Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Tuesday, January 8, 2019


2018 ஆம் ஆண்டின் நிகழ்வுகளும் மகிழ்வுகளும் 

ஒவ்வொரு ஆண்டும் வயதை மட்டும் கூட்டுவதில்லை. அனுபவம், சகிப்புத்தன்மை, வாழ்க்கையின் மீதான நம்பிக்கை, சக மனிதர்கள் மீதான நேசம் இப்படியாக பலவற்றை அதிகப்படுத்திவிட்டுதான் செல்கிறது. 2018 ஆம் ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. 2018 எனக்கு மற்றுமொரு முக்கியமான ஆண்டு. எனது நான்காவது நூலான சிறுகாட்டுச் சுனை வெளியீடு கண்டதால்தான் அந்த முக்கியத்துவம்.                    

தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழில் சிங்கப்பூரைப் பற்றி நான் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளை நூலாக கொண்டு வரலாம் என்ற எண்ணம் 2017 ஆம் ஆண்டிலேயே உதித்துவிட்டாலும் வழக்கமான சோம்பேறித்தனத்தாலும் இன்ன பிற வேலைகளாலும் அத்திட்டத்தைத் தள்ளி போட்டுக் கொண்டே வந்தேன். 2018 ஆம் ஆண்டு பிறந்தவுடனேயே நண்பர் ஷாநவாஸ் இந்த வருடம் வாசகர் வட்ட ஆண்டு விழாவில் உங்க நூலை வெளியிடுறிங்க என்று அன்பு கட்டளை போட்டார். அவரது உந்துதல்தான் எனது முதல் நூல் வெளியீட்டிற்கும் காரணமாகும்.

நான்கு புதிய கட்டுரைகள் எழுத வேண்டி இருந்ததால் அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். எனது முதல் நூல் சொந்த பதிப்பாக இருந்ததால் இந்த முறை பதிப்பகத்தார் மூலம் கொண்டு வரலாமென்ற எண்ணத்தில் தமிழகத்திலுள்ள இரண்டு பதிப்பகங்களின் உதவியை நாடினேன். நாட்கள் குறைவாக இருந்த காரணத்தால் ஒரு பெரிய பதிப்பகம் முடியாது என கூறிவிட்டார்கள். பிழை என்னுடையதுதான். மற்றொருவரோ முடியும், முடியாது என்று ஒரு பதில் கூட போடவில்லை. இறுதியில் இதையும் சொந்த பதிப்பாகவே கொண்டு வரலாம் என்ற தீர்மானத்துடன் தமிழ் அலை பதிப்பகத்தார் உதவியை நாடினேன். நண்பர் இசாக் நான் கடைசி தேரத்தில் செய்த அட்டூழியங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டு மிகத் திறம்படவும் நேர்த்தியாகவும் என் நூலை அழகான வண்ணப் படங்களுடன் அச்சிட்டுக் கொடுத்தார்.

மார்ச் மூன்றாம் ஆம் தேதி சிறப்பாக நடைபெற்ற வாசகர் வட்ட ஆண்டு விழாவில் எழுத்தாளர் சாரு நிவேதிதா பதினெட்டு கட்டுரைகள் கொண்ட சிறுகாட்டுச் சுனை நூலை வெளியிட நண்பர் ஷாநவாஸ் முதல் பிரதியை பெற்றுக்கொண்டது வாழ்வின் அற்புதமாக தருணங்களில் ஒன்று. நூலை அறிமுகம் செய்த நண்பர் மாமன்னனின் உரை அனைவராலும் பாராட்டப்பட்டது மனதுக்கு நிறைவாக இருந்தது. தி சிராங்கூன் டைம்ஸ் 25 இதழ்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு வெளியான காலச்சிறகு தொகுப்பில் எனது சிறுகதை விலக்கு இடம்பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சி தந்தது.        

இந்த வருடத்தின் மிகப் பெரிய குதூகலமாக அமைந்தது இலங்கைப் பயணம். எனது குடும்பமும் தோழி பாரதி மூர்த்தியப்பனும் அவரது மகள்களும் இணைந்து சென்ற இந்தப் பயணம் வாழ்நாள் முழுதும் இனிமையான நினைவாய் எப்போதுமிருக்கும். கொழும்பு - அனுராதபுரம் - பொலன்னறுவை - சிகிரியா - கண்டி - பின்னவாலா - மாத்தளை - நுவெரெலியா - கொழும்பு என எட்டு நாட்கள் பயணம். பாரதியின் உறவினர்களான ரவி அண்ணன், மோகன் அண்ணன், ரத்னா அக்கா குடும்பம் என அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இலங்கை கொள்ளை அழகு. உயிர் பிரிவதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை நுவெரெலியா போய்விட வேண்டுமென்று சொல்லுமளவுக்கு 'மலையகம்' குளிரையும், தேயிலை வாசனையையும் சுமந்து கொண்டு கிறங்கடிக்கிறது.

சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்திய முத்தமிழ் விழா குழந்தைப் பாடல்கள் எழுதும் போட்டியில் மூன்றாம் பரிசு கிடைத்தது இன்ப அதிர்ச்சிதான். அந்த போட்டி பற்றிய அறிவிப்பை அறியாமல் இருந்த எனக்கு அதைத் தெரிவித்து எழுதச் சொல்லிய தோழி கிருத்திகாவிற்கு நன்றி.

