Thursday, February 2, 2017

ராமன் வரும் வரை காத்திரு - ராமசுவாமி சம்பத்
பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம்

கம்பராமாயணத்தை அறியும் முயற்சியில் நான் வாசித்த ஐந்தாவது நூல் இது. இராமாயண காவியத்தில் இராமனின் வருகைக்காக காத்திருந்தவர்களைப் பற்றி பேசுகிறது இந்நூல். இராம காரியத்திற்குத் துணை போக காத்திருந்தவர்களின் கதை தொகுப்புதான் இராமாயணம் என்ற கருத்தை முன்வைத்து இதை எழுதியுள்ளார் நூலாசிரியர்.

ஒருவருக்காக காத்திருத்தல் தொடக்கத்தில் ஆர்வமாக இருந்தாலும் காலம் கழிய, கழிய ஒருவித எரிச்சலையும் சலிப்பையும் தரக்கூடியது. ஆனால் அவதார புருஷன் இராமனின் வரவுக்காக ஒவ்வொருவரும் தவம் செய்வது போல  காத்திருந்தனர். தாங்கள் எடுத்த பிறவியின். நோக்கத்தை அறிய காத்திருந்தனர் சிலர். தாங்கள் பெற்ற சாபத்திலிருந்து விடுதலை பெற காத்திருந்தவர்கள் சிலர். இப்பிறவியிலிருந்து முக்தி அடைய காத்திருந்தனர் சிலர். இவர்கள் அனைவரையும் இந்நூலில் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

வசிட்டர் தன் மானசீக தந்தையான பிரமதேவரிடம் புவி வாழ்க்கை எனக்கு அலுத்துவிட்டது. என்னை சத்தியலோகத்திற்கு அழைத்துக்கொள்ளுங்கள்என்று வேண்டும்போது ஆதிவிஷ்ணுவே சீடனாக அமையப் போகும் பாக்கியம் உனக்கு கிட்டப்போகிறது. அதுவரை காத்திருஎன்று கூற வசிட்டரும் இராமனுக்காக காத்திருந்தார்.

மனநிம்மதி இல்லாமல் வாடிய விசுவாமித்திரரிடம் அரிச்சந்திரனையும் சந்திரமதியையும் பிரித்த பாவத்தின் விளைவுதான் இது. அதே வம்சத்தில் உதிக்க இருக்கும் அரசிளங்குமரனுக்கு வாழ்க்கைத்துணையைத் தேடி திருமணம் செய்து வைப்பதுதான் இதற்கான பரிகாரம்என்று நாரதர் கூற விசுவாமித்திரரும் இராமனுக்காக காத்திருந்து உரிய காலத்தில் அவனைச் சீதைக்கு மணமுடித்து வைக்கிறார்.

இந்திரனால் வஞ்சிக்கப்பட்டு தனது கணவன் கௌதம முனிவரின் சாபத்துக்கு ஆளாகி கல்லாய் கிடக்கும் அகலிகை  இராமனின் பாதம் தன் மீது படுவதற்காக காத்திருக்கிறாள். அவளது தவம் வீணாகவில்லை. மிதிலைக்குப் போகும் வழியில் இராமனின் பாதம் பட அகலிகை உயிர்த்தெழுந்து கணவனோடு இணைகிறாள்.

மிதிலையில் அண்ணலும் நோக்க அவளும் நோக்க', தான் பிறவி எடுத்ததும், இத்தனை நாட்கள் காத்திருந்ததும் இவனுக்காகத்தான் என்பதை சீதை உணர்கிறாள். சிவதனுசுவை இராமன் எப்படியாவது நாண் ஏற்ற வேண்டுமே என்ற பதற்றத்தில் காத்திருக்கிறாள். அவளது எதிர்பார்ப்பை நிறைவேற்றி அவளைக் கரம்பிடிக்கிறான் இராமன்.

