Monday, November 26, 2018

பிப்ரவரி 11 ஆம் தேதி, 2017 சிங்கப்பூருக்கு வருகை தந்த இயக்குனர் திரு.தங்கர்பச்சான் அவர்களைச் சந்தித்து தி சிராங்கூன் டைம்ஸ் ஆசிரியர் குழு எடுத்த சிறு நேர்காணல். 
(கேள்விகள் – சிவானந்தம் நீலகண்டன், நேர்காணல் -  ஷாநவாஸ், அழகுநிலா)

1. தற்போது ஏதாவது படம் இயக்கி கொண்டிருக்கிறீர்களா? உங்களிடம் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது? ஏன்?     

மக்கள் அதற்குத் தயாராக இல்லை. மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு தொடர்பான படங்களைப் மக்கள் ஆதரிப்பதில்லை. அதுபோன்ற படங்களைத் தொலைக்காட்சிகளிலும் திருட்டு சிடிக்களிலும் பார்க்கிறார்கள். ஆனால் மோசமான படங்களைத் திரையரங்குகளுக்குச் சென்று ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்துப் பார்க்கிறார்கள். இந்த மக்கள் மாறாதவரை நான் அதுபோன்ற படம் எடுத்து என்ன செய்வது?

2. இப்படி மக்களைக் குறை சொல்லி உங்களைப் போன்ற கலைஞர்கள் ஒதுங்கிக்கொள்வது நியாயம்தானா?

நீங்கள் தயாரிக்கிறீர்களா? முடியாது அல்லவா? இதுதான் பிரச்சனை. மக்கள் பார்ப்பதில்லை. மக்கள் பார்த்தால்தான் தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள். நான் தயாராகத்தான் இருக்கிறேன். அதே நேரத்தில், நானும் ஆயிரம், இரண்டாயிரத்தை அதாவது மக்களின் பணத்தை மட்டும்  குறிவைத்து மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைச் சிதைத்து படம் எடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? முடியாதல்லவா?       

3. ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி, அழகி, தலைகீழ் விகிதங்கள் என இலக்கியப்பிரதிகளை திரைப்படமாக்கியவர் நீங்கள். இலக்கியத்துக்கும் திரைப்படத்துக்குமான இடைவெளி அதிகரித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

மீண்டும் சொல்கிறேன். உங்களுக்கு வாக்குரிமை கொடுத்திருக்கிறார்கள். வாக்குரிமை எவ்வளவு முக்கியமானது? அதைக் கொண்டு போய் முன்னூறு ரூபாய்க்கும் நானூறு ரூபாய்க்கும் விற்கும் மக்களிடமிருந்து நீங்கள் எந்த கலை படைப்பை அடையாளம் காணமுடியும்? என்ன செய்ய முடியும்? திருடிவிட்டு ஒரு கூட்டம் சென்று சிறையில் இருக்கிறது. மீண்டும் மூவாயிரம் கார்களைக் கொண்டு சென்று வரவேற்கிறார்கள்.  மீண்டும் அவர்களையே ஆட்சிக்கு கொண்டு வரப் பார்க்கிறார்கள். இந்த மக்களுக்கு எதற்கு இலக்கியம்? எதற்கு திரைப்படம்? இவர்களிடம் என்ன ரசனை இருக்கிறது? அரசியில் விழிப்புணர்ச்சி வராத மக்களிடம் எவ்வாறு கலை இலக்கிய ரசனை மேம்படும்? அதுதான் பிரச்சனை.

4. 20 ஆண்டுகளாக நீங்கள் எழுதிய கதைகளைத் தொகுத்து தங்கர் பச்சான் கதைகள் என்று வெளியிட்டீர்கள். அத்தொகுப்பு எந்த மாதிரியான எதிர்வினைகள், பாராட்டுகளைப் பெற்றது?

