ஒரு மூட்டைபூச்சியின் கதை
'தங்கமீன்' இணைய இதழில் வெளியானது
நான் இங்க குடிவந்து ஒரு
வருஷமாயிடுச்சு. இதுக்கு முன்னால யீஷுன் கோல்டன் வில்லேஜ் தியேட்டர்ல குடியிருந்தேன்.
தியேட்டரை ரெனோவேஷன் செய்யப்போறதை கேள்விப்பட்டவுடன் அங்கிருந்து காலி செய்ய முடிவெடுத்தோம்.
அம்மா, அப்பா, அக்கா, மூணு அண்ணங்கன்னு என் குடும்பம் கொஞ்சம்
பெரிசு. நான்தான் கடைக்குட்டி.
அப்போ கமலஹாசன் படம் ஓடிக்கிட்டிருந்ததா
ஞாபகம். குடும்பத்தில என்னையும், அக்காவையும் தவிர எல்லாரும்
கமல் ரசிகர்கள். அதுக்கு அவங்க சொல்ற காரணம், கமல் நடிப்புல ரசிகர்கள் ஒன்றிபோறதால, தொந்தரவு இல்லாம நிம்மதியா
ரத்தம் உறிஞ்சலாம் என்பதுதான். அக்கா காந்தியின் ரசிகை. காந்தின்னு ஒரு தமிழ்
நடிகரா!! கேள்விப்பட்டதில்லையே!!ன்னு நீங்க கொழம்புறது புரியுது. கொஞ்சம் பொறுங்க!
நான் சொன்னது மகாத்மா காந்தியை. ஆமாம்! அக்கா அவரைப்போல அகிம்சையை
தீவிரமா கடைபிடிக்கிறவ. ரத்தம் உறிஞ்சுறதுன்னா அவளுக்கு சுத்தமா பிடிக்காது. ரத்தம்
பிடிக்காத மூட்டைபூச்சியான்னு அதிசயமாக இருக்கா? உண்மையிலேயே அவ அதிசயப்பிறவிதான்.
எவ்வளவு பசியா இருந்தாலும் கொழந்தைகளை, வயசானவங்களை, கர்ப்பிணிகளை, ஊனமானவங்களை கடிக்கக்கூடாதுங்கிற கொள்கை
கொண்டவ. ஒருநாளைக்கு மிஞ்சி மிஞ்சி போனா ரெண்டு பேரை கடிக்கிறதே அதிகம்தான். ‘’ஏண்டி! இந்த லட்சணத்தில சாப்பிட்டா
ஒடம்பு என்னத்துக்கு ஆறது? இப்படி நோஞ்சானா
இருந்தா எப்படி கொழந்தை குட்டிகளை பெத்துப்ப?’’ன்னு அம்மாதான் புலம்பிக்கிட்டே இருப்பா.
பார்த்திங்களா! அக்காவைப்பத்தி
சொல்லிட்டு எனக்கு யாரை பிடிக்கும்ன்னு சொல்ல மறந்துட்டேன்! நான் இளைய தளபதியின்
பரம விசிறி. அடுத்து விஜய் படம் வரப்போவுதுன்னு தெரிஞ்சவுடன் தியேட்டரைவிட்டு வர மனசே
இல்லை. ஆனா உயிர் முக்கியமா, விஜய் முக்கியமான்னு
யோசிச்சப்ப காலி செய்யிறதுதான் சரியாப்பட்டது. தலைவனுக்காகவும், நடிகனுக்காகவும் வாழ்க்கையை வீணாக்கிக்க
நாங்க என்ன ஒங்களை மாதிரியா?
