2016 ஆம் ஆண்டு வந்ததும் தெரியாமல் சென்றதும் தெரியாமல் விடைபெற்றுவிட்டது. ஓடும் பேருந்தின் வழியாக பார்க்கையில் வேகமாக ஓடி மறையும் தருக்களைப் போல வருடங்கள் வாழ்க்கையில் வேகமாக மறைந்துவிடுகின்றன. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தரும் பாடங்கள், குதுகலங்கள், பாராட்டுகள், சந்தோஷங்கள், பயணங்கள், நட்புகள், துரோகங்கள், அவமானங்கள் அனைத்தும் ஒன்றாகத் திரண்டு, உருண்டு, முதிர்ந்து நினைவுக்கனிகளாகவும், அனுபவப்பழங்களாகவும் மாறி அடுத்த வருடத்தை அதிக உற்சாகத்தோடு எதிர்கொள்ளத் தயார் செய்துவிடுகின்றன.
2016 ஆம் ஆண்டு மறக்க முடியாத மகிழ்ச்சியான வருடமாக கடந்திருக்கிறது. எந்தவித திட்டமிடலும் இல்லாமல் வாழ்க்கை என்னை இழுத்துப் போன போக்கில்தான் பயணித்திருக்கிறேன். 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான என் சிறுகதைத் தொகுப்பு ‘ஆறஞ்சு', 2016 ல் எனக்கு மிகப் பெரிய அடையாளத்தைத் தந்தது உண்மையில் நான் எதிர்பார்க்காத ஒன்று. நூலை வெளியிடத் தயங்கிய எனக்கு ஊக்கம் தந்து வெளியிடச் செய்த நண்பர் ஷாநவாஸை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.
‘ஆறஞ்சு'க்கு விமர்சனம் எழுதிய அனைத்து வாசக நண்பர்களும் எழுத்துலக ஆளுமைகளும் என் படைப்பின் மீதான கருத்துக்களை உண்மையாக முன்வைத்ததன் மூலம் எனக்கான அங்கீகாரத்தைத் தந்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து நான் எப்படி படைப்புலகில் இயங்கவேண்டும் என்ற பாடத்தையும் சொல்லித் தந்திருக்கிறார்கள். எழுத்தாளர் திரு.இமையம் நான் நூலை அனுப்பியவுடன் ஒரே நாளில் படித்துவிட்டு அதற்கு விமர்சனம் எழுதி அனுப்பினார். தொலைபேசியில் அழைத்து என் குறைகளைச் சரியாக சுட்டிக்காட்டினார். அவரது விமர்சனம்
மனதுக்கு உற்சாகமாக இருந்தது.
நான் பெரிதும் மதிக்கும் என் ஆதர்ச எழுத்தாளர் திரு.ஜெயமோகனது விமர்சனம் ‘ஆறஞ்சு’க்கு கிடைத்தது என் நல்லூழ் என்றுதான் சொல்லவேண்டும். எனக்கு கிடைத்த ஆசியாகவும், அதே சமயம் அடுத்த படைப்பை இன்னும் செம்மையாக எழுதுவதற்கான சவாலாகவும் அவரது விமர்சனத்தைக் கருதுகிறேன். அம்ருதா இதழில் ‘தொன்மங்களைத் தொடுதல்' என்ற கட்டுரையில் மலேசிய எழுத்தாளர் திரு.நவீன் எழுத்துலக ஜாம்பவான்களின் சிறுகதைகளோடு என் சிறுகதையையும் அடையாளப்படுத்தியது மிகுந்த சந்தோஷத்தை அளித்தது.
சிங்கையில் குழந்தைகளுக்கான தமிழ் நூல்கள் எழுதும் நபர்கள் குறைவு என்பதால் “நான் ஏன் முயற்சிக்ககூடாது?” என்று தோன்றியதன் விளைவு தேசிய புத்தக மன்றமும், தேசிய கலைக் கழகமும் நடத்திய ‘Beyond
Words' திட்டத்திற்கு என் கதையை அனுப்பினேன். அது தேர்ந்தெடுக்கப்பட்டு புத்தகமாக வெளியானது உண்மையில் மகிழ்ச்சியான ஒரு திருப்புமுனை. ‘கொண்டாம்மா கெண்டாமா' என்ற அந்தப் படப்புத்தகம் தொடர்ந்து குழந்தைகளுக்கான நூல்களை எழுதவேண்டும் என்ற விதையை என்னுள் ஆழமாக விதைத்துள்ளது.
இந்த வருடத்தின் மிக முக்கியமான பயணம் தோழி பாரதியோடு சென்னை புத்தக கண்காட்சிக்குச் சென்றுவந்தது. அந்த மூன்று நாட்கள் நினைவுகளையும் வாழ்வின் இறுதி காலத்தில் அசை போட சேகரித்து வைத்துள்ளேன். பேராசிரியர் அரசு வீட்டிலுள்ள நூலகத்திற்குச் சென்றது, படைப்பாளிகள் பிரபஞ்சன், மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், லீனா மணிமேகலை, மாலன், லக்ஷ்மி சரவணக்குமார் இவர்களுடனான சந்திப்புகள் அருமையான அனுபவமாக அமைந்தன.
