Monday, November 26, 2018


Image result for மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது
மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது

தி சிராங்கூன் டைம்ஸ் செப்டம்பர், 2018 இதழில் வெளியானது      

ஆசிரியர்: பாஸூ அலீயெவா

மொழிபெயர்ப்பாளர்:  பூ.சோமசுந்தரம்

பதிப்பாளர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

2016 ஆம் ஆண்டு சென்னையில் நடந்தப் புத்தக கண்காட்சிக்கு நான் சென்றிருந்தபோது உயிர்மை புத்தக அரங்கில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு கிட்டியது. அவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது ஒரு நூலை கையில் எடுத்தவர் இது மிகவும் முக்கியமான மொழிபெயர்ப்பு நூல். அவசியம் வாசிக்க வேண்டியது. வாங்கி வாசித்துப் பாருங்கள் என்றார். அப்படி அவர் பரிந்துரைத்த நூல்தான் மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது என்ற இந்த நூல். தமிழ் இந்துவில் தான் எழுதிய வீடில்லா புத்தகங்கள் என்ற தொடரிலும் இந்நூலைப் பற்றி எஸ்.ரா குறிப்பிட்டிருக்கிறார்.  

மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது என்ற நாவலின் ஆசிரியர் பாஸூ அலீயெவா ரஷ்யாவைச் சேர்ந்தவர். இவர் கவிஞர், நாவலாசிரியை, பத்திரிகையாளர். மேலும் ஒரு மனித உரிமைப் போராளி. ரஷ்யாவில் தாகெஸ்தான் என்ற பகுதியில் பிறந்தவர். பல இனக்குழுக்களைக் கொண்ட தாகெஸ்தான் ஒரு மலைப்பிரதேசமாகும். பாஸூ அலீயெவா அவாரிய மொழி பேசும் அவார் இனக்குழுவைச் சேர்ந்தவர். அவார் இனக்குழுவினர் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவர்கள். 

இந்த நாவல் தனக்கு மிக நெருக்கமானது என்று பாஸூ அலீயெவா குறிப்பிடுகிறார். ஏனென்றால் இது அவருடைய கதை. இந்த நாவலில் அவரும் அவரது தாயும் சகோதரிகளும் கதாப்பாத்திரங்களாக வருகிறார்கள். இரண்டு பாகங்களும் கிட்டத்தட்ட 350 பக்கங்களும் கொண்ட இந்த நாவலின் இடப் பின்னணி அவாரியா என்ற கிராமமாகும். இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தைத் தனது காலப் பின்னணியாகக் கொண்டுள்ளது இந்த நாவல். தாகெஸ்தான் பகுதியிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஆண் பிள்ளைகள் போருக்காக அனுப்பப்படுகிறார்கள். இதனால் துயரமடையும் பெண்கள் ஹிட்லர் மேல் கல்மழை பொழியும்படி அல்லா ஏவுவாராக!”  என்று சாபம் விடுகிறார்கள்.   

ஆசிரியர் தனது முன்னுரையில் ஒரு காட்சியை விவரிக்கிறார். அவரது அண்டை வீட்டு மூதாட்டி பெருநாள் அன்று விடியும்போது ஒரு கன்னிப்பெண் பனித்துளிகளால் தனது முகத்தைக் கழுவிக்கொண்டால் அவள் அழகியாகிவிடுவாள் என்று கூறுகிறாள். நூலாசிரியரும் பெருநாளின் முந்தைய இரவில் மலைப் பகுதிக்குச் சென்று மலர்களிலிருந்து பனித்துளிகளைச் சேகரிக்கிறார். அப்போது ஒரு செடியின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த பெரிய கல் ஒன்றை அவர் அகற்ற அந்தக் கல்லின் அடியில் ஓர் ஊற்று பொங்குகிறது. அவர் திரும்பி வந்து தனது அம்மாவிடம் தெரிவிக்கிறார். புது ஊற்று பெருகுவதைக் காணும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அப்போது நீ என்ன வேண்டிக் கொண்டாலும் பலிக்கும் என்று கூறும் அம்மா அவரையும் அழைத்துக்கொண்டு ஊற்று இருக்குமிடத்திற்கு வருகிறார். என் தகப்பனார் வீட்டுக்குத் திரும்பி வரட்டும்!” என்று நூலாசிரியர் வேண்டிக்கொள்வதை செவிமடுக்கும் அவரது அம்மா இறந்தவர்கள் உயிர்த்து எழுவதில்லை என்று சொல்லிவிட்டு அல்லாவே! இந்த உலகில் போர்கள் மறுபடி மூள விடாதே! எங்கள் ஆண்களைக் காப்பாற்று!” என்று வேண்டிக்கொள்கிறார்.           