உட்லேண்ட்ஸ் ஏரியாவில
உள்ள ஒரு வீட்டுக்கு குடிவந்தோம். இந்த வீட்டு பொம்பளை பேரு அரசி. சரியான சினிமா
பைத்தியம். அவ பொடவையில ஏறிதான் நாங்க இங்க வந்தோம். அவ புருஷன் மொடாக்குடியன். தெனமும்
இவங்களுக்குள்ள நடக்கிற அடிதடி சண்டையை பார்க்கணுமே! சினிமா சண்டையெல்லாம் தோத்துச்சு
போங்க! கொழந்தை இல்லாத இவங்களோட ஒரு வயசான ஜீவனும் இருந்துச்சு. அரசியின் மாமியார்தான்
அது. எல்லா சினிமாலயும் மாமியார், மருமக சண்டையை மட்டுமே
பார்த்த எங்களுக்கு அரசிக்கும், அவ மாமியாருக்கும்
இடையேயிருந்த அன்னியோன்யம் வியப்பாயிருந்துச்சு. ‘’எனக்கும், பூமிக்கும் பாரமா இருந்து என்னத்த சாதிக்கப்போற? செத்து தொலையேன்!’’ன்னு மகன் சொன்னா எந்த அம்மாவாலதான் தாங்கிக்க
முடியும். ‘’நீயும், நானும் போன ஜென்மத்துல பண்ணின பாவம்தான் எனக்கு மகனாவும், ஒனக்கு புருஷனாவும் வாய்ச்சிருக்கு’’ன்னு அந்த கிழவி அரசியிடம் பொலம்புறதை
கேட்கிறப்ப பாவமா இருக்கும்.
தியேட்டரில வெரைட்டியா ரத்தம் குடிச்ச எங்களுக்கு மூணு பேரோட ரத்தம் அலுத்துப்போனதால
ராத்திரியில பக்கத்து வீட்டுக்கு போக ஆரம்பிச்சோம். எடதுபக்க வீட்டுல பத்து பேர்
கொண்ட பெரிய குடும்பம். இந்த காலத்தில ஒரு குடும்பத்தில பத்து பேரா! அதுவும்
சிங்கப்பூரிலா!ன்னு ஆச்சர்யமாக இருக்கா? எனக்கும்தான். ஆனால் என்னை ஆச்சர்யப்படுத்தியது, இத்தனை பேர் இருக்கிற வீடு துளி
சத்தம் கூட இல்லாம மயான அமைதியா இருந்ததுதான். ஒவ்வொருவரும் மொபைல்ல பேசுறதை
கேட்டிருக்கிறேனே தவிர ஒருவருக்கொருவர் பேசி கேட்டதே கிடையாது. இது என்ன வீடா
இல்லை ஹோட்டலாங்கிற சந்தேகமே வந்துருச்சு.
தியேட்டர் சத்தத்துல இருந்த எனக்கு இந்த சூழல் கொஞ்சம்
கூட பிடிக்காததால நான் மட்டும் திரும்ப அரசியின் வீட்டுக்கே வந்துட்டேன். அக்காவும்
என்ன காரணத்தாலோ அங்க தங்காம, எதிர்ப்புறத்தில காலியா கெடந்த வீட்டுக்கு குடிபோய்ட்டா. இது தெரிஞ்ச அம்மா, ‘’ஏண்டி! மனுஷங்க இல்லாத வீட்டில
நமக்கென்ன வேலை? ஒழுங்கு மரியாதையா வேற வீட்டுக்கு போற வழியை பாரு’’ன்னு கத்த ஆரம்பிச்சுட்டா.
‘’சும்மா கத்தாதேம்மா! ரத்தம் குடிக்கிறது
மட்டும்தான் வாழ்க்கையா என்ன! எனக்குதான்
அது சுத்தமா பிடிக்காதுன்னு தெரியுமில்ல! நான் அங்கதான் இருப்பேன்’’ன்னு பிடிவாதத்துடன் சொன்ன
அக்காவிடம் ‘’ஊரு ஒலகத்துல இல்லாத அதிசயப்பிறப்பால்ல இருக்க நீ! ரத்தம் உறிஞ்சறது தப்புன்னு
ஏன் நெனைக்கிற? நாம என்ன கொசு மாதிரி ரத்தம் உறிஞ்சி நோயையா பரப்புறோம்? வயித்துப்பொழப்புக்காக செய்றோம். இதை
நீ தப்புன்னு சொல்றது நம்ம படைச்ச கடவுளேயே தப்புன்னு சொல்றதுக்கு சமம். ஒவ்வொரு
படைப்புக்கும் சில இயல்புகளும், நோக்கங்களும் விதிக்கப்பட்டிருக்கு. அதுலயிருந்து வெலகணும்ன்னு நெனைச்சா அது ஒனக்கும், ஒன் எனத்துக்கும் அழிவைத்தான் தேடி
தரும். இதை மொதல்ல புரிஞ்சுக்கோ!’’ன்னு அம்மா சொன்ன அட்வைஸ் அக்காவிடம் சுத்தமா எடுபடலை.
