'மலைகள்' இணைய இதழில் வெளியானவை
இரவின்
தூக்கம் கெடுத்தது
பூனையின்
அலறல்
சத்தம் வரும்
இடம் தேடி நடந்தோம்
உன்
அறையிலிருந்துதான் என்றேன்
என்
அறையிலிருந்து என்றாய் நீ
இருவரும்
ஒரே அறையில் இருந்தபோது
சத்தமே
இருந்ததில்லை என்றேன்
ஒருகணம்
அதிர்ந்து பார்த்துவிட்டு
அறைக்குள்
நுழைந்து கொண்டாய்
எனக்குத்
தெரிகிறது நீ இப்போது
அப்பூனையைக் கொல்ல முயன்று கொண்டிருப்பது
********
உதடுகள்
பொருந்த முத்தமிட்டோம்
அவன்
நாவின் விஷம்
தேனாய்
என்னுள் இறங்கியது
முத்தத்தின்
முடிவில் காறி உமிழ்ந்தேன்
என்
எச்சில் பட்டு அவன் மரித்துப்போக
அடுத்த
முத்தத்திற்காக உதடுகளில்
தேனைத் தேக்கி காத்திருக்கிறேன் நான்
********
முறிந்துபோனது
எனக்கும் உனக்குமான கட்சி உறவு
முறுக்கி
கொண்டிருந்த தாலிக்கொடியை இறக்கிவிட்டு
கொடியில்லாத
கொள்கையில்லாத கூட்டணி
தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்
No comments:
Post a Comment