பறவையின் கண்ணைத் தவிர வேறு எதுவும் புலப்படாதது போல அவர்களுக்கும் காற்பந்தைத் தவிர வேறு எதுவுமே பெரிதாகப்படவில்லை.

இரண்டு சீன சிறுவர்கள் தனியாக இறகுப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கையில் மட்டையை பிடித்திருந்த விதமே அவர்களை கற்றுக்குட்டிகள் என்று காட்டிக்கொடுத்தது. பெயருக்கு விளையாடிக் கொண்டிருந்தார்களே தவிர அவர்கள் கவனமெல்லாம் காற்பந்தின் மீதுதான் இருந்தது என்பதைக் கையில் வைத்திருந்த மட்டையை அவ்வப்போது கீழே போட்டுவிட்டு காற்பந்தை எடுத்துக்கொடுக்க தலைதெறிக்க ஓடும் அவர்களது ஓட்டத்தின் மூலம் ஆனந்தி புரிந்துகொண்டாள். கண்ணனுக்கு கூட காற்பந்து விளையாட்டின் மீதுதான் ஈர்ப்பு அதிகம். ஆனந்தியின் கணவனுக்கோ இறகுப்பந்தாட்டம் விளையாடத்தான் மிகவும் விருப்பம். வாராவாரம் புதன்கிழமை மாலையில் அலுவலக நண்பர்களுடன்  இறகுப்பந்தாட்டம் விளையாடுவது அவரது வழக்கம். எப்படியாவது கண்ணனுக்கும் இந்த விளையாட்டில் ஆர்வத்தைக் கொண்டு வந்துவிடவேண்டும் என்று அவர் எடுத்த அத்தனை முயற்சிகளும் வீணாகத்தான் போயின.

நான்கு மலாய் சிறுவர்கள் அவர்களது பாரம்பரிய விளையாட்டான செபாக் ராகாவை விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்தவுடன் ஆனந்திக்கு, பதினைந்து வயதில் அல்பாயிசில் இறந்துபோன அண்ணன் குமாரின் நினைவு வந்தது. கம்போங்கில் சிறுவயதில் அவன் செபாக் ராகாவை விளையாடுவதைப் பார்த்து மலாய்க்காரர்கள் வாயைப் பிளப்பார்கள். பிறப்பில் இந்தியனாக இருந்தாலும் அவனது உடம்பில் மலாய் ஜீன் ஒட்டிக்கொண்டிருப்பதாக சொல்வார்கள். அவர்கள் சொன்னதுபோல மரபியலுக்கும் விளையாட்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் இன்று வரை ஆனந்திக்கு உண்டு. அண்ணனின் மறைவுக்குப் பிறகான இந்த இருபது வருட கால இடைவெளியில், செபாக் ராகாவை யார் விளையாடினாலும் அவர்களது உருவத்தில் குமார் அண்ணனைப் பார்த்துவிடுவாள்.  

திடலின் மூலையில் மூன்று சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கு நின்றிருந்த மரத்தின் பருத்த, தடித்த அடிப்பகுதியை ஸ்டம்ப்பாக மாற்றி இருந்தார்கள். சமீப காலமாகத்தான் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களை சிங்கப்பூரில் பார்க்கமுடிகிறது. ஒருவன் மட்டையைப் பிடித்திருக்க இன்னொருவன் பந்து வீசிக்கொண்டிருந்தான். மூன்றாமவனுக்கு பந்து பொறுக்கும் வேலையை கொடுத்திருந்தார்கள். அவனுக்கு அது பிடிக்கவில்லை என்பது அவனது செய்கையிலேயே தெரிந்தது. பந்து அருகில் விழுந்தால் மட்டுமே ஓடிப்போய் எடுத்தவன், தொலைவில் விழும்போது தனக்கும் அந்த விளையாட்டுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது போல விளையாடும் மற்ற குழுக்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். அப்போதெல்லாம் அவனைப் பார்த்து சத்தமாக ஆங்கிலத்தில் திட்டிவிட்டு, மற்ற இருவரும் ஓடிப்போய் பந்தை எடுத்து வந்தார்கள். அதை பார்த்த ஆனந்திக்குச் சிரிப்பு வந்தது.

கண்ணனைப் பார்த்தாள். அவனுக்கு ஊஞ்சல் அலுத்துவிட்டது போலும்! குட்டி ஏணியிலும், சிறிய படிகளிலும் ஏறிப்போய் ஒவ்வொரு சறுக்கு மரத்திலும் மாறி, மாறி சறுக்கிக் கொண்டிருந்தான். இடைஇடையே காற்பந்தை எடுக்க அவன் சாலையை நோக்கி ஓட முற்படுவதும் ஆனந்தி சத்தம் போட்டு அதட்டியவுடன் மீண்டும் தனது விளையாட்டைத் தொடர்வதுமாக இருந்தவன் திடீரென்று ஆனந்தியை நோக்கி ஓடிவந்தான். 

