Friday, October 21, 2016


தமிழ் பேச்சாளர் மன்றங்கள் தலைவர்கள் உருவாகும் இடம்

'சிங்கப்பூர் கிளிஷே' இணைய இதழில் வெளியானது

 “பேச்சாளர் மன்றங்களா! சிங்கப்பூரிலா! அதுவும் தமிழிலா!என்று ஆச்சரியமாக இருக்கிறதா?    

பேச்சாளர் மன்றத்தில் என்ன பேசுவார்கள்? அரசியல்வாதிகளைப் போல மேடைப்பேச்சு பேசுவார்களா? ஆன்மிகவாதிகளைப் போல அறிவுரை சொல்லி கொல்வார்களா? ஒருவேளை விஜய் தொலைக்காட்சிப் புகழ் தமிழ் பேச்சு! எங்கள் மூச்சு!போல தொண்டைக்கிழிய கத்துவார்களா? சிறந்த பேச்சாளர்கள் மட்டும் கூடும் இடமா?” என்று பலவிதமான கேள்விகள் உங்கள் மனதில் எழும்புகின்றனவா?

உங்கள் ஆச்சரியங்களுக்கும், கேள்விகளுக்கும் விடைதான் இந்த கட்டுரை! படித்துப்பாருங்கள்!  

     பேச்சாளர் மன்றம் ஒரு பள்ளிக்கூடம் போலத்தான். இரண்டே இரண்டு வித்தியாசங்கள்தான். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் சொல்லித்தருவதை கற்றுக்கொள்கிறோம். பேச்சாளர் மன்றத்தில் நாமே செய்து பார்த்து கற்றுக்கொள்கிறோம் (Learn-by-Doing). பள்ளிக்கூடத்தில் தேர்ச்சி(Pass), தோல்வி(Fail) என்று இரண்டு நிலைகள் உண்டு. பேச்சாளர் மன்றத்தில் அவை கிடையாது (No Pass! No Fail!)  

     Toastmasters International (TI) என்ற அமைப்பை பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட இந்த அமைப்பு, பேச்சாற்றலையும் (Public Speaking Skills), தலைமைத்துவ பண்புகளையும் (Leadership Skills) வளர்க்க உதவும் ஒரு லாப நோக்கமற்ற கல்வி நிறுவனம் (Non-Profit Educational Organization). இதைப்பற்றி இன்னும் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்பினால் www.toastmasters.org  என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

     இந்த அமைப்பின் கீழ், உலகம் முழுவதும் பல மன்றங்கள் (Clubs) பல மொழிகளில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. சிங்கப்பூரில் தமிழ், ஆங்கிலம், மாண்டரீன், ஃபிரெஞ்ச் மொழிகளுக்காக மொத்தம் நூற்றி அறுபத்தொன்பது (169) மன்றங்கள் உள்ளன. இவற்றுள் தமிழுக்காக ஆறு மன்றங்கள் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

2001ஆம் ஆண்டு ராடின் மாஸ் சமூக நிலையத்தில் தொடங்கப்பட்ட சிங்கப்பூர் தமிழ் சொல்வேந்தர் மன்றம்தான் உலகத்தின் முதல் தமிழ் பேச்சாளர் மன்றம்.

மன்றங்கள், மன்ற கூட்டங்களை (Club Meetings) மாதம் ஒருமுறை நடத்துகின்றன. பொதுவாக மன்ற கூட்டத்தில், மூன்று பகுதிகள் இடம்பெறும்.

திட்டப்பேச்சு அல்லது தயாரிக்கப்பட்ட பேச்சு (Project Speech or Prepared Speech)

இது கூட்டத்தின் முதல் பகுதி. இதில் உறுப்பினர்கள் Toastmasters International ன் கையேட்டில்(Manual) உள்ள நோக்கங்களின் அடிப்படையில் உரையை தயாரித்து வந்து கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் பேசுவார்கள். உதாரணத்திற்கு, கதை சொல்லும் கையேடு (Story Telling Manual) என்றால் நாட்டுப்புறக்கதையை சொல்லவேண்டும் என்பது ஒரு திட்டம்(Project).

