Saturday, October 22, 2016

எம்.பி.ஏவும் எட்டாங்கிளாஸும்

 முத்து மளிகைக்கடை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அலுவலகம் முடிந்து வீட்டுக்கு போகிற வழியில் தேவையான சாமான்களை வாங்கி செல்வதற்கு ஏதுவாக தாம்பரம் ரயில் நிலையத்தின் அருகிலேயே கடை இருந்தது வசதியாக போய்விட்டது. ஒவ்வொரு பொருளின் விலையும் மற்ற கடைகளை விட ஐம்பது, அறுபது பைசா கூட இருந்தாலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததே தவிர குறைந்தமாதிரி தெரியவில்லை.

மணி மாலை ஏழை நெருங்கிக்கொண்டிருந்தது. கடை ஊழியர்கள் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார்கள். நாள் முழுக்க சுழன்று, சுழன்று வேலை செய்தாலும் குறிப்பாக இந்த நேரத்தில் இவர்களது சுழற்சி சற்று அதிகமாகவே இருக்கும். ஏன்னா இது முதலாளி வரும் நேரமாயிற்றே! கார் வந்து நின்றது. காரிலிருந்து ஷாருக்கான் மாதிரி இறங்கி வந்த அருணை பார்க்கிறவர்களிடம், இவன்தான் இந்த மளிகைக்கடைக்கு முதலாளி என்று தலையில் அடித்து சத்தியம் செய்து சொன்னால்கூட நம்பமாட்டார்கள். பில்கேட்ஸுக்கும் பெருங்காயத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது என்றால் யாரால்தான் நம்பமுடியும்? ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும்.

முப்பத்தாறு வயதாகும் சுத்த பிரம்மச்சாரியான அருண் பொருளாதாரமும், எம்.பி.ஏவும் படித்துவிட்டு ஒரு பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப கம்பெனியில் பணிபுரிகிறான். தான் படித்த எம்.பி.ஏ அறிவு எவனோ ஒருவன் பணக்காரனாக பயன்படுகிறதே என்று உள்ளுக்குள்ளேயே புழுங்கியதால் வந்த விளைவுதான் இந்த கடை. தான் படித்த அத்தனை வியாபார நுணுக்கங்களையும் சோதித்து பார்க்க விரும்பி சொந்தமாக தொழில் தொடங்கி ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டான். ஆனாலும் பார்க்கிற வேலையை விட்டுவிட மனமில்லாமல் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறான். காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து வரை தொழிலாளி. மாலை ஏழு மணியிலிருந்து இரவு பன்னிரண்டு வரை முதலாளி என்று இரட்டை வேடத்தில் பணத்தை அள்ளிக் கொண்டிருக்கிறான். வேகமாக கடைக்குள் நுழைய போனவனை, கடைக்கு வெளியில் குப்பைத்தொட்டிக்கு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த மூட்டைகள் தடுத்து நிறுத்தியது.

சரவணா! என்ன மூட்டைங்க இது? எதுக்காக இங்க போட்டு வச்சிருக்க?” என்று கடைப்பையனை சத்தமாக அதட்டினான்

யாரு வச்சாங்கன்னு எனக்கு தெரியலைண்ணேஎன்ற சரவணனின் பதில் அவனுக்கு எரிச்சலூட்டியது.

என்ன இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்ற? கடையில நம்ம ஆளுங்க எல்லார்கிட்டயும் கேளு என்று சொன்னவுடன் சரவணன் விழுந்தடித்துக்கொண்டு உள்ளே ஓடினான். ஓடிய வேகத்தில் திரும்பியவன் கூட வேலுவும் இருந்தான்

அண்ணே! நம்ம வேலுதான் வச்சானாம்

என்ன மூட்டைங்கடா அது? எதுக்கா அங்க கொண்டு வச்ச?”

அதுவாண்ணே! இன்னைக்கு ஆர்டர் கொடுக்கிறதுக்காக சரக்கு லிஸ்ட் எடுத்தேன். அப்ப பழைய சரக்குல நெறைய எக்ஸ்பையரி சாமான்கள் இருந்துச்சு. அதைத்தான் மூட்டையா கட்டி போட்டேன் என்று அவன் சொன்னவுடன் அருண் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது.

ஏண்டா சரவணா! இவன்தான் புதுசு. கடைக்கு வந்து ஒரு மாசம்தான் ஆச்சு. ஒங்களுக்கெல்லாம் அறிவு எங்கடா போச்சு?” என்று வெடித்தவுடன் அந்த மூட்டைகளை எடுக்க வேகமாக நகர்ந்த சரவணனை தடுத்து நிறுத்திய அருண், கடையில கூட்டம் இருக்கு. அவங்க முன்னாடி எடுத்துட்டு வந்து ஏழரையை கூட்டிடாத. கடை மூடுறப்ப எடுத்துக்கலாம். அதுக்கு முன்னாடி வேற எவனாவது தூக்கிட்டு போயிடாம அங்கயும் ஒரு கண்ணு வச்சுக்கோ என்று சொல்லிவிட்டு கல்லாபெட்டியை நோக்கி நடந்தவன் சற்று நேரத்தில் வியாபாரத்தில் மும்முரமானான். நேரம் ஆக, ஆக கூட்டம் குறைந்து மணி பன்னிரண்டை நெருங்கியபோது அருணோடு மிஞ்சியது சரவணனும், வேலுவும்தான்.

