கடவுளும் கபாலியும்
காலை பதினோரு மணிக்கு விழிப்பு வந்தும் எழுந்திருக்கலாமா வேண்டாமா என்ற யோசனையோடு
கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான் கருணா. கருணாவைப் பற்றிச் சொல்லப் பெரிதாக ஒன்றுமில்லை.
‘கருணா = டோன்ட் கேர்’. இன்று அவனுக்குப் பெரிதாக ஒரு வேலையும்
இல்லை. இப்படி சொல்வதால் மற்ற நாட்களில் அவன் ‘பிஸி’ என்று நினைத்துவிட வேண்டாம். இதற்காக கருணா ‘வேலை இல்லாத வெட்டி’ என்றும் நினைக்க வேண்டாம். அவன் ஐ.டி.
கம்பெனியில் பணி புரிகிறான். ஐ.டி. கம்பெனியில் எப்படி வேலை செய்யாமல் இருக்கமுடியும்? என்று கேட்டால் கருணாவால் முடியும். தன்னுடைய
வேலைகளை அடுத்தவர் தலையில் கட்டிவிடும் மேனேஜ்மெண்ட் டெக்னிக் தெரிந்தவன். இந்த
டெக்னிக்கிற்காகத்தான் வருடா வருடம் பத்து சதவீதம் இன்கிரிமெண்டோடு சம்பளம் வாங்குகிறான்.
பேசியே எதிரில் இருப்பவரை அழ வைத்துவிடுவான். ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு
ஈஸியா குடி மாறுகின்ற மிஸ்டர் சனி பகவானால் முப்பது வருடமாக வாசம் செய்யும் கருணாவின்
வாயைவிட்டு வேற இடத்துக்கு ஷிப்டாகி போகவே முடியவில்லை. அதனால் கருணாவிற்கு நண்பர்கள்
சூட்டிய பட்டடப்பெயர் ‘சனியை சிறை வைத்த சகுனி’. இரவு ஃபேஸ்புக் பார்த்துவிட்டு தலையணைக்கு அடியில்
வைத்த மொபைல் போன் ‘ராமன் ஆண்டாலும் ராவணன்
ஆண்டாலும்’ என்று பாடி அழைத்தது.
“டேய் மாம்ஸ்! எங்கடா இருக்கே?” பேசியது சந்துரு. உயிரை எடுக்கின்ற ஃபிரெண்ட்ஸ் கூட்டத்தில் சந்துருவும் ஒருவன். ‘வாயில் சனியோடு சுத்துகிறவனுக்கு உயிருக்கு
உயிரான நண்பர்கள் வாய்ப்பது அரிது’ என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார் அல்லவா? (வள்ளுவரா? வைரமுத்துவா? யாரோ ஒருத்தரு……அப்புறமா வடிவேலுவைக் கேட்டு கிளியர் பண்ணிக்குவோம்)
“ரூம்லதான்டா இருக்கேன். என்ன விஷயம்
மாப்பிள்ளை?”
“ஏய்! கபாலிக்கு ரெண்டு டிக்கெட் இருக்கு. வர்றியாடா?”
“உனக்கு எப்படிடா ஃபர்ஸ் ஷோவுக்கே டிக்கெட்
கிடைச்சுது?”
“ஷாலினி கூட நேத்து அவுட்டிங் போயிருந்தேன்டா.
அவதான் கொடுத்தா”
“எந்த ஷாலினி? மகேஷ் பொண்டாட்டியா?”
“அவளேதான். மகேஷுக்கும் அவளுக்கும் ஏதோ
சண்டையாம். மனசே சரியில்லைன்னு கூப்பிட்டா. அதான் ஒருநாளு கம்பெனி கொடுத்தேன்.”
“அடப்பாவி! பைக்ல லிஃப்ட் கொடுத்த மாதிரி கூலா சொல்றே”
“உன் திருவாயை மூடுடா. போன தடவை நீ ஏதோ
சொல்லப் போய்தான் ஆறு மாசமா ஒண்ணு கூட மாட்டலை தெரியுமா.”
