2018 ஆம் ஆண்டின் நிகழ்வுகளும் மகிழ்வுகளும்
ஒவ்வொரு ஆண்டும் வயதை மட்டும் கூட்டுவதில்லை.
அனுபவம், சகிப்புத்தன்மை, வாழ்க்கையின் மீதான நம்பிக்கை, சக மனிதர்கள் மீதான நேசம் இப்படியாக பலவற்றை அதிகப்படுத்திவிட்டுதான்
செல்கிறது. 2018 ஆம் ஆண்டும் அதற்கு
விதிவிலக்கல்ல. 2018 எனக்கு மற்றுமொரு முக்கியமான ஆண்டு. எனது
நான்காவது நூலான ‘சிறுகாட்டுச் சுனை’ வெளியீடு
கண்டதால்தான் அந்த முக்கியத்துவம்.
‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத
இதழில் சிங்கப்பூரைப் பற்றி நான் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளை நூலாக கொண்டு வரலாம்
என்ற எண்ணம் 2017 ஆம் ஆண்டிலேயே
உதித்துவிட்டாலும் வழக்கமான சோம்பேறித்தனத்தாலும் இன்ன பிற வேலைகளாலும் அத்திட்டத்தைத்
தள்ளி போட்டுக் கொண்டே வந்தேன். 2018 ஆம் ஆண்டு
பிறந்தவுடனேயே நண்பர் ஷாநவாஸ் “இந்த வருடம் வாசகர் வட்ட ஆண்டு விழாவில் உங்க நூலை
வெளியிடுறிங்க” என்று அன்பு கட்டளை போட்டார். அவரது உந்துதல்தான்
எனது முதல் நூல் வெளியீட்டிற்கும் காரணமாகும்.
நான்கு புதிய கட்டுரைகள் எழுத வேண்டி இருந்ததால்
அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். எனது முதல் நூல் சொந்த பதிப்பாக இருந்ததால் இந்த
முறை பதிப்பகத்தார் மூலம் கொண்டு வரலாமென்ற எண்ணத்தில் தமிழகத்திலுள்ள இரண்டு
பதிப்பகங்களின் உதவியை நாடினேன். நாட்கள் குறைவாக இருந்த காரணத்தால் ஒரு பெரிய
பதிப்பகம் முடியாது என கூறிவிட்டார்கள். பிழை என்னுடையதுதான். மற்றொருவரோ முடியும்,
முடியாது என்று ஒரு பதில் கூட போடவில்லை. இறுதியில் இதையும் சொந்த பதிப்பாகவே
கொண்டு வரலாம் என்ற தீர்மானத்துடன் தமிழ் அலை பதிப்பகத்தார் உதவியை நாடினேன்.
நண்பர் இசாக் நான் கடைசி தேரத்தில் செய்த அட்டூழியங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டு
மிகத் திறம்படவும் நேர்த்தியாகவும் என் நூலை அழகான வண்ணப் படங்களுடன் அச்சிட்டுக்
கொடுத்தார்.
மார்ச் மூன்றாம் ஆம் தேதி சிறப்பாக நடைபெற்ற
வாசகர் வட்ட ஆண்டு விழாவில் எழுத்தாளர் சாரு நிவேதிதா பதினெட்டு கட்டுரைகள் கொண்ட ‘சிறுகாட்டுச்
சுனை’ நூலை வெளியிட நண்பர் ஷாநவாஸ் முதல் பிரதியை
பெற்றுக்கொண்டது வாழ்வின் அற்புதமாக தருணங்களில் ஒன்று. நூலை அறிமுகம் செய்த நண்பர்
மாமன்னனின் உரை அனைவராலும் பாராட்டப்பட்டது மனதுக்கு நிறைவாக இருந்தது. ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ 25 இதழ்கள் நிறைவு
பெற்றதை முன்னிட்டு வெளியான ‘காலச்சிறகு’ தொகுப்பில் எனது
சிறுகதை ‘விலக்கு’ இடம்பெற்றது
இரட்டிப்பு மகிழ்ச்சி தந்தது.