வாரம் ஒரு தடவை எல்லாரையும் பார்க்க போவதை நானும், அக்காவும் வழக்கமாக்கிகிட்டோம். ஆரம்பத்தில
எல்லாரையும் பார்க்கிற ஆசையில போய்கிட்டிருந்த நான், இப்போதெல்லாம் அக்கா சொல்ற கதைகயை கேட்க மட்டுமே
போறேன். ஊர்வம்பு பேசுறதும், கேட்கிறதும் தனி சொகம்தான். அதுவும் பொம்பளையா பொறந்துட்டு இந்த சொகத்தை
அனுபவிக்கலைன்னா பொறந்த பொறப்புக்கே அர்த்தம் இல்லாம போயிடும் பாருங்க! என்ன! நான்
சொல்றது சரிதானே? அந்த தளத்திலுள்ள எல்லா வீட்டுக்கும் ரோந்து போகும் அக்காவிடமிருந்து ஒவ்வொரு
வீட்டு கதையையும் கேட்கிறது அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கும். நாங்க நாள் முழுதும்
ஊர்க்கதை பேசுறதை பார்க்கிற அம்மா ‘’ஏண்டி! ஒங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே கெடையாதா? எப்ப பார்த்தாலும் மனுஷங்களை பத்தி
பேசியே பொழுதை கழிக்கிறீங்களே!’’ன்னு கத்தினாலும் அந்த கதைகளை கேட்கிறதில அவளுக்கும் ஆசையிருந்துச்சுங்கிறதுதான்
உண்மை. அக்கா சொன்ன மத்த வீட்டு கதைகளை கேட்க ஒங்களுக்கும் ஆசையா இருக்குல்ல!
சொல்றேன் கேளுங்க!
வலப்பக்க வீட்டுல புருஷன், பொண்டாட்டி, புள்ளைன்னு மூணு பேரு. போதை மருந்து சாப்பிட்ட குத்தத்துக்காக
ஜெயிலுக்கு போய்ட்டு வந்து வீணா பொழுதை கழிச்சுகிட்டிருக்கான் புள்ளை. பணம், பணமின்னு ஒடி புள்ளையை கவனிக்காம
விட்டுட்டு, தலைக்குமேல வெள்ளம்
போனப்புறம் மனசுக்குள்ளேயே வெந்து புழுங்கி வெளியில தலைகாட்டமுடியாத பெத்தவங்களை
மிரட்டி, மிரட்டியே பணம் பறிச்சுகிட்டு
இருக்கான்
மூலைவீட்டு கதை இதைவிட ரொம்ப
மோசம். இந்த வீட்டு பொம்பளை விவாகரத்தானவ. ஆம்பளைங்க கொடுமை தாங்காமதான் பொம்பளைங்க
விவாகரத்து கேட்கிறாங்கன்னு நெனைச்சுகிட்டிருந்த என்னோட நெனைப்பை பொய்யாக்கியவ.
மோசமான நடத்தை கொண்டவ. இவளோட வேண்டாத நடவடிக்கைகளை கண்டிச்ச புருஷனை ஒதுக்கிவைச்சுட்டு
ஒரே மகளோட வாழறா. தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறு அடி பாய வேணாமா! உயர்நிலைப்பள்ளியில
படிக்கிறப்பவே எவன்கிட்டயோ ஏமாந்து கர்ப்பம் கலைச்ச கன்னி! இன்னும் தான் கன்னிதான்னு
சொல்லி நெறைய ஆம்பளைங்களோடு ஊர் சுத்தி அவங்க பணத்தை ஏப்பம்விடுறதை தொழிலா கொண்டவ.
