Friday, December 16, 2016

Image result for அவதார புருஷன் – வாலி
அவதார புருஷன் – வாலி – வாலி பதிப்பகம்

கம்பராமாயணத்தை அறியும் முயற்சியில் நான் வாசித்த நான்காவது நூல் கவிஞர் வாலி எழுதிய 'அவதார புருஷன்.' 52 வாரங்கள் ஆனந்த விகடனில் இது தொடராக வந்தபோது வாசித்துப் பிரமித்திருக்கிறேன். வாலியின் வார்த்தைகளில் கிறங்கி, மயங்கியிருக்கிறேன். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகான மீள்வாசிப்பில் பிரமிப்பு இல்லாவிட்டாலும் வாலியின் வார்த்தை ஜாலம் என்னை அப்படியே உள்ளிழுத்துக்கொண்டது. இருபது வருடங்கள் கடந்தும் முதுமை தீண்டாத அந்த எழுத்து வாலிப முறுக்குடன் வாசிப்பவரைக்  கட்டிப்போடுகிறது. 

கம்பராமாயணம் என்ற ஆழியில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் தாம் எடுத்த முத்துக்களை  மற்றவர்களுக்கும் பகிர்ந்து தந்து இன்புறவேண்டும் என்ற நோக்கில் எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளனர். அவர்களில் வாலியும் ஒருவர். அரிதார புருஷர்களை அர்ச்சித்து அலுத்து ஓர் அவதார புருஷனை ஆராதிக்க வந்தேன் என்கிறார்.

ஏற்கனவே மக்களுக்குத் தெரிந்த ஒரு கதையை மீண்டும் சுவைபடச் சொல்வது முதல் வெல்விளி. ஜவ்வு போல இழுக்காமல் சுருங்கச் சொல்வது இரண்டாவது வெல்விளி. கவிதையில் சொல்வது மூன்றாவது வெல்விளி. கவிதையிலும் எளிமையான வசன கவிதையில் படைப்பது நான்காவது வெல்விளி. இந்த நான்கு வெல்விளிகளையும் வென்று நிற்கிறார் வாலி.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் கொண்ட கம்பகாவியத்தை 250 பக்கங்களில் கவிதையில் வடித்த வாலி, இந்நூலை வாசிப்பவரின் மனதில் பாடலாசிரியர் என்ற நிலையிலிருந்து கவிஞன் என்ற நிலைக்கு உயர்வது உறுதி. இந்நூலில் இடம் பெற்றுள்ள சில பாடல்கள்:  

தசரதன் கைகேயிக்கு வரமளிக்கும் காட்சி
நான்
பூந்தேன் பூந்தேன் - எனப்
பருகிய நஞ்சே! - உனக்கு
ஈந்தேன் ஈந்தேன் - நீ கேட்ட
இரு வரம் இன்று! - உன்னால்
ஓர்ந்தேன் ஓர்ந்தேன் - விதி
வலியது என்று!

வரங்களைப் பற்றி கைகேயி இராமனிடம் சொல்வது
ஈழத்தரசனின் ஈமக்கடன்
என்று? என்று -
தீர்மானிக்கும்
தலைவிதி - கைகேயியின்
உள்நாக்கில் வந்து
உட்கார்ந்து கொண்டது!
உள்ளம் கறுத்தவள் -
உடல் கறுத்தவனிடம் உரைத்தாள்.

கோதாவரி நதி சிறப்பு
நெடிலும் குறிலுமாய் - அலைகள்
நிமிர்ந்தும் தாழ்ந்தும் புரள....
எதுகை மோனையுமாய் -
கரைகள் இருபுறம் இருந்து தழுவ..
தரையில் வரைந்த - இந்தச்
தண்ணீர்ச் செய்யுளை....
நதியோரக் காற்று நடந்துகொண்டே வாசிக்கும்
செய்யுளின் ஆழம் புரியாமல்
சில சமயம் நேசிக்கும்

தசரதன்
நாட்டு மக்கள்
நாக்குகள் எல்லாம் - அவன்
நாமம் உட்காரும்
நாற்காலிகள் ஆயின.

வசிஷ்டர்
கங்கு கரையில்லாத
கல்விக் கடல் - ஆனால்
காட்சிக்குக்
கால்வாய் போல் இருப்பார்.

