‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழ் கவிதைச்
சிறப்பிதழில் (ஏப்ரல், 2018)
வெளியானது
குருதிப்பால்
தீமிதி பார்த்த
சிவப்புச் சட்டைக்காரன்
சன்னதம் கொண்டு
ஆடுகிறான்
சிங்க நடனமாடும்
கால்களுக்குச்
சுருதி
கூட்டுகிறான் உருமி மேளக்காரன்
நாசி வழி
நுழைந்து நாபிக் கமலம் வரை
மயக்குகிறான்
நாஸிலெமாக்காரன்
எங்கெங்கிருந்தோ
வந்தணைந்த
வண்ண, வண்ண வலசைப்
பறவைகள்
கம்போங்கில் ஒரு
கூட்டுப் பறவைகளாக
சபிக்கப்பட்ட
ஒரு நாளில்
நிறமெனும்
நஞ்சேந்திய நாகங்கள்
சீறிப் பாய்ந்து
கொத்திக் கொள்ள
எட்டித் தெறிக்கும்
விஷம் பட்டு
எரிந்து
கருகுகிறது ஆர்க்கிட் மலர்
ஆற்றங்கரையில்
மீன் பிடிக்கும்
ஆலகாலம் உண்டு
உலகு புரத்த
அப்பனின்
அரைவாசி அம்மையவள்
அரவங்களை
அள்ளியெடுத்து
முலையூட்டிக்
கொஞ்சுகிறாள்
விஷச்சட்டையை
உரித்தெறிந்து
புதிதாய்ப்
பிறக்கின்றன தேவகுழவிகள்
ஒன்றை ஒன்று
கட்டித் தழுவதலில்
ஆனந்தக்
களியாட்டு அரங்கேறுகிறது
மகிழ்ச்சி மாமழை சிந்திய குருதியை
கழுவி
வாரிக்கொண்டு விரைந்தோட
அன்னை
முலையூறும் வெண்ணமுது
பிரவாகமாய்ப்
பெருக்கெடுத்து ஓட
ஆதி மூலமாய் நீண்டு
கிடந்த ஆறு
அள்ளி அணைத்து
ஆற்றுப்படுத்துகிறது
சமத்துவமெனும் குருதி
மேலாகவும்
அன்பெனும் பால்
கீழாகவும்
அலைந்து
அசைந்தாடும் நீர் கொடியில்
எட்டி முகம்
பார்த்துச் சிரிக்கும்
பிறைச்சந்திரனும்
பஞ்ச விண்மீன்களும்
பூமிப்பந்திற்குச்
சிவப்புப் புள்ளியை
அடையாளம் காட்டி ஆராதிக்கின்றன
No comments:
Post a Comment