“எக்கேடாவாது கெட்டு ஒழி”
“டேய் நான் செய்றது சமூக சேவைடா. கஷ்டத்துல இருக்கிற பொண்ணுங்களுக்கு தோள்
கொடுக்கிறேன்”
“தோள் கொடுக்குறியா! வேணாம்டா. ஏதாவது அசிங்கமா சொல்லிடப் போறேன்”
“சரி. அதை விடு. வர்றியா? இல்லையா?”
“எத்தனை மணிக்குடா ஷோ?”
“சாயந்திரம் ஆறு மணிக்கு”
“ஓகேடா. அஞ்சு மணிக்கு வந்து என்னை பிக் அப்
பண்ணிக்கடா”
“ஓகே மாம்ஸ். பை”
ஃபோனைப் படுக்கையில் தூக்கி எறிந்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான். பத்து
நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவன் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டான். அவனது
படுக்கை அருகே கிடந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த அந்த மனிதரைக் கண்டு பயந்துபோனான்.
சற்று சுதாரித்துக்கொண்டவன் “யார் சார் நீங்க? எப்படி என் ரூமுக்குள்ள வந்திங்க?” என்று கேட்டபோது மனதில் அறைக் கதவை
இரவு பூட்டாமல் படுத்து விட்டேனோ என்ற
சந்தேகம் எட்டிப் பார்த்தது.
“பயப்படாதே! நான் கடவுள்”
“யோவ்! என்ன விளையாடுறியா? உன் மனசுல என்ன ஆர்யான்னு நினைப்பா? திருட்டுத்தனமா ரூமுக்குள்ள வந்துட்டு
கடவுளாமில்லே”
“கருணா! கோப்பப்படாதே! நான் கடவுள்தான். வேணுமின்னா என்னை டெஸ்ட் பண்ணிப் பாரு”
“டெஸ்ட்டா....” என்று இழுத்தவன் “ஓகே. யாருக்கும் தெரியாமல் நான் செஞ்ச
திருட்டுத்தனம் ஏதாவது ஒண்ணு சொல்லு பார்க்கலாம்” என்று கேட்டுவிட்டு “செத்தாண்டா சேகரு” என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.
“ஒன்றா? இரண்டா? அது இருக்கு கோடிக் கணக்குல. எதைக் கேட்கிறே?”
“நம்ம இமேஜை இந்த ஆளு ரொம்ப டேமேஜ் பண்றானே” என்று எரிந்த கருணா “என்னோட பதினைஞ்சு வயசுல நடந்ததைச் சொல்லு” என்றான்
“பக்கத்து வீட்டு அமுதா அக்கா குளிச்சப்ப ஒட்டை
வழியா பார்த்தது, கணக்கு டீச்சர்
தீபாவுக்கு லவ் லெட்டர் கொடுத்தது, அப்பா சட்டைப் பையில பணத்தைத் திருடி சரக்கு அடிச்சது இப்படி எத்தனையோ
இருக்கே”
“தெய்வமே! உங்க காலைக் காமிங்க. ஒத்துக்கிறேன். நீங்க கடவுள்தான். நான் என்ன
செய்யணும்? சொல்லுங்க.” என்று சாஷ்டாங்கமாக காலில் விழுந்தான் கருணா.
“நீ ஒரு உதவி செய்யணும். எமன் பிடிச்சுகிட்டு
வந்த ஒருத்தன் கபாலி படம் பார்க்கிறதுக்காக தப்பிச்சு வந்துட்டான். மேலோகமே ஒரே
பரபரப்பா இருக்கு. நடராஜர் ரொம்ப கோபமா டான்ஸ் ஆடிகிட்டு இருக்காரு. அவனைத் தேடி
பிடிச்சிகிட்டு வரத்தான் என்னை அனுப்பினாங்க”
“ஆனா நான் எப்படி?”