அம்மா! டாய்லெட் போகணும்

இங்கே எங்கே போறது? வா வீட்டுக்குப் போவோம்என்று கூறிக்கொண்டே ஆனந்தி வேகமாக எழுந்தாள்.

அம்மா! மூச்சா வந்திருச்சும்மா என்று சிறுநீரை அடக்கமுடியாமல் கால்களைப் பின்னிக்கொண்டு நெளிந்தான் கண்ணன்.

உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்! கடைசி நிமிஷத்துல சொல்லாதேன்னு என்று அதட்டியவள் அவனைப் பக்கத்திலிருந்த கோப்பித்தியாம் டாய்லெட்டிற்கு அழைத்துச் சென்று, சிறுநீர் கழிக்கவைத்து திடலுக்கு திரும்ப அழைத்துவர பதினைந்து நிமிடங்கள் பிடித்தன. அவளுக்கு முன்பாக திடலுக்கு ஓடிவந்த கண்ணன் இருக்கையில் இருந்த பாட்டிலை எடுத்து மடக் மடக்கென்று தண்ணீரை குடித்துவிட்டு கொண்டு வந்திருந்த புதிய பந்தை எடுத்து உதைக்கத் தொடங்கியிருந்தான். மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்த ஆனந்திக்கு திடலில் நிலவிய அமைதி ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

என்னவாயிற்று இந்த சிறுவர்களுக்கு? ஏன் எல்லோரும் விளையாடுவதை நிறுத்திவிட்டார்கள்? குழுக்களுக்கு இடையில் சண்டையா! பதினைந்து நிமிட இடைவெளியில் என்ன நடந்திருக்கும்? எல்லோரும்  ஒரே நேரத்தில் விளையாடுவதை நிறுத்தி இருக்கிறார்கள் என்றால் கட்டாயம் வலுவான காரணம் இருக்கவேண்டும். என்னவாக இருக்கும்?” என்றெல்லாம் பல கேள்விகள் ஆனந்தியின் மனதை துளைத்து எடுத்தன.

அவர்கள் விளையாடியபோது பறந்த பந்தை எடுத்துக் கொடுக்க கண்ணன் ஓடியது போக, இப்போது கண்ணன் உதைக்கும் பந்தை எடுத்துக் கொடுப்பதற்காக ஒன்றிரண்டு சிறுவர்கள் விழுந்தடித்து ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் ஆனந்தி கவனித்தாள். மற்றொரு இருக்கையில் ஒரு வயதான தாத்தா இறுக்கமான முகத்தோடு அமர்ந்திருந்தார். இவர் எப்போது வந்தார்? கண்ணனை சிறுநீர் கழிக்க அழைத்துச் சென்றபோது வந்திருப்பாரோ! ஏன் முகத்தை இவ்வளவு கடுமையாக வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்? இந்த சிறுவர்கள் அவரை ஏதாவது தொந்தரவு செய்திருப்பார்களோ? பந்தை அவர் மீது அடித்துவிட்டார்களோ! அதனால்தான் விளையாடாமல் நிற்கிறார்களோ! என்று அடுக்கடுக்காக பல சந்தேகங்களும், யூகங்களும் அவள் மனதில் வந்து விழுந்தன. அவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள, தொலைவில் நின்றிருந்த தமிழ்ப்பொடியன் ஒருவனை அழைத்தாள்.

என்னாச்சு? விளையாடலையா?”

இல்லை ஆண்ட்டி! நாங்க விளையாடினா அந்தத் தாத்தா திட்டுவாரு

தாத்தா திட்டுவாரா! அவரு ஏன் உங்களைத் திட்டணும்?”

சில்ட்ரன்ஸ் பிளேகிரவுண்ட்ல மத்த கேம்ஸ் விளையாடக்கூடாது ஆண்ட்டி. அதோ அந்த போர்டில் ரூல்ஸ் போட்டிருக்கு பாருங்க. அதனால்தான் தாத்தா எங்களை விளையாடக் கூடாதுன்னு சொல்லிட்டார்

ஓ! அப்படியா!

