பயாஸ்கோப்காரனும்
வான்கோழியும்– சை.பீர்முகம்மது
“ரப்பர்
தேட்டத்தில் சம்பாதிக்காமல், நாடு விட்டு நாடு போய் துன்பப்படாமல்
அரை சாண் வயிற்றுக்கான அரிசியில் என் பெயர் எழுதி இருக்கும்” என்று கெண்டை மீனை போன்று வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மாரிக்கும் “சாலை போடும் குத்தகை வேலையை எடுத்து பெரிய வீடு,
காடி எல்லாம் வாங்க வேண்டும்” என்று வாழ்க்கையை திட்டமிட்டு
நகர்த்தும் கோபாலுக்கும் இடையேயான நட்புதான் கதையின் மையம். இறுதியில் கோபாலுக்கு
உதவும் மாரியின் செயல் மூலம் ‘”வாழ்க்கையை
திட்டமிடுகிறவர்கள் வெற்றி பெறுவார்கள்” என்ற மரபு
உடைக்கப்பட்டுள்ளது.
குசேலனுக்கு
உதவியவன் கண்ணபிரான். ஆனால் கண்ணபிரானுக்கு உதவிய குசேலனாக மாரி உயர்ந்து
நிற்கிறான். “நீ செய்த உதவி மதுரை மீனாட்சியின் தரிசனத்தைவிட உயர்ந்தது” என்று சொல்லும் மாரியின் மனைவி செல்லம்மா அவனைவிட ஒருபடி அதிக உயரத்தில் நிற்கிறாள்.
கைகேயி போல் இல்லாமல் அற்புதமான மனைவி கிடைத்தவகையில் மாரி அவனுக்கு பிடித்த தசரதராஜாவைவிட
அதிக அதிர்ஷ்டம் செய்தவனாகிறான்.
அத்தனை
சொத்தையும் மீட்டுக் கொடுக்காவிட்டாலும் நண்பனுக்கு பிடித்த வான்கோழிகளை மீட்கும்
இடத்திலும், அழும் நண்பன் தன்னை பார்த்தால் மனசங்கடத்துக்கு ஆளாக நேரிடும் என்றெண்ணி
அவனை பார்க்காமலே கிளம்பும் இடத்திலும் பயாஸ்கோப்காரன் மாரியின் ஈர மனது கண்களை
ஈரமாக்குகிறது. காதலுக்காக சொந்த மண்ணுக்கு திரும்பாத மாரி,
இறுதி மூச்சு பிறந்த மண்ணில்தான் பிரிய வேண்டும் என்று நினைப்பதன் மூலம் ஒவ்வொரு
மனிதனுக்கும் அவனது பிறந்த மண்ணுக்குமான ஆழமான தொப்புள்கொடி உறவு, உணர்வு அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கம்பத்து
வாழ்க்கையை நேர்த்தியாக வெளிப்படுத்தி, எனது கிராம வாழ்க்கையின் நினைவுகளை தூசு தட்டி
வெளிகொண்டுவந்துவிட்டார் கதாசிரியர். அவல் விற்பவர், பாத்திர
வியாபாரி, வளையல்காரர், கடலை விற்பவர், பலூன் விற்பவர், சவ்வுமிட்டாய் விற்பவர் என்று
எத்தனை விதமான சிறுதொழில் முதலாளிகள்!! அவர்கள் எங்கே மாயமாய் மறைந்து போனார்கள்? இப்போது அவர்களை பார்க்க முடிவதில்லையே என்று மனம் கனத்து போகிறது. உலக
மயமாக்கல் என்ற அரக்கன் அந்த சிறுதொழில் முதலாளிகளை விழுங்கி ஏப்பம்விடுவது காதில்
கேட்கிறது. அவர்களும், அவர்கள் தொழில்களும் வெறும்
நினைவுகளாக மட்டும் தங்கிப்போனது ஏமாற்றத்தை தருகிறது.
பயாஸ்கோப்பை மட்டும்
வைத்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றிபெற்றவன், எல்லாம் சம்பாதித்தும் வாழ்க்கையில் தோற்றுபோனவன்
என்ற இரண்டு எதிர் எதிர் துருவங்களை நட்பு என்ற ஒரு வளையத்துக்குள் அடக்கி அவர்களது
உணர்வுகளை அழகாக சித்தரித்த எழுத்தாளருக்கு ஒரு வாசகியாக எனது பாராட்டுக்கள்!
No comments:
Post a Comment