“நீயும் உன் ஃபிரெண்டும் சாயந்திரம் படத்துக்குப்
போறப்ப என்னையும் கூட்டிகிட்டு போங்க”
“அந்த ஆளு வேற தியேட்டருக்குப் போயிட்டா என்ன
பண்றது?”
“அவன் இந்த தியேட்டருக்குத்தான் வர்றதா எங்க
உளவுத்துறைக்கு நம்பகமான இடத்திலேந்து தகவல் கிடைச்சிருக்கு”
“ஆனா ரெண்டு டிக்கெட்தானே இருக்கு”
“உன் ஃபிரெண்டை கட் பண்ணிடுவோம்”
“ஐயோ! கடவுளே! அது மட்டும் முடியாது. அவன் என் ஃபிரெண்ட்ஷிப்பையே
கட் பண்ணிடுவான். ஆமாம். தெரியாமத்தான் கேட்கிறேன். கடவுள்ன்னு சொல்றிங்க. உங்களால
ஒரு டிக்கெட் எடுக்க முடியாதா?”
“இங்க பாரு கருணா. கடவுளை மீறிய சில சக்திகள் இந்த உலகத்துல இருக்கு.
கபாலிக்கு ஃபர்ஸ்ட் ஷோ டிக்கெட் எடுக்கிறது எங்க சக்திக்கு அப்பாற்பட்டது.
புரிஞ்சுக்கோ.”
“சரியான வெத்து வேட்டு. வாய் மட்டும் என்னமா கிழியுது” என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டான் கருணா.
“நான் வெத்து வேட்டுதான். நீ மொதல்ல இன்னொரு
டிக்கெட் ஏற்பாடு பண்ற வழியைப் பாரு” என்று சொல்லிய கடவுள் எழுந்து சென்று படுக்கையில் வசதியாக படுத்து கண்களை
மூடிக்கொண்டார்.
படுக்கையில் தூக்கி எறிந்த ஃபோனை கடவுளின் முதுகுக்கு அடியில் கைவிட்டு
எடுத்தபோது கூச்சத்தில் நெளிந்து ‘ஈ’ என்று பல்லைக்
காண்பித்த கடவுளை ஓங்கி ரெண்டு அப்பலாம் போல கோபம் வந்தது கருணாவுக்கு.
“சொல்லுடா மாம்ஸ்.”
“டேய்! இன்னொரு டிக்கெட் கிடைக்குமா?”
“யாருக்குடா?”
கருணா நடந்த எல்லாவற்றையும் சொன்னவுடன் சந்துரு சிரிக்க ஆரம்பித்தவன்
விடாமல் சிரித்துக்கொண்டே இருந்தான்.
“டேய் நாயே! நிறுத்துடா. எதுக்குடா சிரிக்கிறே?”
“சிரிக்காம என்ன செய்ய சொல்றே? கபாலிக்கு ஃபர்ஸ்ட் ஷோ போறேன்னு ஸ்டேட்டஸ்
போட்டியா?”
“ஆமாம். போட்டேன்.”
“அதைப் பார்த்துட்டுதான் எவனோ ஒருத்தன் கடவுள்ன்னு
வந்து உன்னை கலாய்ச்சுகிட்டு இருக்கான். நீயும் அதை நம்பி....” என்றவன் அடக்க முடியாமல் அடக்கி வைத்திருந்த
சிரிப்பை மீண்டும் தொடர்ந்தான்.
“இல்லைடா நான் சொல்றதை.....”
“நிறுத்துடா. ஒலகமே இப்போ ஒரு விஷயத்தை
நோக்கிதான் ஓடிகிட்டு இருக்கு. அது கபாலி ஃபர்ஸ்ட் ஷோ
டிக்கெட். அதை வாங்கிறதுக்காக எந்த எல்லைக்கும் போகத் தயங்காத ஒரு கூட்டம்
சுத்திகிட்டு இருக்கு.”
“சந்துரு! நான் சீரியஸா பேசிகிட்டு இருக்கேன். இங்க வந்திருக்கிறது கடவுள்தான். நான் நம்புறேன். உன்னால ஏற்பாடு
பண்ணமுடியுமா? முடியாதா?”