மீண்டும் தாத்தாவைப் பார்த்தாள். கடுகடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு விறைப்பாக உட்காரந்திருந்தார். முகத்தில் தெரிந்த சுருக்கங்களும், தலையில் பரவிக்கிடந்த வெண்முடிகளும் தோராயமாக அவருக்கு வயது அறுபதுக்கு மேல் இருக்கும் என்று சொல்லின. முகத்தில் தெரிந்த முதுமை கொஞ்சம்கூட உடலில் தெரியவே இல்லை. திண்ணென்று இருந்த தோள்களோடும், உருளைக்கட்டை போன்ற கை, கால்களோடும், கட்டுமஸ்தான உடலோடும் இருந்தவரை பார்த்த ஆனந்திக்கு அவர் காவல் அதிகாரியாகவோ அல்லது ராணுவத்திலோ பணி புரிந்திருக்கலாம் என்று தோன்றியது. சில ஆட்களை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விடும். காரணம் கேட்டால் குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமே இருக்காது. ஆனந்திக்கும் அந்தத் தாத்தாவை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட்டது. ஆனால் அதற்கு காரணம் இருந்தது. உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் உலகத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து அவர்களின் ஆனந்தத்தை நொடிப்பொழுதில் கலைத்துவிட்டாரே என்று அவர் மீது கோபமும், எரிச்சலும் மண்டியது.

தொடர்ந்து விளையாடவும் முடியாமல், வெறுமனே நிற்கவும் முடியாமல், வீட்டுக்கு போகவும் விருப்பமில்லாமல் குழு, குழுவாக கூடி நின்று தங்களுக்குள் மெதுவான குரலில் பேசிக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்க்க அவளுக்குப் பாவமாக இருந்தது. வயதானாலே யாரையாவது, எதையாவது குறை சொல்லத் தோன்றுமோ! கூடிப்போனால் இன்னும் அரைமணி நேரம் இந்தப் பிள்ளைகள் விளையாடப்போறாங்க. அதற்கப்புறம் வீட்டுக்குப் போயிடுவாங்க. அதுக்குள்ள ரூல்ஸ் அது இதுன்னு பேசி அவங்களை விளையாட விடாமல் செஞ்சிட்டாரே என்று மனதுக்குள் வருந்தினாள்.

அப்போது கண்ணன் அடித்த பந்து தாத்தாவின் காலில் பட்டு கீழே விழுந்தது. குனிந்து பந்தை எடுத்தவர் கண்ணனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு ஹாய் பாய்! கேட்ச் இட் என்று சொல்லிக்கொண்டே அவனை நோக்கி உற்சாகமாக பந்தை வீசினார். அவரது இடது கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை பார்த்த ஆனந்திக்கு எரிச்சல் மேலும் அதிகமாகியது. சே! என்ன மனிதர் இவர்! பெரிசா சட்டம் பேசுறார். ஆனால் சின்னபிள்ளைங்க இருக்கிற இடத்துல சிகரெட் பிடிக்கக்கூடாதுன்னு இவருக்குத் தெரியலையே!

அவர் மீது கோபத்தை காட்ட வழியில்லாததால் கண்ணனை நோக்கி கண்ணா! இந்தப் பக்கம் வந்து விளையாடு! அங்கே போனால் அடி வாங்குவ! என்று கத்தினாள். கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் தற்போது சறுக்கு மரங்களில் சறுக்கி விளையாடிக்கொண்டிருந்தார்கள். இறகுப்பந்தாட்டம் விளையாடிய சீனச்சிறுவர்கள் இருவரும் சீசா பலகையில் ஆடிக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு கத்தினாலும் கண்ணன் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் அந்தத் தாத்தா அருகிலேயே நின்று பந்தை அடித்து விளையாடிக்கொண்டிருந்தான். அவ்வப்போது அவனது பந்து விளையாட்டில் தாத்தாவும் பங்கெடுத்ததால் அவரை கண்ணனுக்கு பிடித்துபோய்விட்டது. அது என்ன மாயமோ தெரியவில்லை! குழந்தைகளும், வயதானவர்களும் ஒருவருக்கொருவர் மிக எளிதாக நெருக்கமாகிவிடுகிறார்கள்.

சொய்...சொய்....சொய்....சொய்....கை அளவு நெஞ்சத்தில கடல் அளவு ஆசை மச்சான்”, ஆனந்தியின் கைத்தொலைபேசி அழகாகப் பாடி அழைத்தது. எதிர்முனையில் அவளது கணவன் பேசினார்.

ம்...சொல்லுங்க. ஆஃபிஸிலிருந்து கிளம்பிட்டிங்களா?”

இப்பதான் கிளம்புறேன். இன்னும் நாப்பது நிமிடத்தில் வந்துடுவேன். நீ வீட்லதானே இருக்க?”

