மகிழ்ச்சியான மனிதன் - அன்டன் செகோவ்
'சிங்கப்பூர் கிளிஷே' இணைய இதழில் வெளியானது
'சிங்கப்பூர் கிளிஷே' இணைய இதழில் வெளியானது
கதை சுருக்கம்
கதாநாயகன் திருமணமாகி மனைவியுடன்
தேனிலவுக்கு ரயிலில் பயணிக்கிறான். இடையில் பிராந்தி குடிக்க இறங்கும்பொழுது, ரயில் கிளம்பிவிட பெட்டி மாறி ஏறுகிறான்.
அங்கு சந்திக்கும் பழைய நண்பனிடம், “இப்போது
உலகத்திலேயே நான்தான் மிக மகிழ்ச்சியானவன்” என்றுரைத்து ஆனந்தமடைகிறான்.
“மகிழ்ச்சியான மனிதனை பார்ப்பது வெள்ளை யானையை
பார்ப்பது போல அபூர்வம்” என்றுரைக்கும் சகபயணியிடம் “மகிழ்ச்சியாக இல்லாதது மனிதனின் குற்றமே. மனிதன்தான் தன் மகிழ்ச்சியை
உருவாக்குபவன்’’ என்று தத்துவார்த்தமாக பதிலளிக்கிறான்.
“மகிழ்ச்சி சந்தர்ப்பத்தை பொறுத்தது. இப்போது ரயில்
விபத்துக்குள்ளானால் நீங்கள் வேறுவிதமாக பேசுவீர்கள்” என்றுரைக்கும் பயணியிடம் “எப்போதாவாது
நடக்கும் விபத்துகளுக்கு பயந்துகொண்டு மகிழ்ச்சியை குறைத்துக் கொள்ளமாட்டேன்” என்று பதிலளிக்கிறான்.
இறுதியில் பெட்டி
மட்டுமல்லாமல் ரயிலே மாறியது தெரியவர, முகம் வெளுக்க தலையை
பிடித்துக்கொண்டு தன்னைத்தானே முட்டாள், முட்டாள் என்று
திட்டிக்கொள்கிறான். மனைவி தனியாக அந்த ரயிலில் பயணிக்கிறாளே, கையில் காசு இல்லையே என்று புலம்பி தவிக்கும் அந்த மகிழ்ச்சியான மனிதனுக்கு(!!!!!), சகபயணிகள் சிரித்துக்கொண்டே பணத்தை திரட்டி கொடுக்கிறார்கள்.
எனது பார்வை
தன்னுடைய மகிழ்ச்சியின் உச்சத்திலும், அடுத்தவருடைய துயரத்தின் உச்சத்திலும் தத்துவார்த்தமாக பேசுவது மனிதனுக்கு
கைவந்த கலை என்பதை நகைச்சுவையாக விவரிக்கும்போது கதாசிரியர் மனித குணத்தை அழகாக
சித்தரித்துள்ளார்.
ரயில்
விபத்துக்கே கவலைப்படமாட்டேன் என்றுரைக்கும் கதாநாயகன், ரயில் மாறியதற்காக பதறி மகிழ்ச்சியை தொலைக்குமிடத்தில் அப்பட்டமாக
மனிதவர்க்கத்தின் நுண்ணிய மன உணர்வுகளை பதிவு செய்து கதாசிரியர், தான் நவீன சிறுகதை வடிவத்தின் முன்னோடி என்பதை நிரூபித்துள்ளார்.
மனிதனது
மகிழ்ச்சியை குலைத்துபோடுவதில் பல்வலிக்கும், மோசமான மாமியாருக்கும் அதிக ஆற்றலுண்டு என்று குறிப்பிடுமிடத்தில்
சிரிப்பதை தவிர வேறுவழியில்லை.
கதைமுடிவு
இப்படித்தான் இருக்கும் என்ற எந்தவித யூகத்துக்கும் இடமில்லாமல் எதிர்பாராத
திருப்பத்தை படிக்க நேர்கையில் வாசகருக்கு வரும் சிரிப்பும், சிந்தனையும்தான் கதாசிரியரின் வெற்றி.
அடுத்தவருக்கு
உபதேசிப்பதும், அறிவுரை சொல்வதும் எத்தனை எளிதாக இருக்கிறது
மனிதர்களுக்கு?! ஒவ்வொரு மனிதனுக்கும் மகிழ்ச்சியின்
அளவுகோல்கள் மாறும்பொழுது “எது மகிழ்ச்சி?” என்பதை யார்தான் திட்டவட்டமாக வரையறை செய்துவிடமுடியும். அந்தவகையில் மகிழ்ச்சியான
மனிதனை காண்பது என்பது செகோவ் சொல்வது போல வெள்ளை யானையை பார்ப்பது போலத்தான்.
நாம்
எல்லோருமே கதாநாயகனைப்போல அடுத்தவர் முன்பு மகிழ்ச்சியாக இருப்பது போன்று காட்டிக்கொள்ள
சிரமப்படுகிறோமோ என்று தோன்றுகிறது. இதைத்தான் மனிதனின் அற்பத்தனம் என்று
தோலுரிக்கிறார் கதாசிரியர்.
“செகோவின் கதைகள் மனிதர்களின் அற்பத்தனங்களை
அம்பலப்படுத்தவும் தயங்காதவை” என்ற மாக்சிம் கார்க்கியின் கூற்றை இந்த கதை
மேலும் உறுதிபடுத்துகிறது.
No comments:
Post a Comment