தேசிய நூலகம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு கதை சொல்லல் நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது. வாசிப்பு விழாவை முன்னிட்டு யீஷூன் நூலகத்திலும் தீபாவளியை முன்னிட்டு தெம்பனீஸ் கடைத் தொகுதியிலும் நடைபெற்ற கதை சொல்லும் நிகழ்ச்சிகளில் குழந்தைகளோடு குழந்தையாய் மாறிய அனுபவம் மகிழ்ச்சி அளித்தது.      

சிங்கப்பூர் கவிதைத் திருவிழாவில் சிங்கப்பூர் கவிதைகளின் வளர்ச்சிப் போக்கும் சவால்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிங்கை கவிதைகளின் வரலாற்றுச் சித்திரங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினேன். சிங்கப்பூர் கவிதைகளின் நீண்ட வரலாற்றை வாசித்து அறிந்து கொள்ளவும் அதை மற்றவர்களுக்குச் சுருக்கமாக எடுத்துச் சொல்லவும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.          

'புதுயுகம்' தொலைக்காட்சியின் 'யாவரும் கேளீர்' விவாத மேடை சிங்கப்பூரில் நடைபெற்றது. அதில் பேசும் வாய்ப்பும் பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் அமைந்தது உவகை அளித்தது.

அழிசி நடத்திய விமர்சனக் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பை எழுத்தாளர் ஜெயமோகன் இணையதளத்தில் கண்டவுடன் திரு.கணேசகுமாரன் எழுதிய மெனிஞ்சியோமா குறுநாவலைப் பற்றிய எனது விமர்சனத்தை இல்லை, இல்லை வாசிப்பனுபவத்தை எழுதி அனுப்பினேன். பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும் பதாகை இணைய இதழில் பிரசரிக்கத் தேர்வானது திருப்தியாக இருந்தது.

வல்லினம் இதழுக்கு திறவுகோல் என்ற தலைப்பில் எழுதி வந்த நூல் பார்வைகளைத் தொடர்ந்து எழுத முடியவில்லையே என்ற ஆதங்கத்தை பவா செல்லதுரை சிறப்பிதழாக மலர்ந்த வல்லினத்தில் பவா என்றொரு கதைசொல்லியின் புனைவுலகம் என்ற கட்டுரையை எழுதி தீர்த்துக்கொண்டேன்.      

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நானும் ஒரு படைப்பாளி’, வழிகாட்டும் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களில் பங்கேற்று உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பயிலரங்குகள் நடத்தியதன் வழியாக நானும் நிறைய  கற்றுக்கொண்டேன். மேலும் எனது எழுத்து அனுபவத்தை மூன்று உயர்நிலைப் பள்ளிகளில் பகிர கிடைத்த வாய்ப்பு நல்ல அனுபவமாக இருந்தது.            

வழக்கமான வாசகர் வட்ட சந்திப்புகள், இலக்கியச் சந்திப்புகள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கின. கவிஞர் சுகிர்தராணி, எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. திரு அ.கி.வரதராஜன் அவர்களது புண்ணியத்தில் கம்பனின் பாடல்களை கேட்கவும் கற்கவும் கிடைத்த அரிய வாயப்பு இந்த வருடமும் தொடர்ந்தது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ் ராமகிருஷ்ணனுக்கு சென்னையில் நடந்த பாரட்டு விழாவில் கலந்துகொண்டேன். எழுத்தாளர்கள் சாரு நிவேதிதா, பவா செல்லதுரை, லஷ்மி சரவணகுமார், அகர முதல்வன், கவிதைக்காரன் இளங்கோ, ஜீவ கரிகாலன், அதியன் ஆறுமுகம் போன்றோரைச் சந்தித்தது மகிழ்வாக இருந்தது.  

இந்த ஆண்டின் ஹைலைட் என்றால் அது வருட இறுதியில் சென்ற காஞ்சிபுரம் பயணம்தான். நான், என் கணவர், என் மகள், தோழி பாரதி, அவரது கணவர் என ஐந்து பேர். ஆறு நாட்கள். கிட்டத்தட்ட முப்பத்தைந்து இடங்கள். கற் கோயில்கள், குடைவரைக்கோயில்கள், சமணப்படுகைகள், ஒற்றைக் கற்றளிகள், புடைப்புச் சிற்பங்கள், ஓவியங்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்களை அவர்கள் விட்டுச் சென்ற எச்சங்களின் வழியாக கண்டு, கேட்டு, தொட்டு, உணர்ந்து உய்த்த அருமையான அனுபவம்.

எங்களுக்கான பயணத்திட்டத்தை வகுத்துத் தந்ததோடு மட்டுமல்லாமல் எங்களுடன் வந்திருந்து இப்பயணத்திற்கு மேலும் இனிமை ஊட்டிய 'Celebrate Kanchi' குழு நண்பர்கள் வேல் குமரன், செந்தில், கார்த்தி, தியாகு அனைவருக்கும் நன்றி. குறிப்பாக நண்பர் வேல் குமரன் இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமே இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். நண்பர் முருகன் திருச்சியிலிருந்து கிளம்பி வந்து ஞாயிறு மட்டும் எங்களுடன் இணைந்து கொண்டார். அதை விட மகிழ்ச்சி நல்ல வாசகரான அவரிடம் என் நூல்களைத் தந்தது.  