டேய் சரவணா! நான் கெளம்புறேன். மறக்காம கடையை சுத்தம் பண்ணிட்டு கெளம்பு. கடை சாவி பத்திரம்டா! என்று சொல்லிவிட்டு வேலு பக்கம் திரும்பியவன், 

ஏய் வேலு! இனிமே என்கிட்டயோ, சரவணன்கிட்டயோ சொல்லாம எதுவும் செய்யாதே! புரிஞ்சுதா! நாளைக்கு ஒனக்கு என்ன வேலை தெரியுமா? அந்த மூட்டைங்கள்ள இருக்க எல்லா சாமான்லயும் டிஸ்கவுண்ட் வெலை சீட்டை ஒட்டுறதுதான். வெலை சீட்டை சரவணன்கிட்ட கேட்டு வாங்கிக்கோ என்று கூறியது வேலுவை பயங்கர அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  

என்னண்ணே சொல்றிங்க! அது தப்பில்லையா?” என்று அவன் கேட்ட அடுத்த வினாடி அருண் சத்தம் போட்டு சிரித்துக்கொண்டே ஏய் சரவணா! ஒன்னோட ஊருக்காரன் அரிச்சந்திரன் பரம்பரையில பொறந்தவன்னு ஏண்டா என்கிட்ட  சொல்லலை?” என்று கேட்டுவிட்டு தொடர்ந்து சிரித்தான்.

அதில்லைண்ணே! ஊர்ல நான் வேலை பார்த்த கடை மொதலாளி அண்ணாச்சி, எக்ஸ்பையர் ஆன சாமான்களை தூக்கி போட்டுடச்சொல்லுவாரு. அதான்....... என்று வேலு இழுத்தவுடன் சிரிப்பை நிறுத்திய அருண்,

எட்டாங்கிளாஸ் படிச்ச நீயெல்லாம் எனக்கு வியாபாரம் பண்ண சொல்லித்தர்றதை நெனைச்சா சிரிக்கிறதா, அழுவுறதான்னு தெரியலைடா. நான் யாரையும் ஏமாத்தலே. எக்ஸ்பையர் ஆன பொருளை கொறைஞ்ச வெலையில வாங்க ஒரு கூட்டமே ரெடியா இருக்கு. இதுல என்னோட தப்பு எங்க இருக்கு?” என்று தன்பக்க தவறுக்கு நியாயம் தேடினான்.   

இல்லைண்ணே! நீங்க என்ன சொன்னாலும் நாம செய்றது எனக்கு சரியாப்படலை

டேய்! என்னடா நீ சொன்னதையே திரும்பி, திரும்பி சொல்லிகிட்டு இருக்க? எம்.பி.ஏ படிச்ச எனக்கு தெரியாதா? எது சரி, எது தப்புன்னு? நீ சொன்ன வேலையை மட்டும் செய் என்று சிடு, சிடுவென்று சொல்லிவிட்டு காரை நோக்கி அருணை வெறித்து பார்த்துக்கொண்டே நின்ற வேலுவின் தோளை சரவணன் தொட்டு திருப்பினான்.

ஏண்டா இப்படி பேயறைஞ்ச மாதிரி நிக்கிற? வாடா கெளம்புவோம்

டேய்! அண்ணே சொன்னதை கேட்டியா, இல்லையா? ஒனக்கு இது சரியாப்படுதா?”

சரி, தப்பெல்லாம் பார்த்தா பொழைப்பை பார்க்க முடியாது. இதையெல்லாம் பெரிசுபடுத்தக்கூடாதுடா. அதான் அண்ணே சொன்னாருல்ல. இதை வாங்கவும் ஆள் இருக்குன்னு     

அதுக்காக காசு இருக்கிறவனுக்கு ஒரு தரம், காசு இல்லாதவனுக்கு ஒரு தரமா? எந்த ஊரு நியாம்டா இது?”

டேய் வாங்கிறவங்களே தரத்தைபத்தி கவலைப்படலை. ஒனக்கு என்னடா?”

இல்லைடா. என்னால இதை ஒத்துக்கவே முடியலை. ஊர்ல நம்ம கடை அண்ணாச்சி சொன்னது என் காதுல ஒலிச்சுகிட்டே இருக்கு. வியாபாரத்துல எந்த காரணத்துக்காகவும், யாரையும் ஏமாத்தக்கூடாதுன்னு சொல்லிகிட்டே இருப்பாரு

போடா இவனே! நம்ம அண்ணாச்சி இப்படி தத்துவம் பேசிதான் வீணா போனாரு. அவருக்கு போட்டியா கடை போட்ட அந்த பொடிப்பய செபஸ்டின் ரெண்டே வருஷத்துல என்னமா சம்பாதிச்சுட்டான்!