சிராங்கூன் டைம்ஸ் இணைய இதழில் 2016ல் எழுதிய கட்டுரைகள் வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றது மனதுக்கு நிறைவாக இருந்தது. இப்படியான ஒரு தளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ள சிராங்கூன் டைம்ஸ் இதழின் நிறுவனர் திரு.முஸ்தபாவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
தொடர்ந்து சிங்கையைப் பற்றி சொல்லப்படாத செய்திகளைக் கட்டுரைகளாக எழுதவேண்டும் என்ற இலக்கை 2017ல் செயல்படுத்தவேண்டும்.
வல்லினம் இணைய இதழில், சிங்கை மலேசிய நாவல்களை வாசித்துவிட்டு நூல் பார்வையை எழுதுமாறு திரு.நவீன் கேட்டபோது கரும்பு தின்னக்கூலியா? என்று உடனே
ஒப்புக்கொண்டு இதுவரை நான்கு நாவல்களைப் படித்து எழுதியது திருப்தியாக உள்ளது. சிங்கை மலேசிய இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிக்க இத்தொடர் ஒரு தூண்டுகோலாக உள்ளது.
வழக்கம்போல இந்த வருடமும் இலக்கிய நிகழ்ச்சிகள், வாசகர் வட்டங்கள், புத்தக வெளியீடுகளுக்குப் பஞ்சமே இல்லை. எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், ஜெயமோகன், மாலன், அம்பை, வேலராமமூர்த்தி, யவனிகா ஸ்ரீராம், கோ.புண்ணியவான், இந்திரன், ஆழி.செந்தில்நாதன் ஆகியோருடனான சந்திப்புகள் இலக்கியப் பசிக்குத் தீனி போட்டன. இவ்வருடம் சிங்கையில் நடந்த காவிய முகாம் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. எழுத்தாளர்கள் சு வேணுகோபால், எம் கோபாலகிருஷ்ணன் மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட
நண்பர்களைச் சந்தித்து கலந்துரையாடும்
வாய்ப்பு கிட்டியது.
சங்க இலக்கியங்கள் படிக்க வேண்டும் என்ற வேட்கையோடு தோழிகள் இணைந்து தொடங்கிய கூட்டு வாசிப்பு நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவியது. குறுந்தொகையில் அகப்பாடல்களின் உணர்ச்சி கொந்தளிப்பில் வாசிப்பு நகர்வது புதுமையான அனுபவமாக உள்ளது. கம்பனின் மீது மூர்க்கமான காதல் தோன்றி கம்பராமாயணப் பாடல்களைப் படிக்கலாம் என்ற எண்ணத்தில் இராமயணத்திற்காக தனி வாட்ஸ்அப் குழு தொடங்கப்பட்டு நண்பர்களோடு கலந்துரையாடல் தொடங்கியது. ஓர் ஆசிரியர் மூலம் கற்கலாம் என்ற முடிவோடு வருடத்தின் இறுதியில் திரு அ.கி.வரதராசன் அவர்களது நான்கு கம்பராமாயண வகுப்புகளுக்குச் சென்றது கம்பனை இன்னும் நெருக்கமாக்கி
உள்ளது.
2017 புதுவருடம் இனிப்பான செய்தியோடு தொடங்கி உள்ளது. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறையும் இணைந்து நடத்தும் ‘சிங்கை படைப்பிலக்கியங்கள் பன்னாட்டுக் கருத்தரங்கத்தில்' ஆய்வுக்காக ‘ஆறஞ்சுய நூலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான தொடக்கம். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்திற்கு நன்றி.
‘படைப்பூக்கத்திற்கு மாபெரும் எதிரி வாழ்க்கைதான்' என்று எழுத்தாளர்
இந்திரன் கூறினார். ஒருபுறம் அது உண்மையாக இருந்தாலும் அதே வாழ்க்கைதான் இலக்கியத்தின் அஸ்திவாரம் என்பதை மறுக்கமுடியாது. இந்தப் புத்தாண்டில் மலர இருக்கும் வாழ்க்கை படைப்பூக்கத்திற்கு எதிரியாக இல்லாமல் நண்பனாக அமையும் என்ற ஆசையோடும் நம்பிக்கையோடும் அடி எடுத்து வைக்கிறேன். கீழே உள்ள நூல்களைக் கடந்த ஆண்டு வாசித்திருக்கிறேன். இதை விட இரண்டு மடங்கு நூல்களை வாசிக்க வேண்டும் என்பதே இந்தப் புத்தாண்டின் சபதம்.
