மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்
பிரபஞ்சன் இணையதளத்தில்
'சிங்கப்பூர் கிளிஷே' இணைய இதழில் வெளியானது
பிரபஞ்சன் இணையதளத்தில்
'சிங்கப்பூர் கிளிஷே' இணைய இதழில் வெளியானது
கதை தேர்வுக்கான
காரணங்கள்
பிரபஞ்சனின் வார்த்தை
பிரயோகங்கள் என்னை என்றும் கவரக்கூடியவை. எனக்கு மிகவும் பிடித்த
எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரை செய்துள்ள 100 சிறுகதைகளில் இதுவும்
ஒன்று. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் இந்த கதையை வாசகர்களுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
கதை சுருக்கம்
அற்புத மரி பதினெட்டு வயது பெண். அவளது அப்பா அவர்களை விட்டுவிட்டு சென்றுவிடுகிறார்.
அவளது அம்மா வேறு ஒருவனோடு வாழ்கிறாள். மகளை பார்க்க வீட்டிற்கு எப்போதாவது வந்து
போகிறாள். மரிக்கு அது வீடாக தோன்றவில்லை. ஒரு லாட்ஜில் தங்குவது போல ஒரு உணர்வு.
நினைத்த நேரத்தில் சாப்பிட்டு, நினைத்த நேரத்தில்
தூங்கி தனியாக ஒரு வாழ்க்கை வாழ்கிறாள். அன்பை மட்டும் எதிர்பார்க்கும் இந்த
ஆட்டுக்குட்டிக்கு நல்ல மேய்ப்பனாக அவள் பள்ளி தமிழாசிரியர் கிடைப்பதுதான் கதை.
பதினெட்டு வயதாகியும் மரி பத்தாம் வகுப்பில்தான் படிக்கிறாள். பள்ளி தலைமை
ஆசிரியர் தமிழ் ஆசிரியரிடம் அவளைப்பற்றிய குற்றச்சாட்டுகளை
வரிசையாக அடுக்க கதை தொடங்குகிறது. அவரது குற்றச்சாட்டுகள்,
- ஆறு மாத காலத்தில் 12 நாட்கள்தான் பள்ளிக்கு வந்திருக்கிறாள்.
- உடம்பை இறுக்கிப்பிடிக்கும் பேண்ட், சட்டை அணிந்துகொண்டு வருகிறாள். சட்டையில் இரண்டு பட்டான்களை அவுத்துவிட்டு வருகிறாள்.
- ஸ்கூல் வாசல்ல நாலு பசங்ககூட அரட்டை அடிச்சுகிட்டு நின்னவளை கண்டிச்ச ஹிஸ்டரி வாத்தியார்கிட்ட ‘’ஏன் சார் ஒங்களுக்கு பொறாமையா இருக்கா?’’ என்று கேட்டிருக்கிறாள்.
- ஸ்கூல்க்கு உள்ளே நடக்கிறதுக்குதான் நீங்க பொறுப்பு. வெளியே நான் என்ன வேணா செய்வேன். அதை தட்டி கேட்க ஒங்களுக்கு அதிகாரம் கிடையாது என்று தலைமை ஆசிரியரை எதிர்த்து பேசியிருக்கிறாள்.
- இவளை அசிங்கமாக தொட்டுவிட்ட பி.டி.மாஸ்டரிடம் ‘’ஏன் சார் ஒங்க பொண்டாட்டியோட படுக்கிறது இல்லையா?’’ என்று கேட்டிருக்கிறாள்.
குற்றம் சுமத்திய தலைமை
ஆசிரியர், மரிக்கு டி.சி கொடுத்து
அனுப்பிவிடுவதாக சொல்ல தமிழ் ஆசிரியரோ ‘’டி.சி கொடுத்தால் பத்தாம் வகுப்பு பரிட்சை எழுத முடியாமல் அவளது வாழ்க்கையே
வீணாகிப்போய்விடுமே’’ என்று அவளுக்காக
வருத்தப்படுகிறார்.
