Thursday, October 20, 2016

நதிமிசை நகரும் கூழாங்கற்கள் - எம்.கே.குமார் 
  
லண்டன் அனைத்துலக உயிரோடைத் தமிழ் மக்கள் வானொலியில் ஒலிபரப்பான  இலக்கியப்பூக்கள் சஞ்சிகை நிகழ்வில் பேசிய உரையின் வடிவம்  

இந்ததொகுப்பு சிங்கப்பூரின் பத்து பெண் கவிஞர்களின் கவிதைகளை கொண்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இயங்கிவரும் சிங்கப்பூர் வாசகர் வட்டம் சார்பாக இக்கவிதைகளை தொகுத்து வெளியிட்டுள்ளார் கவிஞரும் எழுத்தாளருமான திரு எம் கே குமார்.

நதி போன போக்கில் நகர்ந்து மென்மையாகவும் தனக்கென ஒரு தனி அடையாளத்துடனும் விளங்கும் கூழாங்கற்களைப் போல பத்து பெண் கவிஞர்களும் வாழ்க்கையென்னும் நதியால் நகர்த்தப்பட்டு தாம் பெற்ற அனுபவங்களைத் அடுத்தவரின் சாயல் இல்லாமல் தனி அடையாளத்துடன் இந்த கவிதைகளில் வடித்துள்ளார்கள். சில கவிதைகள் கொஞ்சுகின்றன. சில கவிதைகள் கெஞ்சுகின்றன. சில கொதிக்கின்றன. சில குளிர்கின்றன. சில கவிதைகள் வெட்கத்தை ஆராதிக்கின்றன. சில கவிதைகள் வெட்கத்தை காறி துப்புகின்றன. சில வலி தருகின்றன. இன்னும் சில வலி போக்குகின்றன. சொல்லிக்கொண்டே போகலாம். தொகுப்பை படித்து முடித்தவுடன் இந்த பத்து பெண் கவிஞர்களும் இதுவரை எந்த ஒரு கவிதை தொகுப்பையும் வெளியிடவில்லை என்று அறிய நேரும்போது உங்கள் விழிகள் வியப்பால் விரியலாம். புத்தகம் வெளியிடுவதில் புதியவர்களான இவர்களின் பாடுபொருளும் புதியவையாக இருக்கின்றன. மரபுக் கவிதை, புதுக் கவிதை, நவீனக் கவிதை என மூன்று வடிவங்களிலும் கவிதைகள் இடம்பெற்றிருப்பது இந்த தொகுப்பின் சிறப்பம்சம். இந்த தொகுப்பில் எனக்குப் பிடித்த சில கவிதை வரிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

கவிஞர் அனிதா ராஜ்

ஆயுதம்
கூர்முனை கொண்டு இதயத்தைப் பிய்த்தெறிந்த திருப்தியுடன் பயணிக்கிறது அவ்வார்த்தையும் அவர்களுடன்
அக்கூர்முனை படைத்தவனிடமும் கருணை காட்டாதென்பதை
அறிய நேரிடலாம் அவர்களும் ஏதோ ஒரு நொடியில்


கவிஞர் இன்பா

அவன் தான் தோழன்
என் விரல்களின் மொத்த குத்தகைக்காரன்
என் சொற்களைத் தின்னும் சொற்பித்தன்
தூரத்திலிருப்பவரையும் துரத்திப் பிடிக்கும் வேட்டையன்
கூடவேயிருந்து என் தூக்கத்தை கெடுக்கும் வித்தகன்
என்னை சுற்றி சுவரெழுப்பி என்னையும் சுவராக்கியவன்

கவிஞர் உஷா சுப்புசாமி

பொங்கல் விழா
வாழிடம் தொலைத்தபின் வாழ்வது எங்காமோ?
சாவத்தான் பிறந்தோமா? சாதிக்கப் பிறந்தோமா?
போகட்டும் அத்துணையும் புறந்தள்ளி வைத்துவிட்டு
பொங்கவைப்போம் வாருங்கள் பொங்குவோம் வாருங்கள்
சென்றவிடம் அத்துணைக்கும் செழுந்தமிழர் பண்பதனை
கொண்டுசென்றோம் மாறாக கொலைவெறியும் வன்செயலும்
மோதல் போக்கதனால் முகவரியைத் தொலைக்கின்ற
உலகத்துத் தமிழர்தம் உரிமைக்குப் பொங்கல் வைப்போம்

கவிஞர் கௌசல்யா

நல்லவர்கள்     
தமிழ்க் கவிஞர்க்கிணை தரணியில் யாருமில்லை
தண்ணீருக்கே பஞ்சமெனினும் தேனாறு பாயவைப்பவர்கள்
அவலங்களுக்கு கூட சொற்களில் அரிதாரம் பூசி
அவனிமுழுவதும் பவனி அனுப்புவர்கள்
இவர்கள் அடுப்புகளில் காளான் பூத்தாலும் அறுசுவை படைப்பவர்கள்