இல்லை. நான் கண்ணனை விளையாட கீழே கூட்டிகிட்டு வந்தேன்

ஓ அப்படியா! நான் வீட்டுச் சாவியை எடுத்துட்டு வர மறந்துட்டேன். நீ கண்ணனை கூட்டிட்டு வீட்டுக்கு வர முடியுமா?”

சரி வர்றேன்! இன்னும் பத்து நிமிஷத்துல கிளம்பிடுறேன்

ஆனந்தி கண்ணனை அழைக்கத் திரும்பினாள். அவன் தாத்தாவோடு மும்முரமாக பந்து விளையாடிக்கொண்டிருந்தான்.

கண்ணா! கண்ணா! வா வீட்டுக்கு கிளம்பலாம். நேரமாச்சு

அவள் அழைத்தவுடன் திரும்பிப்பார்த்த கண்ணன் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் தனது விளையாட்டை தொடர்ந்தான். வேகமாக இருக்கையை விட்டு எழுந்த அவள் அவனை நோக்கி நடந்தாள்.

கண்ணா! வா வீட்டுக்கு போகலாம். அப்பா வந்துட்டாங்க

போம்மா! நான் வரமாட்டேன்

நாளைக்கு வரலாம் கண்ணா!

அவள் குரலை உயர்த்தியதிலிருந்து தாத்தா அவளது எரிச்சலையும், கோபத்தையும் புரிந்துகொண்டார் போலும். ஹே பாய்! மம்மி இஸ் காலிங் யு. கம் டுமாரோ. வீ வில் பிளே என்று அவர் கண்ணனைப் பார்த்துச் சொன்ன மறுநொடி அவன் பெட்டிப்பாம்பாக மாறி வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமானான். அவள் முகத்தில் ஆச்சர்யக்குறியைத் தேக்கி கண்கள் விரிய அவரைப் பார்க்க அவர் ஆங்கிலத்தில் தனது பேச்சை தொடர்ந்தார்.

ஸ்மார்ட் பாய்! ரொம்ப நேரமா தனியாக விளையாடிட்டு இருந்தான் இல்லையா! சலிப்பாக இருந்திருக்கும். நான் அவனோடு விளையாடியவுடன் என்னை அவனுக்குப் பிடித்துவிட்டது. என்னை நண்பனாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டான். பார்! நான் சொன்னவுடன் மறுபேச்சு பேசாமல் கிளம்புகிறான். தனியாக விளையாடுவதில் என்ன சுவாரஸ்யம் இருக்கமுடியும்? கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அந்தப் பிள்ளைகளையும் அதற்காகத்தான் அதட்டினேன். ரூல்ஸைக் காரணம் காட்டி சத்தம் போட்டேன். இருப்பதோ சின்ன விளையாட்டுத் திடல். இதில் குழு, குழுவாக பிரிந்து விளையாடுவதில் அப்படி என்ன பெரிதாக மகிழ்ச்சி வந்துவிடும்?! என்று கூறிவிட்டு கையில் இருந்த சிகரெட்டைப் புகைக்க ஆரம்பித்தார்.

கண்ணனின் கையைப் பிடித்துக்கொண்டு வீடு நோக்கி நடந்த ஆனந்தி திரும்பிப் பார்த்தாள். பத்து, பன்னிரண்டு சிறுவர்களும் ஒன்றாக சேர்ந்து ஒரே குழுவாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் அளவிட முடியாத மகிழ்ச்சியும் ஆனந்தமும் தாண்டவமாடின. அந்த திடலில் இருந்து விண்ணை பிளக்கும் அளவிற்கு ஆரவாரம் எழுந்து காற்றில் மிதந்து வந்தது. பத்தடி தூரம் நடந்த பின்பு திடலைத் திரும்பிப் பார்த்த கண்ணன், அந்த முதியவரிடம் கையைத் தூக்கி அசைத்து விடைபெற்றான். ஆனந்தியும் அந்த ஆடுகளத்தின் நாயகனிடமிருந்து விடைபெற தன்னை அறியாமல் கையை உயர்த்தி அசைக்க ஆரம்பித்தாள். தெருவில் வெயில் குறைந்திருந்தது. 



 முள்முடி

'தமிழ்முரசு' செய்திதாளில் வெளியானது

நான் சொல்லிகிட்டே இருக்கேன். நீ காதுல வாங்காம அலட்சியமா போனா என்னலா அர்த்தம்?

எனக்குப் பிடிக்கலைன்னு அர்த்தம்.”

