Monday, November 26, 2018


2018 ஆம் ஆண்டு தேசிய கவிதைத் திருவிழாவில் நடைபெற்ற கருத்தரங்கில் வழங்கிய உரை தி சிராங்கூன் டைம்ஸ் ஆகஸ்டு மாத இதழில் கட்டுரையாக வெளியானது

சிங்கை கவிதைகளின் வரலாற்றுச் சித்திரங்கள்   

இத்தலைப்பு ஓர் ஆய்வுக்குரியத் தலைப்பாக இருந்தாலும் இக்கருத்தரங்கின் தொடக்கமாக சிங்கையின் ஆரம்ப கால கவிதை வரலாற்றை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயமிருப்பதால் எனக்குத் தரப்பட்டுள்ள குறுகிய நேரத்திற்குள் கிட்டத்தட்ட நூறு வருட கால வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்ல விழைகிறேன். இதுவரை சிங்கப்பூரில் முனைவர் சுப. திண்ணப்பன், முனைவர் ஏ.ஆர்.ஏ. சிவகுமாரன், முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி, முனைவர் கோட்டி திருமுருகானந்தம் போன்றோரால் எழுதப்பட்டுள்ள ஆய்வு நூல்கள், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வெளியிட்டுள்ள சில ஆய்வரங்க கட்டுரைகள் ஆகியவவைதான் எனது உரைக்கான தரவுகள் என்பதை முதலில் குறிப்பிட விரும்புகிறேன். 

தொன்மையான தமிழ் இலக்கியங்கள் கவிதை வடிவில் இருப்பது போலவே சிங்கப்பூரின் முதல் இலக்கிய முயற்சிகளும் கவிதை வடிவிலேயே இருக்கின்றன. 1819 ஆம் ஆண்டு இராஃபிள்ஸ் பினாங்கிலிருந்து சிங்கைக்கு வந்தபோது அவருடைய பணியாளர்களுள் தமிழர்களும் இருந்தார்கள் என்ற வரலாற்றுக் குறிப்பு இருந்தாலும் இக்காலகட்டத்தில் இலக்கியம் படைக்கப்பட்டதற்கான ஆதாரங்களெதுவும் இதுவரை கிட்டவில்லை. இதற்கு தோட்டத் தொழிலாளர்களாய் மலாயாவிற்குக் குடியேறிய தமிழர்களது போராட்டம் மிக்க வாழ்க்கைச் சூழல் முக்கிய காரணமாய் இருந்திருக்கலாம். ஆனால் இம்மக்களிடையே வாய்மொழி இலக்கியமாகிய நாட்டுப்புறப் பாடல்கள் புழக்கத்தில் இருந்துள்ளன என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதை வரலாறு 1872 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவரால் எழுதப்பட்டு சிங்கப்பூரில் அச்சிடப்பட்ட முனாஜாத்துத் திரட்டு என்ற கவிதை நூல்தான் இதுவரை கிடைத்துள்ள நூல்களில் பழமையான நூலாகும். தமிழ்நாட்டிலும் சிங்கையிலும் வாழ்ந்து மறைந்த இஸ்லாமியத் இறைத்தூதர்களைப் பற்றிய கவிதைத் தொகுப்பு இது.  ஆனால் முனைவர் கோட்டி முருகானந்தம் இதற்கு மாற்றுக் கருத்தாக சிங்கப்பூரின் தொடக்க கால இலக்கியம் என்று தனியாகப் பார்க்காமல் மலாயாவின் தொடக்க கால இலக்கியமாகப் பார்க்க வேண்டுமென்று குறிப்பிட்டு அப்படிப் பார்த்தால் 1863 ஆம் ஆண்டு முத்துக்கருப்பன் செட்டியார் இயற்றியுள்ள தண்ணிமலை வடிவேலர் பேரில் ஆசிரிய விருத்தம் என்னும் நூலே மூத்த நூல் என்கிறார்.    

திரு நா கோவிந்தசாமி சிங்கப்பூர்ச் சூழல், அரசியல், சமூகவியல் ஆகியவற்றின் அடிப்படையில் சில காலகட்டங்களை வரையறுத்துக் கொண்டு சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வளர்ச்சியை மதிப்பிட்டுள்ளார். அதனை அடிப்படையாகக் கொண்டு சிறிய மாற்றத்தோடு கவிதை வரலாற்றிற்கான காலகட்டங்களை இவ்வாறு வகைப்படுத்திக் கொள்ளலாம்.  

