Saturday, October 22, 2016

தோ பாயோ லோராங் 7

தோ பாயோ லோராங் 7 என்று டாக்ஸி ஓட்டுனரிடம் சொல்லிவிட்டு மாதவன் பின்னால் சாய்ந்து கண்களை மெதுவாக மூடிக்கொண்டான். கண்களை மூடியவுடன், இரவு தூக்கம் இல்லாததால் கண்களை சுற்றி பரவியிருந்த வலி குறைந்தமாதிரி இருந்தது. மாலை நேர சிங்கப்பூர் பரபரப்பாக இரவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. இமான் எட்டு மணிக்கு பிளாக் அடித்தளத்தில் சந்திக்கச் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.

மனிதனுக்கு துன்பம் எப்போது வேண்டுமானலும் எந்த வடிவத்திலும் வரலாம் என்பது மாதவன் வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு உண்மையாகி இருந்தது. அவனது வீட்டிற்குள் புகுந்த சனி அழகான குடும்பத்தை சுனாமியாக தாக்கி அழித்திருந்தது. யாருமற்ற தனிமரமாக நிம்மதி தேடி வீடு, வீடாக மாறி அலைந்துக்கொண்டிக்கும் அவனுக்குள், எதற்காகா வாழவேண்டும்?, யாருக்காக வாழவேண்டும்?” போன்ற  கேள்விகள் எழுந்து பாடாய்படுத்தினாலும் சாவதற்கு துணிச்சல் இல்லாமல் நடைபிணமாய் நாட்களை கடத்திக்கொண்டிருக்கிறான்.

கைநிறைய சம்பளம் என்று சொல்லுமளவுக்கு இல்லாவிட்டாலும் கடனுக்கு கையேந்த வைக்காத பணவரவு, சொந்த மூன்றறை வீடு, அழகான மனைவி, பத்து வயதில் ஆண் பிள்ளை, ஒன்பது வயதில் பெண் பிள்ளை என்று வாழ்க்கையை அணு, அணுவாக ரசித்து வாழ்ந்தவன்தான் மாதவன். ஆசை யாரை விட்டது! வருமானம் சற்று கூடுதலாக வந்தால் குடும்பத்திற்கு உதவியாக இருக்குமே என்று சராசரி குடும்பத்தலைவனாக யோசித்ததன் பலனை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறான். மூன்றறை வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு விடலாம் என்று முடிவெடுத்தபோது ஒத்துக்கொள்ள மறுத்து இரண்டு நாட்கள் சாப்பிடாமல் சண்டை போட்ட மனைவி சொன்னதை கேட்டிருந்தால் தனக்கு இந்த கதி நேர்ந்திருக்காதே என்று இப்போது மருகி துடிக்கிறான்.

அறைக்கு வாடகைக்கு குடியேறிய நச்சு பாம்பு வந்த ஒரே மாதத்தில் உடல் இச்சையை தீர்த்துக்கொள்ள தன் மனைவியை சுற்றி வளைத்ததையும், தாயை காக்க வந்த பிள்ளைகளை கழுத்தை நெறித்து கொன்றதையும் இரண்டாண்டுகள் கழித்து இப்பொழுது நினைத்தாலும் இதயம் பிளந்துவிடுவது போல வலியும் வேதனையும் அவனை ஆட்கொண்டு அலைக்கழிக்கின்றன. கற்பையும், குழந்தைகளையும் ஒன்றாக பறிகொடுத்த மனைவியோ ஒரு வருடம் மனநிலை பாதிக்கப்பட்டு பின்பு மருத்தவமனையிலேயே இறந்தபோது உறவுகள், நண்பர்கள் எல்லோரும் இருந்தும் தனியானது போல உணர்ந்தான்.

அதன்பின் வந்த நாட்களில் தனிமை தேவையானதாக இருக்க நாட்கள் நகர, நகர தனிமை மட்டுமே அவனுக்கு துணையாகிப்போனது.  தனது வாழ்வை  சூன்யமாக்கிய  அந்த கொடூர சம்பவத்தை தினமும் நினைவுப்படுத்திக்கொண்டே  இருந்த  அந்த பாழாய்ப்போன வீட்டை மூன்றே மாதத்தில் அடி மாட்டு விலைக்கு விற்ற பின்தான் அவன் மனம் சிறிது அமைதியடைந்தது. ஆனால் வீட்டை விற்றபிறகு இப்படி ஒரு பிரச்சனை முளைக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் அதே வீட்டில் தனது வாழ்நாட்களை கடத்தியிருப்பான்.
   