மதிப்பீடு (Evaluation)

இது கூட்டத்தின் இரண்டாம் பகுதி. முதல் பகுதியில் உறுப்பினர் பேசிய உரையை, சக உறுப்பினர் ஒருவர் மதிப்பீடு செய்வார். இது பேச்சாளரை குறை சொல்ல என்று நினைத்தால் அது முற்றிலும் தவறானது. பேச்சாளரின் தரத்தை உயர்த்த ஆலோசனைகள் சொல்வது மட்டுமே இந்த மதிப்பீட்டின் குறிக்கோள்.

அரங்கப்பேச்சு அல்லது திடீர் பேச்சு (Table Topic Speech)

இது கூட்டத்தின் மூன்றாம் பகுதி. பேச்சுக்கான தலைப்புகள் கொடுக்கப்படும். உறுப்பினர்கள் எந்தவித முன்தயாரிப்பும் இல்லாமல் உடனடியாக இரண்டு நிமிடங்கள் பேசவேண்டும்.

மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பாக செய்த உறுப்பினர்கள், வாக்கெடுப்பின் (Voting) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பட்டைகளை (Best Speaker Ribbon, Best Evaluator Ribbon and Best Table Topic Speaker Ribbon) பெறுவார்கள். உறுப்பினர்கள் உரைகளையும், மதிப்பீட்டையும் கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் முடிக்கவேண்டும் என்பது Toastmaster International ன் மிக, மிக முக்கிய விதியாகும். நேரத்துக்குள் முடிக்காதவர்கள் வாக்கெடுப்பில் பங்குபெறும் தகுதியை இழப்பார்கள்.

  உறுப்பினர்கள் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளும் அதே நேரத்தில் தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக்கொள்ளவும் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, மேலே சொன்ன மதிப்பீடு (Evaluation), தலைமைத்துவ பண்புக்கான ஒரு பயிற்சி. பேச்சாளர் மனது புண்படாத வகையிலும், முதுகு சொறியாமலும் உண்மையான, நேர்மையான பின்னூட்டம் (Feedback) வழங்க இந்த மதிப்பீடு ஒரு சிறந்த பயிற்சியாக உள்ளது. இதைப்போல மேலும் பல தலைமைத்துவ பண்புகளை கற்றுக்கொள்ள பேச்சாளர் மன்றங்கள் சிறந்த தளமாக அமைகின்றன.

1.   அடிப்படைநிலை பேச்சாளர் (Competent Communicator)
2.   மேல்நிலை பேச்சாளர் – வெண்கலம் (Advanced Communicator Bronze)
3.   மேல்நிலை பேச்சாளர் – வெள்ளி (Advanced Communicator Silver)
4.   மேல்நிலை பேச்சாளர் – தங்கம் (Advanced Communicator Gold)
5.   அடிப்படைநிலை தலைவர் (Competent Leader)
6.   மேல்நிலை தலைவர் – வெண்கலம் (Advanced Leader Bronze)
7.   மேல்நிலை தலைவர் – வெள்ளி (Advanced Leader Silver)

புதிய உறுப்பினர், மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு நிலையை முடிக்கும்பொழுதும் Toastmasters International லிருந்து சான்றிதழை பெறுவர். இந்த ஏழு நிலைகளையும் முடித்தவர்கள் ‘’சிறந்த சொல்வேந்தர்’’ (Distinguished Toastmaster) என்ற உயர்ந்த விருதை பெறுவர்.   

பேச்சாளர் மன்றத்தில் பலவித காரணங்களுக்காக இணைந்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
  • தமிழ்மொழி மீது கொண்ட தீராத காதலால் சேர்ந்தவர்கள்
  • பிள்ளைகள் தமிழ் படிக்க, மொழி மீது ஆர்வம் கொள்ள முன்மாதிரியாக நாமே இருப்போம் என்று சேர்ந்த பெற்றோர்கள்
  • பத்து பேரை ஒன்றாக பார்த்தால் வாயிலிருந்து காற்றுதான் வருகிறது. அந்த பயத்தை, நடுக்கத்தை போக்கிகொள்ள சேர்ந்தவர்கள்
  • தலைமைத்துவ பண்புகளை கற்றுக்கொள்ள சேர்ந்தவர்கள்


என்று காரணங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். 

உங்களுக்கு வசதியான இடத்திற்கு, நேரத்திற்கு ஏற்ப ஏதாவது ஒரு மன்ற கூட்டத்திற்கு, ஒரு பார்வையாளராக நீங்கள் சென்று வரலாம்.
                       
  
              
   


  

No comments:

Post a Comment