தொடக்க காலம்                     1872 – 1900

தேக்க காலம்                       1901 – 1930

சீர்திருத்தக் காலம்                  1930 – 1942

ஜப்பானியர் ஆட்சி காலம்            1942 – 1945

இனஎழுச்சிக் காலம்                 1946 – 1960

குழப்பமான அறுபதுகள்              1961 – 1970

நிலைபெற்ற எழுபதுகள்              1971 – 1979

அங்கீகாரம் கிடைத்த எண்பதுகள்          1980 – 1989

இனி ஒவ்வொரு காலகட்டத்திலும் கவிதையின் வளர்ச்சிப்போக்கும் சவால்களும் எவ்வாறு இருந்தன என்பதை பார்க்கலாம்.

தொடக்க காலம் (1872 – 1900)

தமிழ் இலக்கியத்திற்கான விதை ஊன்றப்பட்ட காலம் என்ற வகையில் மிக முக்கியமான காலகட்டமாகும். தமிழ் அச்சகங்களும் தமிழ் செய்தித்தாள்களும் கவிதை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய காலகட்டம். அவற்றுள் சி.கு.மகுதூம் சாயபு அவர்கள் நடத்திய தீனோதயவேந்திரசாலை என்ற அச்சகமும் சிங்கை நேசன் என்ற இதழும் குறிப்பிடத்தகுந்தவை.

இஸ்லாம் மதம் மற்றும் முருகனைப் பற்றிய பல கவிதைகள் மரபு நடையில் எழுதப்பட்டுள்ளன. பெரும்பான்மையான நூல்களின் பாடுபொருள் பக்தியாக இருந்தாலும் அதிவினோதக் குதிரைப் பந்தய லாவணி என்ற நூல் சமூகத்தைப் பற்றி பேசுவதன் வழியாக தனி இடத்தைப் பிடிக்கின்றனது. கடினமான சொற்களைப் பயன்படுத்தாமல் சிங்கப்பூரில் பேச்சு வழக்கிலிருந்த சொற்களையும் மலாய்ச் சொற்களையும் கொண்டு சிங்கப்பூர் காட்சிகளையும் மக்கள் நடமாட்டத்தையும் விளக்கும் நூலென்றும் சிங்கப்பூர் பின்னணியை முழுதாக கொண்ட முதல் தமிழ் இலக்கிய முயற்சி என்றும் தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர் வை.திருநாவுக்கரசு இதனைப் பாராட்டி இருக்கிறார்.  

இன்று வரை சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைகள் இரண்டு கூறுகளாக உள்ளன. ஒன்று புலவர் இலக்கியம். மற்றொன்று பொதுமக்கள் இலக்கியம். கவிதை நூல்கள் பொருளாதாரத்தில் ஓரளவு தன்னிறைவு பெற்ற இஸ்லாமியர், நகரத்தார், யாழ்ப்பாண குடியேறிகள் சிலரால்  எழுதப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. பொருளாதாரத்திற்கான கடுமையான உழைப்பு, கல்வியறிவு இல்லாமை போன்ற காரணிகள் இக்காலகட்டத்தில் பொதுமக்கள் இலக்கியம் வாசிக்கவோ படைக்கவோ சவாலாக இருந்திருக்கலாம். 

தேக்க காலம் (1901 – 1930)

இக்காலகட்டத்தில் சிங்கை இலக்கியத்தில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. 1890 ஆம் ஆண்டோடு சிங்கை நேசன் இதழ் நிறுத்தப்பட்டதை இத்தேக்க நிலைக்கு முக்கிய காரணமாகச் சொல்லலாம். இந்த முப்பது ஆண்டுகளில் சிங்கையிலிருந்து சில இதழ்களே வெளிவந்துள்ளன. பினாங்கிலிருந்து வெளியான பெரும்பாலான இதழ்கள் முஸ்லீம் இதழ்களாகவும் அரசியல் இதழ்களாகவும் விளங்கியதால் சிங்கப்பூர் படைப்பிலக்கியங்களுக்குத் தளமில்லாமல் போனது. அலங்கார வழிநடைச் சிந்து, சிங்கைநகர் சுப்பிரமணிய சுவாமிகள் விருத்தம் போன்றவை இக்காலகட்டத்தில் வெளிவந்த சிறுநூல்களாகும். 

