முள்முடி
'தமிழ்முரசு' செய்திதாளில் வெளியானது
“நான் சொல்லிகிட்டே இருக்கேன். நீ காதுல
வாங்காம அலட்சியமா போனா என்னலா அர்த்தம்?”
“எனக்குப் பிடிக்கலைன்னு அர்த்தம்.”
“ஒரு மாசமா நானும் அம்மாவும் சொல்லிட்டு
இருக்கோம். தலைமுடியைப் பாம்பு புத்து மாதிரி வளர்த்து வச்சிருக்கே. அதை
வெட்டுனாதான் என்னலா ஒனக்கு?”
“ஒங்களுக்குப் பிடிக்கலைன்னா நான்
வெட்டணுமா? முடியாது டாடி. எனக்குப் பிடிச்சிருக்கு. இதான் இப்போ ஃபேஷன்”
“என்ன ஃபேஷனோ! நல்ல குடும்பத்தில பொறந்த பாய்
மாதிரியா இருக்கே. நீயும் உன் முடியும்.......”
“டாடி! காலையிலேயே ஆரம்பிக்காதிங்க!” என்று சொல்லிவிட்டு வேகமாக அறைக்குள்
சென்று கதவை மூடிக்கொண்டான் கார்த்திக்.
“சுதா! நான் இங்க நாயா கத்திகிட்டு
இருக்கேன். நீ கிச்சன்ல என்னலா செஞ்சுகிட்டு இருக்கே. நீ மதிச்சாதானே உன் புள்ளை
என்னை மதிப்பான்” என்று கணவர் இயலாமையில்
கத்தும் குரல் கேட்டு சமையலறையை விட்டு வேகமாக வெளியே வந்தாள் சுதா.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே சுதாவுக்கு
அலர்ஜிதான். தினமும் காலையில் அரக்க பரக்க வேலைக்கு கிளம்பி செல்வது இரத்த
கொதிப்பை அதிகரித்தாலும் ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பே வந்துவிடுமோ என்று பயப்படும்
அளவுக்கு கணவரும் மகனும் கலகத்தை உண்டு பண்ணுவார்கள். “இருவருக்கும் இன்று விடுமுறைதானே! இன்றும்
வேலைக்கு கிளம்பும் எனக்கு உதவி செய்யலாம். அதை விட்டுவிட்டு இப்படி உபத்திரவம்
கொடுக்கிறார்களே!”
என்ற எரிச்சலுடன்
சுதா கார்த்திக்கின் அறைக்கதவை வேகமாக தட்டினாள்.
“ஏய் கார்த்திக்! அப்பா சொன்னது காதுல
விழுந்துச்சா இல்லையா? உன் மனசுல என்னதான்லா நினைச்சுகிட்டு இருக்கே! இன்னைக்குச்
சலூனுக்கு போய் முடியை வெட்டுனாதான் வீட்டுக்குள்ள வரலாம்” என்று பலம் கொண்ட மட்டும் கத்தியும் கார்த்திக்
அறைக்கதவை திறக்கவில்லை. திரும்பி கணவனைப் பார்த்தாள். இப்போது அவர் தனக்கும் அந்த
வீட்டிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பது போல அமர்ந்து தமிழ்முரசைப்
படித்துக்கொண்டிருந்தார். கணவர், மகன் என்ற இரண்டு ஆண்களைச் சமாளிப்பது கின்னஸ்
சாதனையைவிட மேலானது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே சுதா குளியலறைக்குள்
புகுந்தாள்.
பதினாறு வயது பையனை அடித்தா திருத்த
முடியும்! “என் முடியைக் கூட என் இஷ்டப்படி
வளர்க்க கூடாதா?” என்று அவன் எதிர் கேள்வி
கேட்கும்போதெல்லாம் சிறு வயதில் தேங்காய் எண்ணெய் வைத்து தலைமுடியைப் படிய வாராமல்
பள்ளிக்கூடம் சென்றதற்காக அப்பாவிடம் அண்ணன் வாங்கிய அடி நினைவுக்கு வந்து
போகிறது.
