Friday, October 21, 2016

தூய வெளிச்சம் – எஸ்.ராமகிருஷ்ணன்

எனக்கு விருப்பமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘’மழைமான்’’ சிறுகதை தொகுப்பிலுள்ள பத்து முத்தான சிறுகதைகளில் ஒன்றுதான் ‘’தூய வெளிச்சம்’’. இலக்கியங்கள் மனிதர்களுக்குள் உறைந்து கிடக்கும் ஈரத்தையும், மனிதத்தையும் வெளிக்கொண்டுவந்து மனதை நெகிழச் செய்யும் வித்தை தெரிந்தவை. குறிப்பாக எஸ்.ராவின் கதைகள் மனதை வருடி, பிசைந்து, குழைத்து, நெகிழ்த்தி கண்களில் கண்ணீரை கொண்டுவருபவை.

வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தின் வீடு இடிக்கப்படுகிறது. எண்பது வருடத்திற்கும் மேலாக மூன்று தலைமுறையினர் வாழ்ந்த அந்த வீடு இடிக்கப்படுவதை வலியுடனும், வேதனையுடனும் பார்க்கிறான் கோச்சடை. கோச்சடை யார் என்று கேட்கிறீர்களா? திருடுவதற்காக ஒரே ஒரு முறை அந்த வீட்டிற்குள் சென்று வந்த திருடன்தான் கோச்சடை.

வீட்டை பற்றி, அதில் வாழ்ந்த மனிதர்களை பற்றி, திருடச் சென்ற அந்த ஒரு நாள் அனுபவம் பற்றி, மிக முக்கியமாக அந்த வீட்டின் முகப்பில் இருக்கும் ஆர்ச்சில் பொருத்தியிருக்கும் விளக்கின் தூய வெளிச்சம் பற்றி கோச்சடை தனது  நினைவுகளை மீட்டெடுக்க கதை அழகாக நகர்கிறது.

தான் திருடிய அந்த வீட்டிற்கும் தனக்கும் ஏதோவொரு உறவு இருப்பதாக கோச்சடை நினைப்பது சற்று பைத்தியக்காரத்தனமாக பட்டாலும் அதுதான் மனித மனதின் விசித்திரம் என்று எனக்கு தோன்றுகிறது. பெரிதாக எதிர்பார்த்து திருடச் சென்றவன் இரும்புப்பெட்டியில் இருந்த பொருட்களை பார்த்தே அந்த குடும்பம் கடனில் தத்தளிக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு எல்லாவற்றையும் திருடாமல் ஒன்றிரண்டு பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு திரும்புவதன் மூலம் களவு செய்யும் மனிதனுக்குள் இருக்கும் அறத்தை அற்புதமாக காட்டியுள்ளார் எஸ்.ரா.

வீடு செங்கல்லும், மணலும் கலந்த ஒரு கட்டிடம் மட்டும்தானா? இல்லவே இல்லை. ஒவ்வொரு வீடும் மனிதனின் வாழ்க்கைக்கு மௌன சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறது. மனிதனின் ஆசை, அவலம், சோகம், வலி, கண்ணீர், மகிழ்ச்சி இப்படி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு அள்ளி அணைத்து பாதுகாக்கும் தாயாக, அந்தரங்கத்தை காட்டிக் கொடுக்காத நண்பனாக பலவிதமான அவதாரங்களை எடுக்கிறது. வீடு கண்முன் இடிக்கப்படுவது இறந்த குழந்தையை குழிக்குள் தள்ளி மண்ணை போட்டு மூடுவதை விடவும் கொடுமையானது என்று எஸ்.ரா குறிப்பிட்டுள்ளது முற்றிலும் உண்மையானது. உணர்வுபூர்வமானது.

வீட்டை இடிப்பதற்குள் அதற்குள் ஒரு முறை போகவேண்டும் என்று விரும்பும் கோச்சடை அதற்கான தகுதி தனக்கு இல்லை என்று வெளியிலேயே நிற்கும்போது மனது கனத்து போகிறது. கோச்சடையை பார்த்த வீட்டின் புது உரிமையாளர், உடைத்து போடும் மரச்சாமான்களை திருட வந்த களவாணி அவன் என்று எண்ணுமிடத்தில் இடிக்கப்படும்போது கூட வீடு மனிதனின் அற்பத்தனத்தை மௌனமாக பறைசாற்றுகிறதோ என்ற எண்ணம் வருகிறது. 

இடிக்கப்பட்ட வீட்டிலிருந்து தெறித்து விழுந்த சிறுகல் ஒன்றை சட்டைபையில் போட்டுக்கொண்டு கோச்சடை திரும்பும்போது வீட்டின் உரிமையாளரை விட அவன் அதிக அதிர்ஷ்டம் செய்தவனோ என்று, வீட்டை ஓர் உயிர் போன்று காதலிக்கும் என்னை போன்றவர்களுக்கு தோன்றுவது வியப்பில்லைதான். இந்த சிறுகதையை படித்து முடித்தவுடன்,   

‘’முழுதாக இருக்கும்போது கவனத்தில் விழவில்லை
இடிந்து கிடக்கும்போது இம்சை படுத்துகிறது
யாருடையதாகவோ இருந்த வீடு’’

என்ற கல்யாண்ஜி (அ) வண்ணதாசனின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.  

No comments:

Post a Comment