‘’நமக்கெதுக்கு வீண்வம்பு?’’ என்று அவரது மனைவி சொல்வதையும்
பொருட்படுத்தாமல் மனைவியையும் கூட்டிக்கொண்டு மரியின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு
சென்றவுடன், அவளது துர்பாக்கியமான
வாழ்க்கையை கண்டு இரக்கம் கொள்கிறார்கள். கூடிய விரைவில் ஆசிரியரின் வீட்டிற்கு
வந்துபோகும் அளவிற்கு தமிழ் ஆசிரியரும், அவரது மனைவியும் மரிக்கு நெருக்கமாகிறார்கள்.
பத்து நாட்கள் கழித்து மரி, தமிழ் ஆசிரியரிடம் கேட்கிறாள் ’’ஏன் சார் என்னை நீங்க ஸ்கூலுக்கு வரலைன்னு கேட்கலை? கேட்டிருக்கணும் சார். ஒரு அறை விட்டு
கேட்டிருக்கணும் சார். அப்படி கேட்க யாருமில்லாமதான் நான் இப்படி இருக்கேன். என்
மேல யாரும் இப்படி அன்பு செலுத்தினது இல்லை. அன்பு செலுத்துறவங்களுக்குத்தானே அதட்டிக்கேட்கவும்
அதிகாரம் இருக்கு’’ என்று கண்ணீர் மல்க
கேட்கிறாள். ‘’உனக்கே அது
தோணட்டும்தான் நான் சும்மா இருந்தேன். அதனால என்ன. இன்னையிலிருந்து புதுசா
ஆரம்பிப்போம்’’ என்று அவர் சொல்ல மரி
என்ற அந்த ஆட்டுக்குட்டி அந்த மேய்ப்பனின் அன்புக்கு அடிமையாகி முகத்தை
மூடிக்கொண்டு விசும்பி, விசும்பி அழுவதாக கதை
முடிகிறது.
ஒரு வாசகியாக எனது
பார்வை
- ‘’ஏன் ஆசிரியர் மரியை ஆட்டுக்குட்டி என்று சொல்கிறார்? ஏன் கன்றுக்குட்டி என்று சொல்லவில்லை? பதினெட்டு வயது பருவ மங்கையை மான்குட்டி என்று சொல்லலாமே! எதற்காக இந்த தலைப்பு என்று யோசித்தேன். கிறிஸ்த்துவம் இயேசுவை நல்ல மேய்ப்பனாகவும் வாழ்க்கையில் வழி தவறியவர்களை ஆட்டுக்குட்டிகளாகவும் சொல்லியிருப்பது ஏற்கனவே வாசகனுக்கு தெரியும் என்ற அடிப்படையில் தமிழ் ஆசிரியரை ஒரு நல்ல மேய்ப்பன் என்று நமக்கு தலைப்பின் மூலம் காண்பிக்க விரும்பி இந்த தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கலாம்.
- அதே சமயம், எனக்கு இன்னொரு காரணமும் விளங்கியது. ஆட்டுமந்தையில் ஒரு ஆடு செய்வதை அத்தனை ஆடுகளும் யோசிக்காமல் செய்யும். ஆனால், மரி என்ற இந்த பெண் ஆட்டுமந்தையில் உள்ளது போல யாரையும் பின்பற்றவில்லையே! வித்தியாசமான நடவடிக்கை கொண்ட இவளை ஏன் ஆசிரியர் ஆட்டுக்குட்டி என்று சொல்லவேண்டும்? நாம் எல்லாரும் அன்பு என்ற ஒன்று கிடைக்காவிட்டால் அவளைப்போலத்தான் இருப்போம் என்று அவள் மூலம் மறைமுகமாக நமக்கு புரியவைக்க இந்த தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.