ஒரு மாசமா நானும் அம்மாவும் சொல்லிட்டு இருக்கோம். தலைமுடியைப் பாம்பு புத்து மாதிரி வளர்த்து வச்சிருக்கே. அதை வெட்டுனாதான் என்னலா ஒனக்கு?”

ஒங்களுக்குப் பிடிக்கலைன்னா நான் வெட்டணுமா? முடியாது டாடி. எனக்குப் பிடிச்சிருக்கு. இதான் இப்போ ஃபேஷன்

என்ன ஃபேஷனோ! நல்ல குடும்பத்தில பொறந்த பாய் மாதிரியா இருக்கே. நீயும் உன் முடியும்.......”

டாடி! காலையிலேயே ஆரம்பிக்காதிங்க!” என்று சொல்லிவிட்டு வேகமாக அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டான் கார்த்திக்.

சுதா! நான் இங்க நாயா கத்திகிட்டு இருக்கேன். நீ கிச்சன்ல என்னலா செஞ்சுகிட்டு இருக்கே. நீ மதிச்சாதானே உன் புள்ளை என்னை மதிப்பான் என்று கணவர் இயலாமையில் கத்தும் குரல் கேட்டு சமையலறையை விட்டு வேகமாக வெளியே வந்தாள் சுதா.

ஞாயிற்றுக்கிழமை என்றாலே சுதாவுக்கு அலர்ஜிதான். தினமும் காலையில் அரக்க பரக்க வேலைக்கு கிளம்பி செல்வது இரத்த கொதிப்பை அதிகரித்தாலும் ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பே வந்துவிடுமோ என்று பயப்படும் அளவுக்கு கணவரும் மகனும் கலகத்தை உண்டு பண்ணுவார்கள். இருவருக்கும் இன்று விடுமுறைதானே! இன்றும் வேலைக்கு கிளம்பும் எனக்கு உதவி செய்யலாம். அதை விட்டுவிட்டு இப்படி உபத்திரவம் கொடுக்கிறார்களே!” என்ற எரிச்சலுடன் சுதா கார்த்திக்கின் அறைக்கதவை வேகமாக தட்டினாள்.

ஏய் கார்த்திக்! அப்பா சொன்னது காதுல விழுந்துச்சா இல்லையா? உன் மனசுல என்னதான்லா நினைச்சுகிட்டு இருக்கே! இன்னைக்குச் சலூனுக்கு போய் முடியை வெட்டுனாதான் வீட்டுக்குள்ள வரலாம் என்று பலம் கொண்ட மட்டும் கத்தியும் கார்த்திக் அறைக்கதவை திறக்கவில்லை. திரும்பி கணவனைப் பார்த்தாள். இப்போது அவர் தனக்கும் அந்த வீட்டிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பது போல அமர்ந்து தமிழ்முரசைப் படித்துக்கொண்டிருந்தார். கணவர், மகன் என்ற இரண்டு ஆண்களைச் சமாளிப்பது கின்னஸ் சாதனையைவிட மேலானது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே சுதா குளியலறைக்குள் புகுந்தாள்.

பதினாறு வயது பையனை அடித்தா திருத்த முடியும்! என் முடியைக் கூட என் இஷ்டப்படி வளர்க்க கூடாதா?” என்று அவன் எதிர் கேள்வி கேட்கும்போதெல்லாம் சிறு வயதில் தேங்காய் எண்ணெய் வைத்து தலைமுடியைப் படிய வாராமல் பள்ளிக்கூடம் சென்றதற்காக அப்பாவிடம் அண்ணன் வாங்கிய அடி நினைவுக்கு வந்து போகிறது.

எதைச் சொன்னாலும் எதிர்த்து பேசும் வயது. ஒரே பிள்ளை என்று செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டு இப்போது அவனை ஒரேடியாக கண்டிக்கவும் சுதாவுக்குப் பயமாக இருக்கிறது. டூரியான் பழத்தில் இருக்கும் முட்கள் மாதிரி கார்த்திக்கின் தலையில் குச்சி குச்சியாக நீட்டிக்கொண்டு நிற்கும் முடிகளைப் பார்க்கும்போது கத்தரிக்கோலை எடுத்து வெட்டி எறிந்துவிடலாமா என்று அவளுக்கு சில சமயங்களில் கை பரபரக்கும்.

கூல் மம்மி! இது ஸ்பைக் ஹேர் ஸ்டைல். இதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட் என்று கார்த்திக் சொல்லும்போது தமிழ் சினிமாவில் வரும் ரௌடி மாதிரி இருக்கிறாய். இதுவா உனக்கு லேட்டஸ்ட் டிரெண்ட்? என்று தொண்டை வரை வரும் கேள்வியை மகன் மனம் வருந்துமே என்ற காரணத்தால் சுதா கேட்காமல் அப்படியே விழுங்கிவிடுவாள்.

