Friday, October 21, 2016

நிறைகள் - வீரப்பன் லெட்சுமி (வாசிப்போம் சிங்கப்பூர் – 2012)

குடும்பத்தலைவன், மனைவி, மகள், மகன் கொண்ட ஒரு நடுத்தர குடும்பத்தின் கதை. குடும்பத்தலைவன் அதிகம் படிக்காதவன். தனது பிள்ளைகள், முக்கியமாக மகன் நன்றாக படிக்கவேண்டுமென ஆசைப்படுகிறான். ஆனால் மகனுக்கோ படிப்பு ஏறவில்லை. கடைசியில் மகனால் பியூன் வேலைக்குத்தான் போகமுடிகிறது. ஆனால் மகள் நன்கு படித்து பல்கலைக்கழகம் போகிறாள். படிக்காத ஒரே காரணத்துக்காக, மகனை வெறுத்து ஒதுக்குகிறான். மகனை முடிந்த அளவு புண்படுத்துகிறான். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையை பேச்சுவார்த்தையே நின்று போகிறது.  

குடும்பத்தலைவனை திடீரென்று எலும்பு புற்றுநோய் தாக்குகிறது. யாரை தண்டச்சோறு, பொறுப்பற்றவன், படிப்பில்லாதவன் என்றெல்லாம் வசை பாடினானோ அந்த மகன் தனது எலும்பை அப்பாவுக்கு தந்து மறுவாழ்வு கொடுக்கிறான். அப்பா கவலைப்படாதிங்க. நான் இருக்கேன். உங்களை எப்படியும் வாழவைப்பேன் என்று அவன் சொன்னவுடன் குடும்பத்தலைவன் தவற்றை உணர்கிறான். அதிகம் படித்த பிள்ளைகள் தங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் இந்த காலகட்டத்தில் நல்ல, பொறுப்புள்ள மகனை பெற்றதை நினைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறான். மகனின் குறைகள் மறைந்து, நிறைகள் மட்டுமே கண்ணுக்கு தெரிகின்றன.  

ஒரு வாசகியாக எனது பார்வை

     சராசரியாக எல்லா பெற்றோர்களும் செய்யும் அதே தவறுகளைதான் கதாநாயகனும் செய்கிறான். தன்னால் செய்யமுடியாத ஆசைகளை, விருப்பங்களை குழந்தைகள் மீது திணிப்பது கூட ஒருவித வன்முறைதான். படித்தவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்ற பெற்றோர்களின் மாயை குழந்தைகளின் உலகத்தை சிதைத்துவிடுகிறது. படிப்பது வேறு. அறிவது வேறு. பெரிய படிப்பு, பெரிய வேலை என்று சிந்திக்கும் பெற்றோர்கள், நல்ல மனிதர்களாக பிள்ளைகள் வாழ வாழ்க்கையின் அறங்களை சொல்லிக்கொடுக்க மறந்துவிடுகிறார்கள். மகன் பியூன் வேலைக்கு சென்றாலும் அப்பாவை கடைசிவரை கண்கலங்காமல் பார்த்துக்கொள்வேன் என்று சொல்வதின் மூலம் படிப்புக்கும், மனித அறங்களுக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது. அடிப்படை அறங்களை கற்றுத்தர மறந்த கல்வி முறையின் மேல் கோபம் வருகிறது.

     ஆண்பிள்ளை மட்டும் அதிகம் படிக்கவேண்டும், பெண்பிள்ளை ஓரளவு படித்தால் போதுமானது என்று குடும்பத்தலைவன் நினைப்பது ஆணாதிக்க சிந்தனையை வெளிக்காட்டுகிறது. எல்லா துறைகளிலும் பெண்கள் கொடிகட்டி பறக்கும் இந்த காலகட்டத்திலும் பெண்ணை செலவு செய்து படிக்க வைக்க தயங்குவதும், இன்னொரு வீட்டிற்கு வாழ போகிறவள்தானே, ஓரளவு படித்தால் போதும் என்று எண்ணுவதும் சமூகத்தில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இது பெண்களுக்கு ஏட்பட்ட சாபக்கேடு. பிற்போக்கான எண்ணமுடைய இவர்களை திருத்த பாரதி மீண்டும் பிறந்து வரமாட்டானா என்று ஆதங்கமாக உள்ளது.         

No comments:

Post a Comment