“என்கிட்ட ஏண்டா கடுப்படிக்கிறே? உங்க ஆபிஃஸ்ல கேட்டுப் பாரேன்”
“வெறுப்பேத்தாதேடா. எங்க டீமைத் தவிர எல்லா
டீமுக்கும் டிக்கெட் கொடுத்திருக்கானுங்க.”
“அது ஏண்டா அப்படி?”
“எங்க டீம் ஹெட்டோட ஹெட்க்குள்ள ஹெட்
இருக்கிறதுதான் பிரச்சனையே.”
“என்னடா சொல்றே? ஒரு எழவும் புரியலை”
“எங்க டீம் ஹெட் இருக்கானே, அந்த ஆளு தலயோட ரசிகன்டா”.
“அடப்பாவி! அவன் பார்க்கலைன்னா ஓகே. அதுக்காக மொத்த
டீமையுமா பழி வாங்குறது.”
“அவன் ஒரு சைக்கோ மச்சி. அதை விடுடா. எனக்கு தெரிஞ்சு
ஒரே ஒரு வழிதாண்டா இருக்கு. நீயும் கடவுளும் போங்க. நான் வரலை”
“டேய்! தலைவரு படம் ஃபர்ஸ்ட் ஷோ உன்னை விட்டுட்டு
நான் தனியா என்னைக்காவது பார்த்திருக்கேனாடா”
“என்னை என்னடா பண்ண சொல்றே? குலசாமி கோயிலுக்கு எனக்கு மொட்டை போடுறதா வேண்டிகிட்டதை
அம்மா சொல்லிகிட்டே இருப்பாங்க. நான்தான் டிமிக்கி கொடுத்துகிட்டே இருந்தேன். மொட்டைக்குப்
பதிலா கடவுளுக்கு கபாலி டிக்கெட். எப்படி என் டீல்?”
“போடா இவனே. மசுரும் தலைவரோட ஃபர்ஸ்ட் ஷோ டிக்கெட்டும்
ஒண்ணா உனக்கு! மசுரு வளர்ந்திரும். ஆனா இந்த சான்ஸ் திரும்ப கிடைக்குமாடா? டீல் பேசுற மூஞ்சியைப் பாரு”
“வேற என்னதான்டா வழி?”
“ஷாலினி இருக்க பயமேன். அவகிட்ட பேசிட்டு உன்னைக் கூப்பிடுறேன்” என்று ஃபோனைத் துண்டித்தான் சந்துரு.
கட்டிலில் கடவுள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
“படிக்கிற காலத்துல எக்ஸாம் டைம்ல எத்தனை தடவை
இந்த ஆளை கூப்பிட்டிருக்கேன். அப்பெல்லாம் வரமுடியலை. இப்ப வந்து உட்கார்ந்துகிட்டு
உயிரை வாங்குறாரே” என்று நொந்து போனவன்
சுவரில் தொங்கி கொண்டிருந்த காலண்டரைப் யதேச்சையாகப் பார்த்தான். சிம்ம ராசிக்கு
அதிர்ஷ்டம் என்று போட்டிருந்தது. ‘காலண்டருக்கு ராசி பலன் எழுதுறவனுங்க மட்டும் இப்ப கையில் மாட்டினால் அவ்வளவுதான்’ என்ற எரிச்சலோடு நேற்று இரவு
சாப்பிட்டுவிட்டு கழுவாமல் காய்ந்து கிடந்த காலி சில்வர் தட்டை எட்டி உதைத்தான்.
பறந்து போய் விழுந்த தட்டின் சத்தத்தில் கடவுள் கண் விழித்தார். மெதுவாக
எழுந்து அமர்ந்தவர் கருணாவைப் பார்த்து புன்னகைத்தார். கருணாவும் புன்னகைத்துக் கொண்டே
சிணுங்கிய கைத்தொலைபேசியை ஆன் செய்தான். எதிர்முனையில் பேசிய சந்துரு டிக்கெட்
கிடைத்துவிட்டதாகவும் தான் கிளம்பி வந்துகொண்டிருப்பதாகவும் சொன்னவுடன் கருணாவின்
வாயெல்லாம் பல்லாக இருந்தது.
