Friday, January 27, 2017

கம்பராமாயணம் - திரு அ.கி.வரதராசனுடன் சந்திப்பு 5
ஜனவரி 20, 2017 - ஜூரோங் ஈஸ்ட் பொது நூலகம்

திரு அ.கி.வரதராசனின் உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை

கம்பனின் விகிதாச்சாரக் கணக்கு

யார் சிறந்தவர் அல்லது எது சிறந்தது என்ற கேள்வி எழும்போது ஒப்பிடுதல் தவிர்க்க முடியாததாகிறது. அதுவும் உடன்பிறந்தவர்களுக்கு இடையேயான ஒப்பிடுதல் காலம், காலமாக தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. கம்பனும் சில கதாபாத்திரங்களின் வழியாக அந்த ஒப்பீட்டைச் செய்யத் தவறவில்லை. காப்பியநாயகன் இராமனை மூன்று சகோதரர்களில் பரதனோடு மட்டும் வெவ்வேறு காண்டங்களில் தொடர்ந்து ஒப்பிடும் பாடல்களைப் பார்க்கலாம்

பொதுவாக உடன்பிறந்தவர்களுக்கு இடையேயான ஒப்பீட்டைப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் செய்வது வழக்கம். கம்பனின் காப்பியமும் அந்த வழக்கத்தைச் சரியாகச் செய்திருக்கிறது. நான்கு சூழல்களில் தாய் கோசலை, ஆசிரியர் விசுவாமித்திரர், நண்பன் குகன் ஆகியோரால் பரதன் இராமனோடு ஒப்பிட்டுப் பேசப்படுகிறான்.

விசுவாமித்திரர் வழியாக கம்பன் காட்டும் கணக்கு
விசுவாமித்திரர் ஜனகனின் சபையில் இராமனின் குலத்தைப் பற்றி எடுத்து இயம்புகிறார். கோசலை இராமனைப் பயந்தாள் என்று கூறிவிட்டு அடுத்ததாக பரதனின் பெருமையைப் பற்றி குறிப்பிடுகிறார். இழித்துரைக்க இயலாத குணத்தாலும் அழகாலும் இதோ இந்த இராமனையே உரித்து வைத்தவனாகிய பரதனைக் கேகயர் நாட்டு அரசனின் புதல்வி கைகேயி பயந்தாள் என்கிறார். விசுவாமித்திர்ர் வாய்ச்சொற்களின் வழியாக நாம் ஒரு முடிவுக்கு வரமுடிகிறது. கம்பன் இப்பாடலில் இராமனுக்கும் பரதனுக்கும் இடையே போட்ட விகிதாச்சாரக் கணக்கு 1:1. (இதன் தொடர்புடைய பாடல்கள் கீழே) 

பால காண்டம் – குலமுறை கிளத்து படலம் 

விரிந்திடு தீவினை செய்த வெவ்விய தீவினையாலும்
அருங் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும்
இருங் கடகக் கரதலத்து இவ் எழுத அரிய திருமேனிக்
கருங்கடலைச் செங் கனி வாய்க் கவுசலை என்பாள் பயந்தாள். (656)

தள்ள அரிய பெரு நீதித் தனி ஆறு புக மண்டும்
பள்ளம் எனும் தகையானை பரதன் எனும் பெயரானை
எள்ள அரிய குணத்தாலும் எழிலாலும் இவ் இருந்த
வள்ளலையே அனையானை கேகயர்கோன் மகள் பயந்தாள் (657)

அரு வலிய திறலினர் ஆய், அறம் கெடுக்கும் விறல் அரக்கர்
வெருவரு திண் திறலார்கள் வில் ஏந்தும் எனில் செம் பொன்
பரு வரையும். நெடு வெள்ளிப் பருப்பதமும் போல்வார்கள்.
இருவரையும். இவ் இருவர்க்கு இளையாளும் ஈன்று எடுத்தாள். (658)
 
