Wednesday, September 5, 2018


எருது (உலக மொழிபெயர்ப்பு சிறுகதைகள்)

தொகுப்பும் மொழியாக்கமும் - கார்த்திகைப் பாண்டியன்

எதிர் வெளியீடு , டிசம்பர் 2014

அம்புரோஸ் பியர்ஸ்  (அமெரிக்கா) - சட்டமிடப்பட்ட சாளரம்

மனைவி இறந்துவிட்டாளென தவறாக கருதிவிடும் கணவனின் கதை. அசோகமித்திரனின் பிரயாணம்’, சரவண கார்த்திகேயனின் இறுதி இரவுஎன்ற இரண்டு சிறுகதைகளையும் நினைவூட்டியது.

ரைஸ் ஹ்யூக்ஸ் (வேல்ஸ்) – கல்லறை சாட்சியம்

உலகில் மனிதன் தனியன் கிடையாது என்பதையும் இயற்கையோடும் மற்ற உயிரினங்களோடும் மனிதன் கொண்டுள்ள உறவையும் பேசும் கதை. இந்த நீண்ட உறவு சுழற்சியில் ஒரு சிறு உயிரினத்திற்கு ஏற்படும் பாதிப்பு தொடர் சங்கிலி போல நீண்டு மனிதனை எப்படி பாதிக்கிறது என்பதை கூறும் கதை. குழந்தை கதை போல எழுதப்பட்ட பெரியவர்களுக்கான கதை.

கிரகாம் கிரீன் (இங்கிலாந்து) – நீலப் படம்

இளம் வயதில் விபச்சாரியான தனது காதலிக்கு உதவும் பொருட்டு நீலப்படத்தில் நடிக்கும் கதாநாயகன். பின்பு தனது மனைவியுடன் அப்படத்தைப் பார்க்க நேரிட அதன் பிறகான மனைவியின் மனநிலையையும் அவனது மனநிலையையும் பேசும் கதை.

டோனி மாரிசன் (அமெரிக்கா) – வசன கவிதை

நாவலாசிரியரான டோனி மாரிசன் எழுதி வெளியான ஒரே  சிறுகதை இது. சற்று நீண்ட கதை. இருவேறு இனங்களைச் சார்ந்த அதாவது கறுப்பினப் பெண்ணிற்கும் வெள்ளையினப் பெண்ணுக்கும் இடையே உள்ள நட்பையும் அவர்களது வாழ்வையும் பேசும் கதை.

யூசுப் இதிரிஸ் (எகிப்து) சதையாலான வீடு

ஒரு விதவைத் தாய். வயது வந்த மூன்று பெண்கள். ஒரு வீடு. ஒரு கண் பார்வை அற்ற இளைஞன்.  தாயை மணக்கும் அந்த இளைஞனோடு பெண்களும் படுக்கையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். மௌனமாய் வழிந்தோடும் பெண்களின் காமத்தைப் பேசும் கதை.

லூயிசா வெலன்சுயேலா (அர்ஜெண்டினா) கொலை செய்ய

ஒரு கொலைகாரனைச் சந்திக்க நேரிடும் இரு சகோதரிகள். அவன் தங்களையும் கொலைசெய்து விடுவான் என அஞ்சுவதும் அப்படியான அச்சத்தை கற்பனையில் வளர்த்தெடுத்து இறுதியில் அவனைக் கொல்ல இவர்கள் தயாராவதைச் சொல்லும் கதை.

ஹெர்மன் ஹெஸ்ஸே (ஜெர்மனி)  கவிஞன்

ஒரு கவிஞன் லௌகீக விஷயத்திலிருந்து விலகி தன் மனதின் அகக்கொந்தளிப்புகளை கவிதையில் வெளிப்படுத்தி பரிபூரணத்தைக் கண்டடைய வேண்டும் என்ற விருப்பத்தில் வீட்டை விட்டு வெளியேறி ஒரு குருவைக் கண்டடைந்து அவரிடம் இசைக்கருவிகளை கற்றுத் தேர்ந்து காலத்தை வென்று நிற்பதை காட்டும் கதை.

எட்கர் கெரேத் (இஸ்ரேல்)  டாட்

அழவைக்கவும் சிரிக்கவைக்கவும் கூடிய வகையில் கதை எழுதக்கூடிய தன் நண்பனை பெண்களைத் தன் படுக்கைக்கு வரவைக்கும் வகையில் ஒரு கதை எழுதுமாறு கேட்கிறான் கதைநாயகன். தனிமையால் இறந்து கொண்டிருக்கிறேன் என்று கூறும் அவனது துயர் போக்கும் வகையில் ஒரு சாதாரண கதை எழுத முடியாத படைப்பாளி இறுதியில் உனக்காக என்னால் அது போலவும் ஒரு கதை எழுத முடியும் என்று கூறுகிறான். இலக்கியம் வாழ்வின் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்வதல்ல என்ற நோக்கில் இக்கதையை அணுகலாம்.

எட்மண்டோ பாஸ் சோல்டன் (பொலிவியா) வால்வோ

பட்டமளிப்பு விழாவிற்காக பக்கத்து நகரத்துக்குச் செல்லும் மாணவர் குழுவுக்கும் அந்த ஊரில் உள்ள குழுவுக்கும் ஏற்படும் தகராறு. ஒரு சிறு வயதுப் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்படுவது. குழுவில் ஒருவன் இறந்து போவது. சாதாரணமாக ஆரம்பிக்கும் ஒரு பிரச்சனை எப்படி தீவிரமடைகிறது என்பதைப் பேசும் கதை.



மோ யான் (சீனா)  எருது

மோ யான் என்பது புனைப் பெயர். இவரது இயற்பெயர் குவான் மோயி. இவரது இளம்பருவத்தில் சீனாவில் கலாச்சார புரட்சி காலத்தில் மனதில் உள்ளதை யாரிடமும் பகிர கொள்ள கூடாது என்பதற்காக அவரது அம்மா பேசாதேஎன்று எப்போதும் சொல்லிக் கொண்டிருந்ததால் பேசாதே’ (மோ யான்) என்பதையே தனது புனைப்பெயராக மாற்றிக்கொண்டார்.

ஒரு பண்பாட்டுச் சூழல் மதிப்பீடுகளை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதை சொல்லும் கதை. தனது மகனது முன்னால் தன்னை அவமதிக்கும் ஒருவனைத் தந்தை ஒரு மிருகம் போல மாறித் தாக்கும் கதை. இதே கதை ஆசியா என்ற களத்திலல்லாமல் அமெரிக்க, ஐரோப்பிய களத்தில் சொல்லப்பட்டிருந்தால் தோற்றிருக்குமோ என்று எண்ண வைத்த கதை. சற்று நீண்ட கதை. ஆனால் கதையில் தரப்பட்டுள்ள நுட்பமான புறத்தகவல்கள் கதைக்குப் பெரிய பலமாய் விளங்குகின்றன.

இது போன்ற தொகுப்புகளில் ஒரு சில கதைகளாவது சுமார் என்று சொல்லும் வகையில் இருக்கும். விதிவிலக்காக இத்தொகுப்பில் அனைத்தும் சிறந்த கதைகளாக உள்ளன. இப்படி சிறந்த பத்து உலகச் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து தனது செம்மையான மொழியாக்கத்தின் வழியாக இத்தொகுப்பைக் கொடுத்துள்ள எழுத்தாளர் திரு கார்த்திகைப் பாண்டியன் பாராட்டுக்குரியவர்.       




No comments:

Post a Comment