கவிஞர் சித்ரா ரமேஷ்

தாமரைப்பொய்கை
செவ்விளநீர் குளிர்சாதனப் பெட்டியில்,
தென்றல் குளிரூட்டப்பட்ட அறையில்
முத்தும் சங்கும் புது நெல்லும் விளையும்,
செங்கழுநீர்ப்பூக்களும், தாமரைக்கொடிகளும் புரளும் சேற்று நிலம் பாழடைந்த தரிசாய் கதிர் விளையும் பூமியை வரைபடங்களுக்குள்
அடக்கி சதுரம் நீள்சதுரம் முக்கோணம் அறுங்கோணம் என பலவகை கட்டங்களுக்குள் அடக்கி
கான்கிரீட் மரங்கள் வானமெட்ட சமூகக் காடுகள் வளர்க்கிறோம்

கவிஞர் சுகுணா பாஸ்கர்

சினேகம் தீர்ந்த காதல்
காத்திருந்த எனது விரக்தி கட்டிலின் ஒரு கோடியில் அமர்ந்து பார்க்கிறது
அறையின் கோடியில் கால்களைப் பின்னிக்கொண்டு கைகளைக் கோர்த்துக் கொண்டும் கரைகிறது.
உனது முதுகில் ஊர்ந்து காதுவரை கடந்து செல்ல காத்திருந்தேன்
சித்தார் இசையோடு மனதில் எழும் சொற்களை அடுக்கி அன்பையும் காதலையும் நிரப்பி அதில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நீ எப்போதும் வருடும் கைதொலைபேசியில் என்னதான் இருக்கிறது

கவிஞர் சுஜா செல்லப்பன்

தாய்மை
என் அடையாளம் நீ என்ற அலட்டல் இல்லாமல்
வாழ்வியல் நெறிகளை வலிக்காமல் திணிக்கத் தெரிந்த குருவாக வழிநடத்தும் போது
அன்பென்ற பெயரில் நிகழும் ஆக்கிரமிப்பாக இல்லாமல்
ஆத்மார்த்தமான நட்பாக பிள்ளைகள் மனதில்
அன்னையின் பிம்பம் மலரும்போது மட்டுமே
முழுமையடைகிறது தாய்மை

கவிஞர் பாரதி மூர்த்தியப்பன்

வெட்கம்
யாருக்கு வேண்டும் வெட்கம்? நாய்களுக்கு என்றான் பாரதி
பூனையும் நாயும் உயிர்களில் சமம் என்பான்
பெண்ணை! – வெட்கம் நுகர்ச்சி பொருளென்பான்
நளினம் பெண்ணின் அடையாளம்
வெட்கம் பெண்ணின் ஆயுதம்
பல சமயம் வீசியவரையே கொல்லும் வெட்கம்
வெட்கம்கெட்ட ஆயுதம்!

கவிஞர் வாணி சிவப்பிரகாஷ்

ஏறக்குறைய
அச்சிகரம் வென்றிட எண்ணியே நானும
அதிகாலை எழுந்து அடிவாரம் சேர்ந்தேன்
அண்ணாந்து பார்த்தால் செங்குத்து மாஉயரம்
அடிசற்று சறுக்கினாலும் நிச்சயம் துயரம்
வந்தது வந்துவிட்டோம் ஏறித்தான் பார்ப்போமென
வலக்கால் முன்வைத்து மங்களமாய் ஆரம்பித்தேன்
மலைகண்டு மலைத்தாலும் ஓர்நோக்கு கொண்டு
முன்நோக்கி நகர்ந்தேன் பின்நோக்க மறந்தேன்
ஏற ஏற இலக்கின் தூரம் குறையகுறைய
ஏறக்குறைய உச்சியை அடைந்தேன்
அது அந்தி நேரம்

கவிஞர் ஹரிணி

வெள்ளை
மழலையின் முதல் அலறலுக்கு
ஆறுதலாய் விரிகிறது
போர்த்திச் சுற்றியிருக்கும் வெண்மை விரிப்பு
நீண்டு கிடக்கும் உடலுக்குத் துணையாய்
துக்கமாய் விரிகிறது இன்னொரு வெண்மைப் போர்வை
இவ்விரண்டுக்கும் நடுவில் வெள்ளை மனம் வேண்டிப் போராடுகிறோம் நாம்
எங்களுக்கு அதுவே புனிதப்போர்     

இப்படி பத்து கவிஞர்களும் வாழ்வின் மாறுபட்ட தரிசனங்களை கவிதையின் வழியாக நம்முன் கொண்டு வந்துள்ளார்கள். சிங்கப்பூர் இலக்கிய உலகில் பத்து பெண் கவிஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ள இந்த தொகுப்பு ஒரு நல்ல முயற்சி. வரவேற்கத்தக்க முயற்சி. 

இந்த முயற்சி மற்ற பெண் படைப்பாளிகளுக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்று உறுதியாக சொல்லமுடியும். இந்த முயற்சியை முன்னெடுத்து வாசகர் வட்டத்திற்கும், தொகுப்பாசிரியர் எம் கே குமார் அவர்களுக்கும், பத்து பெண் கவிஞர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். நதிமிசை நகரும் கூழாங்கற்கள் அனைவரும் படித்து ரசித்து சுவைக்க வேண்டிய அருமையான கவிதை நூல்.  

    

1 comment:

  1. வாசித்து கருத்துரைத்தமைக்கும் வானொலியில் வாசித்தமைக்கும் மிக்க நன்றி நிலா.

    ReplyDelete