Friday, October 21, 2016


பெண்ணின் பயணம்


பேஸ்புக் பக்கங்கள்– தொகுதி 1 - தொகுப்பாசிரியர் சுப்ரஜா
புத்தகத்தில் இடம் பெற்ற கட்டுரை

பயணத்தையும் அது தரும் மகிழ்ச்சியையும் விரும்பாதவர்கள் மிக, மிக குறைவு. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு பயணம் பயத்தையும்,  பாரத்தையும் மட்டுமே தருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. திருமணமாகி வேலைக்கு போனாலும், வீட்டில் இருந்தாலும் சலிப்பூட்டும், அலுப்பூட்டும் வழக்கமான தினசரி வாழ்க்கையிலிருந்து விடுபட்டு அவர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் அது தாய் வீட்டிற்கே ஆனாலும் கூட ஒருசமயம் மகிழ்ச்சியை அளித்தாலும் மறுசமயம் அதைவிட அதிக மனஅழுத்தத்தை தருகின்றன என்பதுதான் உண்மை.

வீட்டிற்கு வரும் பால்காரரிடமும், பேப்பர்காரரிடமும் குறிப்பிட்ட நாட்களில் பாலோ, செய்தித்தாளோ போட வேண்டாம் என்று சொல்வதில் ஆரம்பித்து தொட்டி செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற அண்டை வீட்டுக்காரர்களிடம் கெஞ்சுவது வரை சின்ன சின்ன விஷயங்களை கூட பார்த்து பார்த்து செய்து அவளது அந்த குட்டி அரண்மனை திரும்பி வரும்வரை பாதுகாப்பாக இருக்க வேண்டுமே என்ற கவலை ஒருபுறம் அரிக்க மறுபுறம் கண்டிப்பாக இந்த பயணம் போகத்தான் வேண்டுமா என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடிவதில்லை.

கணவருக்கும், குழந்தைகளுக்கும் தேவையானவற்றை பட்டியலிட்டு எதையும் மறந்து விடக்கூடாதே என்ற பதபதைப்புடன் பார்த்து பார்த்து எடுத்து வைத்தாலும் பயணத்தின்போது ‘’என்னோட ஷேவிங் ரேசரை எடுத்துட்டு வரலையா? எதைதான் நீ ஒழுங்கா செஞ்சிருக்க?’’ என்று கணவர் கட்டிய உரிமையில் எகிறி குதிக்கும்போது பேசாம வீட்டிலேயே இருந்திருக்கலாமோ என்று எரிச்சலோடு அழுகையும் பொத்துக்கொண்டு வருவதை தடுக்க இயலுவதில்லை.
‘’இதெல்லாம் ஒரு பிரச்சனையா! பெண்கள் நீங்கள் சின்ன விஷயத்துக்கெல்லாம் டென்ஷனாகி எங்களையும் பாடாப்படுத்துறிங்க’’ என்று ஆண்கள் முணு முணுப்பது கேட்கிறது. உண்மைதான். எல்லா டென்ஷன்களையும் விலக்கி வைத்துவிடலாம்தான். ஆனால் விலக்கவே முடியாத ஒரு விலக்கு இருக்கிறதே. மாதவிலக்கு. எவ்வளவுதான் திட்டமிட்டு ‘’அந்த’’ நாட்களில் பயணத்தை தவிர்த்தாலும், எதிர்பாராத சமயத்தில் வந்து தொலைக்கிறதே! அந்த வலியோடு பயணம் செய்யும்போது ‘’பாழாய்போன இந்த பெண் ஜென்மத்துக்கு பயண ஆசை தேவைதானா’’ என்ற ஒரு சுயபச்சாதபம் எழுவதை படைத்த இறைவனாலும் நிறுத்த முடியாது.    

இன்னொரு பெரிய பயணச்சுமை ‘’கற்பு’’. இரவு நேர பயணங்களின்போதோ அல்லது தனியான பயணங்களின்போதே கல்யாணமான, ஆகாத எல்லா பெண்களுக்கும் பொதுவான சுமை இது. கணவர் அல்லது ஆண் நண்பர்கள் அருகில் இருந்தாலும் நான்கைந்து ஆண்கள் கூட்டமாக முக்கியமாக குடித்துவிட்டு கூட பயணிக்கும்போதோ அல்லது கடந்து செல்லும்போதோ சட்டென்று மனதில் இனம்புரியாத ஒருவித பயமும், பதற்றமும் தொற்றிக்கொள்வது வாடிக்கையாக இருக்கிறது.

இந்தியப் பெண்கள்தான் இப்படியான பிரச்சனைகளை அதிகம் சந்திக்கின்றனரா அல்லது இவை உலகத்தில் எல்லா பெண்களுக்கும் பொதுவானதா என்ற கேள்வி மனதின் ஒரு மூலையில் எழுகிறது. கற்பு, கல்யாணம், காதல், கணவன், கடமைகள், கட்டுப்பாடுகள் இன்னும் என்னென்ன சுமைகள் இருக்கின்றனவோ அத்தனையும் தூக்கி எறிந்துவிட்டு இறக்கைகளை விரித்துக்கொண்டு எந்த கவலையும் இல்லாமல் வானில் பறக்கும் பறவையை போல பயமற்ற, பாரமற்ற, அழுத்தமற்ற, சுமையற்ற சுகமான பயணத்திற்காக ஒவ்வொரு பெண்ணும் ஆழ்மனதில் ஏக்கத்தோடு காத்துக்கொண்டு இருக்கிறாள். ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான பெண்களுக்கு அவள் எதிர்பார்த்த அந்த ஆனந்தமான, மகிழ்வான பயணம் இறுதிப் பயணமாக அமைவது அதிர்ஷ்டமா அல்லது துரதிர்ஷ்டமா? சொல்லத் தெரியவில்லை.  


No comments:

Post a Comment