அந்தத் தாயின் கண்ணீர் மல்கும் வேண்டுதலுக்கான காரணங்கள் நாவலில் காணக் கிடைக்கின்றன. எங்கோ யாராலோ நிகழ்த்தப்படும் போர் சாதாரண மக்களின் வாழ்வில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டுத்  தீரா வலியோடு வாழும் வயதான  பெற்றோர்கள், கணவன்மார்களை இழந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வாழ்வோடு போராடும் பெண்கள், போரில் ஊனமாகி திரும்ப வந்து வாழ்வே கேள்விக்குறியாகி நிற்கும் ஆண்கள் வழியாக நாவல் காட்டுகிறது.   

நூலாசிரியர் (நாவலில் அவரது பெயர் பாத்திமாத்) கதை சொல்லியாக இருக்க அவரது பார்வையில் கதை நகர்கிறது. பாத்திமாத்தின் தாய் பரீஹானை ஜமால் என்பவன் ஒருதலையாக காதிலிக்கிறான். பரீஹானோ அகமதுவைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறாள். பரீஹான் ஒரு ஆண் குழந்தைக்கும் மூன்று பெண் குழந்தைகளுக்கும் தாயாகிறாள். ஆண் குழந்தை நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறது.

ஜமால் நல்லவன் போல நடித்து குடும்பத்தோடு உறவாடுகிறான். ஒருநாள் திட்டமிட்டு அகமதுவைக் கொலை செய்கிறான். அதன் பிறகு மூன்று பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்த பரீஹான் போராடுகிறாள். ஜமால் குடும்பத்திற்கு உதவும் சாக்கில் அடிக்கடி வந்து பரீஹானை தன் ஆசைக்கு இணங்குமாறு கூறி தொந்தரவு செய்கிறான். ஒருநாள் தன்னோடு தகாத உறவு வைத்திருந்த பெண்ணின் (இவளது கணவன் போருக்குக் சென்றிருப்பான்) மாமியாரால் ஜமால் கொல்லப்படுகிறான். கொலைப்பழி பரீஹான் மீது விழ அவள் சிறைக்குச் செல்கிறாள். அவள் சிறையில் இருக்கும் சமயத்தில் பாத்திமாத் குடும்பத்தை நிர்வகிக்கிறாள். பிறகு பரீஹான் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை ஆகிறாள். நிலத்தையைம் உழைப்பையும் மூலதனமாக கொண்டு தன் மூன்று பெண் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி பட்டப்படிப்பு படிக்க வைக்கிறாள்.   

நாவலின் கதைப் பின்னல் புதிது கிடையாது. கதையில் சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பமென எதுவுமில்லை. நாவலில் சிலவற்றை முன்கூட்டியே எளிதில் யூகித்துவிட முடிகிறது. பெரும்பான்மையான நாவல்களைப் போல உழைப்பு, காதல், வன்மம், பழி வாங்குதல், அன்பு, ஒருவருக்கொருவர் உதவி செய்தல், உணர்வுகளை மீறி வெளிப்படும் அறம், கல்வியின் முக்கியத்துவம், போரினால் ஏற்படும் விளைவுகள்   என ஒரு கலவையான வாழ்வைத்தான் இந்நாவலும் பேசுகிறதென்றாலும் வாசிப்பை நிறுத்த முடியாத அளவுக்கு நாவலைத் தொடர்ந்து வாசிக்க என்னை உந்தியது உமர்தாதா என்ற கதாபாத்திரம்தான்.

அகமதுவின் பெரியப்பாவாக இருக்கும் இந்த முதியவரை மையப்படுத்தி புதினம் எழுதப்படவில்லை என்றாலும் நாவலின் கதாநாயகனாக அவர்தான் விஸ்வரூபமெடுத்து நிற்கிறார். உமர்தாதா கடின உழைப்பாளி. சிறந்த விவசாயி. அவருக்கு மிகப் பொருத்தமான இணையாக வாய்க்கும் மனைவி ஹலூனும் அவரைப் போலவே உழைப்புக்கு அஞ்சாதவள். இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாக அளவிலா காதலோடு வாழ்பவர்கள். தாங்கள் பெற்ற இரு மகன்களில் ஒருவனைப் போருக்கு பலி கொடுக்கிறார்கள். இன்னொருவன் போரில் காயம் அடைந்து ஊனமாகித் திரும்புகிறான்.