எதைச் சொன்னாலும் எதிர்த்து பேசும்
வயது. ஒரே பிள்ளை என்று செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டு இப்போது அவனை ஒரேடியாக
கண்டிக்கவும் சுதாவுக்குப் பயமாக இருக்கிறது. டூரியான் பழத்தில் இருக்கும் முட்கள்
மாதிரி கார்த்திக்கின் தலையில் குச்சி குச்சியாக நீட்டிக்கொண்டு நிற்கும் முடிகளைப்
பார்க்கும்போது கத்தரிக்கோலை எடுத்து வெட்டி எறிந்துவிடலாமா என்று அவளுக்கு சில
சமயங்களில் கை பரபரக்கும்.
“கூல் மம்மி! இது ஸ்பைக் ஹேர் ஸ்டைல். இதுதான்
லேட்டஸ்ட் டிரெண்ட்” என்று கார்த்திக் சொல்லும்போது
“தமிழ் சினிமாவில் வரும் ரௌடி
மாதிரி இருக்கிறாய். இதுவா உனக்கு லேட்டஸ்ட் டிரெண்ட்?” என்று தொண்டை வரை வரும்
கேள்வியை மகன் மனம் வருந்துமே என்ற காரணத்தால் சுதா கேட்காமல் அப்படியே
விழுங்கிவிடுவாள்.
சாப்பாட்டுக் கடைக்கு அவள் வந்து
சேர்ந்தபோது கடையின் முன் நான்கு பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொருவரிடமும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அருகில் நின்ற பரோட்டா மாஸ்டருக்கு
ஆர்டரைச் சொல்லிக் கொண்டிருந்த முதலாளி மகன் அப்துல் இவளைப் பார்த்தவுடன்
புன்முறுவல் செய்தான். வேகமாக சென்று தனது கைப்பையை வழக்கமான இடத்தில் வைத்தவள்
அப்துலை நெருங்கி “அப்துல்! நீ போ லா! நான்
பார்த்துக்கிறேன்” என்றாள்.
அந்த கோப்பிக் கடை பத்து கடைகளுடன் எம்.ஆர்.டியின்
அருகில் இருந்ததால் அங்கு எப்போதும் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும். லக்சாவிற்கு
மிகவும் பிரபலமான கடையில் சுதா வாரத்தில் ஒருநாளாவது லக்ஸா வாங்கி
சாப்பிட்டுவிடுவாள். மலாய் உணவு விற்கும் கடைகள் இரண்டு இருந்தன. அங்கு விற்கப்படும் மட்டன்
சத்தேயின் மணம் கிளேபாட் ரைஸின் ஆவியுடன் கலந்து கோப்பிக் கடை முழுமைக்கும்
பரவி நிற்கும். சுதா வேலை செய்யும் இந்திய முஸ்லிம் உணவகத்தின் தவ்கேயும், அப்துலின் தந்தையுமான முகமது தன் காலத்திற்குப் பிறகு சாப்பாட்டுக்கடைத்
தொழிலைத் தன் பிள்ளைகள் எடுத்து நடத்த மாட்டார்கள் என்று சுதாவிடம் எப்போதும்
சொல்லிக் கொண்டிருப்பார். ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டு மணி .நேரம் கடையில் நிற்கவே நீ எப்போது வருவாய் நழுவி
ஓடலாம் என்று நிற்கிறான் பார் என்று அலுத்துக்கொள்வார். அப்பாவின் நீண்ட கால
நண்பரான அவர் சுதாவிடம்
கடையில்
வேலை செய்கிறாயா என்று கேட்டபோது “வீட்டில் சும்மாதானே
இருக்கிறேன். வர்ற லெட்சுமியை வேண்டாம் என்று ஏன் சொல்ல வேண்டும்” என்று எண்ணிய சுதா உடனே
சம்மதித்தாள். கடந்த
இரண்டு வருடமாக வேலையில் சுதாவின் மதிப்பு கூடிக்கொண்டேயிருந்தது.
