Friday, October 21, 2016


பெண் பேசும் வார்த்தைகள்

அனைத்துலக மகளிர் தினம் நூறு ஆண்டுகள் நிறைவை ஒட்டி, 2014 ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வெளியிட்ட சிறப்பு மலரில் இடம்பெற்ற கட்டுரை 
 
 “பொம்பளை சிரிச்சா போச்சு. புகையிலை விரிச்சா போச்சு”, என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் ஒரு பழமொழி. பெண்கள் சத்தம் போட்டு சிரிக்க கூடாது. இல்லை! இல்லை! சிரிக்கவே கூடாது என்பதுதான் இதன் பொருள். இப்படியான முட்டாள்தனமான பழமொழிகளை, மூடநம்பிக்கைகளை ஆணாதிக்க சமூகம், ஒரு மிகப்  பெரும் சுமையாக, பெண்களே நம்பும் வகையில், விரும்பி ஏற்கும் வகையில் பெண்னினத்தின் மீது ஏற்றி வைத்திருக்கிறது.  

அற்பமான பழமொழிகளை உருவாக்குவதில் மட்டுமல்ல, அர்த்தமற்ற பட்டங்கள் கொடுப்பதிலும் ஆண்கள் அதி கெட்டிக்காரர்கள். அப்படி அளிக்கப்பட்டிருக்கும் பட்டங்களில் ‘’வாயாடி’’ மற்றும் ‘’அடங்காப்பிடாரி’’ இரண்டும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை. அதற்கு அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு பெண்கள் எதிர்த்து பேசுவதோடு மட்டுமல்லாமல் அளவுக்கு அதிகமாகவும் பேசுகிறார்கள் என்பதுதான்.

ஆண்களோடு அறிவியலும் கைகோர்த்துக் கொண்டு இதே கருத்தை வலியுறுத்திச் சொல்கிறது. ஃபாக்ஸ்பி2 என்ற மொழி புரதம் ஆண்களின் மூளையைவிட பெண்களின் மூளையில் அதிக அளவில் சுரப்பதுதான் இதற்கான காரணம் என்கிறது அறிவியல். சராசரியாக பெண்கள் ஆண்களைவிட மூன்று மடங்கு அதிகமாக பேசுகிறார்கள் என்பதும், நாளொன்றுக்கு கிட்டத்தட்ட இருபதாயிரம் வார்த்தைகளை பிரயோகித்து வேகமாக உரையாடுகிறார்கள் என்பதும் அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மைகள். ஆனால் அதிகமாக பேசுவது ஒரு குற்றமா?

பேச்சு ஒரு சிறந்த கலை. ஒரு மொழியை வாழும் மொழியாக வைத்திருப்பதில் பேச்சுக்கு மிகப்பெரிய பங்குண்டு. எவ்வளவு பெரிய பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் வல்லமை பேச்சிற்கு உண்டு. இன்றளவும் உலக அரங்கில் நாடுகளுக்கிடையேயான மோதல்களை தீர்க்க பேச்சு வார்த்தைகள்தான் கைகொடுக்கின்றன. இவைமட்டுமா! ஒரு நாட்டை அல்லது ஒரு நிறுவனத்தை வழிநடத்தும் தலைவருக்கு பேச்சுத்திறன் கட்டாயம் இருக்கவேண்டிய ஒரு தகுதி.

இப்போது புரிந்திருக்குமே! ஏன் பெண்களுக்கு வாயாடி பட்டம் என்று? எங்கே பெண்கள் தங்களுக்குள் ஏற்கனவே இருக்கும் பேச்சுத்திறனை கொண்டு ஒரு சிறந்த தலைவராக உருவெடுத்து விடுவார்களோ என்ற ஆண்களின் அச்சம்தான் இதற்கு காரணம்.

