Showing posts with label குறுங்கதை. Show all posts
Showing posts with label குறுங்கதை. Show all posts

Friday, October 21, 2016

வசனம்

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் நடத்தும் கதைக்களம் போட்டிக்காக எழுதிய குறுங்கதை

‘’அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. அப்படிச் சொன்னது எனக்கு அதிர்ச்சியளித்தது. இதுதான் குமார் நீ பேச வேண்டிய வசனம். அடுத்த ஷாட்ல நீ பேசணும். ரெடியா இரு’’ என்றார் இயக்குநர்.

வசந்தம் தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த முப்பது வார சரித்திர தொடரில் முக்கிய கதாபாத்திரமாக நடித்துக் கொண்டிருந்தான் குமார்.

வித்தியாசமான கதைக் களங்களை கொண்ட வேட்டை, காவ்யா போன்ற தொடர்கள் வெற்றி பெற்று கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் சரித்திர தொடரை எடுக்கிறார்களே என்ற எரிச்சலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர் உதவி இயக்குநர் சரவணனும், ஒளிப்பதிவாளர் குணாவும்.

‘’குணா! இந்த குமார் தமிழை கடிச்சு, கடிச்சு துப்புவான். இவனுக்கு முக்கியமான கேரக்டரா? இந்த சீரியலோட நெலைமையை நெனைச்சாலே பயமா இருக்குடா. இவங்களோட சேர்ந்து நம்ம ஃப்யூச்சரும்  நாறப்போகுதுடா’’’ என்று புலம்பிக்கொண்டிருந்தான் சரவணன்.
  
     இப்பொழுது குமார் நடிக்கவேண்டிய காட்சி. சரவணன் சொன்ன மாதிரியே, குமார் ஆங்கிலம் பேசுவது போல நுனிநாக்கில் தமிழை கடித்து துப்ப ஆரம்பித்தான். ஒரு டேக், இரண்டு டேக், ............... இருபதாவது டேக். இயக்குநர் எரிச்சலின் உச்சத்திற்கு போனார். கோபத்தில் எரிந்து. எரிந்து விழ ஆரம்பித்தார்.  

‘’குமார்! நான் சொல்றது புரியுதா இல்லையா! இது வரலாற்று சீரியல். இதுல வசனம் ரொம்ப முக்கியம். உச்சரிப்பு சரியா இல்லைன்னா கேரக்டரே வீணா போயிடும். கொஞ்சம் அழுத்தம் திருத்தமா பேசு’’ என்று பல்லை கடித்துக்கொண்டே சொல்லிவிட்டு குணாவின் பக்கம் நகர்ந்து, ‘’இவன் அப்பாவோட கம்பெனி ப்ரடூயூஸ் பண்ணா இவனே நடிக்கணுமா? தலையெழுத்துடா! தெய்யவில்லைங்கிறான். அயிச்சிஅளித்ததுங்கிறான். எனக்குன்னு கூட சொல்லத்தெரியலை. என்க்குங்கிறான். ரெண்டு வரி வசனத்துக்கே இப்படின்னா சீரியலை முடிச்சமாதிரிதான்’’ என்று கடுப்புடன் முணுமுணுத்தார்.

இருபதாவது டேக். குமார் அதே பழைய பல்லவியை ஒப்பிக்க, ‘’ஏய்! நீ எல்லாம் நடிக்க வரலைன்னு இங்க யாரு அழுதா? என்னமோ பிரிட்டிஷ்காரனுக்கு பொறந்த மாதிரி தமிழை கொன்னு கொலை எடுக்கிறியே. ஒன்னால மூடே அவுட்டாயிடுச்சு. பேக் பண்ணுங்கப்பா. நாளைக்கு பார்த்துக்கலாம்’’ என்று கத்திவிட்டு இயக்குநர் அந்த இடத்தை விட்டு வேகமாக, கோபமாக வெளியேறினார். மற்ற எல்லோரும் செய்வதறியாது குமாரை பார்த்துக்கொண்டு அப்படியே நின்றார்கள்.   


