Tuesday, December 6, 2016

கம்பராமாயணம் - திரு அ.கி.வரதராசனுடன் சந்திப்பு 4
டிசம்பர் 2, 2016 - ஜூரோங் ஈஸ்ட் பொது நூலகம்

திரு அ.கி.வரதராசனின் உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை

இராவணன் மரணம் - இரங்கல்

இராவணன் மரணம் அடைகிறான். இராமன் விபீடணனை அழைத்து அண்ணனுக்கு ஈமச்சடங்குகளைச் செய்யுமாறு பணிக்கிறான். பாசமிகு அண்ணனை இழந்துவிட்ட துக்கத்தில் விபீடணன் கதறுகிறான். இராவணனின் பெருமைகளைப் புகழ்ந்து பேசும் அதே நேரத்தில் தன் பேச்சைக் கேட்காமல் அண்ணன் இப்படி மண்ணாகிப் போனானே என்ற ஆற்றாமையும் அவனது குரலில் சேர்ந்தே ஒலிக்கிறது. இராவணன் இறந்த செய்தி கேட்டு மண்டோதரி அழுதபடி வருகிறாள். அவனது உடலில் விழுந்து கதறி புலம்புகிறாள். இறுதியில் அவளும் மடிகிறாள்.

விபீடணனின் கதறல்

தேவர்களுக்கு எமனாக இருந்தவனே! அசுரர்களுக்கு ஊழியானவனே! எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஆற்றல் கொண்டவனே! பெரும் நஞ்சாகிய சீதை உன்னைக் கண்டதால் போர்க்களத்தில் மாண்டு கிடக்கிறாய். உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு - நஞ்சை நீ குடிக்காமல் இருந்திருந்தால் அது இன்று உன் உயிரைக் குடித்திருக்காது. நான் சொன்னவற்றிற்கு அன்றே காது கொடுக்காத நீ இனிமேலா எண்ணிப் பார்க்கப் போகிறாய்?

எண்திசை யானைகளையும் நிலைகுலையச் செய்தவனே! ராமன் என்ற ஒருவன் மீது மட்டுமே காதல் உடைய சீதை என்ற குலமகள் மீது நீ வைத்த ஆசையால் உனக்குப் பழி வந்தது. இப்போதாவது என்மீது கோபம் குறைந்ததா? போரில் நம் அசுரர் குலம் முற்றிலும் அழிந்த பிறகாவது உன் முறையற்ற ஆசை குறைந்ததா?

குன்றுகளைப் போன்ற வலிய தோள்களைக் கொண்டவனே! அன்று உன்னால் கொல்லப்பட்ட வேதவதிதான் சீதை என்றும் சீதை உலகுக்கே அன்னை என்றும் கூறினேன். ஆனால் நீ அதைக் கேட்காமல், உன் குலம் முற்றிலும் அழிவது கண்டும் இராமனோடு நேசக்கரம் நீட்டாமல் போனாய். இன்றாவது இராமனது ஆற்றலைக் கண்டு கொண்டாயா?
பிரம்மாவும் திருமாலும் தந்த வரங்கள் வீணானப்போது கூட நீ உணரவில்லை. ஆனால் இன்று உன் உயிர், அவன் நாடான பரமபதத்தை அடையும்போது இராமன் இறைவன் என்பதை உணர்வாய்.

வீர சொர்க்கம் அடைந்தாயா? பிரம்மலோகம் சென்றாயா? சிவலோகப் பதவி அடைந்தாயா? உன் உயிரைக் கொண்டு செல்லும் தைரியம் யாருக்கு வந்தது? இதெல்லாம் இருக்கட்டும். இப்போதாவது மன்மதன் உன்னுள் புகுந்து ஆடிய ஆட்டம் நின்றதா? உன் காமத்தீயைக் குறைக்க முடியாமல் தானும் சூடாகிப்போன சந்திரன் இன்றாவது குளிர்ந்தானா?

அவளது கணவனைக் (வித்ருசிங்கன்) கொன்றாய் என்பதற்காக அந்தக் கொடும்பாவி சூர்ப்பனகை தனது நீண்ட காலப் பழியைத் தீர்த்துக்கொண்டாளோ! நல்லவர்கள், தீயவர்கள், நரகத்தில் வாழ்பவர்கள், வீர மரணம் அடைந்தவர்கள் என அனைவரும் நமக்குப் பகையாகிவிட்டார்கள். நீ யார் முகத்திலும் விழிக்கமுடியாத இழிபிறப்பாக போய்விட்டாயே!