இந்த வருடத்தின் மிகப் பெரிய குதூகலமாக அமைந்தது
இலங்கைப் பயணம். எனது குடும்பமும் தோழி பாரதி மூர்த்தியப்பனும் அவரது மகள்களும்
இணைந்து சென்ற இந்தப் பயணம் வாழ்நாள் முழுதும் இனிமையான நினைவாய் எப்போதுமிருக்கும்.
கொழும்பு - அனுராதபுரம் - பொலன்னறுவை - சிகிரியா -
கண்டி - பின்னவாலா - மாத்தளை - நுவெரெலியா - கொழும்பு என எட்டு நாட்கள் பயணம்.
பாரதியின் உறவினர்களான ரவி அண்ணன், மோகன் அண்ணன்,
ரத்னா அக்கா குடும்பம் என அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இலங்கை கொள்ளை
அழகு. உயிர் பிரிவதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை நுவெரெலியா போய்விட வேண்டுமென்று
சொல்லுமளவுக்கு 'மலையகம்' குளிரையும்,
தேயிலை வாசனையையும் சுமந்து கொண்டு கிறங்கடிக்கிறது.
சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்திய ‘முத்தமிழ்
விழா குழந்தைப் பாடல்கள் எழுதும் போட்டி’யில் மூன்றாம் பரிசு
கிடைத்தது இன்ப அதிர்ச்சிதான். அந்த போட்டி பற்றிய அறிவிப்பை அறியாமல் இருந்த
எனக்கு அதைத் தெரிவித்து எழுதச் சொல்லிய தோழி கிருத்திகாவிற்கு நன்றி.
தேசிய நூலகம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு கதை
சொல்லல் நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது. வாசிப்பு விழாவை முன்னிட்டு
யீஷூன் நூலகத்திலும் தீபாவளியை முன்னிட்டு தெம்பனீஸ் கடைத் தொகுதியிலும் நடைபெற்ற கதை
சொல்லும் நிகழ்ச்சிகளில் குழந்தைகளோடு குழந்தையாய் மாறிய அனுபவம் மகிழ்ச்சி அளித்தது.
சிங்கப்பூர் கவிதைத் திருவிழாவில் ‘சிங்கப்பூர்
கவிதைகளின் வளர்ச்சிப் போக்கும் சவால்களும்’ என்ற தலைப்பில்
நடைபெற்ற கருத்தரங்கில் ‘சிங்கை கவிதைகளின் வரலாற்றுச்
சித்திரங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். சிங்கப்பூர் கவிதைகளின்
நீண்ட வரலாற்றை வாசித்து அறிந்து கொள்ளவும் அதை மற்றவர்களுக்குச் சுருக்கமாக எடுத்துச்
சொல்லவும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
'புதுயுகம்' தொலைக்காட்சியின்
'யாவரும் கேளீர்' விவாத மேடை சிங்கப்பூரில்
நடைபெற்றது. அதில் பேசும் வாய்ப்பும் பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்களைச் சந்திக்கும்
வாய்ப்பும் அமைந்தது உவகை அளித்தது.
அழிசி நடத்திய ‘விமர்சனக் கட்டுரைப் போட்டி’ பற்றிய அறிவிப்பை எழுத்தாளர் ஜெயமோகன் இணையதளத்தில் கண்டவுடன் திரு.கணேசகுமாரன்
எழுதிய ‘மெனிஞ்சியோமா’ குறுநாவலைப் பற்றிய
எனது விமர்சனத்தை இல்லை, இல்லை வாசிப்பனுபவத்தை எழுதி அனுப்பினேன்.
பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும் ‘பதாகை’ இணைய இதழில் பிரசரிக்கத் தேர்வானது திருப்தியாக இருந்தது.
