Thursday, January 4, 2018

 2017 ஆம் ஆண்டின் நினைவலைகள்
ஒவ்வொரு வருடம் முடியும் போதும் காலம் நம்மிடமிருந்து சிலவற்றைப் பறித்துவிட்டும் சிலவற்றை கொடுத்துவிட்டும் விடைபெறுகிறது. ஆண்டின் இறுதியில் மிஞ்சியிருக்கும் அனுபவங்களும் நினைவுகளும் புது வருடத்தை இன்னும் அதீத நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் பக்குவத்தை அளித்துவிடுகின்றன. ஒரு பக்கம் குடும்பத்திற்கான நேரம் மறுபக்கம் இலக்கியம், வாசிப்பு, நண்பர்களுடனான உரையாடல், பயணங்கள் ஆகியவற்றுக்கான நேரம் என 2017 ஆம் ஆண்டின் 365 நாட்களும் என்னை சுறுசுறுப்பாக இயங்க வைத்துள்ளன.
சென்னைப் பல்கலைக்கழகமும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் இணைந்து நடத்திய சிங்கப்பூர் படைப்பிலக்கியங்கள் – பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் எனது சிறுகதைத் தொகுப்பு ஆறஞ்சு ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மகிழ்வான செய்தியோடு 2017 ஆம் ஆண்டு தொடங்கியது.
ஆறஞ்சு சிறுகதைத் தொகுப்பு எனக்கு ஒரு அடையாளத்தையும் சிங்கை எழுத்தாளர் என்ற அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறது என்று துணிந்து சொல்லலாம். சிங்கப்பூர் கல்வி அமைச்சு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த நானும் ஒரு படைப்பாளி என்ற சிறுகதைப் பட்டறையில் பயிற்றுவிப்பாளராக எனக்கு வாய்ப்பு கிடைத்தது அந்த அடையாளத்தால்தான் என நினைக்கிறேன். கற்பனைத் திறன் அதிகமிருந்தும் மொழிவளம் இல்லாததால் மாணவர்கள் சிறுகதை எழுத திணறுகிறார்கள் என்பதை இந்தப் பட்டறையின் வழி உணர முடிந்தது.        
ஆறஞ்சு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு இரண்டு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் இலக்கிய நண்பர்களிடம் அடிக்கடி நான் எதிர்கொள்ளும் கேள்வி அடுத்த நூல் எப்போது?” என்பதுதான். எழுத்தாளர் ஜெயமோகனின் சிங்கை வருகையும், அவரது விமர்சனங்களும் ஏற்படுத்திய தாக்கம் என்னுள் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியதால் அதற்கு விடை தேடியே பொழுதுகள் கழிந்துவிட்டன. புனைவெழுத்தை வாசிப்பதில் இருந்த ஆர்வம்  எழுதுவதில் சற்று தணிந்திருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டின் இறுதியில் நான் எழுதிய விலக்கு சிறுகதை நெருங்கிய நண்பர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறைவாக எழுதினாலும் சரியாக எழுதவேண்டும் என்ற எண்ணத்தை அந்தச் சிறுகதை உருவாக்கி உள்ளது.         
அபுனைவு எழுதுவதில் ஏற்பட்ட மையல் தொடர கடந்த வருடம் தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழில் நான்கு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். வல்லினம் இணைய இதழில் ஐந்து நூல்களைப் பற்றிய என் பார்வையைக் கட்டுரையாக எழுதியிருக்கிறேன். இப்படி நூல் பார்வை எழுதுவது சிங்கை-மலேசிய இலக்கியப் பரப்பைச் சரியாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்ள வழி வகுத்துள்ளது. இதற்காக நண்பர் நவீனுக்கும் வல்லினம் குழுவினருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.        
வல்லினம் ஏற்பாட்டில் கோலாலம்பூரில் நடந்த இரு நாட்கள் குறுநாவல் பட்டறையும் எழுத்தாளர்கள் திரு ஜெயமோகன், திரு நாஞ்சில் நாடன் மற்றும் வல்லினம் நண்பர்களுடனான சந்திப்பும் நவீன இலக்கியத்தைப் பற்றிய எனது பார்வையை விசாலமாக்க உசவி புரிந்தன. வல்லினம் 100 களஞ்சியத்தில் எனது கட்டுரையும் இடம் பெற்றது கடந்த ஆண்டின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று எனலாம்.
அகநாழிகை திரு பொன்.வாசுதேவன் தொகுத்து வெளியிட்ட சிங்கப்பூர் சிறுகதைத் தொகுப்பான அக்கரைப் பச்சை நூலில் எனது விரல் சிறுகதையும் இடம்பெற்றது மற்றொரு மகிழ்வான தருணம் எனலாம். மற்றொரு சந்தோஷமான நிகழ்வாக என் மனதுக்கு நெருக்கமான வாசகர் வட்டம் முறைப்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பாக மாறியதைச் சொல்லலாம்.