கோசலை வழியாக கம்பன் காட்டும் கணக்கு
இராமன் வனவாசத்திற்குச் செல்ல தயாராகிறான். போகும் முன், மகுடம் சூடி அரசனாக தன் மகன் வருவான் என்ற ஆசையோடு காத்திருக்கும் தாய் கோசலையைச் சந்திக்கச் செல்கிறான். விதிமுன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக, அவள் முன்னால் சென்று நிற்கும் இராமனின் கோலத்தைக் கண்டு அவள் வினவ உன் அன்புக்கு பாத்திரமான பரதன் முடி சூடுகின்றான் என்கிறான் இராமன். முதலில் பிறந்தவனை விடுத்து இரண்டாவதாக பிறந்தவனுக்கு அரசாட்சி என்பது முறைமை இல்லைதான். இருந்தாலும் பரதன் குணத்தில் உன்னைவிட மூன்று மடங்கு சிறந்தவன். உன்னைவிட நல்லவன். குறை சொல்ல முடியாதவன் என்று பரதனின் முடிசூட்டுக்கு மகிழ்ச்சி தெரிவிக்கிறாள் கோசலை. கம்பன் கோசலையின் வழியாக காட்டும் விகிதாச்சாரக் கணக்கு 1:3 (இதன் தொடர்புடைய பாடல்கள் கீழே) 

அயோத்தியா காண்டம் – நகர் நீங்கு படலம் 

குழைக்கின்ற கவரி இன்றி, கொற்ற வெண்குடையும் இன்றி,
இழைக்கின்ற விதி முன் செல்ல, தருமம் பின் இரங்கி ஏக,
மழைக்குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும்என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன், ஒரு தமியன் சென்றான்.(1606)






புனைந்திலன் மௌலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்?’ என்னும் ஐயத்தாள் நளின பாதம்.
வனைந்த பொன் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி,
நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடு முடி புனைதற்கு?’ என்றாள். (1607)


மங்கை அம் மொழி கூறலும், மானவன்
செங் கை கூப்பி, ‘நின் காதல் திரு மகன்,
பங்கம் இல் குணத்து எம்பி, பரதனே,
துங்க மா முடி சூடுகின்றான்என்றான்.(1608)

முறைமை அன்று என்பது ஒன்று உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்; நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்எனக் கூறினள் – நால்வர்க்கும்
மறு இல் அன்பினில், வேற்றுமை மாற்றினாள். (1609)

என்று, பின்னரும், ‘ மன்னவன் ஏவியது
அன்று எனாமை, மகனே! உனக்கு அறன்;
நன்று, நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து,
ஒன்றி வாழுதி, ஊழி பலஎன்றாள். (1610)

தாய் உரைத்த சொல் கேட்டுத் தழைக்கின்ற
தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான்,
நாயகன், எனை நல் நெறி உய்ப்பதற்கு
ஏயது உண்டு, ஒர் பணிஎன்று இயம்பினான்.(1611)

ஈண்டு உரைத்த பணி என்னைஎன்றவட்கு.
ஆண்டு ஓர் ஏழினொடு ஏழ், அகன் கானிடை,
மாண்ட மா தவத்தோருடன் வைகி, பின்,
மீண்டு நீ வரல் வேண்டும்என்றான்என்றான்.(1612)

குகன் வழியாக கம்பன் காட்டும் கணக்கு
வனத்தில் இருக்கும் இராமனைச் சந்திக்க தனது சேனையோடு வருகிறான் பரதன். முதலில் அவன் வருகையை அறிந்து கடும் கோபம் கொள்கிறான் குகன். ஆனால் பரதனின் தோற்றத்தைக் கண்டவுடன் இவன் என் இராமனைப் போலவே இருக்கிறான். எம்பெருமானுக்குப் பின் பிறந்தவர்கள் தவறிழைக்க வாய்ப்பில்லை என்று எண்ணுகிறான். கங்கை கரையில் தன்னைச் சந்திக்கும் பரதனை ஆரத் தழுவிகிறான் குகன். பரதன் அவனிடம் என் தந்தை முறை வழுவினார். அதை சரிசெய்ய மன்னனை (இராமனை) அழைத்துச் செல்ல வந்தேன் என்றவுடன் குகனுக்கு பரதனின் உயர்ந்த குணம் புலப்படுகிறது. தாய் கேட்ட வரத்தால் தந்தை உனக்கு அளித்த ஆட்சிப் பொறுப்பை தீயது என உதறித் தள்ளிவிட்டு வந்திருக்கும் உனக்கு ஆயிரம் இராமர்கள் இணையாவரோ என்று பாராட்டுகிறான். இங்கு இராமனுக்கும் பரதனுக்கும் காட்டப்படும் கணக்கு 1:>1000 (இதன் தொடர்புடைய பாடல்கள் கீழே) 