காஞ்சியைப் பார்த்தது எத்தனை மகிழ்வானதோ அதைவிட இரண்டு மடங்கு மகிழ்ச்சியை அளித்தது நண்பர் சசியைச் சந்தித்தது. முகநூலில் இவரது பதிவுகளை தோழி விஜயபாரதி பகிர்வார். அப்படித்தான் சசியின் பதிவுகளைப் படிக்கத் தொடங்கினேன். முகநூலில் நான் ரசித்து வாசிக்கும் பதிவர்களில் சசியும் ஒருவராக மாறிப்போனார். இரண்டு நாட்கள் எங்களுக்குப் பயண வழிகாட்டியாக வந்திருந்து அத்தனைத் தகவல்களைக் கொட்டித் தீர்த்தார். சமணம், பௌத்தம், சைவம், வைணவம், சாக்தம் என பல மதங்கள் தழைத்திருந்த இந்த மண்ணில் ஒவ்வொரு கோயிலைப்பற்றிய இந்தக் கறுப்பு சட்டைக்காரரின் வரலாற்று அறிவு பிரமிப்பூட்டுவதாக இருந்தது.


வாசித்த புத்தகங்கள்


1.     பட்டு நாவல் அலெசான்ட்ரோ பாரிக்கோ தமிழில் சுகுமாரன்

2.     மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் டயான் ப்ரோகோவன் தமிழில் ஆனந்த்

3.     வேர்கள் அலெக்ஸ் ஹேலி தமிழில் பொன் சின்னத்தம்பி முருகேசன்

4.     யார் அறிவாரோ மஹாபளேஷ்வர் ஸைல், தமிழில் இரா தமிழ்ச்செல்வன்

5.     பால்கனிகள் சு வேணுகோபால்

6.     பெருவலி சுகுமாரன்

7.    ஓரிதழ்ப்பூ அய்யனார் விஸ்வநாத்

8.     Peranakan Indians of Singapore and Melaka Indian Babas and Nonyas – Chitty Melaka by Samuel S Dhoraisingam

9.     மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது - பாஸூ அலீயெவா,மொழிபெயர்ப்பாளர் - பூ.சோமசுந்தரம்

10.  எருது (உலக மொழிபெயர்ப்பு சிறுகதைகள்) - தொகுப்பும் மொழியாக்கமும் - கார்த்திகைப் பாண்டியன்

11.  நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை – பவா செல்லதுரை

12.  டொமினிக் – பவா செல்லதுரை

13.  வெட்டாட்டம் _ ஷான்

இந்த ஆண்டு வாசிப்பு மிக குறைந்தது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் வாசித்த அனைத்து நூல்களையும் பற்றி பேசியோ எழுதியோ பதிவு செய்திருக்கிறேன் என்பது மிகவும் திருப்தியாக உள்ளது. வாசிப்பைப் போல எழுத்தும் குறைந்துவிட்டது. அதனால் என்ன? இருக்கவே இருக்கிறது 2019 ஆம் ஆண்டு. ஒரு கை பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த ஆண்டின் மறக்கவும் முடியாத மன்னிக்கவும் முடியாத மிகப் பெரிய சோகங்கள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும், டெல்டா மாவட்ட கஜா புயலும்.  அதிகாரமும் இயற்கையும் இரக்கமே இல்லாமல் மக்களை காவு வாங்கியது அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது.

சென்று வா 2018 ஆம் ஆண்டே! உன்னிலிருந்து நான் பெற்ற மகிழ்வுகளுக்காகவும் கற்றுக்கொண்ட பாடங்களுக்காவும் நன்றி.  

God grant me the serenity
to accept the things I cannot change;
courage to change the things I can;
and wisdom to know the difference.



எனக்கு மிகவும் பிடித்த இந்த பிரார்த்தனையோடு 2019 ஆம் ஆண்டை எதிர்கொள்ள தயாராகிவிட்டேன். வாழ்தல் இனிது! வாழ்வைக் கொண்டாட, தேடலைத் தொடர, அறிவை விசாலப்படுத்த, மனிதர்களைச் சம்பாதிக்க, அனைவரையும் நேசிக்க என இதோ அடுத்த ஆண்டில்.......







                 