திரு யூமா வாசுகி, திரு மாலன், திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், திரு பொன்.வாசுதேவன், திரு ரமேஷ் வைத்தியா, கவிஞர் லீனா மணிமேகலை, திரு எஸ் ராமகிருஷ்ணன், கவிஞர் குட்டி ரேவதி, திரு லக்ஷ்மி சரவணகுமார், விஷ்ணுபுரம் விருது பெற்ற மலேசியப் படைப்பாளி திரு சீ.முத்துசாமி ஆகியோருடனான சந்திப்புகள் 2017 ஆம் ஆண்டை மறக்க முடியாத வருடமாக மாற்றிவிட்டன.   
குழந்தைகளுக்கான இரண்டு படப்புத்தகங்களை எழுதிய ஓர் எழுத்தாளராக 2017 ஆம் ஆண்டில் மூன்று நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பேறு பெற்றேன். முதலாவதாக தேசிய கலைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நடந்த WORDS GO ROUND’ நிகழ்வின் வழியாக மூன்று தொடக்கநிலைப் பள்ளிகளுக்குச் சென்று எனது புத்தகங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். இரண்டாவதாக தேசிய நூலக வாரியம் ஏற்பாடு செய்திருந்த பட்டறையில் கதைசொல்லல், விளையாட்டு என குழந்தைகளோடு குழந்தையாக மாறிப் போனேன். மூன்றாவதாக நண்பர் நீதி பாண்டியின் முயற்சியால் Jai Learning Hub’ ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கதைசொல்லல் நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 
மேடைப் பேச்சாளராக 2017 ஆம் ஆண்டில் மூன்று பட்டிமன்றங்களில் பேசி இருக்கிறேன். இதுபோன்ற பட்டிமன்றங்களில் பேசுவது சில சமயங்களில் சலிப்பையும் அலுப்பையும் தந்தாலும் பேசுபொருளை விட்டு விலகாமல் எனது கருத்தை எதிரில் இருப்பவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்கும் கலையைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள இந்த மேடைகள்தான் எனக்குத் தளமாக இருக்கின்றன. If you want to be a good speaker, know your audience first”, என்பதை ஒரு பேச்சாளராக நான் விடாப்பிடியாக பின்பற்றி வருகிறேன். எனது அறிவுஜீவித்தனத்தை வெளிக்காட்டுவதன் வழியாக   ஏற்பாட்டாளர்களையும் பார்வையாளர்களையும் ஏமாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை.        
குடும்பத்தோடு சென்ற பாலி, அங்கோர்வாட் பயணங்கள் மீண்டும்  வரலாற்று சிறப்பு மிக்க அவ்விடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற வேட்கையை உருவாக்கி உள்ளன. நண்பர்கள் பாரதி, சுஜா, ராம்சந்தர் ஆகியோருடன் மலேசியாவின் கெடா மாநிலத்திற்குச் சென்று வந்தது மறக்கவே முடியாத அனுபவமாக அமைந்தது. நண்பர் பாலமுருகன் இல்லாமல் இப்பயணம் சாத்தியமாகி இருக்காது. அவருக்கு நன்றிகள் பல.
டிசம்பர் மாத தொடக்கத்தில் தோழி பாரதியோடு தஞ்சை மற்றும் புதுக்கோட்டை  மாவட்டத்தில் உள்ள கற்றளிகள், குடைவரைக் கோயில்கள சிலவற்றைக்  காணும் பாக்கியம் கிடைத்தது. பயணத்தைத் திட்டமிட பல குறிப்புகள் வழங்கி உதவி புரிந்தார் நண்பர் பொன்.மகாலிங்கம். பயணத்தில் துணையாக வந்திருந்து அரிய பல தகவல்களை வழங்கி மனம் நெகிழச் செய்த நண்பர்கள் திருச்சி பார்த்தி, முருகன் நடராஜன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் செல்வராஜ் ஐயா ஆகியோருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். வாசிப்பின் வழியாக தெரிந்துகொள்வதைக் காட்டிலும் இது போன்ற பயணங்கள் வழியாக வரலாற்றையும் கலையையும் மிகவும் நெருக்கமாக ரசிக்கவும் உணர்வுபூர்வமாக உள்வாங்கவும் முடிகிறது.  ஆப்பே கடையில் நடந்த 236 ஆவது மேசை உரையாடல்" ஆப்பே கடையில் நடந்த 236 ஆவது மேசை உரையாடல்"
குடும்ப நண்பர் ஒருவரின் திடீர் மரணம் வாழ்வைப் பற்றிய பெரும் பதற்றத்தைக் கொடுத்துள்ளது. மிஞ்சியிருக்கும் குறைந்த இந்த வாழ்நாளில் எனக்காகவும் மற்றவர்களுக்காகவும் செய்ய வேண்டியவற்றை விரைந்து செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அந்த மரணம் எனக்குள் விதைத்துள்ளது.      
