Saturday, October 22, 2016

நானும் நானும்

     முதன் முதலில் நானுக்கும் நானுக்கும் எப்போது சண்டை ஆரம்பித்தது என்று சரியாக சொல்லத் தெரியவில்லை. ஆனால் நினைவில் நிற்கும் முதல் சண்டை பத்து வயதில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாமல் வீட்டில் காசு களவாடிய போதுதான். திருடுவதற்கு முன்பு வேண்டாம்! தப்பு! என்று ஏதேதோ சொல்லி எவ்வளவோ கெஞ்சி பார்த்தது நான். ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாமல் நினைத்ததை வீம்பாக செய்து முடித்தது நான். அன்று தொடங்கிய சண்டை இன்று வரை நின்றபாடில்லை. வயது கூட, கூட அதிக வீரியத்துடன் சண்டை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. சில நேரங்களில் நான் ஜெயிப்பதும் சில நேரங்களில் நான் ஜெயிப்பதும் வழக்கமாகிப்  போனது.

     பதினைந்தாவது வயதில் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் சிகரெட்டை முதன் முதலாக வாயில் வைத்த போது நானுக்கும் நானுக்கும் மூன்றாம் உலகப் போரே நடந்தது. இறுதியில் வெற்றி  பெற்ற நான் தோல்வி அடைந்த நானை பார்த்து கை கொட்டி சிரித்தது. நான் இரவு முழுவதும் தனது தோல்வியையும், இயலாமையையும் நினைத்து மருகி அழுது தீர்த்தது. அடுத்த நாள் காலையில் நான் அசந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், பெற்றோர்களிடம் சென்று சிகரெட் பிடித்தமைக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, இனிமேல் சிகரெட்டை தொடமாட்டேன் என்று உறுதி அளித்தது. உறக்கம் கலைந்து எழுந்த நான் ஒருநாளும் உன்னை ஜெயிக்க விடமாட்டேன் என்று கத்தி கூப்பாடு போட்டதோடு மட்டுமல்லாமல் சொன்னபடியே செய்தும் காட்டியது. ஐம்பது வயது வரையிலும் சிகரெட்டை விடாதபடி செய்து வெற்றி நாயகனாக வலம் வந்தது.       

     ஒரு விபத்தில் கை கால்கள் முடமாகி நடமாட்டம் இல்லாமல் படுக்கையிலேயே சகலமும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த  அப்பாவுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் செய்யும் நேரங்களில் மறந்தும் நான் எட்டிப் பார்த்தது கிடையாது. அப்போதெல்லாம் நான் தனிக்காட்டு ராஜாவாக முகம் மலர சேவை செய்தது. ஆனால் வெளி இடங்களில் உதவி செய்ய துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடிய நானை, நான் ஒருபோதும் அனுமதித்ததே இல்லை. அன்னை தெரசாவின் நடிப்பை எல்லாம் வீட்டோடு நிறுத்திக்கொள். மற்ற இடங்களில் நடிக்க முயற்சி செய்யாதே என்று நானை மிரட்டி வைத்தது. பாவம் நான்! பொது இடங்களில் யாருக்கும் ஒரு சிறு உதவி கூட செய்ய முடியாமல் தனது கையாலாகாத்தனத்தை எண்ணி வெட்கி தலை குனிந்தது.  

     பதினெட்டாவது வயதில் மிக நீண்ட விவாதத்திற்கும், வாக்குவாதத்திற்கும் பிறகு வழக்கம்போல நானை தோற்கடித்துவிட்டு உடல் இச்சையை தீர்த்துக்கொள்ள விலைமாதுவிடம் சென்று விட்டு வந்த நான் அடிபட்டு வீழ்ந்து கிடந்த நானை பார்த்து ‘’நீ என்றுமே எனது அடிமை’’ என்று ஆணவமாக சிரித்தது. அடுத்தநாள் காலை அம்மாவின் கண்களை பார்க்க முடியாமல் கண்களில் நீர் கோர்க்க நான் தலை குனிந்து கொண்டபோது ‘’ஏய்! ஒரேடியா உணர்ச்சி வசப்பட்டு காட்டிக் கொடுத்தாய் என்றால் உன்னை கொன்று போட்டு விடுவேன்’’ என்று எச்சரித்தது. அதன் பிறகு விலைமாதுவிடம் செல்லும் போதெல்லாம் நானுக்கும் நானுக்குமான சச்சரவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு காலகட்டத்தில் நான் எதுவும் பேச விரும்பாமல் வாயை மூடி மௌனமானது.     