இத்தனை ஆண்டு காலங்கள் ஆண்கள் மட்டுமே பொறுப்பு வகித்த அலுவலக மற்றும் சமூக பதவிகளை இப்போது பெண்களும் அலங்கரிக்கத் தொடங்கிவிட்டார்கள். தலைமைத்துவம் என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளும் பெண்ணுக்கு, தனக்கு கீழிருப்பவர்களை ஒருங்கிணைத்து ஒரு இலக்கை நோக்கி செயல்படவைக்க பேச்சுதிறன் இன்றியமையாத ஒன்றாகிறது. கீழே விவரிக்கப்பட்டுள்ள, ஆண்மைக்கு கைவராத இந்த சிறப்பு பேச்சுதிறன்கள், இயற்கையாகவே பெண்மைக்கு அமைந்திருப்பது அதிர்ஷ்ட வசமானது என்றுதான் சொல்லவேண்டும்.

எந்த ஒன்றையும் கட்டாயத்தின் பேரில் செய்வதைவிட விருப்பத்தின் அடிப்படையில் செய்யும்போது பலன்கள் இரண்டுமடங்காக இருக்கும் என்பது பேச்சுக்கும் பொருந்தும். பெண்களுக்கு இயல்பாகவே பேச்சில் இருக்கும் விருப்பம் சக மனிதர்களுடனான உரையாடலை எளிதாக்குவதால் வெற்றி விரைவில் கைவசமாகிறது.

நான் எனக்காக மட்டும் பேசவில்லை. உனக்காகவும், உன் வளர்ச்சிக்காகவும்தான் பேசுகிறேன்என்ற அக்கறை தொணியில் சொல்வது பேச்சில் மிக முக்கிய அம்சம். இப்படி பேசும்போது எதிரில் இருப்பவர்கள் சொன்ன சொல்லுக்கு கீழ்ப்படிய தயாராகிவிடுவார்கள். இந்த அக்கறை தொணியை பெண்ணுக்குள் இருக்கும் தாய்மை உணர்வு பிறவியிலேயே அழகாக கற்றுக் கொடுத்து விடுவதால் சாதிப்பது சுலபமாகிவிடுகிறது.

ஒரு பேச்சு அல்லது உரையாடலின் வெற்றிக்கு முக்கிய காரணியாக விளங்குவது பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இடையே பேச்சின் வழியாக உண்டாகும் நெருக்கம். பெண்கள் தங்கள் சொந்த வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அல்லது அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதன் வழியாக கேட்பவர்களுடன் விரைவில் நெருக்கத்தை உருவாக்கி வெற்றிப்படிகளில் விரைந்து ஏறுகிறார்கள். 

மற்றவர்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்களோ?” என்ற அச்சமும், கவலையும் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாகவே இருப்பது ஒருவிதத்தில் நல்லதாகவே அமைகிறது. இந்த பயத்தினால் பெண்கள் பேசத்தொடங்கும் முன் கேட்பவர்களை பற்றியும், பேசப்போகும் பொருளை பற்றியும் அதிக ஆராய்ச்சி மேற்கொண்டு புரிதலுடனும், தெளிந்த அறிவுடனும் தன்னை தயார் செய்து கொண்டு பேசமுற்படுவதால் உரையாடல் சுமூகமாகிறது.

சொல்லவரும் கருத்தோடு அல்லது பேச்சோடு எதிரில் இருப்பவரை தொடர்புபடுத்த, பேசுபவர் தனக்கும் கேட்பவருக்கும் பொதுவான ஒன்றை அடையாளம் காண்பது மிக முக்கியமாகிறது. அந்த பொதுவான தளத்தை மையமாக கொண்டு பேச்சை கட்டமைப்பதில் பெண்கள் மிக கில்லாடிகளாக இருப்பதால் மக்களை எளிதில் தங்கள் வசப்படுத்த முடிகிறது. 

சில சமயங்களில் தலைமையில் இருக்கும் ஆண், “எனக்கு எல்லாம் தெரியும். நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள்என்ற மனோபாவத்தில் பேசும்போது அதே தலைமைக்கு வரும் ஒரு பெண், “எனக்கு இந்த பதவி புதிது. தவறுகள் செய்யாமல் இருக்க நான் கடவுள் இல்லை. இந்த பணியை வெற்றிகரமாக முடிக்க உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியம்என்று எதிரில் இருப்பவர்களின் திறமையை, அனுபவத்தை அங்கீகரித்து பேசும்போது அந்த தன்னடக்கம் அமோகமான ஆதரவை பெற்றுத் தருகிறது.