‘’அவர் ஏன் அப்படிச் சொன்னார்ன்னு தெரியலைங்க. அப்படிச் சொன்னது எனக்கு அதிர்ச்சியா இருக்குங்க’’ என்று அழுத்தம் திருத்தமாக, முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு குமார் சொன்னவுடன் வெடித்து கிளம்பிய சிரிப்பை அடக்க முடியாமல் சரவணனும், குணாவும் விழுந்து, விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள்.
இரை

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் நடத்தும் கதைக்களம் போட்டிக்காக எழுதிய குறுங்கதை

அதிகாலை மூன்று மணியிருக்கும். எனக்குள் இருந்த மிருகம் விழித்துக் கொண்டது. மெதுவாக எழுந்தேன். கடந்த நான்கு நாட்களாக பரவிவரும் மோசமான புகைமூட்டத்தை தவிர்க்க வீட்டின் கதவுகளும், சன்னல்களும் மூடப்பட்டிருந்தன. எல்லா அறைகளிலும் குளிர் சாதனம் இயங்கிக்கொண்டிருந்தது. வீடே குளிர்ந்து இருந்தாலும் எனக்குள் சூடு நிமிடத்துக்கு நிமிடம் எகிறிக்கொண்டிருந்தது. அடிமேல், அடிவைத்து அடுப்பங்கரையை நோக்கி நடந்தேன்.

குளிர்சாதனப்பெட்டி அருகே பணிப்பெண் வசந்தா தூங்கிக் கொண்டிருந்தாள். உடை கலைந்து அலங்கோலமாய் இருந்தது கூட தெரியாமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். தொடை வரை தெரிந்த  வாழைத்தண்டு போன்ற அவளது கால்கள் வழுவழுவென மின்னின. இரவு உடையில் அவளது மேனி வளைவுகளும், ஏற்ற இறக்கங்களும் அப்பட்டமாக தெரிந்தன. இது போல ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்க்காது. எனக்கு இரை போடு! இரை போடு! என்று என்னுள் இருந்த மிருகம் வெறி கொண்டு அலறியது. சத்தம் இல்லாமல் காரியத்தை முடித்துவிட்டு சமர்த்தாக அறைக்கு திரும்பினேன். வெறி கொண்ட அந்த மிருகம் பெட்டிப்பாம்பாக அடங்க நூறு சதவீத திருப்தியுடன் உறக்கத்தில் ஆழ்ந்தேன்.

காலையில் வசந்தாவின் சத்தமான புலம்பலால் விழிப்பு வந்தது. சொல்றேன்னு கோவிச்சுக்காதிங்க! மொதல்ல அவங்களை ஒரு நல்ல டாக்டர்கிட்ட கூட்டிகிட்டு போங்க! ஊரு ஒலகத்துல இல்லாத அதிசயமால்ல இருக்கு! அது எப்படி ஒருத்தருக்கு இப்படி பசி எடுக்கும்? வீட்ல ஒண்ணு வைக்க முடியலை. புள்ளைங்களுக்கு வைக்கிறதையும் எடுத்து சாப்பிட்டா நான் எத்தனை தடவைதான் சமைக்கிறது? சமைக்க நேரமாச்சுன்னா காய்கறியை பச்சையா சாப்பிட ஆரம்பிச்சுடுறாங்க. அதாவது பரவாயில்லை. வீட்ல இருக்கிற பருப்பு, உளுந்து, அரிசி இதையெல்லாம் எடுத்து சாப்பிடுறதை பார்க்கிறப்ப பயமா இருக்கு. ஒங்ககிட்ட சொன்னா எல்லாத்தையும் எடுத்து ஒளிச்சுவைன்னு சொல்றிங்க. எவ்வளவுதான் ஒளிக்கிறது? அவங்களை பத்தி தெரிஞ்சதாலதான் தெனமும் ஃபிரிஜ் பக்கத்துல படுக்கிறேன். ஆனா பாருங்க! நேத்து நான் கண் அசந்த நேரமா பார்த்து மொத்த ஃபிரிஜையும் காலி பண்ணிட்டாங்க. இட்லிக்கு அரைச்சுவச்ச மாவைகூட விட்டுவைக்கலை. இப்படி ஒரு மிருகப்பசியா! எதுக்கும் டாக்டரை பார்க்கிறதுதான் நல்லதுன்னு எனக்கு தோணுதுண்ணே! என்று வசந்தா அலுவலக வேலையாக தாய்லாந்து சென்றுவிட்டு திரும்பியிருந்த என் கணவரிடம் புலம்பிக்கொண்டிருந்தாள்.


அத்தனையும் கேட்டுவிட்டு வந்து வழக்கம்போல கோபத்தில் என்னை திட்டப்போகும் கணவரிடமிருந்து தப்பித்துக்கொள்ள கண்களை மூடிக்கொண்டு தூங்குவது போல பாசாங்கு செய்யத் தொடங்கினேன்.