சாப்பாட்டுக் கடைக்கு அவள் வந்து சேர்ந்தபோது கடையின் முன் நான்கு பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரிடமும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அருகில் நின்ற பரோட்டா மாஸ்டருக்கு ஆர்டரைச் சொல்லிக் கொண்டிருந்த முதலாளி மகன் அப்துல் இவளைப் பார்த்தவுடன் புன்முறுவல் செய்தான். வேகமாக சென்று தனது கைப்பையை வழக்கமான இடத்தில் வைத்தவள் அப்துலை நெருங்கி அப்துல்! நீ போ லா! நான் பார்த்துக்கிறேன் என்றாள்.

அந்த கோப்பிக் கடை பத்து கடைகளுடன் எம்.ஆர்.டியின் அருகில் இருந்ததால் அங்கு எப்போதும் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும். லக்சாவிற்கு மிகவும் பிரபலமான கடையில் சுதா வாரத்தில் ஒருநாளாவது லக்ஸா வாங்கி சாப்பிட்டுவிடுவாள். மலாய் உணவு விற்கும் கடைகள் இரண்டு இருந்தன. அங்கு விற்கப்படும் மட்டன் சத்தேயின் மணம் கிளேபாட் ரைஸின் ஆவியுடன் கலந்து  கோப்பிக் கடை முழுமைக்கும் பரவி நிற்கும். சுதா வேலை செய்யும் இந்திய முஸ்லிம் உணவகத்தின் தவ்கேயும், அப்துலின் தந்தையுமான முகமது தன் காலத்திற்குப் பிறகு சாப்பாட்டுக்கடைத் தொழிலைத் தன் பிள்ளைகள் எடுத்து நடத்த மாட்டார்கள் என்று சுதாவிடம் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார். ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டு மணி .நேரம் கடையில் நிற்கவே  நீ எப்போது வருவாய் நழுவி ஓடலாம் என்று நிற்கிறான் பார் என்று அலுத்துக்கொள்வார். அப்பாவின் நீண்ட கால நண்பரான அவர் சுதாவிடம் கடையில் வேலை செய்கிறாயா என்று கேட்டபோது வீட்டில் சும்மாதானே இருக்கிறேன். வர்ற லெட்சுமியை வேண்டாம் என்று ஏன் சொல்ல வேண்டும்என்று எண்ணிய சுதா உடனே சம்மதித்தாள். கடந்த இரண்டு வருடமாக வேலையில் சுதாவின் மதிப்பு கூடிக்கொண்டேயிருந்தது.

வேலைப் பரபரப்பில் இருந்த சுதாவுக்கு நேரம் போனதே தெரியவில்லை. மணி மதியம் இரண்டை நெருங்கி கொண்டிருந்தது. சற்று நேரம் கடையைப் பார்த்துக்கொள்ளுமாறு பரோட்டா மாஸ்டரிடம் சொல்லிவிட்டு அவள் கோப்பிக் கடையின் பின்புறத்தில் இருந்த கழிவறையை நோக்கி நடந்தாள். அதை ஒட்டி இருந்த பாத்திரங்கள் கழுவும் சிறு அறையின் அருகே நின்ற சீனப்பாட்டி சுதாவைப் பார்த்து கையசைத்தாள். சுதாவுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போய் சுத்தமாக கழுவி மீண்டும் அந்தந்த கடைகளில் வைப்பதுதான் சீனப்பாட்டியின் வேலை. எப்போதும் கடுகடுவென்ற முகத்துடன் மறந்தும் சிரித்துவிடக்கூடாது என்பதைக் கொள்கையாகவே வைத்திருக்கும் பாட்டி எதற்காக தன்னை அழைக்கிறார் என்ற ஆர்வம் மேலிட சுதா அவரின் அருகே போய் நின்றாள்.