எளிமையாக சொல்லவேண்டும் என்றால் சினிமாக்காரனுக்கு அறிவில்லை என நினைக்கிறான் இலக்கியவாதி. இது மிக முக்கியம். சத்யஜித் ரே, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் எல்லோரும் சினிமாவுக்குள் வந்தவர்கள்தான். அப்படித்தான் நானும் வந்தேன். முதலில் இலக்கியம். பிறகு ஒளிப்பதிவு. பிறகுதான் திரைப்படம். திரைத்துறையில் இருப்பதாலேயே அதை சாதகமாக நினைக்கிறார்கள். பிரச்சனையே அதுதான். நான் திரைப்படத்துறையில் இல்லாமல் இந்தத் தொகுப்போ, வேறு நாவல்களோ வந்திருந்தால் அதற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு நிச்சயம் பெரிய அளவில் இருந்திருக்கும். ஐயாயிரம் படிகள் விற்பதே பெரிய எழுத்தாளர்களுக்கு கடினமாக இருக்கையில் என் நூல் இலட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளது. என் எழுத்தின் தாக்கம் நிச்சயம் இருக்கிறது. ஆனால் அதை திறனாய்வாளர்கள் வெளிக்காட்டமாட்டார்கள். ஏனென்றால் நான் திரைத்துறையில் இருப்பது தடையாக இருக்கிறது.            

5. பள்ளிக்கூடம் திரைப்படத்திலும் தொடர்ந்து உங்கள் செயல்பாடுகளிலும் அரசுப்பள்ளிகள் மற்றும் தாய்மொழி வழிக்கல்வி, இவை மங்கிக்கொண்டிருக்கும் தமிழகச் சூழலை கவனப்படுத்தி வருகிறீர்கள். அதிகமாக மாணவர்களைச் சந்தித்து உரையாடும் ஒருவராகவும் இருக்கிறீர்கள். இவ்விஷயங்களில் நம்பிக்கை அளிக்கும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றனவா? கிராமத்து மாணவர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது?

அந்த மாற்றம்தான் இப்போது ஜல்லிக்கட்டு போராட்டம். கிட்டத்தட்ட நூறு கல்லூரிகளுக்கு மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகப் போயிருக்கிறேன். திட்டமிட்டே போய் பேசி, திட்டியிருக்கிறேன். எல்லோரும் தலைகுனிந்துதான் அமர்ந்திருப்பார்கள். பதிலே இருக்காது. ஏனென்றால் அந்தக் கேள்வியின் நியாயம் அவர்களுக்குப் புரிகிறது. முகத்திலேயே காறித் துப்புகிறான். உங்கள் மேலே அழுகின குப்பையை அள்ளி வீசுகிறான். உணர கூட மாட்டீர்களா? அப்படியே பார்த்துவிட்டு போய்க்கொண்டே இருப்பீர்களா? ஏற்கனவே இலட்சக்கணக்கில் படித்து சாலையில் நிற்கிறார்கள் வேலை இல்லாமல். இந்தச் சான்றிதழை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்? வங்கி கல்விக்கடன் என்று சொல்லி உங்களை அவமானப்படுத்துகிறது. வேலை கிடைக்காமல் எப்படி கடனைத் திருப்பிக் கட்டமுடியும். எந்த எதிர்ப்பையும் காட்டாமல் உட்கார்ந்திருக்கிறீர்கள். எதற்கு இந்த படிப்பு? என்று கேட்டிருக்கிறேன். அதனுடைய வெளிப்பாடுதான் இது எல்லாம். திடீரென்று அது ஒருநாளில் வந்தது இல்லை.    

6. இதுபோன்ற இயக்கங்கள் மாணவர்களின் எழுச்சியை ஓர் அரசியல் நிலைப்பாட்டை நோக்கி இட்டுச் செல்லும் என்று நினைக்கிறீர்களா?