     இருபத்தைந்தாவது வயதில் ஒரு விலைமாதின் மீது காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டபோது நான் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடியது. இத்தனை நாட்களாக நீ அடைந்த அத்தனை வெற்றிகளும், ஒரு விலைமாதுவுக்கு வாழ்வளித்து பெற்ற எனது வெற்றியின் மூலம் தவிடு பொடியாகிவிட்டன’’ என்று மார் தட்டி சொன்னது. ஒரு பெண்ணுக்கு கணவனாகவும், இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாகவும் ஆன கால கட்டத்தில் நானின் ஆட்டம் மிக குறைந்து போனது. நான் மனைவியின் நானோடு நட்புறவு கொண்டு நானின் செயல்பாடுகள் அனைத்தையும் முடக்கியது.  

ஒடுக்கப்பட்டு கிடந்த நான் ஒடுங்கி, நடுங்கி இருப்பது போல வெளியில் காட்டிக் கொண்டாலும் சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தது என்பதுதான் உண்மை. தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்த நான் பயங்கர வன்மத்துடன் பழிக்கு பழி வாங்கும் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. உகந்த நேரத்தில் நான் அசந்த நேரத்தில் தனது வேலையை மெதுவாக தொடங்கியது நான். தனது பிரம்மாஸ்திரமான சந்தேகம் என்ற கணையை தொடுக்க ஆரம்பித்தது. சிறிது சிறிதாக சந்தேக பேயை வளர்த்து விலைமாதுவாக இருந்தவள்தானே நீ! உன்னால் ஒருத்தன் கூட எப்படி குடும்பம் பண்ண முடியும்?” என்று சொல்லால் குதற கற்றுக் கொடுத்தது. உச்சக்கட்டமாக சந்தேக அரக்கனை கொண்டு மனைவியை கொலை செய்ய வைத்து இரத்தம் பார்த்த பின்புதான் வெறி அடங்கி சற்று அமைதியானது.

அம்மாவை இழந்து அனாதையாக நின்ற பிள்ளைகளை பார்த்து நான் கண்ணீர்விட்டு அழுதது. என்னை பழி வாங்குவதாக நினைத்து பிள்ளைகளை பழி வாங்கிவிட்டாயே! இது நியாயமா?” என்று நானிடம் நியாயம் கேட்டு கதறியது. இந்த நாள் எனக்கு இனிய நாள்! அந்த விபச்சாரியின் நானுடன் சேர்ந்து கொண்டு என்ன ஆட்டம் ஆடினாய்! இப்போது அனுபவி! என்று அலட்சியமாக கூறியது நான். சிறைக்குச் சென்ற பின் முதல் இரண்டு வருடங்கள் நான் தனது அராஜகத்தை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருந்தது.

பொறுத்து பொறுத்து பார்த்த நான் ‘’இத்தோடு நிறுத்திக்கொள்! உன்னை அழிப்பது என்பது எனக்கு ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லை’’ என்றவுடன் நான் பெரிய குரலில் நக்கலாக சிரித்து ‘’நல்ல வேடிக்கை! என்னை அழித்துவிடுவாயா! அப்படி என்றால் அதை ஏன் பத்து வயதிலேயே செய்யவில்லை? என்ன? என்னை மிரட்டிப் பார்க்கிறாயா? உன் மிரட்டலை எல்லாம் வேறு எங்காவது வைத்துக்கொள். என்னிடம் செல்லாது’’ என்று பரிகாசம் செய்தது. உன்னிடம் பேசுவதில் இனிமேல் ஒரு பயனும் இல்லை. உன்னை முற்றிலும் என்னால் அழிக்க முடியாவிட்டாலும் நீ தலைகாட்டாமல் இருக்கும்படி செய்ய என்னால் முடியும்.’’ என்று சவால் விட்ட நான் அதற்கான திட்டங்களில் மும்முரமாக இறங்கியது.