யூ சீ குமார் தேர்? என்று பாட்டி கேட்டவுடன்தான் சுதாவிற்கு காலையிலிருந்து குமாரைப் பார்க்காதது நினைவுக்கு வந்தது. நோ லாஎன்று சொல்லிவிட்டு கழிவறைக்குள் நுழைந்தவள் மனத்தில் குமாரைப் பற்றிய எண்ணங்கள் மேலெழுந்து வந்தன. சீன பாட்டிக்கு உதவியாக பாத்திரங்கள் கழுவும் பகுதி நேர வேலைக்கு குமார் சேர்ந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகின்றன. வேலைக்குச் சேர்ந்த ஒரே மாதத்தில் சுதாவுடன் மிகவும் நெருக்கமாகிவிட்டான். ஸ்டூடண்ட் பாஸில் தொழிதுறைக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் அவனுக்குச் சொந்த ஊர் மலேசியாவில் இருக்கும் செராம்பன். சிங்கப்பூர் விதிமுறைப்படி அவனால் வாரத்திற்குப் பதினாறு மணி நேரம் மட்டுமே பகுதி வேலை செய்யமுடியும் என்பதால் வார இறுதி நாட்களில் மட்டும்தான் அவனை கோப்பிக்கடையில் பார்க்க முடியும். சிங்கப்பூரில் நிரந்தரவாசி உரிமை பெற்று வசித்து கொண்டிருக்கும் தனது கார்டியனான பெரியப்பா மகனுக்குத் தன்னால் முடிந்த அளவு இடையூறு கொடுக்காமல் இருக்கவேண்டும் என்ற முனைப்புதான் அவனின் இந்த பகுதி நேர வேலை.

கழிவறையை விட்டு வெளியேறி நடந்த சுதாவின் கண்களுக்கு, அருகே இருந்த பேரங்காடியின் ஒரு தூணுக்குப் பின்னால் சற்று மறைவான இடத்தில் அமர்ந்து புகை பிடித்துக்கொண்டிருந்த குமார் புலப்பட்டான். விரைந்து அவனிடத்திற்குச் சென்ற சுதா ஏய் குமார்! எப்பலா வந்தே? அந்த சைனீஸ் பாட்டி உன்னை தேடிகிட்டு இருக்காங்க. நீ இங்க என்னலா செய்துகிட்டு இருக்கே?” என்று கேட்டவுடன் மிக மெதுவாக தலையை நீட்டி கோப்பிக் கடையைப் பார்த்தவன் மீண்டும் வேகமாக தலையை மறைவாக இழுத்துக்கொண்டான்.

என்னாச்சுலா? அங்கே யாரு இருக்கா? ஏன்லா இப்படி ஒளிஞ்சிக்கிறே?

அக்கா! என்னோட ஒண்ணா படிக்கிற கூட்டாளிங்க வந்திருக்காங்க. அதான்.....

அதுக்கென்னலா? அவங்ககிட்ட கடன் ஏதாவது வாங்கினியா?

கடனா! அல்லாமா! இல்லைக்கா! நான் அவங்ககிட்ட ஒரு பொய் சொல்லிட்டேன்

பொய்யா! அப்படி என்னலா பொய் சொன்னே?”

போன மாசம் கூட்டாளி ஒருத்தன் இங்க சாப்பிட வந்திருந்தான். நான் இங்க என்ன செய்றேன்னு கேட்டான். செய்ற வேலையைச் சொன்னா ‘புல்லி’ பண்ணுவான்னு பயந்துகிட்டு, நீங்க வேலை பார்க்கிற முஸ்லீம் கடையில எங்க அண்ணனும் ஒரு பார்ட்னர்னு பொய் சொல்லிட்டேன்க்கா. இன்னைக்குப் பார்த்தா கூட்டமா வந்து உட்கார்ந்திருக்காங்க. உங்ககிட்ட என்னைப்பத்தி ஏதாவது கேட்டாங்களா?

இல்லையே! நீ எதுக்குலா இப்படி பயப்படுறே?”

ஒங்களுக்கு இதெல்லாம் புரியாதுக்கா. காலேஜ்ல எல்லாரு முன்னாடியும் ‘புல்லி’ பண்ணுவாங்க. அசிங்கமா இருக்கும்கா. அவங்க போனப்புறம் எனக்கு கால் பண்றிங்களா?

ஓகே குமார்! என்ற சுதா ஏன்லா எப்ப பார்த்தாலும் இந்த சிகரெட்டை ஊதுறே? என்று கடுமையாக கேட்டுவிட்டு கடையை நோக்கி நடந்தாள். பசி வயிற்றைக் கிள்ள கோழி பிரியாணியைத் தட்டில் எடுத்து வைத்துக்கொண்டு அங்கிருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே குமாரின் நண்பர்களைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

