இரை
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும்
நடத்தும் ‘கதைக்களம்’ போட்டிக்காக எழுதிய
குறுங்கதை
அதிகாலை மூன்று மணியிருக்கும். எனக்குள் இருந்த மிருகம் விழித்துக்
கொண்டது. மெதுவாக எழுந்தேன். கடந்த நான்கு நாட்களாக பரவிவரும் மோசமான
புகைமூட்டத்தை தவிர்க்க வீட்டின் கதவுகளும், சன்னல்களும்
மூடப்பட்டிருந்தன. எல்லா அறைகளிலும் குளிர் சாதனம் இயங்கிக்கொண்டிருந்தது. வீடே
குளிர்ந்து இருந்தாலும் எனக்குள் சூடு நிமிடத்துக்கு நிமிடம் எகிறிக்கொண்டிருந்தது.
அடிமேல், அடிவைத்து அடுப்பங்கரையை நோக்கி நடந்தேன்.
குளிர்சாதனப்பெட்டி அருகே பணிப்பெண் வசந்தா தூங்கிக் கொண்டிருந்தாள். உடை
கலைந்து அலங்கோலமாய் இருந்தது கூட தெரியாமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். தொடை
வரை தெரிந்த வாழைத்தண்டு போன்ற அவளது கால்கள்
வழுவழுவென மின்னின. இரவு உடையில் அவளது மேனி வளைவுகளும், ஏற்ற இறக்கங்களும் அப்பட்டமாக தெரிந்தன. “இது போல
ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்க்காது. எனக்கு இரை போடு! இரை போடு!” என்று என்னுள் இருந்த மிருகம் வெறி கொண்டு அலறியது. சத்தம் இல்லாமல்
காரியத்தை முடித்துவிட்டு சமர்த்தாக அறைக்கு திரும்பினேன். வெறி கொண்ட அந்த மிருகம்
பெட்டிப்பாம்பாக அடங்க நூறு சதவீத திருப்தியுடன் உறக்கத்தில் ஆழ்ந்தேன்.
காலையில் வசந்தாவின் சத்தமான புலம்பலால் விழிப்பு வந்தது. “சொல்றேன்னு கோவிச்சுக்காதிங்க! மொதல்ல அவங்களை ஒரு நல்ல டாக்டர்கிட்ட
கூட்டிகிட்டு போங்க! ஊரு ஒலகத்துல இல்லாத அதிசயமால்ல இருக்கு! அது எப்படி
ஒருத்தருக்கு இப்படி பசி எடுக்கும்? வீட்ல ஒண்ணு வைக்க
முடியலை. புள்ளைங்களுக்கு வைக்கிறதையும் எடுத்து சாப்பிட்டா நான் எத்தனை தடவைதான்
சமைக்கிறது? சமைக்க நேரமாச்சுன்னா காய்கறியை பச்சையா சாப்பிட
ஆரம்பிச்சுடுறாங்க. அதாவது பரவாயில்லை. வீட்ல இருக்கிற பருப்பு, உளுந்து, அரிசி இதையெல்லாம் எடுத்து சாப்பிடுறதை
பார்க்கிறப்ப பயமா இருக்கு. ஒங்ககிட்ட சொன்னா எல்லாத்தையும் எடுத்து ஒளிச்சுவைன்னு
சொல்றிங்க. எவ்வளவுதான் ஒளிக்கிறது? அவங்களை பத்தி
தெரிஞ்சதாலதான் தெனமும் ஃபிரிஜ் பக்கத்துல படுக்கிறேன். ஆனா பாருங்க! நேத்து நான் கண்
அசந்த நேரமா பார்த்து மொத்த ஃபிரிஜையும் காலி பண்ணிட்டாங்க. இட்லிக்கு அரைச்சுவச்ச
மாவைகூட விட்டுவைக்கலை. இப்படி ஒரு மிருகப்பசியா! எதுக்கும் டாக்டரை
பார்க்கிறதுதான் நல்லதுன்னு எனக்கு தோணுதுண்ணே!” என்று வசந்தா
அலுவலக வேலையாக தாய்லாந்து சென்றுவிட்டு திரும்பியிருந்த என் கணவரிடம்
புலம்பிக்கொண்டிருந்தாள்.
அத்தனையும் கேட்டுவிட்டு வந்து வழக்கம்போல கோபத்தில் என்னை திட்டப்போகும்
கணவரிடமிருந்து தப்பித்துக்கொள்ள கண்களை மூடிக்கொண்டு தூங்குவது போல பாசாங்கு
செய்யத் தொடங்கினேன்.
No comments:
Post a Comment