சீர்திருத்தக் காலம் (1930 – 1942)

இலக்கியத்தில் ஓர் எழுச்சி ஏற்பட்ட காலகட்டம். முப்பதுகளில் இந்தியாவில் தீவிரமடைந்த சுதந்திரப் போராட்டம், பாரதியின் தேசப்பற்று மிக்க பாடல்கள், 1929 ஆம் ஆண்டில் பெரியாரின் மலாயா, சிங்கை வருகை, அதைத் தொடர்ந்து தமிழவேள் கோ.சாரங்கபாணியின் தலைமையில் அமைந்த தமிழர் சீர்திருத்த சங்கம், 1935 ஆம் ஆண்டு தமிழவேளால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்முரசு இதழ், 1939 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சீர்திருத்தம் இதழ் போன்றவற்றை இந்த எழுச்சிக்கான முக்கிய காரணங்களாகச் சொல்லலாம். குடியேறிகளில் பெரும்பாலானோர் பிராமணர் அல்லாத சாதியினராக இருந்ததால் சீர்திருத்த வேட்கையோடு பல படைப்புகள் வெளிவந்தன. சமயச் சார்புள்ள இலக்கியங்கள் குறைந்து சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, கலப்புத் திருமணம், கடவுள் மறுப்பு போன்ற சீர்திருத்தக் கொள்கைகளைப் பாடுபொருளாக கொண்ட கவிதைகள் வர ஆரம்பித்தன. ந.பழனிவேலு, சிங்கை முகிலன் ஆகியோர் இக்காலகட்டத்தின் முக்கிய கவிஞர்களாக இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டனர்.       

ஜப்பானியர் ஆட்சி காலம் (1942 – 1945)

போரும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் கவிதை வளர்ச்சிக்குப் பெரிதும் சவாலாக அமைந்தன. தமிழ் முரசு நீண்ட காலம் செயல்படாமல் போனாலும் சுதந்திர இந்தியா, யுவபாரதம், சந்திரோதயம் போன்ற புது இதழ்கள் தோன்றின. பிரிட்டிஷ் இந்தியாவை விடுவிக்கும் நோக்கிலும் ஆங்கிலேயரை விரட்ட வேண்டும் என்ற நோக்கிலுமே பெரும்பாலான கவிதைகள் இயற்றப்பட்டன.

இனஎழுச்சிக் காலம் (1946 – 1960)

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தாலும் அதனால் ஏற்பட்ட வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி, அச்சம் முதலியன சில ஆண்டுகள் சவாலாகத் தொடர்ந்தன. போரின் கசப்பான அனுபவங்களும் ஜப்பானியர் ஆட்சி ஏற்படுத்திய காயங்களும் கவிதைகளில் கருவாயின. 1952 ஆம் ஆண்டில் தமிழவேள் தமிழர் திருநாளைத் தோற்றுவித்தார். அதையொட்டி நடைபெற்ற போட்டிகள் மீண்டும் கவிதைகள் பெருக வழிவகுத்தது. 1953 ஆம் ஆண்டில் நீலகண்ட சாஸ்திரி வருகையும் மலாயா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத் துறை ஏற்படுத்த அவரது முயற்சியும் தமிழர்களிடையை கோபத்தை ஏற்படுத்தின. அதனால் விளைந்த தமிழ் எங்கள் உயிர் என்னும் இயக்கத்தில் கவிஞர்கள் தமிழ்ப்பற்று கவிதைகளை எழுதினர். 1954 ஆம் ஆண்டில் தந்தை பெரியாரின் வருகையால் மீண்டும் சீர்திருத்தக் கருத்துக்கள் கவிதைகளில் இடம்பிடித்தன. திராவிட இயக்கங்களும் பேராசிரியர் மு.வரதராசனாரின் நூல்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. சிங்கப்பூர்த் தமிழர்கள் பற்றியும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்தும் கவிதைகள் வரத்தொடங்கின.       

ஐ.உலகநாதனால் தொடங்கப்பெற்ற மாதவி இலக்கிய இதழும் சிங்கப்பூர் வானொலியும் கவிஞர்களுக்குத் தளமாக இருந்தன. இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட பெரும்பான்மையான கவிதைகளின் கருப்பொருளாக இன உணர்வு, மொழி உணர்வும் லேலோங்கி இருந்தன.