இதுங்க வண்டவாளம் தெரிஞ்சவுடன் வீட்டை காலி பண்ணச் சொன்ன வீட்டுக்காரரை வளைச்சுபோட்டு
வீட்டையே சொந்தமாக்கிகிட்ட சாமர்த்தியசாலிங்க.
இப்படி இந்த தளத்தில ஒவ்வொரு
வீட்டு கதையும் எங்களுக்கு அத்துபடியானதால, அக்கா கீழ்த்தளத்திலுள்ள வீட்டுக்கு
போகப்போவதாகச் சொன்னவுடன் எனக்கு நெறைய கதை கேட்கலாங்கிற சந்தோஷம். ஆனா அம்மாவுக்கு போற எடத்தில அக்காவுக்கு ஏதாவது ஆபத்து
வந்துடுமோங்கிற பயம் கலந்த கவலை. ஒன்னு கவனிச்சிங்களா! எல்லா உயிரினத்திலும், அம்மாவோட இயல்பு ஒரே மாதிரிதான்
இருக்கு! எங்க இருந்தாலும் தன்னோட பிள்ளைங்க எந்த ஆபத்தும், கவலையும் இல்லாம சந்தோஷமா இருக்கணும்ன்னு
நெனைக்கிறதைதான் சொல்றேன்.
அம்மா பயந்தமாதிரியே
நடந்தது. போன அக்கா போனதுதான். திரும்பி வரவே இல்லை. வழக்கம்போல அழுது புலம்பிய அம்மாவிடம், ‘’எதுக்காக அழுது ஊரைக்கூட்ற? அவ என்ன சின்னக் கொழந்தையா? போனவளுக்கு வரத்தெரியாதா!’’ன்னு கத்தினாலும் மனசுக்குள்ள
அக்கா யார் கையிலாவாது அடிபட்டு பரலோகம் போயிருப்பாளோங்கிற பயம் இருந்துச்சு. அவ போய்
கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்கள் ஆயிடுச்சு. இந்த வாரம் வந்துடுவாங்கிற எதிர்பார்ப்பு
ஒவ்வொரு தடவையும் பொய்யாப்போக, அம்மாவின் அழுதுவடியும் மூஞ்சியை பார்க்க
தைரியம் இல்லாத நான் வாரம் ஒரு தடவை போறதை மாசத்துக்கு ஒரு தடவையா கொறைச்சுகிட்டேன்.
திடீர்ன்னு ஒரு நாள் காலையில
அம்மா என்னை தேடி அரசி வீட்டுக்கே வந்தது அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருதுச்சு. ‘’என்னாச்சும்மா? என்னைக்கும் இல்லாத அதிசயமா இங்க வந்திருக்க?’ன்னு கேட்டவுடன் ‘’சீக்கிரமா என்கூட வாடி! அக்கா
வந்துருக்கா!’’ன்னு சொன்ன அவ குரல்ல அத்தனை உற்சாகம். ரொம்ப நாளைக்கப்புறம் பழைய அம்மாவை
பார்த்த சந்தோஷத்தில் அவசர அவசரமாக அவ பின்னால ஓடினேன். அக்காவை பார்த்தவுடன் என்
கண்ணையே என்னால் நம்பமுடியலை. ஒல்லிகுச்சி இடுப்புக்காரியாக இருந்தவ ஒரு சுத்து பெருத்து, இல்லை! இல்லை! ஒன்பது சுத்து பெருத்துபோயிருந்தா.
வாயை பிளந்துகிட்டு நான் பார்த்ததை கவனிச்சவ ‘’ஏய்! எப்படி இருக்க? என்னடி புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிற?’’ன்னு சிரித்துக்கொண்டே கேட்டப்புறம்தான்
சுயநெனைவே வந்துச்சு.
‘’ஆளே அடையாளம் தெரியாம மாறி
போயிட்டக்கா!! எப்படிக்கா இருக்க?’’