1. மழைப்பாடல் (வெண்முரசு நாவல் 2) – ஜெயமோகன்
2. வண்ணக்கடல் (வெண்முரசு நாவல் 3) – ஜெயமோகன்
3. நீலம் (வெண்முரசு நாவல் 4) – ஜெயமோகன்
4. பிரயாகை (வெண்முரசு நாவல் 5) – ஜெயமோகன்
5. தொல்குடி, சிறுகதைத் தொகுப்பு – நாஞ்சில்நாடன்
6. பாக்ஸ், நாவல் – ஷோபா சக்தி
7. கொரில்லா, நாவல் – ஷோபா சக்தி
8. மகாபாரதம், கட்டுரைகள் – பிரபஞ்சன்
9. கானகன், நாவல் - லக்ஷ்மி சரவணக்குமார்
10. குற்றப்பரம்பரை, நாவல் – வேலராமமூர்த்தி
11. எங் கதெ, நாவல் – இமையம்
12. கூடுதுறை,சிறுகதைத் தொகுப்பு – சி.சு.செல்லப்பா
13. யாதுமாகி, நாவல் – சுசீலா
14. அவதார புருஷன், கவிதை – வாலி
15. இராமன் எத்தனை இராமனடி, கட்டுரைகள் – அ.கா.பெருமாள்
16. அன்னையின் ஆணை, கட்டுரைகள் – அ.கி.வரதராசன்
17. வானத்து வேலிகள், நாவல் – ரெ.கார்த்திகேசு
18. செலாஞ்சார் அம்பாட், நாவல் – கோ.புண்ணியவான்
19. குருவிக்கோட்டம், நாவல் – மா.இளங்கண்ணன்
20. சங்கச்சித்திரங்கள், கட்டுரைகள் – ஜெயமோகன்
21. இவர்கள் இருந்தார்கள், கட்டுரைகள் – ஜெயமோகன்
22. எழுதியவனைக் கண்டுபிடித்தல், கேள்வி-பதில்- ஜெயமோகன்
23. கூந்தல், சிறுகதைத் தொகுப்பு – ஜெயமோகன்
24. வெண்கடல், சிறுகதைத் தொகுப்பு – ஜெயமோகன்
25. அறம், சிறுகதைத் தொகுப்பு – ஜெயமோகன் (மீள்)
26. நாடு விட்டு நாடு, தன்வரலாறு – முத்தம்மாள் பழனிச்சாமி
27. இராவணன் மைந்தர்கள், கட்டுரைகள் – தெ ஞானசுந்தரம்
28. பெண் ஏன் அடிமையானாள், கட்டுரைகள் – பெரியார்
29. ஒரு கறுப்புச் சிலந்தியுடன்
ஓர் இரவு, சிறுகதைத் தொகுப்பு – அம்பை
30. அந்தேரி மேம்பாலத்தில்
ஒரு சந்திப்பு, சிறுகதைத் தொகுப்பு – அம்பை
31. பூமிக்குள் ஓடுகிறது
நதி, சிறுகதைத் தொகுப்பு – சு.வேணுகோபால்
32. திசையெல்லாம் நெருஞ்சி, குறுநாவல்கள் - சு.வேணுகோபால்
33. ஆட்டம், நாவல் – சு.வேணுகோபால்
34. பிறிதொரு நதிக்கரை, சிறுகதைத் தொகுப்பு – எம்.கோபாலகிருஷ்ணன்
35. குட்டி இளவரசன், நாவல் – அந்துவான் செய்த
எக்ச்பெரி
36. ஆண்கள் சமைப்பது
அதனினும் இனிது, கட்டுரைகள் – ச.தமிழ்ச்செல்வன்
நூல்களை
வாசிப்பதலோ, படைப்பதாலோ இலக்கியத் துறையில் இருப்பவர்கள்
ஒன்றும் புனிதமானவர்கள் கிடையாது. மற்ற எல்லா துறைகளையும் போல இங்குள்ளவர்களும் அற்பமானவர்கள், பலவீனமானவர்கள் என்பதை கடந்துபோன ஆண்டு சொல்லிவிட்டுச்
சென்றிருக்கிறது. எதிரிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். ஆனால் போலி நண்பர்களை
அடையாளம் கண்டுகொள்வதுதான் சிரமம். ஆனால் 2016 ஆம் ஆண்டு நிறைய போலி நண்பர்களை
எனக்குச் சுட்டிகாட்டி உதவியுள்ளது. இது போன்ற போலி நண்பர்கள்தான் என் வினையூக்கிகள்.
அதற்காகவே அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும் எனத் தோன்றுகிறது.
2017ஆம் ஆண்டே வருக! நீ எனக்கு என்னென்ன தர
காத்திருக்கிறாயோ எனக்குத் தெரியாது. ஆனால் அவை எதுவாக இருந்தாலும் துணிவோடும் மகிழ்வோடும்
எதிர்கொள்ளும் பக்குவத்தை வாசிப்பும் இலக்கியமும் எனக்குத் தரும் என்ற நம்பிக்கையோடு
நான் இருக்கிறேன்.
No comments:
Post a Comment