Thursday, January 4, 2018

 2017 ஆம் ஆண்டின் நினைவலைகள்
ஒவ்வொரு வருடம் முடியும் போதும் காலம் நம்மிடமிருந்து சிலவற்றைப் பறித்துவிட்டும் சிலவற்றை கொடுத்துவிட்டும் விடைபெறுகிறது. ஆண்டின் இறுதியில் மிஞ்சியிருக்கும் அனுபவங்களும் நினைவுகளும் புது வருடத்தை இன்னும் அதீத நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் பக்குவத்தை அளித்துவிடுகின்றன. ஒரு பக்கம் குடும்பத்திற்கான நேரம் மறுபக்கம் இலக்கியம், வாசிப்பு, நண்பர்களுடனான உரையாடல், பயணங்கள் ஆகியவற்றுக்கான நேரம் என 2017 ஆம் ஆண்டின் 365 நாட்களும் என்னை சுறுசுறுப்பாக இயங்க வைத்துள்ளன.
சென்னைப் பல்கலைக்கழகமும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் இணைந்து நடத்திய சிங்கப்பூர் படைப்பிலக்கியங்கள் – பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் எனது சிறுகதைத் தொகுப்பு ஆறஞ்சு ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மகிழ்வான செய்தியோடு 2017 ஆம் ஆண்டு தொடங்கியது.
ஆறஞ்சு சிறுகதைத் தொகுப்பு எனக்கு ஒரு அடையாளத்தையும் சிங்கை எழுத்தாளர் என்ற அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறது என்று துணிந்து சொல்லலாம். சிங்கப்பூர் கல்வி அமைச்சு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த நானும் ஒரு படைப்பாளி என்ற சிறுகதைப் பட்டறையில் பயிற்றுவிப்பாளராக எனக்கு வாய்ப்பு கிடைத்தது அந்த அடையாளத்தால்தான் என நினைக்கிறேன். கற்பனைத் திறன் அதிகமிருந்தும் மொழிவளம் இல்லாததால் மாணவர்கள் சிறுகதை எழுத திணறுகிறார்கள் என்பதை இந்தப் பட்டறையின் வழி உணர முடிந்தது.        
ஆறஞ்சு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு இரண்டு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் இலக்கிய நண்பர்களிடம் அடிக்கடி நான் எதிர்கொள்ளும் கேள்வி அடுத்த நூல் எப்போது?” என்பதுதான். எழுத்தாளர் ஜெயமோகனின் சிங்கை வருகையும், அவரது விமர்சனங்களும் ஏற்படுத்திய தாக்கம் என்னுள் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியதால் அதற்கு விடை தேடியே பொழுதுகள் கழிந்துவிட்டன. புனைவெழுத்தை வாசிப்பதில் இருந்த ஆர்வம்  எழுதுவதில் சற்று தணிந்திருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டின் இறுதியில் நான் எழுதிய விலக்கு சிறுகதை நெருங்கிய நண்பர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறைவாக எழுதினாலும் சரியாக எழுதவேண்டும் என்ற எண்ணத்தை அந்தச் சிறுகதை உருவாக்கி உள்ளது.         
அபுனைவு எழுதுவதில் ஏற்பட்ட மையல் தொடர கடந்த வருடம் தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழில் நான்கு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். வல்லினம் இணைய இதழில் ஐந்து நூல்களைப் பற்றிய என் பார்வையைக் கட்டுரையாக எழுதியிருக்கிறேன். இப்படி நூல் பார்வை எழுதுவது சிங்கை-மலேசிய இலக்கியப் பரப்பைச் சரியாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்ள வழி வகுத்துள்ளது. இதற்காக நண்பர் நவீனுக்கும் வல்லினம் குழுவினருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.        
வல்லினம் ஏற்பாட்டில் கோலாலம்பூரில் நடந்த இரு நாட்கள் குறுநாவல் பட்டறையும் எழுத்தாளர்கள் திரு ஜெயமோகன், திரு நாஞ்சில் நாடன் மற்றும் வல்லினம் நண்பர்களுடனான சந்திப்பும் நவீன இலக்கியத்தைப் பற்றிய எனது பார்வையை விசாலமாக்க உசவி புரிந்தன. வல்லினம் 100 களஞ்சியத்தில் எனது கட்டுரையும் இடம் பெற்றது கடந்த ஆண்டின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று எனலாம்.
அகநாழிகை திரு பொன்.வாசுதேவன் தொகுத்து வெளியிட்ட சிங்கப்பூர் சிறுகதைத் தொகுப்பான அக்கரைப் பச்சை நூலில் எனது விரல் சிறுகதையும் இடம்பெற்றது மற்றொரு மகிழ்வான தருணம் எனலாம். மற்றொரு சந்தோஷமான நிகழ்வாக என் மனதுக்கு நெருக்கமான வாசகர் வட்டம் முறைப்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பாக மாறியதைச் சொல்லலாம்.
திரு யூமா வாசுகி, திரு மாலன், திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், திரு பொன்.வாசுதேவன், திரு ரமேஷ் வைத்தியா, கவிஞர் லீனா மணிமேகலை, திரு எஸ் ராமகிருஷ்ணன், கவிஞர் குட்டி ரேவதி, திரு லக்ஷ்மி சரவணகுமார், விஷ்ணுபுரம் விருது பெற்ற மலேசியப் படைப்பாளி திரு சீ.முத்துசாமி ஆகியோருடனான சந்திப்புகள் 2017 ஆம் ஆண்டை மறக்க முடியாத வருடமாக மாற்றிவிட்டன.   
குழந்தைகளுக்கான இரண்டு படப்புத்தகங்களை எழுதிய ஓர் எழுத்தாளராக 2017 ஆம் ஆண்டில் மூன்று நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பேறு பெற்றேன். முதலாவதாக தேசிய கலைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நடந்த WORDS GO ROUND’ நிகழ்வின் வழியாக மூன்று தொடக்கநிலைப் பள்ளிகளுக்குச் சென்று எனது புத்தகங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். இரண்டாவதாக தேசிய நூலக வாரியம் ஏற்பாடு செய்திருந்த பட்டறையில் கதைசொல்லல், விளையாட்டு என குழந்தைகளோடு குழந்தையாக மாறிப் போனேன். மூன்றாவதாக நண்பர் நீதி பாண்டியின் முயற்சியால் Jai Learning Hub’ ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கதைசொல்லல் நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 