‘வல்லினம்’ இதழுக்கு ‘திறவுகோல்’ என்ற தலைப்பில் எழுதி வந்த நூல் பார்வைகளைத்
தொடர்ந்து எழுத முடியவில்லையே என்ற ஆதங்கத்தை பவா செல்லதுரை சிறப்பிதழாக மலர்ந்த வல்லினத்தில்
‘பவா என்றொரு கதைசொல்லியின் புனைவுலகம்’ என்ற கட்டுரையை எழுதி தீர்த்துக்கொண்டேன்.
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ‘நானும்
ஒரு படைப்பாளி’, ‘வழிகாட்டும் திட்டம்’ ஆகிய இரண்டு திட்டங்களில் பங்கேற்று உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பயிலரங்குகள்
நடத்தியதன் வழியாக நானும் நிறைய கற்றுக்கொண்டேன்.
மேலும் எனது எழுத்து அனுபவத்தை மூன்று உயர்நிலைப் பள்ளிகளில் பகிர கிடைத்த வாய்ப்பு
நல்ல அனுபவமாக இருந்தது.
வழக்கமான வாசகர் வட்ட சந்திப்புகள்,
இலக்கியச் சந்திப்புகள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கின. கவிஞர் சுகிர்தராணி, எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.
திரு அ.கி.வரதராஜன் அவர்களது புண்ணியத்தில் கம்பனின் பாடல்களை கேட்கவும் கற்கவும் கிடைத்த
அரிய வாயப்பு இந்த வருடமும் தொடர்ந்தது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ் ராமகிருஷ்ணனுக்கு
சென்னையில் நடந்த பாரட்டு விழாவில் கலந்துகொண்டேன். எழுத்தாளர்கள் சாரு நிவேதிதா,
பவா செல்லதுரை, லஷ்மி சரவணகுமார், அகர முதல்வன், கவிதைக்காரன் இளங்கோ, ஜீவ
கரிகாலன், அதியன்
ஆறுமுகம் போன்றோரைச் சந்தித்தது மகிழ்வாக இருந்தது.
இந்த ஆண்டின் ஹைலைட் என்றால்
அது வருட இறுதியில் சென்ற காஞ்சிபுரம் பயணம்தான். நான், என் கணவர், என்
மகள், தோழி பாரதி, அவரது கணவர் என
ஐந்து பேர். ஆறு நாட்கள். கிட்டத்தட்ட முப்பத்தைந்து இடங்கள். கற் கோயில்கள்,
குடைவரைக்கோயில்கள், சமணப்படுகைகள், ஒற்றைக் கற்றளிகள், புடைப்புச் சிற்பங்கள், ஓவியங்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்களை அவர்கள் விட்டுச் சென்ற
எச்சங்களின் வழியாக கண்டு, கேட்டு, தொட்டு,
உணர்ந்து உய்த்த அருமையான அனுபவம்.
எங்களுக்கான
பயணத்திட்டத்தை வகுத்துத் தந்ததோடு மட்டுமல்லாமல் எங்களுடன் வந்திருந்து
இப்பயணத்திற்கு மேலும் இனிமை ஊட்டிய 'Celebrate Kanchi' குழு நண்பர்கள் வேல் குமரன், செந்தில், கார்த்தி, தியாகு அனைவருக்கும் நன்றி. குறிப்பாக
நண்பர் வேல் குமரன் இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமே இல்லை என்று உறுதியாகச்
சொல்லலாம். நண்பர் முருகன் திருச்சியிலிருந்து கிளம்பி வந்து ஞாயிறு மட்டும்
எங்களுடன் இணைந்து கொண்டார். அதை விட மகிழ்ச்சி நல்ல வாசகரான அவரிடம் என்
நூல்களைத் தந்தது.
காஞ்சியைப்
பார்த்தது எத்தனை மகிழ்வானதோ அதைவிட இரண்டு மடங்கு மகிழ்ச்சியை அளித்தது நண்பர்
சசியைச் சந்தித்தது. முகநூலில் இவரது பதிவுகளை தோழி விஜயபாரதி பகிர்வார்.