போர் மகள், கலை மகள், புகழ் மகள் என்ற மூன்று பெண்களைத் தழுவி மகிழ்ந்து இருந்தாய். பிறகு அவர்கள் பொறாமைப்படும் வகையில் அழகி, கற்புக்கரசி சீதையைத் தழுவ ஆசை கொண்டாய். அதனால் பழிகொண்டு உயிர் துறந்து இன்று நிலமகளை எண்திசை யானைகளைக் தடுத்த பெரும் மார்பால் தழுவிக்கொண்டு கிடக்கிறாய். (இதன் தொடர்புடைய பாடல்கள் கீழே) 

யுத்த காண்டம், இராவணன் வதைப் படலம்      
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு; சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர், நீயும் களப் பட்டாயே!
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனித்தான் எண்ணுதியோ? எண்        
இல்ஆற்றல்அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள் தம் பிரளயமே! அமரர் தம் கூற்றே!(9921)

ஓர் ஆசை ஒருவன் மேல்  உயிர் ஆசைக்  குலமகள் மேல் உடைய காதல்,
தீர் ஆசை; ஆசை  பழிஎன்றேன்; எனை  முனிந்த முனிவு ஆறித் தேறினாயோ?
போர் ஆசைப் பட்டு எழுந்த குலம் முற்றும் பொன்றவும் தான் பொங்கி நின்ற
பேர் ஆசை பெயர்ந்ததோபெயர்ந்து ஆசைக் கரி இரியப் புருவம் பேர்த்தாய்! (9922)

அன்று எரியில் விழு வேதவதி இவள் காண்; உலகுக்கு ஓர் அன்னைஎன்று
குன்று அனைய நெடுந்தோளாய்! கூறினேன்அது மனத்துள் கொள்ளாதே போய்,
உன் தனது குலம் அடங்க, உருத்து அமரில் படக் கண்டும், உறவு ஆகாதே
பொன்றினையே! இராகவன் தன் புய வலியை இன்று அறிந்து, போயினாயோ! (9923)

மன்றல் மா மலரானும், வடி மழு வாள் படையானும், வரங்கள் ஈந்த
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன;
அன்று தான் உணர்ந்திலையே ஆனாலும் அவன் நாட்டை அணுகா நின்ற
இன்றுதான் உணர்ந்தனையே இராமன் தான் யாவருக்கும் இறைவன் ஆதல்? (9924) 

வீர நாடு உற்றாயோ? விரிஞ்சனாம் யாவர்க்கும் மேலான் முன்பன்
பேரன் நாடு உற்றாயோ? பிறை சூடும்  பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ?
ஆர் அணா! உன் உயிரை, அஞ்சாதே, கொண்டு அகன்றார்? அது எலாம் நிற்க,
மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ? குளிர்ந்தானோ மதியம் என்பான்?  (9925)

 

கொல்லாத மைத்துனனைக் கொன்றாய்என்று அதுகுறித்துக் கொடுமை சூழ்ந்து,

பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி, நெடும் பாரப் பழி தீர்த்தாளே!

நல்லாரும் தீயாரும் நரகத்தார் துறக்கத்தார் நம்பி! நம்மோடு 

எல்லாரும் பகைஞரேயார் முகத்தே விழிக்கின்றாய்? எளியை ஆனாய்!. (9926)

 

போர்மகளை, கலை மகளை, புகழ் மகளை தழுவிய கை பொறாமை கூர,

சீர் மகளை, திருமகளை, தேவர்க்கும் தெரிவு அரிய தெய்வக் கற்பின்

பேர் மகளைத் தழுவுவான் உயிர் கொடுத்து, பழி கொண்ட பித்தா! பின்னைப்

பார் மகளைத் தழுவினாயோ திசையானைப் பணை இறுத்த பணைத்த மார்பால் (9927)


மண்டோதரியின் புலம்பல்

அலைநீரைக் கொண்ட கடலில் மின்னல் வீழ்வது போல வலிமையும் ஆற்றலும் உடைய இராவணனின் சடலத்தின் மீது விழுந்த மயனின் மகளான மண்டோதரி மரங்களும் மலைகளும் கூட வருந்துமாறு கீழ்க்கண்டவாறு புலம்புகிறாள்.