ஆமாம்! ஆமாம்! சம்பாதிச்சான்! சம்பாதிச்ச அதே வேகத்துல காணாமலும் போயிட்டான். அது தெரியுமா ஒனக்கு? ஆனா இன்னைக்கும் அண்ணாச்சி கடையை யாரும் அடிச்சுக்க முடியலை. ஏன்? அண்ணாச்சியோட நாணயம்தான்

சரிடா! அதுக்காக நீயும் அண்ணாச்சி மாதிரி பேசிகிட்டு இருந்தா இந்த ஒலகத்துல வாழமுடியாது. அருண் அண்ணே பெரிய படிப்பு படிச்சவருடா

என்னடா பெரிய படிப்பு? எட்டாங்கிளாஸ் படிச்ச எனக்கு தெரிஞ்சது அவருக்கு தெரியலையே!

டேய்! நீ இப்படியே பேசிகிட்டு இருந்த, ஒன்னை கொண்டு போயி மியூசியத்துல வைச்சுருவானுங்க

என்னடா கிண்டலா! எனக்கு இங்க வேலை பார்க்கவே புடிக்கலைடா. வேற ஏதாவது கடைக்கு போகப்போறேன்

வேற கடைக்கு போயிட்டா மட்டும், அங்க என்ன மகாத்மாவா இருக்கப்போறான்? ரூமுக்கு போயி படுத்து தூங்குனா கொழப்பமெல்லாம் கொறைஞ்சுடும். மொதல்ல ரூமுக்கு போ! நாளைக்கு பார்க்கலாம் என்று கூறிவிட்டு ரயில் நிலையத்தை நோக்கி நடந்தான் சரவணன்.

**********************************************************

அடுத்தநாள் வழக்கம்போல் காலை எட்டு மணிக்கு கடையை திறந்தான் சரவணன். ஆனால் வழக்கத்துக்கு மாறாக, எப்போதும் டாண்ன்னு எட்டரைக்கு கடைக்கு வரும் வேலுவை காணவில்லை. தூங்கிட்டான் போல, லேட்டா வருவான் என்று சமாதானம் சொல்லிக்கொண்டாலும் சரவணன் மனதில் ஒரு நெருடல். 

கல்லாவில் நின்றிருந்த சுமதியிடம், சுமதி! ஒரு வேலை விஷயமா அருண் அண்ணே என்னை வரச்சொல்லியிருக்காரு. நான் கெளம்புறேன். வேலு வந்தான்னா அவன்கிட்ட இந்த வெலை சீட்டை கொடுத்துடுன்னு சொல்லிவிட்டு நகர்ந்தவன் மனதில் குழப்பம். மணி பத்தாயிருச்சு! இன்னும் இந்த வேலுபையலை காணுமே! வேலையை விட்டு நின்னுட்டானோ! சரி போயிட்டு வந்து போன் அடிக்கலாம்என்ற முடிவுடன் கடை வேனில் ஏறி உட்கார்ந்தான் சரவணன்.
  
**********************************************************
               
வேலையை முடித்துவிட்டு சரவணன் கடைக்கு திரும்பியபோது மதியம் மூன்று மணி ஆகியிருந்தது. கடை வாசலில் உட்கார்ந்திருந்த வேலுவை பார்த்தவுடன் அந்த அசதியிலும் மனசு சந்தோஷப்பட்டது. அவன் பக்கத்துல மூட்டைங்கள்ள இருந்த சாமான்கள் இறைந்து கிடந்தன. டிஸ்கவுண்ட் வெலை சீட்டை மும்முரமா ஒட்டிக்கொண்டிருந்தவனின் அருகில் போய் சரவணன் நின்றவுடன் அவன் நிமிர்ந்தான்.

எப்படா வந்த? எங்க வராம போயிடுவியோன்னு பயந்தேபோயிட்டேன்டா என்றவுடன் வேலு ஒருமாதிரி சிரித்தான். அந்த சிரிப்பே சொன்னது அவனுக்கு அந்த வேலையை செய்ய சுத்தமாக விருப்பம் இல்லை என்று.

வராம எங்கடா போறது? நீதான சொன்ன இதெல்லாம் பார்த்தா பொழைப்பை பார்க்கமுடியாதுன்னு என்று சொல்லிக்கொண்டே ஒரு பொருளை எடுத்து சரவணன் முகத்துக்கு நேரே காண்பித்தான். அதில் எக்ஸ்பையரி தேதி என்று ஒரு வருஷத்துக்கு முந்தைய தேதி இருந்தது. சரவணன் எதுவும் பேசாமல் அவனது முகத்தை பார்த்தான். வேலுவின் பார்வையோ வேறு ஒரு இடத்தில் நிலைகுத்தி நின்றது. அங்கு முத்து மளிகை கடை நேர்மை, நாணயம், நம்பிக்கை என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்ட பலகை தொங்கிக் கொண்டிருந்தது.       
   
   
 
   
       
                   


No comments:

Post a Comment