Thursday, October 20, 2016

வாசகர் வட்டம் திறந்துவிட்ட சாளரம்

'சிங்கப்பூர் கிளிஷே' இணைய இதழில் வெளியானது

வாசிப்பு பழக்கம் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. அது ஒரு வரம். அந்த அரிய வரத்தைப் பெற்ற அனைவரும் எல்லா புத்தகங்களையும் வாசித்துவிடுவதும் இல்லை. ஒரு வாசகனின் புத்தகத் தேர்வு பலவிதமான காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது.  வளர்ந்த சூழல், பின்புலம், அப்போதைய மனநிலை, பிடித்த எழுத்தாளர், வெளியிட்டுள்ள பதிப்பகம், மற்றவர்களின் பரிந்துரை என்று சொல்லிக்கொண்டே போகலாம். வாசிப்புக்கு உதவி செய்யும் இந்த காரணிகளைப் போலவே வாசிப்புக்கு தடங்கல் தரும் சில காரணிகளும் இருக்கத்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, வட்டார வழக்குடன் கூடிய மொழி நடையை சொல்லலாம். திருநெல்வேலி வட்டார வழக்கு மொழி நாஞ்சில் நாட்டு வாசகனுக்கு ஒரு நாவலை வாசிக்க தடையாக அமையலாம். அந்த தடை தொடரும்போது, அது ஒரு மனத்தடையாக வாசகனின் மனதில் தங்கிவிடும் அபாயம் உண்டு.

ஒவ்வொரு வாசகனின் வாசிப்பு வீட்டில் நிறைய சாளரங்கள் இருக்கின்றன. சங்ககால இலக்கியங்கள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், தன்முனைப்பு புத்தகங்கள், ஆன்மீக நூல்கள் என்று அந்த சாளரங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால் மேலே குறிப்பிட்ட மனத்தடைகளாலோ அல்லது வேறு காரணங்களாலோ சில சாளரங்கள் திறக்கப்படாமலேயே இருந்துவிடுகின்றன. ஒரு வாசகியாய் எனது வாசிப்பு வீட்டில் வெகு நாட்களாக திறக்கப்படாமல் ஒரு சாளரம் இருந்தது. அந்த சாளரத்தின் பெயர் மொழிபெயர்ப்பு இலக்கியம்.  

மொழிபெயர்ப்பை பற்றி இணையத்தில் தேடியபோது சிலவற்றை அறிந்துகொள்ள முடிந்தது. மொழிபெயர்ப்பில் பங்குபெறும் மொழிகள் தருமொழி, பெறுமொழி, வழிமொழி என அழைக்கப்படுகின்றன. சீன மொழியில் எழுதப்பட்ட ஒரு நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பின்பு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டால் சீனமொழி தருமொழியாகிறது. ஆங்கிலம் வழிமொழியாகவும் தமிழ் பெறுமொழியாகவும் விளங்குகின்றன. மொழிபெயர்ப்பு முறைகளாக நேரடி மொழிபெயர்ப்பு, மொழியாக்கம், தழுவல், சுருக்கம் ஆகியவற்றை குறிப்பிடுகிறார்கள். மொழிபெயர்ப்பு ஒருபோதும் முழுமையானதாக இருக்கமுடியாது என்று மொழி வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு தருமொழி, பெறுமொழி ஆகிய இரண்டிலும் ஆழ்ந்த, அகன்ற புலமை இருத்தல் வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் தருமொழியில் உள்ள மொழித்திறத்தைக் காட்டிலும் பெறுமொழியில் மொழித்திறம் இன்னும் கூடுதலாக இருந்தால் அவரால் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பை தரமுடியும் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஆனால் சிறந்த மொழிபெயர்ப்பாளரை அடையாளம் காண்பது ஒரு வாசகியாக எனக்கு சற்று சவாலாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் வாசிப்புக்குத் தேர்வு செய்த சில மொழிபெயர்ப்பு நூல்களின் மொழி நடை என்னை அந்த புத்தகங்களுக்குள் நுழைய விடாமல் தடை செய்தது. அதனால் ஏற்பட்ட மனத்தடை மொழிபெயர்ப்பு இலக்கியம் என்ற சாளரத்தை முற்றிலுமாக மூடச்செய்தது. மூடப்பட்டது மூடப்பட்டதுதானா? இனிமேல் ஒருபோதும் அந்த சாளரத்தை திறக்க இயலாதா? போன்ற கேள்விகள் மனதில் ஊசலாடிக்கொண்டிருந்த வேளையில்தான் வாசகர் வட்டம் எனக்கு அறிமுகமாகியது.

வாசகர்கள் மாதம் ஒருமுறை சந்தித்து படித்ததில் பிடித்ததை பிடிக்காததை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராயும் இந்த கூட்டத்தின் வழியாக மூடப்பட்ட என் சாளரம் திறக்கப்படும் என்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. நாவல், கவிதை என்று ஒவ்வொரு மாதமும் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்படும் பல பிரிவுகளில் அந்த மாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது மொழிபெயர்ப்பு இலக்கியம்

அந்த மாத சந்திப்பில் மொழிபெயர்ப்பு இலக்கிய வாசிப்பில் எனக்கிருந்த மனத்தடை, சரியான மொழிபெயர்ப்பு நூலை தேர்ந்தெடுப்பதில் இருந்த சிரமம், சிறந்த மொழி பெயர்ப்பாளரை அடையாளம் காண்பதில் இருந்த சிக்கல் என்று என் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டவுடன் வாசகர் வட்ட நண்பர்கள் வழங்கிய நேர்மையான ஆலோசனைகள், வெளிப்படையான சுய அனுபவ பகிர்வுகள் மற்றும் எளிமையான பரிந்துரைகள் வழியாக அற்புதமான ஓர் உலகை காண கிடைத்த பாக்கியத்தை சாளரத்தை மூடியதால் இத்தனை நாட்கள் இழந்திருக்கிறேன் என்பதை கண்டுகொண்டேன்.


எப்படி மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது இரட்டிப்பாகிறதோ அதேபோல வாசிப்பு அனுபவமும் பகிர்ந்துகொள்ளும்போது பலமடங்கு பலன்களை தரும் என்பதற்கு என்னுடைய அனுபவமே சாட்சி. இப்போது புதுவிதமான உலகத்தை, பலவிதமான  மனிதர்களை, வேறுபட்ட வாழ்க்கை முறைகளை, கலாச்சார பண்பாட்டு கூறுகளை கண்டு ரசித்து கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் திறக்கப்பட்ட மொழிபெயர்ப்பு இலக்கிய வாசிப்பு என்ற சாளரமும் அதை திறக்க உதவிய வாசகர் வட்டமும் என்று சொன்னால் அது மிகையாகாது. 

No comments:

Post a Comment