மேடைப் பேச்சாளராக 2017 ஆம் ஆண்டில் மூன்று பட்டிமன்றங்களில் பேசி இருக்கிறேன். இதுபோன்ற பட்டிமன்றங்களில் பேசுவது சில சமயங்களில் சலிப்பையும் அலுப்பையும் தந்தாலும் பேசுபொருளை விட்டு விலகாமல் எனது கருத்தை எதிரில் இருப்பவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்கும் கலையைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள இந்த மேடைகள்தான் எனக்குத் தளமாக இருக்கின்றன. If you want to be a good speaker, know your audience first”, என்பதை ஒரு பேச்சாளராக நான் விடாப்பிடியாக பின்பற்றி வருகிறேன். எனது அறிவுஜீவித்தனத்தை வெளிக்காட்டுவதன் வழியாக   ஏற்பாட்டாளர்களையும் பார்வையாளர்களையும் ஏமாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை.        
குடும்பத்தோடு சென்ற பாலி, அங்கோர்வாட் பயணங்கள் மீண்டும்  வரலாற்று சிறப்பு மிக்க அவ்விடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற வேட்கையை உருவாக்கி உள்ளன. நண்பர்கள் பாரதி, சுஜா, ராம்சந்தர் ஆகியோருடன் மலேசியாவின் கெடா மாநிலத்திற்குச் சென்று வந்தது மறக்கவே முடியாத அனுபவமாக அமைந்தது. நண்பர் பாலமுருகன் இல்லாமல் இப்பயணம் சாத்தியமாகி இருக்காது. அவருக்கு நன்றிகள் பல.
டிசம்பர் மாத தொடக்கத்தில் தோழி பாரதியோடு தஞ்சை மற்றும் புதுக்கோட்டை  மாவட்டத்தில் உள்ள கற்றளிகள், குடைவரைக் கோயில்கள சிலவற்றைக்  காணும் பாக்கியம் கிடைத்தது. பயணத்தைத் திட்டமிட பல குறிப்புகள் வழங்கி உதவி புரிந்தார் நண்பர் பொன்.மகாலிங்கம். பயணத்தில் துணையாக வந்திருந்து அரிய பல தகவல்களை வழங்கி மனம் நெகிழச் செய்த நண்பர்கள் திருச்சி பார்த்தி, முருகன் நடராஜன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் செல்வராஜ் ஐயா ஆகியோருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். வாசிப்பின் வழியாக தெரிந்துகொள்வதைக் காட்டிலும் இது போன்ற பயணங்கள் வழியாக வரலாற்றையும் கலையையும் மிகவும் நெருக்கமாக ரசிக்கவும் உணர்வுபூர்வமாக உள்வாங்கவும் முடிகிறது.  ஆப்பே கடையில் நடந்த 236 ஆவது மேசை உரையாடல்" ஆப்பே கடையில் நடந்த 236 ஆவது மேசை உரையாடல்"
குடும்ப நண்பர் ஒருவரின் திடீர் மரணம் வாழ்வைப் பற்றிய பெரும் பதற்றத்தைக் கொடுத்துள்ளது. மிஞ்சியிருக்கும் குறைந்த இந்த வாழ்நாளில் எனக்காகவும் மற்றவர்களுக்காகவும் செய்ய வேண்டியவற்றை விரைந்து செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அந்த மரணம் எனக்குள் விதைத்துள்ளது.      
ஆண்டு இறுதியில் சிங்கை வசந்தம் தொலைக்காட்சியில் எனது கதை குறும்படமாக எடுக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஒளிபரப்பப்பட்டது 2017 ஆம் ஆண்டை நிறைவுடன் முடித்து வைத்துள்ளது.
எது அவசியம்? எல்லாம் அவ்வளவு தெளிவாகத் தெரிந்து விடுவதில்லை. ஆனால், அந்தந்தச் சமயங்களுக்கு என்ன செய்கிறோமோ அதெல்லாம் அவசியம். பிடித்தமில்லாதவைகளைக் கூடச் செய்கிறோம். அதைச் செய்து பிடித்தமான, அவசியமான, பெரியது ஒன்றை அடைய”. இவை கடந்த வருடம் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனின் சொற்கள். நானும் கடந்த வருடத்தில் இப்படித்தான் இருந்திருக்கிறேனோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கீழே உள்ளவை கடந்த ஆண்டில் வாசித்த நூல்கள். இன்னும் வாசிக்க வேண்டியவை புத்தக அலமாரியில் புத்தம் புதிதாக ஏக்கத்தோடு என் தொடுகைக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. இந்த வருடம் உங்களை அணைத்துக்கொள்வேன் என்று நானும் காதலோடு அவற்றிடம் சொல்லி இருக்கிறேன். சிங்கை நூலகத்தில் கிடைக்காத மலேசிய எழுத்தாளர்களின் நூல்களை தோழி விஜயலெட்சுமி அனுப்பி பெரும் உதவி புரிந்துள்ளார். அவருக்கு பல கோடி நன்றிகள். அவைகளும் இப்போது வாசிப்பு பட்டியலில் இணைந்துள்ளன.  
1.       வேர்கள் நூர்ஜஹான் சுலைமான்
2.       பெர்னுலியின் பேய்கள் சித்துராஜ் பொன்ராஜ்
3.       இராமன் வரும் வரை காத்திரு வெங்கட் சம்பத்
4.       ஆப்பே கடையில் நிகழ்ந்த 236 ஆவது மேசை உரையாடல் பாலமுருகன்
5.       கம்பனின் அம்பறாத் தூணி நாஞ்சில் நாடன்
6.       மாதொரு பாகன்பெருமாள் முருகன்
7.       திரிந்தலையும் திணைகள்ஜெயந்தி சங்கர்
8.       வெள்ளை யானை ஜெயமோகன்
9.       பால்யகால சகி பஷீர்
10.   மெனிஞ்சியோமா கணேச குமாரன்
11.   ஊமைச்செந்நாய் ஜெயமோகன்
12.   நிழல் இளவரசி இந்து சுந்தரேசன் (தமிழாக்கம் மதுரம் சுந்தரேசன்)
13.   மணல் (தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல்கள்) – அசோகமித்திரன்
14.   இன்ஸ்பெக்டர் செண்பகராமன் (குறுநாவல்கள்) - அசோகமித்திரன்
15.   சிதைந்த கூடு தாகூர் (தமிழாக்கம் திலகவதி)
16.   இரா முருகன் குறுநாவல்கள்
17.   அக்கரைப் பச்சைபொன் வாசுதேவன்
18.   அம்மா வந்தாள்தி ஜானகிராமன்
19.   தொலைந்து போனவர்கள்சா கந்தசாமி
20.   சிவகங்கை முதல் சிசங்காங் வரை ரெங்கசாமி
21.   கருக்கு பாமா
22.   வைகறைப் பூக்கள்மா இளங்கண்ணன்
23.   வாடிவாசல்சி சு செல்லப்பா
24.   1084 ன் அம்மாமகாஸ்வேதா தேவி
25.   நிமித்தம்எஸ் ராமகிருஷ்ணன்
26.   பதின்எஸ் ராமகிருஷ்ணன்
2018 ஆம் ஆண்டில் எந்தவித பெரிய திட்டமிடலும் இல்லை. வாழ்வை அதன் போக்கில் வாழ்ந்து கொண்டாட வேண்டியதுதான். என்னுடன் இணைந்து பயணிக்க சனி பகவானும் வந்துள்ளார். ஆமாம். ஏழரை சனி ஆரம்பித்துள்ளது. பாவம் அவர். நான் படுத்தப்போகும் பாட்டில் நான் இவளைப் பிடித்தேனா அல்லது இவள் என்னைப் பிடித்திருக்கிறாளா?” என்று மனுஷன் கன்ஃபூயூஸ் ஆகப்போறதை நினைத்தால் இப்போதே ஜாலியாக இருக்கிறது. என் மீது கடல் அளவு நேசம் கொண்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் மானசீக நன்றிகளும் புத்தாண்டு வாழ்த்துகளும்.  