அப்படித்தான் சசியின் பதிவுகளைப் படிக்கத் தொடங்கினேன். முகநூலில் நான் ரசித்து
வாசிக்கும் பதிவர்களில் சசியும் ஒருவராக மாறிப்போனார். இரண்டு நாட்கள்
எங்களுக்குப் பயண வழிகாட்டியாக வந்திருந்து அத்தனைத் தகவல்களைக் கொட்டித்
தீர்த்தார். சமணம், பௌத்தம், சைவம்,
வைணவம், சாக்தம் என பல மதங்கள் தழைத்திருந்த
இந்த மண்ணில் ஒவ்வொரு கோயிலைப்பற்றிய இந்தக் கறுப்பு சட்டைக்காரரின் வரலாற்று
அறிவு பிரமிப்பூட்டுவதாக இருந்தது.
வாசித்த
புத்தகங்கள்
1. பட்டு’ நாவல் –
அலெசான்ட்ரோ பாரிக்கோ
தமிழில் – சுகுமாரன்
2. மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் – டயான் ப்ரோகோவன் தமிழில் – ஆனந்த்
3. வேர்கள் – அலெக்ஸ் ஹேலி தமிழில் பொன் சின்னத்தம்பி
முருகேசன்
4.
யார்
அறிவாரோ – மஹாபளேஷ்வர் ஸைல், தமிழில் இரா தமிழ்ச்செல்வன்
5.
பால்கனிகள்
– சு வேணுகோபால்
6. பெருவலி – சுகுமாரன்
7. ஓரிதழ்ப்பூ – அய்யனார் விஸ்வநாத்
8. Peranakan Indians of Singapore and Melaka Indian Babas and
Nonyas – Chitty Melaka by Samuel S Dhoraisingam
9. மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது
- பாஸூ அலீயெவா,மொழிபெயர்ப்பாளர்
- பூ.சோமசுந்தரம்
10. எருது (உலக மொழிபெயர்ப்பு சிறுகதைகள்) - தொகுப்பும் மொழியாக்கமும் - கார்த்திகைப் பாண்டியன்
11. நட்சத்திரங்கள்
ஒளிந்துகொள்ளும் கருவறை – பவா செல்லதுரை
12. டொமினிக் –
பவா செல்லதுரை
13. வெட்டாட்டம் _ ஷான்
இந்த ஆண்டு வாசிப்பு மிக குறைந்தது
வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் வாசித்த அனைத்து நூல்களையும் பற்றி பேசியோ எழுதியோ பதிவு
செய்திருக்கிறேன் என்பது மிகவும் திருப்தியாக உள்ளது. வாசிப்பைப் போல எழுத்தும் குறைந்துவிட்டது.
அதனால் என்ன? இருக்கவே இருக்கிறது 2019 ஆம் ஆண்டு. ஒரு கை பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை
உள்ளது.
இந்த ஆண்டின் மறக்கவும் முடியாத மன்னிக்கவும்
முடியாத மிகப் பெரிய சோகங்கள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும், டெல்டா மாவட்ட கஜா புயலும். அதிகாரமும்
இயற்கையும் இரக்கமே இல்லாமல் மக்களை காவு வாங்கியது அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும்
இருந்தது.
சென்று வா 2018 ஆம் ஆண்டே! உன்னிலிருந்து நான் பெற்ற மகிழ்வுகளுக்காகவும்
கற்றுக்கொண்ட பாடங்களுக்காவும் நன்றி.
God grant me the
serenity
to accept the things I cannot change;
courage to change the things I can;
and wisdom to know the difference.
to accept the things I cannot change;
courage to change the things I can;
and wisdom to know the difference.
எனக்கு மிகவும் பிடித்த இந்த பிரார்த்தனையோடு 2019 ஆம் ஆண்டை எதிர்கொள்ள தயாராகிவிட்டேன். வாழ்தல் இனிது!
வாழ்வைக் கொண்டாட, தேடலைத் தொடர, அறிவை விசாலப்படுத்த, மனிதர்களைச் சம்பாதிக்க, அனைவரையும் நேசிக்க என இதோ அடுத்த ஆண்டில்.......
No comments:
Post a Comment