சத்தம் போட்டுச் சிரித்து பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்த அந்த ஐந்து இளைஞர்களையும் பார்த்தவுடன் சுதாவுக்கு தன் மகன் கார்த்திக்கின் நினைவு வந்தது. ஒவ்வொருவரின் தலைமுடியும் முள்ளம்பன்றியின் முட்கள் போன்று வெவ்வேறு திசைகளில் குத்திக்கொண்டும் நீட்டிக்கொண்டும் நிற்பதை பார்த்தவுடன் அவளுக்கு ஒருபுறம் சிரிப்பு வந்தாலும் மறுபுறம் வழக்கமான எரிச்சலும் வந்தது. அவர்களின் விலை உயர்ந்த உடைகள், காலணிகள், கைத்தொலைபேசிகள் அனைத்தையும் பார்த்த சுதாவின் மனதில் அவர்கள் பெற்றோரின் வியர்வைத்துளிகள் பட்டுத்தெறித்தன. காரணமற்ற வெளியே சொல்லமுடியாத ஒரு வெறுப்பு அவர்கள் மீது வியாபித்து படர்ந்தது.

சாப்பிட்டு முடித்து சுதா எழுந்திருக்கும் தருணத்தில் அந்த கூட்டத்திலிருந்து வேகமாக வந்த பொடியன் ஒருவன், “ஹலோ ஆண்ட்டி! குமார் எப்போ கடைக்கு வருவான்?” என்று கேட்க பொய் சொல்வதற்கு முன் மனிதனுக்கு இயல்பாக வரும் பதற்றம் அவளையும் தொற்றிக்கொண்டது.

பாஸ் இன்னைக்கு கடைக்கு வர மாட்டாரே என்று அவள் சொன்னவுடன் வந்த வேகத்தில் அவன் திரும்பிச் செல்ல சற்று நேரத்தில் ஒரு பெரிய சிரிப்பொலி அந்த கூட்டத்திலிருந்து எழுந்து அடங்கியது. கை கழுவும் இடத்திற்குச் சென்று கைகளை கழுவிவிட்டு திரும்பியவள் அருகில் அந்த இளைஞர்கள் கூட்டம் வந்து நின்றது.

ஆண்ட்டி! குமாருக்கு இன்னைக்கு பர்த்டே. சர்ப்ரைஸா பர்த்டே பிரசென்ட் கொடுக்க வந்தோம். அவன் வந்தா இதை கொடுத்துடுங்க. ப்ளீஸ்!” என்று சொல்லிக்கொண்டே ஒருவன் அழகாக கட்டப்பட்ட ஒரு சிறிய பரிசுப் பொட்டலத்தை நீட்ட சுதா அதை வாங்கிக்கொண்டாள்.

அவன்தான் பொய் சொல்றான்னா நீங்க ஏன் ஆண்ட்டி பாஸ்னு பொய் சொன்னிங்க?” என்று ஒருவன் குறும்பு கொப்பளிக்க கேட்க மற்றவர்கள் முகத்திலும் சிரிப்பு தாண்டவமாடியது. சுதா என்ன பதிலளிப்பது, எப்படி பேசுவது என்று அசடு வழிய நிற்க இட்ஸ் ஓகே ஆண்ட்டி! மறக்காம கொடுத்துடுங்க!” என்று சொல்லிவிட்டு வெளியேறியவர்களை சுதா தனது கண்கள் விரிய பார்த்துக்கொண்டு நின்றாள். இருபடி தூரம் கடந்தவுடன் அவர்களில் ஒருவன் அவளை நோக்கி வேகமாக ஓடிவந்து ஆண்ட்டி! சொல்ல மறந்துட்டோம். எங்களுக்கு தெரியும்கிறது உங்க பாஸுக்குத் தெரியவேண்டாம். ப்ளீஸ்!” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு மீண்டும் வேகமாக ஓடி தனது நண்பர்களோடு இணைந்துகொண்டான். பார்வையிலிருந்து மறையும்வரை அவர்களையே பார்த்துக்கொண்டு நின்ற சுதா பின்பு மெதுவாக கடைக்குள் நுழைந்து தனது கைத்தொலைபேசியை எடுத்து வீட்டு தொலைபேசி எண்களை அழுத்தினாள்.

ஹலோ! யாரு?

கார்த்திக்! நான் அம்மா பேசுறேன்

ம்.........சொல்லுங்க மம்மி

சலூனுக்குப் போனியா?” .

.........................................”. அந்த பக்கத்திலிருந்து பதில் இல்லை.

ஹலோ! கார்த்திக்! முடி வெட்டுனியா? இல்லையா?”

இல்லை மம்மி!”. குரலில் இருந்த எரிச்சலை அவளால் உணர முடிந்தது.

வெட்ட வேண்டாம் கார்த்திக்! அந்த ஹேர் ஸ்டைல் நல்லாதான் இருக்கு!” என்று சொல்லிவிட்டு சுதா தொலைபேசியைத் துண்டித்தாள்.