சீதையை மணம் முடித்து திரும்பும் வழியில் இராமனை எதிர்கொள்கிறார் பரசுராமன். “இந்த நாராயணதனுசை நாணேற்றிக் காண்பிஎன்று சவால் விடுகிறார். இராமன் புன்முறுவலுடன் அதை நாணேற்றுகிறான்.  “உன்போன்ற மாவீரனைக் காணத்தான் இத்தனை காலம் காத்திருந்தேன். விஷ்ணுதனுசு சேரவேண்டிய இடத்தில் சேர்ந்துவிட்டதுஎன்று மகிழ்ச்சியுடன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விடைபெறுகிறார் பரசுராமன்.

அண்ணலே! உங்கள் பாதுகைகளே இனி நாட்டை ஆளப் போகிறது. நீங்கள் அயோத்திக்குத் திரும்பும் வரை நான் துறவிக்கோலத்தோடு உங்களுக்காக காத்திருப்பேன்என்று கூறிய பரதன் பதினான்கு ஆண்டுகள் நந்தி கிராமத்தில் காத்திருக்கிறான்.

குபேரனால் சபிக்கப்பட்ட ஒரு கந்தர்வன் விராதன் என்ற பெயரில் அரக்கனாக வாழ்கிறான். தன் சாபம் நீங்க அவன் இராமனின் வருகைக்காக காத்திருக்கிறான். தண்டகாரண்யத்துக்கு  வரும் இராமனை எதிர்கொண்டு சீதையைக் கவர முயலும் விராதனைக் கொன்று அவனுக்குச் சாப விமோசனம் அளிக்கிறான் இராமன்.

தண்டகாரண்யத்தில் வசிக்கும் சரபங்க முனிவரை இந்திரன் சந்திக்கிறான். “உமது தவத்தை மெச்சி பிரமதேவர் சத்யலோகத்திற்கு அழைத்து வருமாறு கூறினார்என்று உரைக்கிறான். அதற்கு சரபங்கர் நான்  திருமாலின் அவதாரமான இராமனுக்காக காத்திருக்கிறேன். அவனைத் தரிசித்தபின் நான் என் தவவலிமையால் நாரணன் தாள் சேர்வேன்என்று மறுமொழி உரைக்கிறார். அவ்வாறே ராமனின் தரிசனம் பெற்று உவகை அடைகிறார்.

இராவணன் சீதையை தூக்கிச் செல்லும் தருணத்தில் அவனை எதிர்த்து போராடி தோல்வியுற்று வீழ்ந்து கிடக்கும் சராயு தன் உயிரைக் கையில் பிடித்தபடி இராமனக்கு காத்திருக்கிறது. இறுதியில் நடந்தவற்றை இராமனுக்கு சொல்லிவிட்டு உயிர் துறக்கிறது. ஈமச் சடங்குகளை இராமன் செய்கிறான்.தசரதனுக்கு கிடைக்காத பேறு சராயுவிற்கு கிடைக்கிறது.

சீதையைத் தேடி செல்லும் வழியில் மற்றொரு கந்தர்வன் கபந்தன் இந்திரனது சாபத்திற்கு ஆளாகி இராமனுக்காக காத்திருக்கிறான். இராமனது வருகையால் சாபம் நீங்கிய கபந்தன் சீதையை மீட்க சுக்கிரவனைச் சென்று சந்திக்கும் ஆலோசனையைக் கூறி செல்கிறான்.

போகும் வழியில் மதங்க முனிவரின் ஆசிரமத்தில் தனக்காக காத்திருக்கும் சபரியைச் சந்திக்கிறான் இராமன். “இராம தரிசனமே மோட்சத்திற்கு வழி வகுக்கும் என்று என் ஆசான் மதங்க முனிவர் கூறினார். அதனால் இத்தனை நாட்கள் உனக்காக காத்திருந்தேன்என்று கூறிவிட்டு அக்கினியில் ஏறி விண்ணுலகு அடைகிறாள் சபரி.

திருமால் இராமாவதாரம் எடுக்கும் முன் அனைத்து தேவர்களையும் தன் காரியத்திற்கு உதவும் பொருட்டு பூமியில் பிறக்க பணிக்கிறார். அப்போது பரமேஸ்வரன் நானும் உங்களுக்கு உதவ பூமியில் அவதாரம் எடுக்கிறேன்என்று வாயுமைந்தனாக பிறக்கிறார். தனது பிறவியே இராம நாமம் சொல்லவும் சீதாராமனை நெஞ்சில் சுமக்கவும்தான் என்று அனுமன் இராமனுக்காக காத்திருந்து பணிவிடை செய்கிறான்.