விஸ்வாமித்திரர்
வேதம் நாக்கு நுனியில்
கோபம் மூக்கு நுனியில்

ஜனகன்
வறிய வர்க்கு
வரி யெதற்கு - என்று
விலக்களித்தான்! - அவர்
வெளிச்சம் பெற
விளக்களித்தான்

பரதன்
ஒழுங்கல்ல செங்கோல்
ஓச்சுவது என்று -
ஒதுக்கினாய் நாடு! - அம்மம்மா!
ஓராயிரம் இராமர் -
ஒருசேர வரினும்
உனக்காவரோ ஈடு?

சூர்ப்பணகை
முறம் போல்
உகிர் கொண்டு
உயிர் கொன்று
ஊனை வகிர்ந்துண்டு - இரவில்
உலகை வலம் வரும்
அலகை அவள்

இராவணன்
பத்து தலையிருந்தும் - இவனுக்கு
ஏற்பட்ட காமமெல்லாம்
ஒரு தலைதான்!
காரணம்....
அரண்மனையைக் காட்டிலும்
இவன் அதிகம் நேசித்தது
பிறன் மனைதான்!

இராவணன் சீதையைச் சிறையெடுத்தல்
கற்புக்கும் கற்பைக்
கற்பிக்கும் கற்பை -
பொற்புக்கும் பொற்பைப்
போதிக்கும் பொற்பை -
நியமத்தை நீங்காத
தருமத்தின் இருப்பை -
நீல நயனங்களில்
நீர் வடிக்கும் நெருப்பை -
நிலத்தோடு பெயர்த்து
நீள் கரத்தில் எடுத்து -
விமானத்தில் வைத்து -
இலங்கேசன்
விசும்பில் ஏறினான்.

அனுமான்
தலைசிறந்த
தத்துவ ஞானியா யிருப்பினும்
தலை வீங்காமல்
தாடைகள் மட்டுமே வீங்கியவன்

சுக்கிரீவன்
முடியிலிருந்து அடிவரை
முசுக்கட்டைபோல் - அவனுக்கு
முடியிருந்தது! - அவனது
முழு உடம்பையும் - அதுவே
மூடியிருந்தது! - இவ்வளவு
முடியிருந்தும் - தலை
முடிக்கு மேல் - ஒரு
முடியில்லா வருத்தம் - அவனுக்கு
முடிவில்லா வருத்தமாயிருந்தது

வீடணன் இராவணனிடம் சொல்வது
பலதாரம் இருக்க - உயர்
பட்டத்தரசியாய் - ஒரு
குலதாரம் இருக்க - நம்
குலப்பெயர் இறக்க - நீ
பரதாரம் இச்சித்தது -  
பஞ்சமா பாதகம்! - அருள்மிகு
அத்தாரம் - நீ அணிய
முத்தாரம் அல்ல; அவள் –
அவதாரம் செய்திருக்கும் –
அரிதாரம் - அவள் உனக்குச்
சரிதாரம் - எனும் சிந்தனை
சுகாதாரம் அல்ல;  அது உன் –
சரிவிற்குச் சருவாதாரம்.

எதுகை மோனைகளாலும், வார்த்தை விளையாட்டுகளாலும் கவிதை எழுதி கவிஞர்கள் என்று தன்னை சொல்லிக் கொள்பவர்கள் முகநூலிலும் இணையத்திலும் இக்காலகட்டத்தில் மலிந்து இருக்கிறார்கள். இவர்களிடமிருந்து வாலி இந்நூலின் வழியாக இருபது வருடங்கள் கழித்தும் தனித்து நிற்கிறார்.   


இராமாயணத்தைச் சற்றும் சுவை குறையாமல் சுருக்கி அதிலுள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசயத்தையும், ஒவ்வொரு காட்சியமைப்பின் சிறப்பையும் அழகு குறையாமல் வார்த்தைகளைக் கோர்த்து வாலி ஆச்சர்யப்படுத்துகிறார். மாபெரும் காப்பியத்தைப் நவீன காலத்திற்கு ஏற்ப புதிய உத்தியில் அதாவது வசன கவிதை வடிவிலும் வாசிக்க மிக எளிமையாகவும் எழுதிய வாலியை எவ்வளவு பாரட்டினாலும் தகும். 

No comments:

Post a Comment