அந்த வீட்டிலிருந்து வேறு வீட்டிற்கு குடி போன நாளில் இருந்து அவனுக்கு  தூக்கமே இல்லாமல் போனது. இரவில் கண்களை மூடி படுத்தால் அப்பா! ஏம்ப்பா எங்களை தனியா விட்டுட்டு போனிங்க? வீட்டுக்கு வந்திடுங்கப்பா! ப்ளீஸ்ப்பா! வீட்டுக்கு வாங்கப்பாஎன்று பிள்ளைகள் இருவரும் கண்களுக்குள்ளும், கனவுக்குள்ளும் வந்து அழுதார்கள். அவர்கள் இறந்தபோது இருந்த வலியைவிட  தினமும் இரவில் கேட்கும் அவர்களின் கதறல் அவனுக்கு நரக வேதனையாக இருந்தது. குழந்தைகளின் ஆத்ம சாந்திக்காக பெரும் செலவு செய்து கோவில் பூசைகள், மாந்திரீக வழிபாடுகள் என்று ஏதேதோ செய்து பார்த்தவன் எதுவும் பலனளிக்காமல் போகவே விற்ற வீட்டை மீண்டும் வாங்க முயற்சித்து அதிலும் தோல்வியடைந்தான்.

கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட பன்னிரண்டு வீடுகள் மாறிவிட்டான். ஆரம்பத்தில் ஒரு அறையை மட்டும் வாடகைக்கு எடுத்து தனியாக தங்கியவன் பிறகு கூட்டத்தோடு தங்கினால் தனது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமோ என்ற நம்பிக்கையில் ஐந்தாறு பேர் பகிர்ந்து தங்கும் வீடுகளுக்கு மாறி பார்த்தான். அலுவலக வேலை, இறை வழிபாடு, வீடுகள் மாறுவது, மனவியல் மருத்துவருடன் சந்திப்பு, தூக்கமாத்திரைகள் இப்படியாக ஓடிக்கொண்டிருக்கும் அவனை நேற்றிரவு கூட வீட்டுக்கு சீக்கிரம் வந்திடுங்கப்பாஎன்று கதறி அழுதுகொண்டே அவனது பிள்ளைகள் அழைத்திருந்தார்கள்.

இதோ இப்போது கூட பிடோக்கில் இருந்த வீட்டிலிருந்து மாறி தோபாயோவில் உள்ள அலுவலக நண்பனின் நண்பன் இமானின் வீட்டிற்குத்தான் போய்க் கொண்டிருக்கிறான். இந்த வீட்டில் தனக்கு அமைதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பாதியும், பன்னிரண்டு வீடுகளில் கிடைக்காத நிம்மதியா இங்கு மட்டும் கிடைத்துவிடப்போகிறது என்ற அவநம்பிக்கை பாதியும் எண்ணங்களில் நிரம்பி வழிந்தன.

ஹலோ! வாட் இஸ் த பிளாக் நம்பர்என்ற டாக்ஸி ஓட்டுனரின் கேள்விக்கு கண் திறந்து பார்த்தவன் பிளாக் 12என்று சொல்லிவிட்டு காரின் கண்ணாடி வழியாக வெளியே பார்த்தான். மழை பெய்துகொண்டிருந்தது. அந்த கொடுமையான நிகழ்ச்சியும் ஒரு மழைநாளில் நடந்ததால் மழையை பார்த்தாலே வெறிபிடித்து கத்திய மனைவியின் நினைவு வர நெஞ்சை ஏதோ அடைப்பது போல இருந்தது. டாக்ஸிக்கான பணத்தை கொடுத்துவிட்டு பிளாக் 12 அருகில் வண்டியைவிட்டு விரைவாக   இறங்கியபோது மின்தூக்கியின் அருகே இமான் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.        