“கடவுளே!” என்று கருணா ஆரம்பித்தவுடன் “உன் ஃபிரெண்ட் சந்துரு கில்லாடிதான்” என்று கூறி சிரித்தார் கடவுள்.
“கடவுளே! எனக்கு ஒரு சந்தேகம். கேட்கலாமா?”
“பயப்படாம கேளு. எனக்கு கேள்வின்னா ரொம்ப
பிடிக்கும். ஆனா ஒன் வாயில இருக்கானே சனி, அவன்கிட்ட சொல்லிவை. ஏடாகூடமா ஏதாவது கேட்டா நான்
தேடிகிட்டு வந்த ஆளுக்குப் பதிலா உன்னை இழுத்துகிட்டு போயிடுவேன்.”
“கந்தசாமிப் பிள்ளையை நீங்க சந்திச்சதைப்
பத்தி புதுமைப்பித்தன் சொல்லியிருக்காரு. அதே கடவுள்தானா நீங்க?”
“அவனேதான். நான் வந்துட்டேன். திரும்பி
வந்துட்டேன். எழுபத்தி மூணு வருஷத்துக்கு
முன்னாடி எப்படி போனேனோ அப்படியே வந்துட்டேன்”
“உங்க பேர் என்னன்னு சொல்லவே இல்லையே”
“எதுக்கு பேரு?”
“இல்லை….கூப்பிட வசதியா இருக்குமேன்னு...”
“பேரைச் சொன்னா யார் கும்பிடுற சாமின்னு யோசிப்பே.
அப்புறம் நான் கபாலிக்கு நல்ல சாமியா? கெட்ட சாமியா?ன்னு ஆராய்ச்சி பண்ணுவே.
இதெல்லாம் தேவையா? கடவுள்ன்னு கூப்பிடு
போதும்”
“இந்த ஆளு ரொம்ப தெளிவா இருக்காரே” என்று நினைத்துக் கொண்டான் கருணா.
“இதுக்கு முன்னாடி இப்படி யாராவது
எமன்கிட்டேந்து தப்பிச்சு வந்திருக்காங்களா கடவுளே?”
“நெவர். மேலோக வரலாற்றில் முதன் முறையாக இப்படி ஒரு
தப்பு நடந்திருக்கு”
“கடவுளே! நீங்க யாரோட ரசிகர்?”
“நான் சிவாஜியோட ஃபேன்”
“அட போங்க கடவுளே……லேட்டஸ்ட்டா இருப்பிங்கன்னு பார்த்தா....”
“ஏய்! நான் சொன்னது சிவா ஜி யை”
“சிவ! சிவ! மன்னிச்சுக்கங்க கடவுளே. ஏன் அவரைப்
பிடிக்கும்?”
“இங்க கெட்ட ஆட்டம் போடுற உங்களையே போட்டு
தள்ளுறாரே அங்க நிக்கிறாருடா என் தலைவரு. அண்ணாமலைடா! சிவாஜிடா! நெற்றிக்கண்டா! தீடா!”
“நீங்க சிவன் ஃபேனா? ரஜினி ஃபேனா?” என்று நாயகன் பட ஸ்டைலில் கேட்கலாம் என்று
வாய் வரை வந்த கேள்வியை அப்படியே விழுங்கிகொண்டான். சில நிமிடங்களில் அறைக்கதவு
தட்டப்பட்டது. உள்ளே நுழைந்த சந்துரு கடவுளின் அருகே சென்று அவரை ஏற இறங்கப்
பார்த்தான்
“இவரா கடவுளு?” என்று கேட்டுவிட்டு நக்கல் சிரிப்பு ஒன்றை
உதிர்த்தான்
“தமிழ்ப்படங்கள்ல நெத்தியில பட்டை
போட்டுகிட்டு, சுத்த தமிழில்
பேசிகிட்டு, கிரீடம் வச்சுகிட்டு, பக்தன் “கடவுளே!” அப்படின்னு கூப்பிட்டவுடன “வந்தேன் பக்தனே!” அப்படின்னு வந்து நிப்பானே, அந்த மாதிரி கடவுள்ன்னு
நெனச்சியாடா.....கடவுள்டா நெருப்புடா..”