- இந்த கதையின் இன்னொரு முக்கிய சிறப்பு வேறுபட்ட பார்வைகளையும், வேறுபட்ட உணர்வுகளையும் கொண்ட மனிதர்களை அழகாக சித்தரிப்பது. (உதாரணமாக, மரியின் உடை விஷயத்தில் ‘’அவுத்து போட்டுகிட்டு வரலாமா?’’ என்ற தலைமை ஆசிரியரின் பார்வையும், ‘’உடம்புக்கு சௌகரியமானதும், பொருத்தமானதும்தானே உடை’’ என்ற தமிழ் ஆசிரியரின் பார்வையும்) (உதாரணமாக, நமக்கெதுக்கு வீண்வம்பு என்று பயந்து ஒதுங்கும் மனைவி, அப்படி ஒதுங்குவது என் சுபாவம் இல்லை என்று நினைக்கும் தமிழ் ஆசிரியர்) (உதாரணமாக, டி.சி கொடுத்து அனுப்பிவிடலாம் என்று தண்டிக்க நினைக்கும் தலைமை ஆசிரியர், அவளை கல்லெறிந்து கொல்ல நான் என்ன அப்பழுக்கற்ற யோக்கியனா என்று நினைக்கு தமிழ் ஆசிரியர்)
- மரி பாவம் என்று சொல்லும் மனைவியிடம் ‘’யார்தான் பாவம் இல்லை? மரியை விட்டுவிட்டு எங்கோ இருக்கிற அவள் அம்மா பாவம் இல்லையா? இவர்களை விட்டுப்போன அப்பா பாவம் இல்லையா?’’ என்று தமிழ் ஆசிரியர் கேட்கும்பொழுது ‘’வாழ்க்கையில் எல்லாருமே சூழ்நிலைக்கைதிகள். வாழ்க்கை புரட்டி போடும்போது அனைவரும் ஒருவிதத்தில் பாவம்தான்’’ என்று யாரையும் வில்லனாக சித்தரிக்காமல் ஆசிரியர் சொல்லியிருப்பது அருமை.
- ‘’கெட்டுப்போனவன்னு எல்லோரும் என்னை சொல்றாங்க. ஆனா நீங்க எதுக்கு என்னை வீட்ல சேர்த்திங்க?’’ என்று ‘’ஒலகத்துல யாருமே கெட்டு போனவங்க கெடையாது. கெடவும் முடியாது. மனசுக்குள்ள நீ அப்படி நெனைக்கிறதை நிறுத்து. நீ கெட்டவ இல்லை’’என்று ஆசிரியர் சொல்வது மனதுதான் நமது பல பிரச்சனைகளுக்கு காரணம் என்று சொல்வது போல இருந்தது.
பிரபஞ்சனின் மொழி லாவகமும், வார்த்தை பிரயோகமும் எப்போதும் என்னை கவரக்கூடியவை.
‘’என் வாழ்க்கையை நான் வாழ்ந்து தீர்க்கிறேன்’’ ‘’கடற்கரையில் உலகத்துக்கு ஜீவன் சேர்க்கும்
யுவர்களும், யுவதிகளும்’’ ‘’குழந்தைகளின் வாழ்வில் புதிய வர்ணங்களை
சேர்க்கும் பலூன்கள்’’
அன்பு செலுத்துறவங்களுக்குத்தானே அதட்டிக்கேட்கவும் அதிகாரம் இருக்கு என்ற
ஒரு வரி கதையை சொல்லிவிடுகிறது. - அன்பு செலுத்துறவங்க அதிகாரம் செலுத்துவது சரிதானா என்ற கேள்வி எனக்குள்
புதிய சிந்தனையை விதைத்துள்ளது. அதிகாரம் மட்டும் செலுத்திய ஹிட்லரும், அன்பு மட்டும் செலுத்திய தெரசாவும்
மனதுக்குள் வருகிறார்கள். நான் ஒரு தாயாக என் குழந்தைகளிடம் சில நேரங்களில்
ஹிட்லராக இருப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது. அப்படி ஒரு சிந்தனையை ஒரு வாசகியான
எனக்குள் எழுப்பியதன் மூலம் இந்த படைப்பு வெற்றி பெற்றதாகவே நான் கருதுகிறேன்.
No comments:
Post a Comment