சிறையில் இருந்த கால கட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக புத்தகங்கள் படிக்க வைத்து, தியானம் செய்ய வைத்து, உடற்பயிற்சியில் ஈடுபட வைத்து மெதுவாக நான் நானை அழிக்க ஆரம்பித்தது. தொடக்கத்தில் பல்வேறு இடையூறுகளையும், இன்னல்களையும் தந்து கொண்டிருந்த நான் காலப்போக்கில் தனது அடாவடி நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டது. சிறையில் இருந்து விடுதலை ஆனபோது நான் நானை கிட்டத்தட்ட அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தது. பிள்ளைகளுடன் மீண்டும் புத்தம் புது வாழ்க்கையை தொடங்கிய நாட்களில் நான் தலை தூக்கவே இல்லை. பழைய நண்பர்களை சந்திக்கும் நிமிடங்களில் மீண்டும் தன் போக்கிரித்தனத்தை கட்டவிழ்க்கத் தொடங்கலாம் என்று நான் ஆயத்தமாகும்போது நான் குறுக்கே புகுந்து ‘’மரியாதையாக ஓடிப்போய் விடு’’ என்று ஒரு அதட்டல் போட்டவுடன் வந்த வேகத்தில் தலைதெறிக்க ஓடிப்போய் ஒளிந்து கொண்டது நான்.

பிள்ளைகளுக்கு ஒரு அப்பாவாக செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் செவ்வனே முடித்து நான் கற்றுக்கொடுத்த புகைபிடிக்கும் பழக்கத்தின் விளைவாக நுரையீரல் புற்றுநோயை வாங்கிக் கொண்டு மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இப்போது, யார் வெற்றியாளர்?” என்பதில் மீண்டும் நானுக்கும் நானுக்கும் உக்கிரமான சண்டை தொடங்கி இருக்கிறது. ‘’இதிலென்ன சந்தேகம்? நான்தான் பலமுறை வெற்றி கண்டுள்ளேன். நீ எத்தனை முறை என்னிடம் புறமுதுகு காட்டி ஓடி உள்ளாய்! மறந்துவிட்டாயா?’’ என்று திமிராக கேள்வி எழுப்புகிறது நான். அதற்கு நான் ‘’புறமுதுகு காட்டி ஓடியதற்கு காரணம் உண்டு. உன்னிடம் தோற்ற ஒவ்வொரு சந்தர்ப்பமும் உன்னை என் வழிக்கு வரவைக்க கொடுத்த வாய்ப்பு! அதனை நீ பயன்படுத்த தவறியதால்தான் இப்போது எந்த ஆற்றலும் இன்றி நொடித்து போய் இருக்கிறாய்!’’ என்று பதிலளிக்கிறது. .

‘’என்ன சொன்னாய்! உன் வழிக்கு வந்திருக்க வேண்டுமா? இது என்ன புதிதாக இருக்கிறது. இருவரின் வழிகளும் வேறு வேறானவை என்று உனக்கு தெரியாதா?’’ என்று ஆச்சரியத்துடன் கேட்கிறது நான். ‘’வழிகள் வேறானவைதான். அதற்காக தனித்தனியாக போய்விட முடியுமா? இருவரும் சேர்ந்து இருப்பதுதானே முழுமை!என்று கூறுகிறது நான்.


‘’ஏதாவது சொல்லி என்னை திசை திருப்பாதே! யார் வெற்றி பெற்றது? அதற்கான பதிலை மழுப்பாமல் சொல்’’ என்று எரிச்சலுடன் நான் கேட்க ‘’தெரிந்தால் சொல்லமாட்டேனா?” என்று கேள்வியையே பதிலாக தந்துவிட்டு அமைதியாகிறது நான். உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பு ‘’இறந்தவுடன் சாவுக்கு வரும் மனிதர்களின் எண்ணிக்கையை வைத்தே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது’’ என்பதை காற்றுவாக்கில் கேட்ட நானும் நானும் ஒன்றின் மீது ஒன்று விழுந்து புரண்டு சிரிக்க ஆரம்பிக்க, உயிர் பிரிய, நானுக்கும் நானுக்குமான சண்டை முற்றுப்பெறுகிறது.    

No comments:

Post a Comment