“டேய்! இவரைப் பார்த்தா ஆளை தேடிகிட்டு வந்த மாதிரி
தெரியலை” என்று சந்துரு
கருணாவின் காதுகளில் முணுமுணுத்தான்.
மூவரும் தியேட்டரை அடைந்தனர். அங்கே ரசிகர்களின் கூட்டம் அலைகடலென
திரண்டிருந்தது (அலைகடலென......கிளிஷேதான்.....என்ன பண்ணுறது? யோசிக்க நேரமில்லை. கபாலி ஆரம்பிச்சுடும்.
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க. அட்ஜஸ்ட் பண்ண முடியாதவங்க அலைகடலெனக்குப் பதில்
உங்களுக்கு தோணுறதை போட்டுக்குங்க ப்ளீஸ். அப்பாடா வாசகனுக்கு வேலை வச்சாச்சு)
ஷோ தொடங்க இன்னும் அரை மணி நேரம் இருந்தது. வானை முட்டும் அளவிற்கு
நின்றிருந்த கட் அவுட்டிற்குப் பால் அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. கூட்டத்தில்
ஒருவன் சன்னதம் வந்து ஆடத்தொடங்கினான். பத்து பேர் அவனைப் பிடிக்க
முயற்சித்தார்கள். அவர்களின் பிடியை மீறிக்கொண்டு வெறித்தனமாக ஆடினான். “யார்டா நீ?” என்று கூட்டத்திலிருந்து ஒருவன் கேட்க “கபாலிடா” என்ற உச்சஸ்தாயில் கத்திக்கொண்டே ஆடினான். “நம்ம கபாலி எறங்கிட்டாருடா” என்று கூட்டமே ஹோ வென்று கத்தி
ஆர்ப்பரித்தது.
“இதையெல்லாம் பார்த்தா உங்களுக்கு கோபம்
வரலையா?” என்று கடவுளிடம்
மெதுவான குரலில் கேட்டான் கருணா. ஆனால் அவர் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல்
சன்னதம் வந்து ஆடியவனை கும்பிட்டுக் கொண்டிருந்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர்
வழிந்து கொண்டிருந்தது.
“டேய்! முடியலைடா. இந்த ஆளு ரொம்ப ஓவரா பண்றான்டா. இவனை
வச்சுகிட்டு படத்தை எப்படி பார்க்கப் போறோமோ!” என்று எதுவும் செய்ய இயலாத குரலில் புலம்பினான்
சந்துரு.
படம் தொடங்கியது. விசில் சத்தம் மூன்று லோகங்களுக்கும் கேட்டது. படத்தின்
இடையில் கருணா கடவுளைத் திரும்பி பார்த்தான். அவரிடமிருந்து எந்த ஓர் அசைவும்
இல்லை. கண்கள் இரண்டும் இமைக்காமல் திரையைப் பார்த்துக் கொண்டிருந்தன. ‘அந்த ஆளைத் தேடாம இவரு படத்தை பாரத்துகிட்டு
இருக்காரே’ என்று எண்ணிக்கொண்டான்.
படம் முடிந்து அனைவரும் வெளியேறினார்கள். யாரோ ஒருவன் பின்னாலிருந்து கடவுளைப்
பிடித்து இழுத்தான்.
“யோவ்! எங்கயா போய் தொலைஞ்சே?” என்று அவன் கேட்டவுடன் கடவுள் திருதிருவென
விழித்தார்.
