‘சிங்கப்பூர்த் தமிழ் 2015’ வெளியீட்டு விழா
டிசம்பர் 18, ஞாயிறு காலை தேசிய நூலகத்தில் நடைபெற்ற ‘சிங்கப்பூர்த் தமிழ் 2015’ வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். பெயரைப் பதிவு செய்துவிட்டு சிற்றுண்டி இருக்கும் இடத்திற்கு
விரைந்தேன். பயங்கர பசி. பல தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்கள் வந்திருந்தார்கள். சில நண்பர்களோடு அளவளாவிக்கொண்டே வடையையும் கேசரியையும் சாப்பிட்டு
முடித்தேன். நிகழ்ச்சி குறிப்பிட்டபடி சரியான
நேரத்தில் தொடங்கியது.
‘சிங்கப்பூர்த் தமிழ் 2015’, தமிழ் மின்மரபுடைமைக் குழுவின்
இரண்டாவது திட்டம். இக்குழுவின் முதல் திட்டம் ‘தமிழ் மின்மரபுடமைத் திட்டம் 2015’. இதில் 50 ஆண்டு கால சிங்கைத் தமிழ் இலக்கியம்
(1965-2015) தொகுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் 50 ஆம் ஆண்டு சுதந்திர விழாவை ஒட்டி, கிட்டத்தட்ட 350 புத்தகங்கள் மின் நூல்களாக மாற்றப்பட்டு
சிங்கை அரசுக்கு தமிழ் சமூகத்தின் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. உண்மையில் இது பாரட்டுதலுக்குரிய முயற்சி. இந்த திட்டத்தால் 50 ஆண்டு கால சிங்கப்பூர் இலக்கியத்தை உலகின்
எந்த மூலையிலிருந்தும் தமிழர்கள் இலவசமாக படித்து மகிழலாம்.
இரண்டாவது திட்டமான ‘சிங்கப்பூர்த் தமிழ் 2015’ திட்டத்தில், சிங்கப்பூரில் தமிழ் பயன்பாட்டில் உள்ள இடங்கள் புகைப்படங்களாகத்
தொகுக்கப்பட்டுள்ளன. 50 பிரிவுகளில் கிட்டத்தட்ட 250 படங்கள் பத்து மாதங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. சிறப்பு விருந்தினராக வந்திருந்த கல்வி அமைச்சின் தாய்மொழிகள்
பிரிவின் துணை இயக்குநர் திருவாட்டி சாந்தி செல்லப்பன் தனது உரையில் இந்த திட்டம் தமிழாசிரியர்களுக்கு
ஒரு வரப்பிரசாதம் என்றார். இந்தக் கற்றல் வளத்தைச் சரியாக
பயன்படுத்துவதும், மாணவர்களுக்கு ஆர்வமூட்டும்
வகையில் கற்பிப்பதும் ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது என்றவர் தமிழ் வாழும் மொழியாக
இருப்பதற்கு ஆசிரியர்களின் பங்கைவிட பெற்றோரின் பங்குதான் மிகவும் முக்கியம் என்று
கூறினார்.
தமிழ் மின்மரபுடைமைக் குழு, தமிழ் மீது காதலும் ஆர்வமும் கொண்ட தனி நபர்கள் ஒன்றிணைந்து
உருவானது. திரு அருண் மகிழ்நன் மேற்பார்வையில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை தமிழ் சமூகத்திற்காக
முன்னெடுக்கும் இக்குழுவில் பொதுமக்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், தமிழாசிரியரகள், குறிப்பாக அதிக அளவில் இளையர்கள் இருக்கிறார்கள். இரண்டு திட்டங்களை வெற்றிகரமாக முடித்திருக்கும் இக்குழுவின்
மற்ற திட்டங்களைப் பற்றி திரு அருண் மகிழ்நன் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.
திட்டம் 3
தமிழ் நாடகங்கள் மின்தொகுப்பு 2017 (சிங்கையில் கடந்த 100 ஆண்டுகளில் நடத்தப்பட்ட தமிழ் நாடகங்களைப் பற்றிய
தகவல்கள், புகைப்படங்கள் அனைத்தும் தொகுக்கப்பட
இருப்பதாக இத்திட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு கணேஷ் சுப்பிரமணியம் கூறினார்)
திட்டம் 4
தமிழ் இசை மின் தொகுப்பு 2018 ( இதில் சிங்கைத் தமிழ் இசையின் கடந்த கால வரலாறு தொகுக்கப்பட
உள்ளது)
திட்டம் 5
தமிழ் மரபும் பண்பாடும் மின்வளம் 2019 ( இதில் சிங்கப்பூர்த் தமிழர்களின் பண்பாடும் கலாச்சாரமும்
தொகுக்கப்பட இருக்கிறது)
திட்டம் 6
சிங்கப்பூர்த் தமிழர் 200 ஆண்டு வரலாறு 2019 ( இது நூலாக வெளியிடப்பட உள்ளது)
அனைத்து திட்டங்களுக்கும் மூன்று
அடிப்படையான நோக்கங்கள் உள்ளன என்றும் திரு அருண் மகிழ்நன் தனது உரையில் குறிப்பிட்டார். அவை,
1.
தமிழ் கற்றல் & கற்பித்தல்
2.
தமிழ் அடையாளத்தைப் புரிந்து கொள்வது
3.
வாழ்க்கையை ஆவணப்படுத்துதல்
மிகச் சிறப்பாக நடந்தேறிய இந்த
நிகழ்வில், வழமையான தமிழ் நிகழ்ச்சிகளுக்கு
மாறாக அதிக இளையர்களைக் காண முடிந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.
தமிழ் மின்மரபுடைமைக் குழு விதைத்த
விதைகளில் இதுவரை இரண்டு விதைகள் முளைத்துவிட்டன. இன்னும் நான்கு விதைகள் வரவிருக்கும் ஆண்டுகளில் முளைக்க இருக்கின்றன. முளைத்த, முளைக்க இருக்கும் அச்செடிகள்
வலுவாக வேரூன்றவும் கிளைகள் பரப்பி மரமாகத் தழைக்கவும் செய்வது சிங்கைத் தமிழ் சமூகத்தில்
உள்ள நம் ஒவ்வொருவரின் முக்கிய கடமை. நாம் என்ன செய்ய முடியும் என்று கேட்டால், கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம்.
1. இந்த மின்வளங்களை நம்மால் இயன்ற அளவு பயன்படுத்துதல்
2. இந்தக் கற்றல் வளங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்தல்
3. இந்த வாழ்க்கை ஆவணத்தை பிற நாடுகளில் வாழும் நம் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துதல்
தொலைநோக்குப் பார்வையோடு பார்த்தால், இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து இந்த மின்வளங்கள், சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் காலக் கண்ணாடிகளாகவும், வரலாற்று பொக்கிஷங்களாகவும் திகழும் என்பதில் ஐயமே இல்லை.
No comments:
Post a Comment