**************************************************************************
     என்ன நடக்கிறது? எப்படி இது சாத்தியமாயிற்று? எங்கே போனார்கள் என் பிள்ளைகள்?” என்று மாதவனின் மனதில் அடுக்கடுக்காக பல கேள்விகள். தோபாயோ வீட்டிற்கு வந்த இந்த பத்து நாட்களில் அவனுக்கு கனவுகள் இல்லை. கனவுக்குள் கதறல்கள் இல்லை. ஆழ்ந்த தூக்கம் அவன் கண்களை தழுவிக்கொண்டது. இரண்டு வருடங்கள் தவறாமல் வந்த குழந்தைகள், கடந்த பத்து நாட்களாக ஓர் இரவு கூட வராமல் இருந்தது புதிராக இருந்தது. இமான் மட்டும் என்னை இந்த வீட்டிற்கு அழைக்காமல் போயிருந்தால் நான் இன்னும் எத்தனை நாட்கள் தவியாய் தவித்திருப்பேனோ! அவன் உருவத்தில் கடவுள் எனக்கு வழி காண்பித்திருக்கிறார். அவனுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்து அன்றிரவு இமானிடம் போனான்.

ஹாய் மாதவன்! எப்படி இருக்கிங்க? ஒரே வீட்ல இருக்கோம்ன்னுதான் பேரு. நீங்க வீட்டுக்கு வந்தன்னைக்கு ஒங்களை பார்த்தது. எனக்கு நைட் ஷிஃப்ட்ல வேலை. அதான் பார்க்கவே முடியலை. வீடு பிடிச்சிருக்கா

நல்லா இருக்கேன் இமான்! வீட்டை பத்திதான் ஒங்ககிட்ட விசாரிக்க வந்தேன். இந்த வீட்ல எத்தனை வருஷமா இருக்கிங்க?”

ரெண்டு வருஷமா இருக்கேன். எதுக்கு கேட்கிறிங்க?”

சும்மாதான் கேட்டேன். இந்த வீட்டுல ஏதோ ஒண்ணு இருக்கு இமான்

ஏதோ ஒண்ணுன்னா...... புரியலையே

என்னன்னு எனக்கும் சொல்லத் தெரியலை. ஆனா ஏதோ ஒண்ணு இருக்கு

ஓ! இப்ப எனக்கு புரியுது. நம்மகூட தங்கி இருக்கிறவங்க ஏதாவது  சொன்னாங்களா

இல்லையே! யாரும் எதுவும் சொல்லலையே! அவங்க என்ன சொல்லபோறாங்க வீட்டைபத்தி

சாரி மாதவன்! நான் சொல்லி இருக்கணும். எனக்கு அது பெரிசா தோணலை. அதான்........”, என்று இழுத்தவனை மாதவன் கண்கள் விரிய பார்த்தான்.

எனக்கு எதுவுமே புரியலை. அப்படி என்ன சொல்லாம விட்டிங்க?”

இந்த வீட்ல ஒரு துர் சம்பவம் நடந்திருக்கு மாதவன். அது நடந்து கிட்டத்தட்ட முப்பத்து மூணு வருஷமாச்சு. ஒங்களுக்குத்தான் தெரியுமே! எங்க இஸ்லாத்ல எல்லா சாவும் அல்லாவோட விருப்பம்ன்னு நெனைக்கிறவங்க நாங்க. எங்களுக்கு நல்ல சாவு, கெட்ட சாவுன்னு வித்தியாசம் கெடையாது.  வீட்ல இப்ப தங்கி இருக்கிறவங்க எல்லாருமே முஸ்லீம்ங்கிறதால அது ஒரு பிரச்சனையா தோணலை. ஒங்ககிட்ட சொல்லியிருக்கணும். தப்பு பண்ணிட்டேன்

துர் சம்பவமா! கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க இமான்"

முப்பது, நாற்பது வருஷத்துக்கு முன்னாடி சிங்கப்பூர்ல அதிகமா மூட நம்பிக்கைகள் இருந்திருக்கும் போல. அப்ப இந்த வீட்ல அட்ரியன் லிம்ன்னு ஒருத்தன் போமோமாதிரி இருந்திருக்கான்