அயோத்தியா காண்டம் – கங்கை காண் படலம் 

வற்கலையின் உடையானை, மாசு அடைந்த மெய்யானை,
நற் கலை இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை,
கல் கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்;
வில் கையினின்று இடை வீழ, விம்முற்று, நின்று ஒழிந்தான். (2331)

நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்; தவ வேடம் தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை; திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு?’ என்றான். (2332)

உண்டு இடுக்கண் ஒன்று உடையான், உலையாத அன்பு உடையான்,
கொண்ட தவ வேடமே கொண்டிருந்தான் குறிப்பு எல்லாம்
கண்டு, உணர்ந்து, பெயர்கின்றேன் காமின்கள் நெறிஎன்னா,
தண் துறை, ஒர் நாவாயில், ஒரு தனியே தான் வந்தான்.(2333)

வந்து எதிரே தொழுதானை வணங்கினான்; மலர் இருந்த
அந்தணனும் தனை வணங்கும் அவனும், அவன்த அடிவீழ்ந்தான்.
தந்தையினும் களிகூரத் தழுவினான் - தகவு உடையோர்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிறுக்கும் சீர்த்தியான் (2334)

தழுவின புளிஞர் வேந்தன் தாமரைச் செங்கணானை,
எழுவினும் உயர்ந்த தோளாய்! எய்தியது என்னை?’ என்ன,
முழுது உலகு அளித்த தந்தை முந்தையோர் முறையினின்றும்
வழுவினன்; அதனை நீக்க, மன்னனைக் கொணர்வான்என்றான். (2335)

கேட்டனன், கிராதர் வேந்தன்; கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி,
மீட்டு்ம், மண் அதனில் வீழ்ந்தான்; விம்மினன், உவகை வீங்க;
தீட்ட அரு மேனி மைந்தன் சேவடிக் கமலப் பூவில்
பூட்டிய கையன், பொய் இல் உள்ளத்தன், புகலலுற்றான்; (2336)

தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணிதன்னை,
தீவினைஎன்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்! தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியன் அம்மா! (2337)

என் புகழ்கின்றது, ஏழை எயினனேன்? இரவி என்பான்-
தன் புகழ்க் கற்றை, மற்றை ஒளிகளைத் தவிர்க்குமாபோல்,
மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் - உயர் குணத்து உரவுத் தோளாய்! (2338)

மீண்டும் கோசலை வழியாக கம்பன் காட்டும் கணக்கு
இராமனின் வருகை தாமதமாவதால் பரதன் தீக்குளிக்கத் தயாராகிறான். அந்தச் செய்தியைக் கேட்ட கோசலை அழுது அரற்றிக்கொண்டு வருகிறாள். எண்ணற்ற இராமர்கள் வந்தாலும் உன் அருளுக்கு அருகில் நெருங்க முடியுமா? உனது உயிர் பிரிந்தால் அதன் பிறகு இந்த மண்ணிலும் வானிலும் உள்ள உயிர்கள் வாழுமா? என்று கேட்டு அரற்றுகிறாள். 1: ∞ என்ற கணக்கை இங்கு கம்பன் முன்வைக்கிறான். (இதன் தொடர்புடைய பாடல்கள் கீழே) 

யுத்த காண்டம் – மீட்சிப் படலம் 

அப்பொழுதின் வ் உரை சென்று அயோத்தியினின்  இசைத்தலுமே
அரியை ஈன்ற  ஒப்பு எழுத ஒண்ணாத கற்புடையாள் வயிறு புடைத்து,
அலமந்துஏங்கி  இப்பொழுதே உலகு இறக்கும் யாக்கையினை   முடித்து
ஒழிந்தால் மகனே என்னா! வெப்பு எழுதினாலனைய மெலிவுடையாள்
கடிது ஓடி விலக்க வந்தாள் (10175)