வேலைப்
பரபரப்பில் இருந்த சுதாவுக்கு நேரம் போனதே தெரியவில்லை. மணி மதியம் இரண்டை
நெருங்கி கொண்டிருந்தது. சற்று நேரம் கடையைப் பார்த்துக்கொள்ளுமாறு பரோட்டா
மாஸ்டரிடம் சொல்லிவிட்டு அவள் கோப்பிக் கடையின் பின்புறத்தில் இருந்த கழிவறையை
நோக்கி நடந்தாள். அதை ஒட்டி இருந்த பாத்திரங்கள் கழுவும் சிறு அறையின் அருகே நின்ற
சீனப்பாட்டி சுதாவைப் பார்த்து கையசைத்தாள். சுதாவுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.
வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போய்
சுத்தமாக கழுவி மீண்டும் அந்தந்த கடைகளில் வைப்பதுதான் சீனப்பாட்டியின் வேலை.
எப்போதும் கடுகடுவென்ற முகத்துடன் மறந்தும் சிரித்துவிடக்கூடாது என்பதைக்
கொள்கையாகவே வைத்திருக்கும் பாட்டி எதற்காக தன்னை அழைக்கிறார் என்ற ஆர்வம் மேலிட
சுதா அவரின் அருகே போய் நின்றாள்.
“யூ சீ
குமார் தேர்?” என்று பாட்டி கேட்டவுடன்தான் சுதாவிற்கு காலையிலிருந்து
குமாரைப் பார்க்காதது நினைவுக்கு வந்தது. “நோ லா” என்று
சொல்லிவிட்டு கழிவறைக்குள் நுழைந்தவள் மனத்தில் குமாரைப் பற்றிய எண்ணங்கள் மேலெழுந்து
வந்தன. சீன பாட்டிக்கு உதவியாக பாத்திரங்கள் கழுவும் பகுதி நேர வேலைக்கு குமார்
சேர்ந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகின்றன. வேலைக்குச் சேர்ந்த ஒரே மாதத்தில்
சுதாவுடன் மிகவும் நெருக்கமாகிவிட்டான். ஸ்டூடண்ட் பாஸில் தொழிதுறைக் கல்லூரியில்
படித்துக்கொண்டிருக்கும் அவனுக்குச் சொந்த ஊர் மலேசியாவில் இருக்கும் செராம்பன். சிங்கப்பூர்
விதிமுறைப்படி அவனால் வாரத்திற்குப் பதினாறு மணி நேரம் மட்டுமே பகுதி வேலை
செய்யமுடியும் என்பதால் வார இறுதி நாட்களில் மட்டும்தான் அவனை கோப்பிக்கடையில் பார்க்க
முடியும். சிங்கப்பூரில் நிரந்தரவாசி உரிமை பெற்று வசித்து கொண்டிருக்கும் தனது
கார்டியனான பெரியப்பா மகனுக்குத் தன்னால் முடிந்த அளவு இடையூறு கொடுக்காமல்
இருக்கவேண்டும் என்ற முனைப்புதான் அவனின் இந்த பகுதி நேர வேலை.
கழிவறையை
விட்டு வெளியேறி நடந்த சுதாவின் கண்களுக்கு, அருகே இருந்த பேரங்காடியின் ஒரு
தூணுக்குப் பின்னால் சற்று மறைவான இடத்தில் அமர்ந்து புகை பிடித்துக்கொண்டிருந்த
குமார் புலப்பட்டான். விரைந்து அவனிடத்திற்குச் சென்ற சுதா “ஏய்
குமார்! எப்பலா வந்தே? அந்த சைனீஸ் பாட்டி உன்னை தேடிகிட்டு இருக்காங்க. நீ இங்க
என்னலா செய்துகிட்டு இருக்கே?” என்று கேட்டவுடன் மிக மெதுவாக தலையை நீட்டி கோப்பிக்
கடையைப் பார்த்தவன் மீண்டும் வேகமாக தலையை மறைவாக இழுத்துக்கொண்டான்.
