பால்கனிகள் - சு வேணுகோபால்
கிட்ணா என்கிற திருநங்கையின் கதை. இப்படிச் சொல்வது சரியா என தெரியவில்லை. துரதிர்ஷ்டவசமாய் ஆணின் உடலோடு பிறக்க
நேரிட்ட ஒரு பெண்ணின் கதை எனச் சொல்வதுதான் சரியாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் LGBT
எனக்
குறிப்பிடப்படும் Lesbian, Gay,
Bi-Sexual, Transgender ஆகியோரைப் பற்றிய சமூகப் புரிதல் ஓரளவு அதிகரித்திருந்தாலும் கூட நம் குடும்பத்தில்
ஒருவர் அப்படி இருந்துவிட்டால் அவரைப் புரிந்துகொள்ள மறுப்பதையும் புறக்கணித்து ஒதுக்குவதையும்
தொடர்ந்து நாம் செய்து கொண்டுதான் இருக்கிறோமென்பதை இந்நாவல் பேசுகிறது. கிட்ணாவின் சின்னம்மா மகளான திவ்யாவின்
பார்வையில் கதை சொல்லப்பட்டுள்ளது.
கிட்ணாவுக்குள் பெண்மை மெல்ல, மெல்ல மலரும் தருணங்களைப் பார்க்கும் குடும்ப
உறுப்பினர்களிடையே பதற்றமும் பயமும் தொற்றிக்கொள்கிறது. சமூகத்தின் எள்ளலுக்குப் பயந்து ஆண் உறவுகள்
குறிப்பாகத் தந்தையும் சகோதரன் சுதாகரும் கிட்ணாவை வசை பாடியும் அடித்தும் துன்புறுத்துகிறார்கள்.
ஆனால் கிட்ணாவைச் சுற்றியுள்ள பெண் உறவுகளோ
தங்களால் இயன்றவரை அவனை ஆதுரத்தோடு அரவணைக்கின்றன. சுதாகர் அடிக்க வரும் தருணங்களில் அவனைத்
தடுத்து கிட்ணாவைக் காப்பாற்றும் சுதாகரின் மனைவி மஞ்சுளா, சின்னம்மா, சரண்யா, திவ்யா இவர்களோடு கிட்ணா கண் கலங்கி தனது
நிலையைச் சொல்லும்போது அவனுக்காக கண்ணீர்விடும் பெண்கள் என பெண் உலகம் கிட்ணாவைக் கருணையோடு
பார்க்கிறது. ஆண் ஆதிக்க உலகில் தங்களைப் போன்றே வஞ்சிகப்பட்ட ஒரு பாலினம் என்ற அடிப்படையில்
இந்தக் கருணை தோன்றியிருக்கலாம்.
பக்கவாதம் வந்து படுக்கையாக இருக்கும்
கிட்ணாவின் தாய் தனக்கு அவன் செய்யும் சேவைகளைப் பார்த்து மனம் குளிர்ந்து போகிறாள். கிட்ணா அவளைக் குளிப்பாட்டும் தருணங்களில்
சிறு தயக்கமுமின்றி மிக இயல்பாக நிர்வாணமாய் அமர முடிந்த அவளால் கிட்ணாவிற்குப் பதிலாக
சுதாகரால் நீராட்டப்பட்டிருந்தால் அப்படி அமர முடியுமா என கேள்வி எழுகிறது. “கிட்ணன் எனக்கு மகள்தான். அவனப் பெத்ததுக்கு நான் எவ்வளவு சந்தோஷப்படுகிறேன்
தெரியுமா?” என்று அவள் கூறுவது கிட்ணாவின் பெண்மையை அவள் உணர்ந்ததால்தான் எனக் கூறலாம்.
பால்குடி மறக்காத குழந்தையை வீட்டில் தனது
தாயிடம் விட்டுவிட்டு வேலைக்குப் போய் திரும்பும் திவ்யா தனது குழந்தைக்குக் கிட்ணா
பாலூட்டுவதைப் பார்க்க நேரிடுகிறது. அதுவரை அவனது பெண்மையை அரைகுறையாகப் புரிந்து வைத்திருக்கும் அவள் பாலூறாத
குறுமுலைகளில் பிரவாகமாய்ப் பெருகி ஓடும் அவனது தாய்மையைப் பார்த்த பின்புதான் அவனுள்
பேருருவாய் வளர்ந்து நிற்கும் பெண்மையை முற்றாக உணர்கிறாள்.
“என்னை நாசமாக்குன நாய்களா. நீ என்ன நொட்டுனப்போ நல்லா இருந்தேனடா. எடுபட்ட பயலே” என்று கணேசனைப் பார்த்து கிட்ணா கத்தும்
காட்சியின் வழியாக அவனது இருப்பு தங்களுக்குப் பெருத்த அவமானமாய் உணரும் உறவுகள் திருட்டுத்தனமாய்
அவனைத் தங்களது இச்சைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டதை அறிய நேரிடும்போது மனிதனின் குரூரமான
கீழ்மை வெளிப்படுகிறது.