உமர்தாதா வாழ்வின் மீதும் மனிதர்கள் மீதும் வாஞ்சையோடு இருப்பவர். குறிப்பாக நிலத்தின் மீது தீராப் பற்றுக்கொண்டவர். நிலம் மனிதனை ஒருபோதும் கைவிடாது என்பதை உறுதியாக நம்புபவர். நிலத்தின் மீதான இவரது காதலை நாவலின் ஒரு காட்சி துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. தொழுகைக்குத் தண்ணீர் இல்லாமல் போகும் ஒரு தருணத்தில் நிலத்து மண்ணை பிடி பிடியாக அள்ளி முகத்தையும் கைகளையும் கால்களையும் நீரால் கழுவுவது போல தேய்த்துக் கொள்கிறார். மண்ணால் உடம்பு கழுவிக்கொள்ள முடியுமா?” என்று பாத்திமாத் கேட்கையில் மண்ணை விட தூய்மையானது உலகில் எதுவுமில்லை மகளே!” என்று அவர் சொல்லுமிடத்தில் உழவனுக்கும் மண்ணுக்குமான பந்தம் எத்தனை வலிமையானது என்பது புரிகிறது.

இன்னொரு காட்சியில் உமர்தாதா புதிதாக உழுத நில மண்ணை கையில் ஏந்தி என்ன தெய்வீக மணம்! இப்போதுதான் சுட்ட ரொட்டியைப் போல என்று கூறுமிடத்தில் மண்ணை வெறித்தனமாக நேசிக்கிறவனால் மட்டுமே இப்படி சொல்ல முடியும் என்பதை உணர முடிகிறது. லூனைப் பெண் கேட்டு உமர்தாமா செல்லும்போது பையனுக்கு கைகளில் நல்ல வலு. நிலத்தின் மீது மிகுந்த பற்று. இப்பேர்ப்பட்டவன் மோசடி செய்ய மாட்டான் என்று கூறி அவனது மாமனார் பெண் கொடுக்கிறார். எப்படி உங்களுக்கு எல்லாம் தெரிகிறது?” என்ற பாத்திமாத்தின் கேள்விக்கு இயற்கையே எனக்குப் போதிக்கிறது. கூர்ந்து பார்க்கவும், கேட்கவும் திறன் வேண்டும். அவ்வளவுதான். அனுபவமும் உழைப்பும் நாம் அறியாமலே நம்மை அறிவாளிகள் ஆக்கிவிடுகின்றன என்கிறார் உமர்தாதா.

தன்னைச் சுற்றி இருப்பவர்கள் உழைப்பிலும் விவசாயத்திலும் நம்பிக்கை இழந்து சோர்வுறும் சமயங்களில் மண்ணிலிருந்து எத்தனையோ ஆண்டுகளாக விளைச்சலை அறுவடை செய்து வருகிறோம். எத்தனைதான் துன்பங்களை அனுபவிக்க நேர்ந்த போதிலும் மண் மாறுவதில்லை. காற்று இதை வாட்டியது. ஆலங்கட்டி இதை தாக்கியது. ஆனாலும் இது நமது உழைப்புக்குப் பலனைக் கைமேல் கொடுத்து வாழ்த்துகிறது என்று நம்பிக்கை கூட்டும் உமர்தாதா மனிதர்களை விட மண்ணை அதிகமாக நம்புகிறார்.  

நாவல் நடக்கும் இடமான அவாரியா மலைக் கிராமமாக இருந்தாலும் நாவல் மாந்தர்கள் அனைவரும் விவசாயிகளாக இருப்பதால் தஞ்சை மாவட்டத்தில் பிறந்த எனக்கு இந்த நாவல் மனதிற்கு நெருக்கமான ஒன்றாகிவிட்டது என்று சொல்லலாம். எனது இளம் பிராயத்தில் எங்கள் கிராமத்தில் வாழ்ந்த தாத்தாக்களையும் பாட்டிகளையும் உமர்தாதா, ஹலூன் வடிவத்தில் என்னால் பார்க்க முடிந்தது. மண்ணை மட்டும் நம்பி கடுமையாக உழைத்து நுட்பமான அனுபவ அறிவைக் கொண்டு விவசாயம் செய்து இயற்கையோடு இயைந்து அறம் பிறழாத வாழ்வை மேற்கொண்ட அவர்கள் அனைவரும் என் கண் முன் வந்து சென்றார்கள்.  