இன்னும் எத்தனையோ கதாபாத்திரங்கள் இராமனின் வருகைக்கு காத்திருந்து காப்பியத்தையும் அவதாரத்தின் நோக்கத்தையும் தாங்கி பிடிக்கிறார்கள்.

சுவையான தகவல்கள்

  • வால்மீகி, கம்பன், துளசிதாசர் இயற்றிய காவியங்களில் இல்லாத பல விவரங்கள் ஆனந்த இராமாயணம்' போன்ற நூல்களில் புதைந்துள்ளன. அவற்றை ஆராய்ந்து அம்ரீதா சியாம் (ஆங்கிலம்), என்.ஆர்.நவ்லேகர் (மராட்டி), மொராரி பாபு (இந்தி) போன்றோர் இயற்றிய நூல்களில் கைகேயி முக்காலமும் அறிந்த ஞானியாக சித்தரிக்கப்படுகிறாள். பறவைகள் மொழி கற்ற அவள் ஒருமுறை இரண்டு பறவைகள் பேசுவதைக் கேட்க நேர்கிறது. அதன்படி அயோத்தியில் அடுத்த பதினான்கு ஆண்டுகள் யார் ஆட்சி பொறுப்பில் அமர்ந்தாலும் அவர்கள் இறப்பது உறுதி என்று அறிந்தவுடன் இராமனைக் காக்கும் பொருட்டு அவள் தனது நாடகத்தை நடத்துகிறாள். தன் மகன் பரதன் அரியணையில் அமர சம்மதிக்கமாட்டான் என்பதையும் அவள் அறிந்திருந்தாள்.

  • சேது பாலம் கட்டும்போது கற்கள் நீரில் மூழ்காமல் எப்படி மிதந்தன என்பதற்கும் ஒரு கதை உள்ளது. வானர கூட்டத்தில் இருந்த நளன் ,நீலன் என்ற இரண்டு வானரங்களும் சுதீட்சனர் என்ற முனிவரிடம் பெற்ற சாபம் அது. அவர்கள் எந்த பொருளை நீரில் போட்டாலும் அது மிதக்க கடவது என்பதுதான் அச்சாபம். அது சாபமானலும் மிதவைப் பாலம் தந்து இராம அவதாரத்திற்கு உதவியது.

  • துளசிதாசர் அனுமனைப் போற்றி எழுதியஅனுமான் சாலிசா' என்ற நூலில் ஒரு யுக ஆயிரம் யோசனை தூரத்தில் உள்ள சூரியனைப் பழம் எனக்கருதி அதனை பறிக்கத் தாவினான் அனுமன்என வர்ணிக்கிறார். ஒரு யுகம் என்பது 12000 ஆண்டுகள், ஒரு யோசனை என்பது எட்டு மைல்கள். ஆக ஒரு யுக ஆயிரம் யோசனை என்றால் 12000*1000*8 மைல்கள். அதாவது 96000000 மைல்கள் தூரம். கிலோமீட்டர் கணக்கில் 1536000000 தொலைவில் சூரியன் உள்ளது. NASA கணக்குப்படியும் சூரியன் 1536000000 கி.மீ தூரத்தில் உள்ளது. இதைச் சுட்டிகாட்டி நம் முன்னோர்கள் வானசாஸ்திரத்தில் எத்தகைய நிபுணர்கள் என்று நூலாசிரியர் பெருமை கொள்கிறார்.

எனது பார்வை

இராமாயணத்தில் பலர் காத்திருந்தாலும் பரதனின் காத்திருப்புதான் மிக உன்னதமானது என்று தோன்றுகிறது. அறத்தின் உச்சத்தில் பரதன் இருக்கிறான். எண்ணற்ற இராமர்கள் வந்தாலும் பரதனின் அருகில் நெருங்க முடியாது என்ற கம்பனின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.






No comments:

Post a Comment