Monday, January 2, 2017

உதிர்ந்த வருடமும் உதிராத நினைவுகளும்

2016 ஆம் ஆண்டு வந்ததும் தெரியாமல் சென்றதும் தெரியாமல் விடைபெற்றுவிட்டது. ஓடும் பேருந்தின் வழியாக பார்க்கையில் வேகமாக ஓடி மறையும் தருக்களைப் போல வருடங்கள் வாழ்க்கையில் வேகமாக மறைந்துவிடுகின்றன. ஆனால் ஒவ்வொரு ஆண்டும்  தரும்  பாடங்கள், குதுகலங்கள்பாராட்டுகள்சந்தோஷங்கள்பயணங்கள், நட்புகள், துரோகங்கள், அவமானங்கள் அனைத்தும் ஒன்றாகத் திரண்டு, உருண்டு, முதிர்ந்து நினைவுக்கனிகளாகவும், அனுபவப்பழங்களாகவும் மாறி அடுத்த வருடத்தை அதிக உற்சாகத்தோடு எதிர்கொள்ளத் தயார் செய்துவிடுகின்றன.

2016 ஆம் ஆண்டு மறக்க முடியாத மகிழ்ச்சியான வருடமாக கடந்திருக்கிறது. எந்தவித திட்டமிடலும் இல்லாமல் வாழ்க்கை என்னை இழுத்துப் போன போக்கில்தான் பயணித்திருக்கிறேன். 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான என் சிறுகதைத் தொகுப்பு ஆறஞ்சு', 2016 ல் எனக்கு மிகப் பெரிய அடையாளத்தைத் தந்தது உண்மையில் நான் எதிர்பார்க்காத ஒன்று. நூலை வெளியிடத் தயங்கிய எனக்கு ஊக்கம் தந்து வெளியிடச் செய்த நண்பர் ஷாநவாஸை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.

ஆறஞ்சு'க்கு விமர்சனம் எழுதிய அனைத்து வாசக நண்பர்களும் எழுத்துலக ஆளுமைகளும் என் படைப்பின் மீதான கருத்துக்களை உண்மையாக முன்வைத்ததன் மூலம் எனக்கான அங்கீகாரத்தைத் தந்ததோடு மட்டுமல்லாமல்  தொடர்ந்து நான் எப்படி படைப்புலகில் இயங்கவேண்டும் என்ற பாடத்தையும் சொல்லித் தந்திருக்கிறார்கள். எழுத்தாளர் திரு.இமையம் நான் நூலை அனுப்பியவுடன் ஒரே நாளில் படித்துவிட்டு அதற்கு விமர்சனம் எழுதி அனுப்பினார். தொலைபேசியில் அழைத்து என் குறைகளைச் சரியாக சுட்டிக்காட்டினார்.  அவரது விமர்சனம் மனதுக்கு உற்சாகமாக இருந்தது.

நான் பெரிதும் மதிக்கும் என் ஆதர்ச எழுத்தாளர் திரு.ஜெயமோகனது விமர்சனம் ஆறஞ்சுக்கு கிடைத்தது என் நல்லூழ் என்றுதான் சொல்லவேண்டும். எனக்கு கிடைத்த ஆசியாகவும், அதே சமயம் அடுத்த படைப்பை இன்னும் செம்மையாக எழுதுவதற்கான சவாலாகவும் அவரது விமர்சனத்தைக் கருதுகிறேன்.  அம்ருதா இதழில்தொன்மங்களைத் தொடுதல்' என்ற கட்டுரையில் மலேசிய எழுத்தாளர் திரு.நவீன் எழுத்துலக ஜாம்பவான்களின் சிறுகதைகளோடு என் சிறுகதையையும் அடையாளப்படுத்தியது மிகுந்த சந்தோஷத்தை அளித்தது.