அம்மா! கொடியவளான எனக்கு வந்துள்ள நிலையை என்னவென்று சொல்வது?  அரக்கர்களின் வேந்தனான இராவணன் இறந்தபின்பா நான் இறக்க வேண்டும்? ‘அவனுக்கு முன் இறக்கவேண்டும்என்று நான் வைத்திருந்த கொள்கையை  விட்டுவிட்டேனே. அதனால் என் முன்னே மகுடம் சூடிய என் கணவனின் தலைகள் மண்ணில் விழுந்தன. என் கணவரின் இறுதி முடிவு இப்படியாகவா இருக்க வேண்டும். ஐயோ பாவம்.

வெள்ளை எருக்கம் பூவைத் சூடும் சிவனின் கைலாய மலையைத் தூக்கிய இராவணனின் உடலை எள் இருக்க இடமின்றித் துளைத்துள்ள இராமனின் அம்பு உயிரைத் தேடி துளைத்ததா? அல்லது தேன் நிறைந்த மலர்களைக் கூந்தலில் சூடும் சீதையின் மீது கொண்ட காதல் உள்ளே எங்காவது ஒளிந்திருக்கும் என்று தேடி, தேடி துளைத்ததா?    
    
இராமன் செலுத்திய அம்புகள் ஆரங்கள் அணிந்த உன் மார்பை அகன்ற குகைகள் அளவுக்குப் பிளந்து சென்று அப்பால் விழுந்தன. நீ போரில் தோற்றுப்போய், வீரமற்று, வலிமை குன்றி, பெற்ற வரங்களை இழந்து வீழ்ந்து கிடக்கிறாய். ஓர் அம்பா உன் உயிரைப் போக்கியது! அப்படிப்பட்ட அம்பை எய்த மானுடனின் வலிமை எத்தகையதாக இருக்கவேண்டும்!       
மகளிருக்கு அணியாகத் திகழும் சீதையின் அழகும், அவளது பெருமைக்குரிய கற்பும், இராவணன் சீதை மீது கொண்ட காதலும், சூர்ப்பனகை இழந்த மூக்கும், தசரதனின் ஆணையால் தவவிரதம் பூண்டு இராமன் மேற்கொண்ட வனவாசமும் இந்திரன் செய்த பெரும் தவத்திற்குப் பயனாகின.

தேவர்கள், எண்திசை யானைகள், மும்மூர்த்திகள், மற்றவர்கள் ஆகிய அனைவரையும் விட வலிமை மிக்கவனான உனக்கு மரணம் ஏது என்று இறுமாப்போடு இருந்தேன். ஆவலோடும் வருந்தியும் நீ செய்த கடல் போன்ற தவத்திற்கும், பெற்ற வரம் என்ற காவலுக்கும் இணையான வலிமை உடைய ஒரு மானுடன் இருப்பான் என்று நான் எண்ணவே இல்லையே.

மூன்று கோடி ஆண்டுகள் ஆயுள் கொண்டவன் நீ என்றும் அறிஞர்களாலும் அறுதியிட்டு சொல்லமுடியாத உன் தோள் வலிமைக்கு அழிவே இல்லை என்றும் நினைத்திருந்தேன். நீ பெற்றிருந்த வரம் என்னும் பாற்கடலைச் சீதை என்ற பிரை கலந்து திரித்து உன்னை அழித்துவிடும் என்று அறியாமல் போய்விட்டேன்.

உலகத்தின் இயல்பை யார் அறிவார்? பதினான்கு உலகங்களும் அஞ்சும் வீரனான இராவணன் இறந்து விண்ணுலகம் போய்விட்டார். கணுக்கள் மிகுந்த கரும்பு வில்லைக் கொண்டு மலர் அம்புகளை நாள் முழுவதும் தோள் வருந்துமாறு எய்யும் மன்மதனின் இலக்கை இராமன் என்ற மனிதன் தான் பெற்ற வரத்தால் அழித்துவிட்டார்.

மேலே சொன்னவாறெல்லாம் கூவி அழுத மண்டோதரி, ஏக்கத்துடன் எழுந்து பொன் அணிகலன்கள் அணியப்பட்ட நிகரற்ற இராவணனது மார்பைத் தனது கரங்களால் தழுவி, அழைத்து பெருமூச்சு விட்டு உயிர் துறக்கிறாள். இதன் தொடர்புடைய பாடல்கள் கீழே.

9940 பாடல் சிறை மீட்ட செய்யுள்என்ற சிறப்பைப் பெறுகிறது. அதற்கான காரணமாக பின்வரும் விளக்கம் கூறப்படுகிறது. 3144 பாடலில் மயிலின் சாயல் கொண்ட சீதையை இராவணன் தன் இதயத்தில் சிறை வைத்தான் என்கிறார் கம்பர். அப்படி சிறை வைக்கப்பட்ட சீதையை, 9940 பாடலில் இராமன் தன் வாளியை இராவணனது உடலில் எய்து விடுதலை செய்கிறான்.

