Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, November 26, 2018


தி  சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ் கவிதைச் சிறப்பிதழில் (ஏப்ரல், 2018) வெளியானது


குருதிப்பால்

தீமிதி பார்த்த சிவப்புச் சட்டைக்காரன்
சன்னதம் கொண்டு ஆடுகிறான்
சிங்க நடனமாடும் கால்களுக்குச்
சுருதி கூட்டுகிறான் உருமி மேளக்காரன்
நாசி வழி நுழைந்து நாபிக் கமலம் வரை
மயக்குகிறான் நாஸிலெமாக்காரன்
எங்கெங்கிருந்தோ வந்தணைந்த
வண்ண, வண்ண வலசைப் பறவைகள்
கம்போங்கில் ஒரு கூட்டுப் பறவைகளாக
சபிக்கப்பட்ட ஒரு நாளில்
நிறமெனும் நஞ்சேந்திய நாகங்கள்
சீறிப் பாய்ந்து கொத்திக் கொள்ள
எட்டித் தெறிக்கும் விஷம் பட்டு
எரிந்து கருகுகிறது ஆர்க்கிட் மலர்
ஆற்றங்கரையில் மீன் பிடிக்கும்
ஆலகாலம் உண்டு உலகு புரத்த
அப்பனின் அரைவாசி அம்மையவள்
அரவங்களை அள்ளியெடுத்து
முலையூட்டிக் கொஞ்சுகிறாள்
விஷச்சட்டையை உரித்தெறிந்து
புதிதாய்ப் பிறக்கின்றன தேவகுழவிகள்
ஒன்றை ஒன்று கட்டித் தழுவதலில்
ஆனந்தக் களியாட்டு அரங்கேறுகிறது
மகிழ்ச்சி மாமழை சிந்திய குருதியை
கழுவி வாரிக்கொண்டு விரைந்தோட
அன்னை முலையூறும் வெண்ணமுது
பிரவாகமாய்ப் பெருக்கெடுத்து ஓட
ஆதி மூலமாய் நீண்டு கிடந்த ஆறு
அள்ளி அணைத்து ஆற்றுப்படுத்துகிறது
சமத்துவமெனும் குருதி மேலாகவும்
அன்பெனும் பால் கீழாகவும்
அலைந்து அசைந்தாடும் நீர் கொடியில்
எட்டி முகம் பார்த்துச் சிரிக்கும்
பிறைச்சந்திரனும் பஞ்ச விண்மீன்களும்
பூமிப்பந்திற்குச் சிவப்புப் புள்ளியை
அடையாளம் காட்டி ஆராதிக்கின்றன

Sunday, March 19, 2017



தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழில் (பிப்ரவரி, 2017) வெளியானது

வாழ்நாளெல்லாம்
நாம் பேசிய வார்த்தைகளைக்
கோர்த்து கோர்த்து சரடாக்குகிறேன்
இறப்பிற்குப் பின் எடுத்துச் செல்ல
யாருமற்ற அண்ட வெளியில்
அறுந்து தெறிக்கும் சொற்களோடு
புணர்ந்து திளைக்க
கடவுளிடம் பிரார்த்தனை செய்
உன் இன்சொற்களால் மட்டுமே
நான் கருவுற வேண்டுமென்று  

Thursday, October 20, 2016


'மலைகள்' இணைய இதழில் வெளியானவை

இரவின் தூக்கம் கெடுத்தது
பூனையின் அலறல்
சத்தம் வரும் இடம் தேடி நடந்தோம்
உன் அறையிலிருந்துதான் என்றேன்
என் அறையிலிருந்து என்றாய் நீ
இருவரும் ஒரே அறையில் இருந்தபோது
சத்தமே இருந்ததில்லை என்றேன் 
ஒருகணம் அதிர்ந்து பார்த்துவிட்டு
அறைக்குள் நுழைந்து கொண்டாய்
எனக்குத் தெரிகிறது நீ இப்போது
அப்பூனையைக் கொல்ல முயன்று கொண்டிருப்பது

********

உதடுகள் பொருந்த முத்தமிட்டோம்
அவன் நாவின் விஷம்
தேனாய் என்னுள் இறங்கியது
முத்தத்தின் முடிவில் காறி உமிழ்ந்தேன்
என் எச்சில் பட்டு அவன் மரித்துப்போக
அடுத்த முத்தத்திற்காக உதடுகளில்
தேனைத் தேக்கி காத்திருக்கிறேன் நான்

********

முறிந்துபோனது எனக்கும் உனக்குமான கட்சி உறவு
முறுக்கி கொண்டிருந்த தாலிக்கொடியை இறக்கிவிட்டு
கொடியில்லாத கொள்கையில்லாத கூட்டணி
தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்