பெண்கள் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் ஆண்களை போல ஒருபோதும் உறவுகளை எளிதாக துண்டித்துக் கொள்ள முடியாது. இந்த அடிப்படை குணாதிசயத்தால், பேசும்போது தங்களால் முடிந்த அளவு நல்ல உறவை பேணும் வகையில், உறவுக்கு பங்கம் வராத வகையில் பேசி அடுத்தவர்களை கவர்கிறார்கள்.

நவீன உலகம் தொடர்பு சாதனங்களாக பலவற்றை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருந்தாலும், பெண்கள் சகமனிதர்களை நேருக்கு நேர் பார்த்து பேசுவதையே பெரும்பாலும் விரும்புகிறார்கள். முகத்துக்கு முகம் பார்த்து பேசும் இந்த வகை பேச்சு அல்லது உரையாடல்தான் தலைமைத்துவதத்தில் நாம் விரும்பிய பலன்களை அடைய உதவியாக இருக்கிறது என்பதால் இந்த திறனிலும் பெண்கள் கொடிகட்டி பறக்கிறார்கள்.

ஆண்களோடு ஒப்பிடும்பொழுது பெண்களில் மேடை பேச்சாளர்கள் குறைவாகவே உள்ளனர். இதற்கான காரணம் பெண்கள் ஒருவழிப் பாதையான பேச்சை விரும்புவதில்லை. பெரும்பாலான பெண்கள் கேள்வி பதில் அங்கம் மற்றும் கலந்துரையாடல் வகையான பேச்சுகளில் அதிக ஆர்வமாக உள்ளனர். பெண்களின் இந்த ஆர்வம் அடுத்தவர்களின் கருத்துகளுக்கு காது கொடுக்க உதவி செய்து சாதிக்க வகை செய்கிறது.

பெண்கள் வாழ்வில் தங்களை சுற்றி நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளை கூட மறக்காமல் நினைவு வைத்துக்கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள். ஒரு பேச்சு அல்லது உரையாடலுக்கு பொருத்தமான மற்றும் தொடர்புடைய நிகழ்வை உடனே நினைவில் இருந்து மீட்டெடுத்து வெளிப்படுத்தும் இந்த திறன் பெண்களை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு போகிறது.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒரு சிறப்பு பெண்கள் உணர்வு பூர்வமானவர்கள். ஒரு உரையாடல் வெற்றி பெற வேண்டுமானால் வெறும் அறிவுபூர்வமாக இருந்தால் மட்டும் போதாது. உணர்வுபூர்வமாக இருத்தல் மிக அவசியமாகிறது. தங்களது பேச்சில் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவதில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் போட்டி வைத்தால் வெற்றி பெண்மைக்கே.        
   
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு, பேச்சு எதற்கு என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. நவீன உலகில் பெண்கள் பாரதி கண்ட புதுமைப்பெண்களாக வலம் வருகிறார்கள். வேலையில், வியாபாரத்தில், அரசியலில் வெற்றி அடைந்த பெண்மணிகள் அனைவருமே மேலே சொன்ன பேச்சு உத்திகளை சரியான இடத்தில், சரியான நேரத்தில் பயன்படுத்தி சிகரங்களை தொட்டிருக்கிறார்கள்.

இனிமேல் உங்களை யாராவது வாயாடிகள் என்று சொன்னால் அதற்காக மனம் உடைந்து விடாதீர்கள்! அவர் மறைமுகமாக உங்களை ஒரு சிறந்த தலைவர் என்று சுட்டிக்காட்டுகிறார் என்பதை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள். நம்மிடம் கொட்டி   கிடக்கும், ஆண்களுக்கு கைவராத, ஆண்கள் கண்டு பொறாமைப்படும் இந்த பேச்சு திறன்களை எப்படி நமது முன்னேற்றத்திற்கு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நமது வெற்றி அடங்கி உள்ளது.

வாயாடிகளாகவே வாழ்வாங்கு வாழ்வோம்!
வார்த்தைகளை வெற்றி படிக்கட்டுகளாக்குவோம்!

      



No comments:

Post a Comment