யுத்த காண்டம், இராவணன் வதைப் படலம்      

தரங்க நீர் வேலையின், தடித்து வீழ்ந்தென,
உரங்கிளர் மதுகையான் உருவின் உற்றனள்;
மரங்களும் மலைகளும் உருக வாய் திறந்து
இரங்கினள் – மயன்  மகள்  இனைய பன்னினாள். (9938)

அன்னேயோ! அன்னேயோ! கொடியேற்கு  அடுத்தவாறு! அரக்கர் வேந்தன்

பின்னேயோ இறப்பது? முன் பிடித்திருந்த  கருத்து அதுவும் பிடித்திலேனோ?
முன்னேயோ விழுந்ததுவும் முடித் தலையோ? படித் தலைய முகங்கள் தானோ?
என்னேயோ? என்னேயோ? இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்!. (9939) 

வெள் எருக்கன் சடை முடியான் வெற்பு எடுத்த திருமேனி, மேலும் கீழும்
எள் இருக்கும் இடன் இன்றி , உயிர் இருக்கும் இடன் நாடி இழைத்தவாறோ!
கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்,
உள் இருக்கும் எனக் கருதிஉடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி. (9940)

மயிலுடைச்  சாயலாளைவஞ்சியா  முன்னம்நீண்ட
எயிலுடை  இலங்கை  வேந்தன்  இதயமாம்  சிறையில்  வைத்தான்.
அயிலுடை  அரக்கன்  உள்ளம்அவ்வழி  மெல்ல  மெல்ல
வெயிலுடை  நாளில்  உற்ற  வெண்ணெய் போல்  வெதும்பிற்று  அன்றே .   (3144)

ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் எனத் திறந்து இவ்வுலகுக்கு அப்பால்,
தூரம் போயின ஒருவன் சிலை துரந்த சரங்களே: போரில் தோற்று
வீரம் போய் உரம் குறைந்து  வரம் குறைந்து வீழ்ந்தானேவேறே! கெட்டேன்!
ஓர் அம்போ உயிர் பருகிற்று இராவணனை? மானுடவன் ஊற்றம் ஈதோ? (9941)

காந்தையர்க்கு அணி அனைய சானகியார் பேரழகும், அவர்தம் கற்பும்,
ஏந்து புயத்து இராவணனார் காதலும் அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும்
வேந்தர் பிரான் தயரதனார் பணியதனால் வெங் கானில் விரதம் பூண்டு
போந்ததுவும்கடை முறையே புரந்தனார் பெருந்தவமாய்ப் போயிற்றுஅம்மா. (9942) 

தேவர்க்கும் திசைக்கரிக்கும், சிவனார்க்கும், அயனார்க்கும், செங்கண் மாற்கும்
ஏவர்க்கும், வலியானுக்கு என்று உண்டாம் இறுதி? என ஏமாப்புற்றேன்;
ஆவற்கண் நீ உழந்த அருந் தவத்தின் பெருங் கடற்கும், வரம் என்று ஆன்ற
காவற்கும், வலியான் ஓர் மானுடவன் உளன் எனக் கருதினேனோ? (9943) 

அரை கடையிட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும், முன் அறிஞர்க்கேயும்
உரைகடை யிட்டு அளப்ப அரிய பேர் ஆற்றல், தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை;
திரை கடையிட்டு  அளப்பரிய வரம் என்னும் பாற்கடலைச் சீதை என்னும் 
பிரை கடையிட்டு அழிப்பதனை அறிந்தேனோ, தவப் பயனின்  பெருமை பார்ப்பேன்?(9944)

ஆர் அனார் உலகு இயற்கை அறிதக்கார்? அவை ஏழும் ஏழும் அஞ்சும்,
வீரனார் உடல் துறந்து விண் புக்கார்கண் புக்க வேழ வில்லால்,
நார நாள் மலர்க் கணையால், நாள் எல்லாம், தோள் எல்லாம்  நைய எய்யும்,
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே, வரத்தினாலே (9945)

என்று அழைத்தனள் ; ஏங்கி எழுந்து அவன்
பொன் தழைத்த பொரு அரு மார்பினைத்
தன் தழைக் கைகளால் தழுவி தனி
நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள். (9946)



No comments:

Post a Comment