செல்ல வேண்டும். இது தொடக்க நிலைதான். நிச்சயமாக  அங்கிருந்துதான் மாற்றம் வரவேண்டும். மக்களிடமிருந்து அது வராது. மக்கள் ஏற்கனவே விலைபோய்விட்டார்கள். அடுத்த தலைமுறையிடம்தான் விழிப்புணர்ச்சி வரவேண்டும். வெற்றியா, தோல்வியா என்று பார்ப்பதைவிட போராட முன்வந்ததுதான் பெரிய வெற்றி.

மாணவர்கள் போராடினார்கள் சரி. ஆனால் இந்தப் போராட்டத்தில் எவன் பண்பாடு, கலாச்சாரத்தைச் சீரழித்து பணம்தான் முக்கியம் என சினிமா எடுத்தானோ அவன் சென்று தலைமை தாங்குகிறான். அந்த இடத்தில் அவனை விரட்டி அடித்திருக்க வேண்டுமா இல்லையா? அதை செய்யவில்லை.

மிகவும் கொச்சையான சொற்களைக் கையாண்டு, பெண்களை இழிவுபடுத்தி நமது கலாச்சாரத்தை மிகவும் சீர்கேட்டிற்கு ஆளாக்கியவன் அவன். பேய்ப் படங்களையே ஒன்று, இரண்டு, மூன்று என தொடர்ந்து இருபது வருடங்களாக எடுத்துக்கொண்டிருப்பவன். பேய்ப்படம் என்றால் அறிவை மழுங்கடிக்கக்கூடிய, மூட நம்பிக்கைகளை குழந்தைகள் நிலையிலேயே ஊக்குவிக்கின்ற அவனை நீங்கள் உங்களுக்கான இடத்தில், உங்கள் சார்பாக பேச வைக்கின்றீர்கள். இது என்ன அரசியல்? அவனை வெளியே போகச் சொல்ல உங்களால் முடியவில்லை. அரசியல்வாதியை வெளியே போகச் சொல்கிறீர்கள். அரசியல்வாதியையாவது நாம் தேர்ந்தெடுத்தோம். இது அதைவிட மோசம் இல்லையா? மாணவர்கள் நிச்சயம் வரவேண்டும். ஆனால் இதை முதலில் வெளியேற்றவேண்டும். இதற்குப்பிறகுதான் அது நடக்கும்.

7. தமிழ் தேசியத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ் தேசியம் வந்து நிற்கும். வரும். அதற்கான முன்னெடுப்பு நடந்துவிட்டது. தொடங்கியாகிவிட்டது. அந்த ஏறு தழுவுதல் போராட்டமே தமிழ் தேசிய உணர்வுதானே. அதனுடைய அடிப்படைதானே அது.

இங்கு நடந்த ஓர் அருவறுப்பான அரசியல் நிலையைப் பொறுக்க முடியாமல், இதற்கும் மேலே அவமானத்தைத் தாங்க முடியாமல் எல்லோரும் ஒன்றிணைந்ததுதானே அது. எல்லோரும் அவமதிப்பதைத் தாங்கமுடியாமல் தமிழனாக எழுந்த அரசியல் எழுச்சிதான் அது.      

8. மொழி, தண்ணீர், கலாச்சாரம், விவசாயிகள்  வாழ்வாதாரம் போன்ற பிரச்சனைகளைப் பேசும்போது தொழில்மயம், ஆங்கிலமயம், கடனட்டை, கணினி மற்றும் நகரமயம் போன்றவற்றுக்கு எதிராகப் பேசுவது தவிர்க்க முடியாததாகிறது. விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் அப்படிச் செய்யப்படுவதால்தான் மக்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை என்று கருத இடமிருக்கிறது. உங்கள் கருத்து என்ன? இந்த விஷயத்தில் கலை, இலக்கியத்தின் பங்கு என்ன?