குடும்பத்தில் மற்ற அனைவரையும் விட கிட்ணாவின்
மீது அன்பு கொண்டிருப்பவளும் அவனைப் புரிந்து கொள்பவளுமான திவ்யா கூட ஓரிடத்தில் ‘இவனோடு சென்றால் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இவனை ஏற்கனவே தெரிந்தவர்கள் நெருங்கி வந்து
துணிந்து தொட்டால்?’ என்று எண்ணுமிடம் கிட்ணா போன்றவர்களைப் பற்றி பதிந்துள்ள பொதுப்புத்தியின்
வெளிப்பாடு என்பது தெளிவாகிறது.
கோவையில் இரண்டு சேட்டு குழந்தைகளைப் பணத்திற்காக
கடத்திக் கொன்று கால்வாயில் வீசிய நிகழ்ச்சி இந்நாவலில் சற்று விலாவாரியாக சொல்லப்பட்டுள்ளது. சு.வேணுகோபால் சிறுகதையின் வடிவத்தில்
பெரிதாக கவனம் செலுத்துபவரல்ல. தனது மனதில் தோன்றுவதைக் கட்டற்ற முறையில் சொல்லிச்செல்பவர். அப்படித்தான் இந்த கோவை நிகழ்வும் என்று
கருத இடமிருந்தாலும் வேறொரு கோணத்திலும் இதை அணுகலாம். நான் அறிந்தவரையில் மூன்றாம் பாலினத்தவரால்
நிகழ்த்தப்பட்ட சமூக குற்றங்கள் மிக குறைவு. அவமானங்களையும் நிராகரிப்புகளையும் தொடர்ந்து
சந்திந்தாலும் கூட சமூகத்தைப் பழிவாங்குகிறேன் என்ற பெயரில் இவர்கள் வன்முறையான காரியங்களைச்
செய்வது குறைவுதான். மனப் பிறழ்வின் காரணமாக இரண்டு குழந்தைகளைக் கொல்லத் துணியும் ஆண் உடலோடு
பிறந்த ஆண்களையும் பெண் உடலோடு பிறந்த பெண்களையும் அங்கீகரிக்கும் இச்சமூகம் பிறப்பின்
பிறழ்வாக ஆண் உடலோடு பிறந்த பெண்களை அவமதிப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியை
எழுப்பத்தான் சு வேணுகோபால் கோவை நிகழ்வை நாவலுக்குள் கொண்டு வந்தார் என எண்ணுகிறேன்.
குழந்தைக்குத் தாய்ப்பால் தரவேண்டாமென்று
கூறும் திவ்யாவின் தாய், பெற்ற தாயைத் திட்டிக்கொண்டே தாய்ப்பாலை வீணாகப் பீச்சிவிடும் திவ்யா, பால் வராத முலையை குழந்தைக்குத் தரும்
கிட்ணா என மூன்று வகையான தாய்களை அடையாளம் காட்டுவதன் வழியாக தாய்மையின் வித்தியாசமான
கோணங்களை காட்டுகிறது இந்நாவல்.
ஏற்கனவே ஒடுக்கப்பட்டுள்ள இனமாக இருக்கும்
பெண்ணைத் தன்னுள் சுமப்பதால்தான் திருநங்கைகளுக்கு இச்சமூகத்தில் மரியாதை இல்லையா? இவர்களோடு ஒப்பிடுகையில் பெண் உடலிலிருக்கும்
ஆண்களான திருநம்பிகளுக்கான மரியாதை எப்படி இருக்கிறது? ஒரு பெண் என்றால் ஏளனமாய்ப் பார்க்கும் சமூகத்தில் பெண்மையில் தாய்மை என்ற
புனிதத்தை ஏற்றினால்தான் மூன்றாம் பாலினத்தவருக்கான மரியாதையும் சமூக அந்தஸ்தும் கிடைக்கும்
என்ற சூழலில் நாவலின் இறுதியில் கிட்ணா ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்ப்பதாக காட்ட
வேண்டிய நிர்பந்தம் நாவலாசிரியருக்கு ஏற்பட்டதா? கிட்ணா ஒரு பெண்ணாகத் தனியாக அவளுக்கான
வாழ்க்கையை வாழ்கிறாள் என்று நாவல் முடிந்திருந்தால் நாவலின் தாக்கம் எப்படி இருந்திருக்கும்? இப்படி பல கேள்விகள் எனக்குள் எழுகின்றன.
‘பறந்து செல்ல நினைத்து விட்டேன்
எனக்கும் சிறகில்லையே’
என்று நாவலில் கிட்ணா குரல் கனிந்து உருகிப்
பாடுகிறான். வாழ்க்கை முழுவதும் கிட்ணாவைப் போன்றவர்கள் பெண் பறவை என்ற அடையாளத்தோடும்
சுயத்தோடும் சுதந்திரமாய் பறக்க விரும்பினாலும் சமூகமென்ற வல்லூறு அவர்களது சிறகுகளைப்
பிய்த்தெறிவது தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது.
No comments:
Post a Comment