Friday, October 21, 2016

வசனம்

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் நடத்தும் கதைக்களம் போட்டிக்காக எழுதிய குறுங்கதை

‘’அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. அப்படிச் சொன்னது எனக்கு அதிர்ச்சியளித்தது. இதுதான் குமார் நீ பேச வேண்டிய வசனம். அடுத்த ஷாட்ல நீ பேசணும். ரெடியா இரு’’ என்றார் இயக்குநர்.

வசந்தம் தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த முப்பது வார சரித்திர தொடரில் முக்கிய கதாபாத்திரமாக நடித்துக் கொண்டிருந்தான் குமார்.

வித்தியாசமான கதைக் களங்களை கொண்ட வேட்டை, காவ்யா போன்ற தொடர்கள் வெற்றி பெற்று கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் சரித்திர தொடரை எடுக்கிறார்களே என்ற எரிச்சலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர் உதவி இயக்குநர் சரவணனும், ஒளிப்பதிவாளர் குணாவும்.

‘’குணா! இந்த குமார் தமிழை கடிச்சு, கடிச்சு துப்புவான். இவனுக்கு முக்கியமான கேரக்டரா? இந்த சீரியலோட நெலைமையை நெனைச்சாலே பயமா இருக்குடா. இவங்களோட சேர்ந்து நம்ம ஃப்யூச்சரும்  நாறப்போகுதுடா’’’ என்று புலம்பிக்கொண்டிருந்தான் சரவணன்.
  
     இப்பொழுது குமார் நடிக்கவேண்டிய காட்சி. சரவணன் சொன்ன மாதிரியே, குமார் ஆங்கிலம் பேசுவது போல நுனிநாக்கில் தமிழை கடித்து துப்ப ஆரம்பித்தான். ஒரு டேக், இரண்டு டேக், ............... இருபதாவது டேக். இயக்குநர் எரிச்சலின் உச்சத்திற்கு போனார். கோபத்தில் எரிந்து. எரிந்து விழ ஆரம்பித்தார்.  

‘’குமார்! நான் சொல்றது புரியுதா இல்லையா! இது வரலாற்று சீரியல். இதுல வசனம் ரொம்ப முக்கியம். உச்சரிப்பு சரியா இல்லைன்னா கேரக்டரே வீணா போயிடும். கொஞ்சம் அழுத்தம் திருத்தமா பேசு’’ என்று பல்லை கடித்துக்கொண்டே சொல்லிவிட்டு குணாவின் பக்கம் நகர்ந்து, ‘’இவன் அப்பாவோட கம்பெனி ப்ரடூயூஸ் பண்ணா இவனே நடிக்கணுமா? தலையெழுத்துடா! தெய்யவில்லைங்கிறான். அயிச்சிஅளித்ததுங்கிறான். எனக்குன்னு கூட சொல்லத்தெரியலை. என்க்குங்கிறான். ரெண்டு வரி வசனத்துக்கே இப்படின்னா சீரியலை முடிச்சமாதிரிதான்’’ என்று கடுப்புடன் முணுமுணுத்தார்.

இருபதாவது டேக். குமார் அதே பழைய பல்லவியை ஒப்பிக்க, ‘’ஏய்! நீ எல்லாம் நடிக்க வரலைன்னு இங்க யாரு அழுதா? என்னமோ பிரிட்டிஷ்காரனுக்கு பொறந்த மாதிரி தமிழை கொன்னு கொலை எடுக்கிறியே. ஒன்னால மூடே அவுட்டாயிடுச்சு. பேக் பண்ணுங்கப்பா. நாளைக்கு பார்த்துக்கலாம்’’ என்று கத்திவிட்டு இயக்குநர் அந்த இடத்தை விட்டு வேகமாக, கோபமாக வெளியேறினார். மற்ற எல்லோரும் செய்வதறியாது குமாரை பார்த்துக்கொண்டு அப்படியே நின்றார்கள்.   


‘’அவர் ஏன் அப்படிச் சொன்னார்ன்னு தெரியலைங்க. அப்படிச் சொன்னது எனக்கு அதிர்ச்சியா இருக்குங்க’’ என்று அழுத்தம் திருத்தமாக, முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு குமார் சொன்னவுடன் வெடித்து கிளம்பிய சிரிப்பை அடக்க முடியாமல் சரவணனும், குணாவும் விழுந்து, விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள்.

No comments:

Post a Comment