“என்னாச்சுலா?
அங்கே யாரு இருக்கா? ஏன்லா இப்படி ஒளிஞ்சிக்கிறே?”
“அக்கா!
என்னோட ஒண்ணா படிக்கிற கூட்டாளிங்க வந்திருக்காங்க. அதான்.....”
“அதுக்கென்னலா?
அவங்ககிட்ட கடன் ஏதாவது வாங்கினியா?”
“கடனா!
அல்லாமா! இல்லைக்கா! நான்
அவங்ககிட்ட ஒரு பொய் சொல்லிட்டேன்”
“பொய்யா!
அப்படி என்னலா பொய் சொன்னே?”
“போன
மாசம் கூட்டாளி ஒருத்தன் இங்க சாப்பிட வந்திருந்தான். நான் இங்க என்ன செய்றேன்னு
கேட்டான். செய்ற வேலையைச் சொன்னா ‘புல்லி’ பண்ணுவான்னு பயந்துகிட்டு, நீங்க வேலை
பார்க்கிற முஸ்லீம் கடையில எங்க அண்ணனும் ஒரு பார்ட்னர்னு பொய் சொல்லிட்டேன்க்கா.
இன்னைக்குப் பார்த்தா கூட்டமா வந்து உட்கார்ந்திருக்காங்க. உங்ககிட்ட என்னைப்பத்தி
ஏதாவது கேட்டாங்களா?”
“இல்லையே! நீ
எதுக்குலா இப்படி பயப்படுறே?”
“ஒங்களுக்கு
இதெல்லாம் புரியாதுக்கா. காலேஜ்ல எல்லாரு முன்னாடியும் ‘புல்லி’ பண்ணுவாங்க.
அசிங்கமா இருக்கும்கா. அவங்க போனப்புறம் எனக்கு கால் பண்றிங்களா?”
“ஓகே
குமார்!” என்ற சுதா “ஏன்லா எப்ப
பார்த்தாலும் இந்த சிகரெட்டை ஊதுறே?” என்று
கடுமையாக கேட்டுவிட்டு கடையை நோக்கி நடந்தாள். பசி வயிற்றைக் கிள்ள கோழி
பிரியாணியைத் தட்டில் எடுத்து வைத்துக்கொண்டு அங்கிருந்த இருக்கைகளில் ஒன்றில்
அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே குமாரின் நண்பர்களைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
சத்தம்
போட்டுச் சிரித்து பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்த அந்த ஐந்து இளைஞர்களையும்
பார்த்தவுடன் சுதாவுக்கு தன் மகன் கார்த்திக்கின் நினைவு வந்தது. ஒவ்வொருவரின்
தலைமுடியும் முள்ளம்பன்றியின் முட்கள் போன்று வெவ்வேறு திசைகளில் குத்திக்கொண்டும்
நீட்டிக்கொண்டும் நிற்பதை பார்த்தவுடன் அவளுக்கு ஒருபுறம் சிரிப்பு வந்தாலும்
மறுபுறம் வழக்கமான எரிச்சலும் வந்தது. அவர்களின் விலை உயர்ந்த உடைகள், காலணிகள்,
கைத்தொலைபேசிகள் அனைத்தையும் பார்த்த சுதாவின் மனதில் அவர்கள் பெற்றோரின்
வியர்வைத்துளிகள் பட்டுத்தெறித்தன. காரணமற்ற வெளியே சொல்லமுடியாத ஒரு வெறுப்பு
அவர்கள் மீது வியாபித்து படர்ந்தது.