“நீங்க யாரு சார்?” என்று கேட்டான் சந்துரு
“அப்பாடா! உங்க கண்ணுக்காவது நான் தெரிஞ்சேனே. என்
பேரு கார்த்திக் சார். இன்னைக்கு காலையிலேதான் செத்துப்போனேன். இவரு எமனோட
எம்ப்ளாயி. என்னைக் கூட்டிட்டு போக
வந்தாரு. திடீர்ன்னு பார்த்தா ஆளைக் காணோம். காலையிலேந்து ஆவியா அல்லாடிகிட்டிருக்கேன்
சார். இந்த ஆளைத் தேடி தேடி அலுத்துப்போயிட்டேன். அப்பதான் இவரு தியேட்டருக்குள்
நுழையறதைப் பார்த்தேன். சரி படம் முடியட்டுமேன்னு காத்துகிட்டிருந்தேன். அதுதான்
நான் பண்ண பெரிய தப்பு. படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இந்த ஆளை இழுத்துகிட்டு
போயிருக்கணும்”
“ஏன்? அவரு படம் பார்த்தது தப்பா?” என்று புரியாமல் கேட்டான் கருணா.
“அவரு பார்த்தது தப்பில்லை சார். என்னைப்
பார்க்க வைச்சது தப்பு. ரெண்டாவது தடவையா செத்துட்டேன். படமா சார்
எடுத்திருக்கானுங்க. ஆவியையே கொன்னுட்டானுங்களே” என்று கார்த்திக் சொன்னவுடன் “யோவ்! என்ன வாய் நீளுது! என் முன்னாடியே கபாலியைப் பத்தி தப்பா
பேசுறே. கொழுப்பா? இன்னைக்கு நான்
ட்யூட்டிக்கு ஒத்துகிட்டதே கபாலி படம் பார்க்கத்தான். உன்னைக் கூட்டிட்டு
போறதுக்கு இல்லை. ரொம்ப பேசுன இப்படியே விட்டுட்டு போயிடுவேன். ஜாக்கிரதை.” என்று கோபத்தில் எகிறினார் கடவுள். இதைச்
சற்றும் எதிர்பார்க்காத கருணாவும் சந்துருவும் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும்
பின்பு சிரிக்க ஆரம்பித்தார்கள்.
“டேய்! நான் அப்பவே சொன்னேனே. இந்த ஆளைப் பார்த்தா சந்தேகமா இருக்குன்னு” என்று சொல்லிவிட்டு சந்துரு சிரிப்பைத்
தொடர்ந்தான்.
“கடவுளே! ஏன் இந்த டுபாக்கூர் வேலை? லிங்கா கிட்ட சொன்னா உங்க எல்லோருக்கும் அவரே
ஒரு ப்ரிவியூ ஷோ போட்டிருப்பாரே. அதை விட்டுட்டு....”
“எத்தனை தடவை கேட்டேன் தெரியுமா? கடவுளோட தன்மையே கபாலி பார்ப்பதுதான். பார்க்க
விடுங்க. ஃபிளாப்போ ஹிட்டோ அதை அந்தக் கடவுள் தீர்மானிக்கட்டும்ன்னு சொல்லிப்
பார்த்தேன் கருணா. ஆனால் கபாலி படம் பார்த்தா ஆண்டைங்களை சே ஆண்டவனை
எதிர்ப்போம்ன்னு சொல்லி மறுத்துட்டாங்க.”
“டோன்ட் ஒர்ரி கடவுளே! இனிமேல் உங்களுக்கு நான் இருக்கேன். எனக்கு
சந்துரு இருக்கான். சந்துருவுக்கு ஷாலினி, மாலினி, காமினின்னு ஏகப்பட்ட ஐட்டங்கள் இருக்கு.
அடுத்ததா தலைவரோட 2.0 படம் பார்க்குறோம். கொண்டாடுறோம்” என்று உணர்ச்சிவசப்பட்டான் கருணா.
“மகிழ்ச்சி” என்று சொல்லிவிட்டு கடவுள் கார்த்திக்கை
இழுத்துக் கொண்டு மாயமாய் மறைந்தார்.
No comments:
Post a Comment