‘’என்னை பார்த்தாலே தெரியலை? நான் நல்லாதான் இருக்கேன்னு’’
‘’எங்கக்கா போன இத்தனை நாளா? நாங்கள்ளாம் ரொம்ப பயந்துட்டோம்.
அம்மா ஒன்னை நெனைச்சு பொலம்பாத நாளே கெடையாது’’
‘’அது ஒரு பெரிய கதைடி’’
‘’பெரிய கதையா! அப்படீன்னா ரெண்டு
பேரும் இப்போதைக்கு கெளம்பமாட்டீங்க. நீங்க பேசிகிட்டு இருங்க. ராத்திரி மணி
பன்னண்டு ஆவுது. எல்லாரும் அசந்து தூங்குவாங்க. நான் போய் சாப்பிட்டு வந்துடுறேன்’’ன்னு சொல்லிட்டு நகர்ந்த அம்மாவின்
பின்னால ஓடிய அக்கா ‘’இரும்மா! நானும் ஒன்கூட வர்றேன்’’ன்னு சொன்னவுடன் அம்மா மொகத்துல அத்தனை பிரகாசம். எனக்கோ, ரத்தம்னாலே ஒரு காத தூரம் ஓடிய
அக்காவா இப்போ ரத்தம் குடிக்க இப்படி விழுந்தடிச்சிகிட்டு ஓடுறான்னு ஆச்சரியம்
கலந்த அதிர்ச்சி.
‘’ஏண்டி! நீ வரலையா?’’ன்னு என்னை பார்த்து கேட்ட
அக்காவிடம் ‘’இல்லைக்கா! நீ போயிட்டு வா. எனக்கு பசியில்லை’’ன்னு சொல்லிட்டு அவங்க போறதையே பார்த்துகிட்டிருந்த
என் மனசுல, ‘’அக்கா எப்படி இப்படி மாறுனா? எது அவளை மாத்துச்சு?ங்கிற கேள்விங்க முட்டி மோதிக்கிட்டிருந்துச்சு. இதுக்கெல்லாம் பதில் தெரிஞ்சிக்காம
திரும்பிப்போனா தலை வெடிச்சு செத்தேபோயிடுவேங்கிறதால அவங்க திரும்பி வர்றவரைக்கும்
காத்திருக்கலாம்ன்னு முடிவெடுத்தேன். ஒரு வழியா அவங்க பொழுதுவிடியிற நேரத்தில
வந்துசேர்ந்தாங்க. என்னை அங்க எதிர்பார்க்காத அம்மா ‘’ஏண்டி, இன்னும் நீ போகலையா? எத்தனை நாளு ஒன்னை இங்க தங்க சொல்லி
கெஞ்சியிருப்பேன். ஒன் அக்காவை பார்த்தவுடன் பாசம் பொங்கியிருச்சோ?’’ன்னு நக்கலா கேட்க ‘’நீ வேறம்மா. அவ ஒண்ணும் பாசத்துல காத்துகிட்டு
இல்லை! என்கிட்டயிருந்து ஏழு மாச கதையை கேட்காம இங்கிருந்து ஒரு அடி எடுத்துவைக்கமாட்டா’’ன்னு அக்கா என் மனசுல இருப்பதை அப்படியே
சொன்னா.
‘’சரியா சொன்னக்கா! அதுதான் உண்மை!
சீக்கிரம் சொல்லு. என் மண்டை வெடிச்சுடும் போல இருக்கு’’
‘’நான் கூட கேட்கணும்ன்னு
நெனைச்சேன். அப்படி என்னதாண்டி நடந்துச்சு?’’ன்னு அம்மாவும் அவள் பங்குக்கு கேட்க அக்கா சொல்ல
ஆரம்பித்தாள்.