மந்திரியர்தந்திரியர்,   வள   நகரத்தவர், மறையோர், மற்றும்  சுற்ற 
சுந்தரியர் எனப் பலரும் கை தலையில் பெய்து இரங்கித் தொடர்ந்து செல்ல
இந்திரனே  முதல் ஆய இமையவரும் முனிவரரும்  இறைஞ்சி ஏத்த
ந்தர   மங்கையர்  வணங்க அழுது அரற்றி  பரதனை வந்து
அடைந்தாள் அன்றே (10176)
 
எண்  இல் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின்   அருளுக்கு   அருகு   ஆவரோ? 
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்,  
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ (10181)

மேலே சொன்ன பாடல்களின் வழியாக பரதனின் கதாபாத்திரம் இராமனைவிட உயர்த்திக் காண்பிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். ஆனால் காப்பியம் எப்போதும் காப்பியத் தலைவனையே உயர்ந்த நிலையில் வைத்து பாடப்படுவது மரபு. அப்படியென்றால் இந்த முரணுக்கான காரணத்தை ஆராயும்போது இப்பாடல்கள் சொல்லப்படும் தருணங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

விசுவாமித்திரர் இராமனையும் பரதனையும் சமமான நிலையில் வைத்தாலும் பரதனின் நல்லியல்புகளுக்கு அளவுகோலாக இராமனை முன்வைப்பதன் மூலம் காப்பிய நாயகனின் சிறப்புக்கு வலு சேர்க்கிறார்.

இராமனைவிட பரதன் மூன்று மடங்கு சிறந்தவன் என்று கோசலை கூறுவதற்கான காரணம் ஆட்சிப் பொறுப்பு பரதனுக்கு அளிக்கப்பட்டதற்காக தனது மகனின் மனம் வருந்த வாய்ப்பிருப்பதால் ஒரு தாயாக அவள் மனம் அந்த முடிசூட்டிற்கு ஒரு நியாயம் கற்பிக்க முனைகிறது. எனவேதான் முறைமை இல்லாவிட்டாலும் கூட உன்னைவிட பரதன் சிறந்தவன் என்று சொல்லி புதல்வர்களுக்கு இடையே உருவாக வாய்ப்பிருக்கும் வேற்றுமைகளைக் களைகிறாள். மகனுக்குத் தாய் கூறும் தேற்றுதல் வார்த்தைகள் இவை என்றே கருத்தில் கொண்டால் இராமனின் சிறப்பு இதனால் தாழவில்லை என்பது தெளிவாகும்.

முதலில் பரதனின் மீது கோபம் கொள்ளும் குகன் கடுமையான சொற்களால் அவனை வசை பாடுகிறான். ஆனால் பரதனைச் சந்தித்த மறுநொடி பரதனைப் பற்றிய அவனது பார்வை மாறுகிறது. இவ்வளவு நல்லவனை நான் கடிந்து பேசிவிட்டேனே என மனம் வருந்துகிறான். ஆயிரம் இராமர்கள் வந்தாலும் உனக்கு இணையாக மாட்டார்கள் என்று சொல்வதின் வழியாக தான் செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் தேடிக்கொள்கிறான். குகனின் குற்ற உணர்ச்சியால் விளைந்த இந்த வார்த்தைகள் இராமனின் புகழைக் குறைக்கவில்லை.

பரதன் தீக்குளிக்கும் தருணத்தில் எண்ணற்ற இராமர்களுடன் ஒப்பிடப்படுவதற்கான காரணம் அவனது தற்கொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோசலையின் பதற்றமே காரணமாகும். இவை உணர்ச்சி வேகத்தில் வந்து விழுந்த வார்த்தைகள் என்று கருதினால் காப்பிய நாயகன் இராமனின் உயர் நிலைக்கு எந்த பங்கமும் இல்லை என்பது தெளிவாகும்.


No comments:

Post a Comment