ஒரு மலைப்பிரதேசத்தின் வாழ்க்கையை நம் முன் கொண்டு வந்து நிறுத்தும் கவித்துவமான மொழி நூலாசிரியரின் பலம் எனச் சொல்லலாம். அவரது மொழியை எந்த வகையிலும் சிதைத்துவிடாமல் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது மிகவும் சிறப்பாக இருந்தது. உருளைக்கிழங்கையும் கோதுமையையும் பயிரிடும் கூட்டுப்பண்ணை விவசாயம், கால்நடைகள் வளர்த்தல், ஆட்டு ரோமத்தைக் கொண்டு காலுறைகளையும் கையுறைகளையும் பின்னுதல், விதைப்பதற்கு முன்பு வயலில் முதல்  உழவைக் கொண்டாடும் சால்கட்டு விழா (எருது பூட்டி கலப்பையால் உழும் உழவனைச் சுற்றி நின்று மக்கள் மண் கட்டியால் அடிக்கும் வழக்கம்), ஆட்டைப் பரிசாக கொடுக்கையில் சொந்தக்காரன் சீர்குலைவிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஆட்டின் ரோமக் கற்றையையோ காது நுனியையோ தன்னிடம் வைத்துக் கொள்ளும் பழக்கம் இப்படியாக மலைப்பிரதேசத்து மக்களின் வாழ்வியல் முறைகள் அனைத்தும் மிக அழகாக இந்த நாவலில் சித்தரிக்கப்ட்டுள்ளன.  

நாவல் முழுவதும் அவாரியப் பழங்குடியினரின் பழமொழிகள் விரவிக்கிடக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு அவாரியப் பழமொழியோடுதான் தொடங்குகிறது. மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது என்ற இந்த நாவலின் தலைப்பு கூட உமர்தாதா சொல்லும் ஒரு பழமொழிதான். இந்த நாவலில் என்னைக் கவர்ந்த சில அவாரியப் பழமொழிகள் கீழே:

v  எல்லாவற்றையும் புரிந்துகொள்வதற்கு நீண்ட காலம் வாழ்ந்து பார்க்க வேண்டும்.

v  இரவின் முதல் பகுதியில் உன்னுடைய குறைகளைப் பற்றி எண்ணமிடு. இரண்டாவது பகுதியில் மற்றவர்கள் குறைகளைப் பற்றி எண்ணமிடு.

v  ஒருவனிடம் உனக்கு குறைகள் தென்பட்டால் அவற்றைப் பற்றி உரக்கப் பேசாதே. உன்னிடமும் அந்தக் குறைகள் இருக்கின்றனவா என நன்றாகச் சிந்தித்துப்பார்.

v  இன்றைக்கு வாய்ப்பூசல் இடுவது நாளைக்கு கைச்சண்டை போடுவதை விட மேல்.

v  கோடைக்காலத்தில் பாம்பைக் கண்டவன் பனிக்காலத்தில் சணல் கயிற்றுக்கு அஞ்சுவான்.

v  பொய் தீமைகளைச் சங்கிலி தொடர் போல தன்னுடன் இழுத்துவரும்.

v  ஆடையில் சிறந்தவை புதியவை. நண்பரில் சிறந்தவர் பழையவர்.

v  உழைப்பு மனிதனை விகாரமாக்காது, அழகுபடுத்தும்.

v  வீடு திரும்பும் வழியை மறவாதவன் மட்டுமே வெளியூர் போகட்டும்.

v  ஆயிரந்தரம் கேட்பதை விட ஒரு தரம் பார்ப்பது மேல்.

v  மரத்திற்கு ஆதாரம் வேர்கள், மனிதனுக்கு ஆதாரம் மனிதர்களே.

கடைசி பழமொழி கூறுவது போல நாவல் முழுவதும் மனிதர்களுக்கு ஆதாரமாக மனிதர்களே விளங்குகின்றனர். நாவல் நிகழும் நிலப்பரப்பு வேறாக இருந்தாலும் பேசும் வாழ்க்கை நான் அறிந்த, வாழ்ந்த வாழ்க்கை என்பதால் இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்துப்போனது.    




No comments:

Post a Comment