போமோவா! அப்படின்னா

அதான் மாதவன்! இப்ப மலேசியா பிளேன் 370 காணாம போனப்ப ஃபிளைட்டை நாங்க கண்டுபிடிக்கிறோம்ன்னு ஏர் போர்ட்ல வந்து காமெடி பண்ணாங்களே அவங்களை மாதிரி. ஆனா இந்த லிம் கொஞ்சம் ரிஸ்க்கான போமோ. தனக்கு அசாத்திய சக்தி இருக்குன்னு சொல்லி ஊரை ஏமாத்தியிருக்கான். ராத்திரி நேரத்துல பூசை பண்றது, ஆவிங்களை கூப்பிடுறதுன்னு அட்டூழியம் செய்துருக்கான். உங்க பிரச்சனை எதுவா இருந்தாலும் நான் தீர்த்து வைக்கிறேன்னு பணத்துக்காகவும், செக்ஸ்க்காவும் நிறைய பொம்பளைங்களை ஏமாத்தி இருக்கான். இதுல ஒரு வேடிக்கை என்ன தெரியுமா! அவனோட எல்லா அக்கிரமத்துக்கும் ஒடந்தையா இருந்தது அவனோட பொண்டாட்டியும், வைப்பாட்டியும்தான்

ஊர்ல இருக்கிற போலி சாமியாருங்க மாதிரின்னு சொல்லுங்க

கிட்டத்தட்ட அதே மாதிரிதான் மாதவன்! அவன் கெடுத்த ஒரு பொண்ணு போலீஸ்ல புகார் கொடுத்திருச்சு. எங்க போலீஸ் தன்னை பிடிச்சிருவாங்களோன்னு பயந்து அவங்களை திசைதிருப்ப அவன் செய்த காரியம் சிங்கப்பூரையே ஒரு உலுக்கு உலுக்கிருச்சு

அப்படி என்ன செஞ்சான்?”

அவனோட வைப்பாட்டி ரெண்டு சின்ன பிள்ளைகளை ஏமாத்தி இந்த வீட்டுக்கு அழைச்சுகிட்டு வந்திருக்கா. அவன் அந்த கொழந்தைகளை காளிக்கு பலி கொடுத்துட்டான்

ஐயோ! கடவுளே! அப்புறம்.......”

அப்புறம் என்ன! போலீஸ் கண்டுபிடிச்சு அவனையும், அவனோட இருந்த ரெண்டு பொம்பளைங்களையும் கைது பண்ணிட்டாங்க. 1981 ஆவது வருஷம் நடந்த இந்த கொலைங்களுக்கு கோர்ட்ல கேஸ் விசாரணை கிட்டத்தட்ட எட்டு வருஷம் நடந்திருக்கு. 1988 ஆம் வருஷம்தான் தீர்ப்பு சொல்லியிருக்காங்க. அந்த காலகட்டத்தில ரொம்ப பரபரப்பா இருந்த கேஸ்னு சொல்லுவாங்க. தீர்ப்பு அன்னைக்கு கோர்ட்டே ஜனங்களால நெரம்பி வழிஞ்சிச்சாம். கடைசியா மூணு பேரையும் தூக்குல போட்டாங்களாம்

கேட்கவே குலை நடுங்குது இமான். நான் ஏதோ சொல்ல வந்தேன். நீங்க என்னமோ புரிஞ்சுகிட்டு இந்த கதையை சொல்லிட்டிங்க. ஆங்......கேட்க மறந்துட்டேன். அவன் பலி கொடுத்த கொழந்தைகள் ரெண்டும் ரொம்ப சின்ன பிள்ளைங்களா?”

மாதவன் இந்த கேள்வியை கேட்கவும் பக்கத்து அறையிலிருந்து இமானின் கைத்தொலைபேசி அடிக்கவும் சரியாக இருந்தது. ஒரு நிமிஷம் மாதவன்! OFFICE CALL!” என்று சொல்லிவிட்டு அடுத்த அறையை நோக்கி வேகமாக நகர்ந்தவன் திரும்பிப் பார்த்து ஆங்... என்ன கேட்டிங்க? புள்ளைங்க வயசா! பத்து வயசுல ஒரு ஆம்பிளை புள்ளையும், ஒன்பது வயசுல ஒரு பொம்பளை புள்ளையும்ன்னு நெனைக்கிறேன்என்று சொல்லிவிட்டு சட்டென்று பார்வையில் இருந்து மறைந்தான்.



No comments:

Post a Comment