ஆண்டு இறுதியில் சிங்கை வசந்தம் தொலைக்காட்சியில் எனது கதை குறும்படமாக எடுக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஒளிபரப்பப்பட்டது 2017 ஆம் ஆண்டை நிறைவுடன் முடித்து வைத்துள்ளது.
எது அவசியம்? எல்லாம் அவ்வளவு தெளிவாகத் தெரிந்து விடுவதில்லை. ஆனால், அந்தந்தச் சமயங்களுக்கு என்ன செய்கிறோமோ அதெல்லாம் அவசியம். பிடித்தமில்லாதவைகளைக் கூடச் செய்கிறோம். அதைச் செய்து பிடித்தமான, அவசியமான, பெரியது ஒன்றை அடைய”. இவை கடந்த வருடம் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனின் சொற்கள். நானும் கடந்த வருடத்தில் இப்படித்தான் இருந்திருக்கிறேனோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கீழே உள்ளவை கடந்த ஆண்டில் வாசித்த நூல்கள். இன்னும் வாசிக்க வேண்டியவை புத்தக அலமாரியில் புத்தம் புதிதாக ஏக்கத்தோடு என் தொடுகைக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. இந்த வருடம் உங்களை அணைத்துக்கொள்வேன் என்று நானும் காதலோடு அவற்றிடம் சொல்லி இருக்கிறேன். சிங்கை நூலகத்தில் கிடைக்காத மலேசிய எழுத்தாளர்களின் நூல்களை தோழி விஜயலெட்சுமி அனுப்பி பெரும் உதவி புரிந்துள்ளார். அவருக்கு பல கோடி நன்றிகள். அவைகளும் இப்போது வாசிப்பு பட்டியலில் இணைந்துள்ளன.  
1.       வேர்கள் நூர்ஜஹான் சுலைமான்
2.       பெர்னுலியின் பேய்கள் சித்துராஜ் பொன்ராஜ்
3.       இராமன் வரும் வரை காத்திரு வெங்கட் சம்பத்
4.       ஆப்பே கடையில் நிகழ்ந்த 236 ஆவது மேசை உரையாடல் பாலமுருகன்
5.       கம்பனின் அம்பறாத் தூணி நாஞ்சில் நாடன்
6.       மாதொரு பாகன்பெருமாள் முருகன்
7.       திரிந்தலையும் திணைகள்ஜெயந்தி சங்கர்
8.       வெள்ளை யானை ஜெயமோகன்
9.       பால்யகால சகி பஷீர்
10.   மெனிஞ்சியோமா கணேச குமாரன்
11.   ஊமைச்செந்நாய் ஜெயமோகன்
12.   நிழல் இளவரசி இந்து சுந்தரேசன் (தமிழாக்கம் மதுரம் சுந்தரேசன்)
13.   மணல் (தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல்கள்) – அசோகமித்திரன்
14.   இன்ஸ்பெக்டர் செண்பகராமன் (குறுநாவல்கள்) - அசோகமித்திரன்
15.   சிதைந்த கூடு தாகூர் (தமிழாக்கம் திலகவதி)
16.   இரா முருகன் குறுநாவல்கள்
17.   அக்கரைப் பச்சைபொன் வாசுதேவன்
18.   அம்மா வந்தாள்தி ஜானகிராமன்
19.   தொலைந்து போனவர்கள்சா கந்தசாமி
20.   சிவகங்கை முதல் சிசங்காங் வரை ரெங்கசாமி
21.   கருக்கு பாமா
22.   வைகறைப் பூக்கள்மா இளங்கண்ணன்
23.   வாடிவாசல்சி சு செல்லப்பா
24.   1084 ன் அம்மாமகாஸ்வேதா தேவி
25.   நிமித்தம்எஸ் ராமகிருஷ்ணன்
26.   பதின்எஸ் ராமகிருஷ்ணன்
2018 ஆம் ஆண்டில் எந்தவித பெரிய திட்டமிடலும் இல்லை. வாழ்வை அதன் போக்கில் வாழ்ந்து கொண்டாட வேண்டியதுதான். என்னுடன் இணைந்து பயணிக்க சனி பகவானும் வந்துள்ளார். ஆமாம். ஏழரை சனி ஆரம்பித்துள்ளது. பாவம் அவர். நான் படுத்தப்போகும் பாட்டில் நான் இவளைப் பிடித்தேனா அல்லது இவள் என்னைப் பிடித்திருக்கிறாளா?” என்று மனுஷன் கன்ஃபூயூஸ் ஆகப்போறதை நினைத்தால் இப்போதே ஜாலியாக இருக்கிறது. என் மீது கடல் அளவு நேசம் கொண்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் மானசீக நன்றிகளும் புத்தாண்டு வாழ்த்துகளும்.  

No comments:

Post a Comment