அப்படி அல்ல. முதலில் மக்களின் வரிப்பணத்திலேயே படித்துவிட்டு அந்த மக்களுக்கும் மண்ணுக்கும் எந்த பங்களிப்பும் செய்யாமல் மண்ணை விட்டு வெளியேறுவது முதலில் குறைய வேண்டும். நமது அறிவு முழுக்க வெளியே போய் யாருக்கோ பயன்படுகிறது. இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு விவசாயம் செய்ய ஆள் இல்லை. அப்படியென்றால் அதை யார் செய்வது? அது ஒரு அசிங்கமான தொழிலா? தொழில் இல்லை. மூன்று வேளையும் விதவிதமாக எப்படி சமைக்கிறது என்பதைக் காட்டுகிறார்கள். ஆனால் எப்படி விவசாயம் செய்வது என்று யாரும் சொல்வதில்லை. அரசாங்கம் செய்யவில்லை. அப்பா அம்மாக்களும் தன் பிள்ளை டாக்டர், என்ஜினியர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படியென்றால் யார்தான் அதை செய்வது? கலை மட்டும் அதை செய்துவிட முடியாது. ஒவ்வொரு தாய் தகப்பனுக்கும் அதில் பங்கு இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் அதில் பங்கு உண்டு. அப்படி நாம் செய்தால் இது இரண்டாம் பட்சம் ஆகிவிடும். அதுதான் நாம் செய்ய வேண்டியது.          

9. எழுத்தாளர் திரு கி.ராஜநாராயணனை நேர்காணல் செய்து நீங்கள் எடுத்திருந்த ஆவணப்படம் நேர்த்தியாகவும் அருமையாகவும் இருந்தது. வாழ்த்துகள்.

நன்றி. நன்றி.

10. நீங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்

இயங்க வேண்டும் என்றால் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கிறார்கள் அல்லவா? நான் திரும்ப, திரும்ப சொல்லிக் கொண்டிருப்பது இதுதான். எத்தனை பேருடைய உழைப்பில், மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு வெளியேறிவிட்டு தனது குடும்பத்திற்காக மட்டுமே உதவ வேண்டும் என்று ஒதுங்கிவிடுகிறார்கள்.

அதில் ஒரு பத்து விழுக்காடு பணத்தை இப்போது சொன்ன எல்லாவற்றிற்காகவும் உலகம் முழுவதிலிருந்தும் கொண்டு வர வேண்டும். விவசாயத்தை முன்னெடுக்க பலதரப்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டி உள்ளது. அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைகளை நாம் கேட்டுப் பெற வேண்டி உள்ளது. இளையர்களுக்குப்  பயிற்சி அளிக்க வேண்டி உள்ளது. விவசாயிகளையே மாற்ற வேண்டி உள்ளது. இயற்கையைச் சிதைக்காத வேளாண்மையைச் சொல்லித் தர வேண்டி உள்ளது. பொதுமக்களைக் முதலில் உதைக்க வேண்டும். விவசாயி என்றால் யாரோ என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். காசு கொடுத்தால் பொருள் வரும் என்று நினைக்கிறார்கள். பொருள் இல்லாவிட்டால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். ஏற்கனவே விளையும் பொருள்களையும் கமிஷனுக்காக இறக்குமதி செய்கிறார்கள். இறக்குமதி செய்ய, செய்ய ஒருகட்டத்தில் அந்தப் பொருள் இல்லை என்றால் வாழ முடியாது. அவன் சொல்வதுதான் விலை. இதற்குப் பெரிய பிரச்சாரம் தேவை. அதற்கு பெரிய அளவில் பணம் தேவைப்படுகிறது. இது எல்லாம் வராமல் விவசாத்தை உயிர்ப்பிக்க முடியாது. தமிழினத்தைப் பற்றி பேச முடியாது.  விவசாயிகளைக்   காக்காமல் தமிழ் தேசியம் வராது. அது அவசியமும் இல்லை. அப்படிப்பட்ட தமிழ் தேசியத்தை வைத்துக்கொண்டு நாக்கு கூட வழிக்க முடியாது. 





No comments:

Post a Comment