சிங்கையில் குழந்தைகளுக்கான தமிழ் நூல்கள் எழுதும் நபர்கள் குறைவு என்பதால் நான் ஏன் முயற்சிக்ககூடாது?” என்று தோன்றியதன் விளைவு தேசிய புத்தக மன்றமும், தேசிய கலைக் கழகமும் நடத்திய ‘Beyond Words' திட்டத்திற்கு என் கதையை அனுப்பினேன். அது தேர்ந்தெடுக்கப்பட்டு புத்தகமாக வெளியானது உண்மையில் மகிழ்ச்சியான ஒரு திருப்புமுனை. ‘கொண்டாம்மா கெண்டாமா' என்ற அந்தப் படப்புத்தகம் தொடர்ந்து குழந்தைகளுக்கான நூல்களை எழுதவேண்டும் என்ற விதையை என்னுள் ஆழமாக விதைத்துள்ளது.

இந்த வருடத்தின் மிக முக்கியமான பயணம் தோழி பாரதியோடு சென்னை புத்தக கண்காட்சிக்குச் சென்றுவந்தது. அந்த மூன்று நாட்கள் நினைவுகளையும்  வாழ்வின் இறுதி காலத்தில் அசை போட சேகரித்து வைத்துள்ளேன். பேராசிரியர் அரசு வீட்டிலுள்ள நூலகத்திற்குச் சென்றது, படைப்பாளிகள் பிரபஞ்சன், மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், லீனா மணிமேகலை, மாலன், லக்‌ஷ்மி சரவணக்குமார் இவர்களுடனான சந்திப்புகள் அருமையான அனுபவமாக அமைந்தன.

சிராங்கூன் டைம்ஸ் இணைய இதழில் 2016ல் எழுதிய கட்டுரைகள் வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றது மனதுக்கு நிறைவாக இருந்தது. இப்படியான ஒரு தளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ள சிராங்கூன் டைம்ஸ் இதழின் நிறுவனர் திரு.முஸ்தபாவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தொடர்ந்து சிங்கையைப் பற்றி சொல்லப்படாத செய்திகளைக் கட்டுரைகளாக எழுதவேண்டும் என்ற இலக்கை 2017ல் செயல்படுத்தவேண்டும்.

வல்லினம் இணைய இதழில், சிங்கை மலேசிய நாவல்களை  வாசித்துவிட்டு நூல் பார்வையை எழுதுமாறு திரு.நவீன் கேட்டபோது கரும்பு தின்னக்கூலியா? என்று உடனே ஒப்புக்கொண்டு இதுவரை நான்கு நாவல்களைப் படித்து எழுதியது திருப்தியாக உள்ளது. சிங்கை மலேசிய இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிக்க இத்தொடர் ஒரு தூண்டுகோலாக உள்ளது.

வழக்கம்போல இந்த வருடமும் இலக்கிய நிகழ்ச்சிகள், வாசகர் வட்டங்கள்,  புத்தக வெளியீடுகளுக்குப் பஞ்சமே இல்லை. எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், ஜெயமோகன், மாலன், அம்பை, வேலராமமூர்த்தி, யவனிகா ஸ்ரீராம், கோ.புண்ணியவான், இந்திரன், ஆழி.செந்தில்நாதன் ஆகியோருடனான சந்திப்புகள் இலக்கியப் பசிக்குத் தீனி போட்டன. இவ்வருடம் சிங்கையில் நடந்த காவிய முகாம் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. எழுத்தாளர்கள் சு வேணுகோபால், எம் கோபாலகிருஷ்ணன் மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களைச் சந்தித்து  கலந்துரையாடும் வாய்ப்பு கிட்டியது.

சங்க இலக்கியங்கள் படிக்க வேண்டும் என்ற வேட்கையோடு தோழிகள் இணைந்து தொடங்கிய கூட்டு வாசிப்பு நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவியது. குறுந்தொகையில் அகப்பாடல்களின் உணர்ச்சி கொந்தளிப்பில் வாசிப்பு நகர்வது புதுமையான அனுபவமாக உள்ளது. கம்பனின் மீது மூர்க்கமான காதல் தோன்றி கம்பராமாயணப் பாடல்களைப் படிக்கலாம் என்ற எண்ணத்தில் இராமயணத்திற்காக தனி வாட்ஸ்அப் குழு தொடங்கப்பட்டு நண்பர்களோடு கலந்துரையாடல் தொடங்கியது. ஓர் ஆசிரியர் மூலம் கற்கலாம் என்ற முடிவோடு வருடத்தின் இறுதியில் திரு .கி.வரதராசன் அவர்களது நான்கு கம்பராமாயண வகுப்புகளுக்குச் சென்றது கம்பனை இன்னும் நெருக்கமாக்கி உள்ளது.

2017 புதுவருடம் இனிப்பான செய்தியோடு தொடங்கி உள்ளது. சிங்கப்பூர்த்  தமிழ் எழுத்தாளர் கழகமும் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறையும் இணைந்து நடத்தும் சிங்கை படைப்பிலக்கியங்கள் பன்னாட்டுக் கருத்தரங்கத்தில்' ஆய்வுக்காக ஆறஞ்சுய நூலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான தொடக்கம். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்திற்கு  நன்றி.