‘’நான் இங்கிருந்து மொதல்ல கீழ்த்தளத்திலுள்ள
எல்லா வீட்டுக்கும் போனேன். நம்ம தியேட்டரில பார்த்த சினிமால்லாம் ஏதோ கற்பனைன்னு நெனைச்சுகிட்டு
இருந்த எனக்கு ஒவ்வொரு வீட்டுலயும் நடக்கிறதை பார்த்தப்புறம் ஒலக நடப்பைதான் சினிமாவா
எடுக்குறாங்கன்னு புரிஞ்சுது. வித விதமான கதைங்க. பல விதமான மனுஷங்க. இன்னும்
நெறைய பார்க்கலாமேங்கிற ஆசையில எல்லா தளத்துக்கும் போக ஆரம்பிச்சேன். எல்லா
வீட்டிலயும் மனுஷங்க இருந்தாங்க. ஆனா மனுஷத்தன்மை இல்லை. நான் ரத்தம் உறிஞ்சிறது
தப்புன்னு நெனைச்சேன். ஆனா அவங்க அடுத்தவனோட பணத்தை, ஒழைப்பை, திறமையை எந்த குத்த உணர்ச்சியும் இல்லாம உறிஞ்சிகிட்டு
இருக்காங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். கடைசியா நான் பார்த்தது ஒரு கொலையை. புருஷன்
பொண்டாட்டி மேல சந்தேகப்பட்டு அவளை கொன்னுட்டான்.
அப்போதான் ‘’எல்லா படைப்புக்கும் சில இயல்புகளும், நோக்கங்களும்
விதிக்கப்பட்டிருக்கு. அதுல இருந்து விலகணும்ன்னு நெனைச்சா அது பயங்கரமான அழிவை
தேடி தரும்’’ன்னு அம்மா சொன்னது ஞாபகதுக்கு வந்துச்சு. மனுஷங்க அவங்க படைக்கப்பட்டதே
ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பு செலுத்தவும், மத்தவங்களுக்கு உதவி செய்யவும்கிறதையே மறந்துட்டு ஒருத்தரை
ஒருத்தர் அடிச்சுகிட்டு அழிவை தேடிக்கிறாங்க. தெய்வ நெலைக்கு மாற வேண்டியவங்க மிருக
நெலைக்கு மாறிகிட்டு இருக்கிறதை பார்த்தப்புறம்தான் என்னை நான் மாத்திகிட்டேன். நம்ம
பொறப்போட இயல்பை மாத்த நெனைச்சது எவ்வளவு முட்டாள்தனம்ன்னு புரிஞ்சுகிட்டேன்’’ன்னு அவ சொல்லி முடிச்ச மறுநிமிஷம்
‘’எப்ப பார்த்தாலும் மனுஷங்களை
பார்த்துகிட்டு, அவங்களை பத்தியே பேசிகிட்டு கெட்டு போறியேன்னு வருத்தப்பட்டேன். ஆனா இன்னைக்கு
அவங்க மூலமாவே ஒரு பாடம் கத்துகிட்டியேன்னு நெனைக்கிறப்போ சந்தோஷமா இருக்குடி’’ன்னு சொன்ன அம்மா அவளை தன்னோடு
அணைத்துக்கொண்டாள்.
‘’என்னங்க இவ்வளவு நேரம் ஆசை ஆசையா கதை
கேட்டுட்டு கடைசி நிமிஷத்துல மூஞ்சியை திருப்பிகிட்டு போறிங்க? என்னடா மூட்டை பூச்சியெல்லாம் நமக்கு
புத்தி சொல்ற மாதிரி ஆயிடுச்சேன்னு நெனைக்கிறீங்களா? நல்லதை யார் சொன்னாலும் எடுத்துக்கணும்ன்னு நீங்கதான
சொல்லுவீங்க! கோபப்படாம யோசிச்சு பாருங்க. ராத்திரி சாப்பிடலையா, பசி வயித்தை கிள்ளுது. எனக்கு
தெரிஞ்சு இந்த பகல் நேரத்துல ரத்தம் உறிஞ்ச தோதான ஒரே ஆளு எப்பவும் படுத்தே
இருக்குற அரசி வீட்டு கெழவிதான். நான் கெளம்புறேன். ஆயுசு எனக்கு கெட்டியா இருந்தா
என்னைக்காவது ஒருநாள் ஒங்ககிட்ட ரத்தம் உறிஞ்ச வருவேன். அப்ப சந்திக்கலாம். வரட்டுமா!
குட் பை!
No comments:
Post a Comment