சாப்பிட்டு
முடித்து சுதா எழுந்திருக்கும் தருணத்தில் அந்த கூட்டத்திலிருந்து வேகமாக வந்த பொடியன்
ஒருவன், “ஹலோ ஆண்ட்டி! குமார் எப்போ
கடைக்கு வருவான்?” என்று கேட்க பொய் சொல்வதற்கு முன் மனிதனுக்கு இயல்பாக
வரும் பதற்றம் அவளையும் தொற்றிக்கொண்டது.
“பாஸ்
இன்னைக்கு கடைக்கு வர மாட்டாரே” என்று அவள் சொன்னவுடன் வந்த வேகத்தில் அவன் திரும்பிச்
செல்ல சற்று நேரத்தில் ஒரு பெரிய சிரிப்பொலி அந்த கூட்டத்திலிருந்து எழுந்து
அடங்கியது. கை கழுவும் இடத்திற்குச் சென்று கைகளை கழுவிவிட்டு திரும்பியவள்
அருகில் அந்த இளைஞர்கள் கூட்டம் வந்து நின்றது.
“ஆண்ட்டி!
குமாருக்கு இன்னைக்கு பர்த்டே. சர்ப்ரைஸா பர்த்டே பிரசென்ட் கொடுக்க வந்தோம். அவன்
வந்தா இதை கொடுத்துடுங்க. ப்ளீஸ்!” என்று சொல்லிக்கொண்டே ஒருவன் அழகாக கட்டப்பட்ட ஒரு
சிறிய பரிசுப் பொட்டலத்தை நீட்ட சுதா அதை வாங்கிக்கொண்டாள்.
“அவன்தான்
பொய் சொல்றான்னா நீங்க ஏன் ஆண்ட்டி பாஸ்னு பொய் சொன்னிங்க?” என்று
ஒருவன் குறும்பு கொப்பளிக்க கேட்க மற்றவர்கள் முகத்திலும் சிரிப்பு தாண்டவமாடியது.
சுதா என்ன பதிலளிப்பது, எப்படி பேசுவது என்று அசடு வழிய நிற்க “இட்ஸ்
ஓகே ஆண்ட்டி! மறக்காம கொடுத்துடுங்க!” என்று
சொல்லிவிட்டு வெளியேறியவர்களை சுதா தனது கண்கள் விரிய பார்த்துக்கொண்டு நின்றாள்.
இருபடி தூரம் கடந்தவுடன் அவர்களில் ஒருவன் அவளை நோக்கி வேகமாக ஓடிவந்து “ஆண்ட்டி! சொல்ல
மறந்துட்டோம். எங்களுக்கு தெரியும்கிறது உங்க பாஸுக்குத் தெரியவேண்டாம்.
ப்ளீஸ்!” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு மீண்டும் வேகமாக
ஓடி தனது நண்பர்களோடு இணைந்துகொண்டான். பார்வையிலிருந்து மறையும்வரை அவர்களையே
பார்த்துக்கொண்டு நின்ற சுதா பின்பு மெதுவாக கடைக்குள் நுழைந்து தனது
கைத்தொலைபேசியை எடுத்து வீட்டு தொலைபேசி எண்களை அழுத்தினாள்.
“ஹலோ!
யாரு?”
“கார்த்திக்!
நான் அம்மா பேசுறேன்”
“ம்.........சொல்லுங்க
மம்மி”
“சலூனுக்குப்
போனியா?” .
“.........................................”.
அந்த பக்கத்திலிருந்து பதில் இல்லை.
“ஹலோ!
கார்த்திக்! முடி வெட்டுனியா? இல்லையா?”
“இல்லை
மம்மி!”. குரலில் இருந்த எரிச்சலை அவளால் உணர முடிந்தது.
“வெட்ட
வேண்டாம் கார்த்திக்! அந்த ஹேர் ஸ்டைல் நல்லாதான் இருக்கு!” என்று
சொல்லிவிட்டு சுதா தொலைபேசியைத் துண்டித்தாள்.
No comments:
Post a Comment