படைப்பூக்கத்திற்கு மாபெரும் எதிரி வாழ்க்கைதான்' என்று எழுத்தாளர் இந்திரன் கூறினார். ஒருபுறம் அது உண்மையாக இருந்தாலும் அதே வாழ்க்கைதான் இலக்கியத்தின் அஸ்திவாரம் என்பதை மறுக்கமுடியாது. இந்தப் புத்தாண்டில் மலர இருக்கும் வாழ்க்கை படைப்பூக்கத்திற்கு எதிரியாக இல்லாமல் நண்பனாக அமையும் என்ற ஆசையோடும் நம்பிக்கையோடும் அடி எடுத்து வைக்கிறேன். கீழே உள்ள நூல்களைக் கடந்த ஆண்டு வாசித்திருக்கிறேன். இதை விட இரண்டு மடங்கு நூல்களை வாசிக்க வேண்டும் என்பதே இந்தப் புத்தாண்டின் சபதம்.

1. மழைப்பாடல் (வெண்முரசு நாவல் 2) – ஜெயமோகன்
2. வண்ணக்கடல் (வெண்முரசு நாவல் 3) – ஜெயமோகன்
3. நீலம் (வெண்முரசு நாவல் 4) – ஜெயமோகன்
4. பிரயாகை (வெண்முரசு நாவல் 5) – ஜெயமோகன்
5. தொல்குடி, சிறுகதைத் தொகுப்புநாஞ்சில்நாடன்
6. பாக்ஸ், நாவல்ஷோபா சக்தி
7. கொரில்லா, நாவல்ஷோபா சக்தி
8. மகாபாரதம், கட்டுரைகள் பிரபஞ்சன்
9. கானகன், நாவல் - லக்‌ஷ்மி சரவணக்குமார்
10. குற்றப்பரம்பரை, நாவல் வேலராமமூர்த்தி
11. எங் கதெ, நாவல்இமையம்
12. கூடுதுறை,சிறுகதைத் தொகுப்புசி.சு.செல்லப்பா
13. யாதுமாகி, நாவல்சுசீலா
14. அவதார புருஷன், கவிதைவாலி
15. இராமன் எத்தனை இராமனடி, கட்டுரைகள்.கா.பெருமாள்
16. அன்னையின் ஆணை, கட்டுரைகள்.கி.வரதராசன்
17. வானத்து வேலிகள், நாவல்ரெ.கார்த்திகேசு
18. செலாஞ்சார் அம்பாட், நாவல்கோ.புண்ணியவான்
19. குருவிக்கோட்டம், நாவல்மா.இளங்கண்ணன்
20. சங்கச்சித்திரங்கள், கட்டுரைகள்ஜெயமோகன்
21. இவர்கள் இருந்தார்கள், கட்டுரைகள்ஜெயமோகன்
22. எழுதியவனைக் கண்டுபிடித்தல், கேள்வி-பதில்- ஜெயமோகன்
23. கூந்தல், சிறுகதைத் தொகுப்புஜெயமோகன்
24. வெண்கடல், சிறுகதைத் தொகுப்புஜெயமோகன்
25. அறம், சிறுகதைத் தொகுப்புஜெயமோகன் (மீள்)
26. நாடு விட்டு நாடு, தன்வரலாறுமுத்தம்மாள் பழனிச்சாமி
27. இராவணன் மைந்தர்கள், கட்டுரைகள்தெ ஞானசுந்தரம்
28. பெண் ஏன் அடிமையானாள், கட்டுரைகள்பெரியார்
29. ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு, சிறுகதைத் தொகுப்புஅம்பை
30. அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு, சிறுகதைத் தொகுப்புஅம்பை
31. பூமிக்குள் ஓடுகிறது நதி, சிறுகதைத் தொகுப்புசு.வேணுகோபால்
32. திசையெல்லாம் நெருஞ்சி, குறுநாவல்கள் -  சு.வேணுகோபால்
33. ஆட்டம், நாவல்சு.வேணுகோபால்
34. பிறிதொரு நதிக்கரை, சிறுகதைத் தொகுப்புஎம்.கோபாலகிருஷ்ணன்
35. குட்டி இளவரசன், நாவல் அந்துவான் செய்த எக்ச்பெரி
36. ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது, கட்டுரைகள்.தமிழ்ச்செல்வன்

நூல்களை வாசிப்பதலோ, படைப்பதாலோ இலக்கியத் துறையில் இருப்பவர்கள் ஒன்றும் புனிதமானவர்கள் கிடையாது. மற்ற எல்லா துறைகளையும் போல இங்குள்ளவர்களும் அற்பமானவர்கள், பலவீனமானவர்கள் என்பதை கடந்துபோன ஆண்டு சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறது. எதிரிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். ஆனால் போலி நண்பர்களை அடையாளம் கண்டுகொள்வதுதான் சிரமம். ஆனால் 2016 ஆம் ஆண்டு நிறைய போலி நண்பர்களை எனக்குச் சுட்டிகாட்டி உதவியுள்ளது. இது போன்ற போலி நண்பர்கள்தான் என் வினையூக்கிகள். அதற்காகவே அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும் எனத் தோன்றுகிறது.

2017ஆம் ஆண்டே வருக! நீ எனக்கு என்னென்ன தர காத்திருக்கிறாயோ எனக்குத் தெரியாது. ஆனால் அவை எதுவாக இருந்தாலும் துணிவோடும் மகிழ்வோடும் எதிர்கொள்ளும் பக்குவத்தை வாசிப்பும் இலக்கியமும் எனக்குத் தரும் என்ற நம்பிக்கையோடு நான் இருக்கிறேன்.