குழப்பமான அறுபதுகள் (1961 – 1970)

இக்காலகட்டத்தில் நடந்த பல அரசியல் நிகழ்வுகள் கவிதையிலும் பிரதிபலித்தன. 1963 ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலாயாவுடன் இணைந்து மலேசியா என்ற அமைப்பு உருவானது. அதன் பிறகு மலேசியா-இந்தோனேசியா இடையேயான அரசியல் கொந்தளிப்புகள், 1964 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இனக் கலவரங்களால் மலேசிய நாட்டுப்பற்று, இந்தோனேசிய எதிர்ப்புணர்வு, இன ஒற்றுமை போன்றவை கவிதைகளின் கருவாக மாறின. தமிழ் முரசில் தொடங்கப்பட்ட வெண்பா போட்டி கவிஞர்களுக்கு ஒரு தளமாக இருந்துள்ளது. 1965 ஆம் ஆண்டு வரலாற்றின் முக்கிய அரசியல் நிகழ்வாக சிங்கை மலேசியாவிருந்து பிரிந்தது. இதன் விளைவாக கவிஞர்கள் எது தனது நாடு என்ற ஒரு முடிவுக்கு வரமுடியாத குழப்ப நிலையிலிருந்ததைப் பாடியிருக்கிறார்கள். இக்காலகட்டத்தில் வாழ்ந்த படைப்பாளர்கள் அதிகம் படித்ததால் சிந்தனை விசாலமடைய இலக்கியம் படைக்க வேண்டும் என்ற உந்துதல் பெருகியது.

நிலைபெற்ற எழுபதுகள் (1971 – 1979)

எழுபதுகளின் தொடக்கத்தில்தான் குழப்பம் நீங்கி பிரிவினை நிரந்தரம் என்று தெளிந்த படைப்பாளிகள் சிங்கப்பூர் புகழ் பாடி கவிதைகள் எழுதினர். எழுபதுகளின் இறுதியில் புதுக்கவிதை வடிவம் தோன்ற ஆரம்பித்தன. புதுக்கவிதையின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் க.இளங்கோவன். சிங்கை அரசியல் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் துணிவாக விமர்சித்து கவிதைகள் எழுதியவர். இவரைத் தொடர்ந்து க.து.மு.இக்பால் புதுக்கவிதைகள் படைக்கத் தொடங்கினார். இந்த புதுக்கவிதை வடிவம் மரபுக் கவிஞர்களிடம் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தது. மொழிபெயர்ப்பு என்று வரும்போது சிறந்த மரபுக்கவிதைகள் கூட பிரகாசிக்க முடியாமல் போய்விடுகின்றன என்ற கவிஞர் இக்பால் தொடர்ந்து புதுக்கவிதையில் தனது கவனத்தைச் செலுத்தினார்.

தொகுப்புரை

தமிழ்நாட்டோடு கொண்டிருந்த தொடர்பாலும் தமிழ் இலக்கியத்தின் மீதிருந்த ஈடுபாட்டாலும் தமிழ் இலக்கியப் போக்கிலேயே பெரும்பாலும் கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் சூழலை ஒட்டிய கவிதைகளின் வளர்ச்சி குறைவாகவே காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சிங்கை மண்ணில் நடந்த பல அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் கவிதைகளை நேரிடையாகவோ மறைமுகமாகவோ பாதித்துள்ளன.

இந்த நூறு ஆண்டு கால வரலாற்றில் எழுதப்பட்ட மரபுக் கவிதைகள் தலைவர்கள், தனிமனிதர்கள், அமைப்புகள், குடும்பம், சமுதாயம், காதல், மொழி, தமிழ் உணர்வு, இறை உணர்வு, விழாக்கள், தத்துவம், இயற்கை, அறிவுரை, மனிதநேயம், தன்வாழ்க்கை, பிறநாடுகள், கொடுத்த தலைப்புக்குப் பாடுதல், கதைப்பாடல் போன்ற பிரிவுகளில் பாடப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இறை உணர்வு, காதல் இந்த இரண்டு பாடுபொருள்களும் அதிகமாக இடம்பெற்றுள்ளன.  

சொந்த நாட்டைவிட்டு வேறு ஒரு நாட்டுக்கு புலம் பெயர்ந்து கடுமையான வாழ்க்கைச் சூழலை எதிர்கொண்டும் சிறுபான்மை இனமாக இருந்ததால்  மொழியின் வழியாக தங்களது அடையாளத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் முனைப்போடும் பல இன்னல்களுக்கு மத்தியில் தங்கள் கவிதைகளைத் தந்த அத்தனை படைப்பாளிகளுக்கும் சிங்கை இலக்கிய உலகம் என்றென்றும் நன்றி கடன் பட்டிருக்கிறது. ஆனால் அதே சமயம் அவர்களால் எழுதப்பட்ட பாடுபொருள்களையும் வடிவங்களையும் மீண்டும், மீண்டும் எழுதிக்கொண்டிருக்காமல் அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டிய தேவையும் வேறு ஒரு தளத்திற்கான நகர்வும் தற்கால கவிஞர்களுக்கு மிக, மிக அவசியமாகிறது.

No comments:

Post a Comment