ஆடுகளம்
“அம்மா! ட்ரக்
வந்திருச்சு! ட்ரக் வந்திருச்சு!” என்று கத்திக்கொண்டே குதியாட்டம் போட்ட ஐந்து வயது மகன் கண்ணனைப்
பார்த்த ஆனந்தியின் முகத்தில் புன்முறுவல் எழுந்தது. நான்காவது தளத்திலுள்ள தனது வீட்டின்
முன்புற தாழ்வாரத்தில் காயப்போட்டிருந்த துணிகளை எடுத்துக்கொண்டே கீழே
எட்டிப்பார்த்தாள். செம்ப்கார்ப் நிறுவனத்தின் குப்பை அள்ளும் வண்டி குப்பை
அறையின் எதிரில் வந்து நின்றது. கண்ணன் தாழ்வாரத்தில் இருந்த சிறிய இடைவெளியின் வழியாக
வண்டியை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான். காய்ந்த துணிகளை வீட்டிற்குள் சென்று வைத்துவிட்டு
வெளியே வந்த ஆனந்தி, குப்பை அறையிலிருந்து மேலெழுந்து வந்த கெட்ட நாற்றத்தைச் சகிக்க
முடியாமல் முகம் சுளித்தாள். ஆனால் கண்ணனோ நாற்றத்தைப் பொருட்படுத்தாமல், வைத்த கண் வாங்காமல்
குப்பை அள்ளுவதைப் பார்த்துக்கொண்டு நின்றான்.
வண்டி புறப்பட்டு
போகும்வரை அவன் வீட்டிற்குள் வரமாட்டான் என்பதும் வண்டி நகர்ந்த மறுநொடி அவன் என்ன
கேட்பான் என்பதும் ஆனந்திக்குத் தெரியும். இது வழக்கமாக நடப்பதுதான். வண்டி
கிளம்பியவுடன் அவன் கேட்கும் கேள்வி “அம்மா! விளையாட போகலாமா?” என்பதுதான். கடிகாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் சூரிய கடிகாரம் இருந்தது
போல, நேரம் பார்க்கத்
தெரியாத கண்ணனுக்கு குப்பைவண்டி ஒரு கடிகாரம். குப்பைவண்டி வந்து போனவுடன் அம்மா
தன்னை விளையாட கீழே அழைத்துச் செல்வாள் என்பது அவனது மனதில் ஆழப் பதிந்து போய்விட்டது.
சில சமயங்களில் வண்டி வரும் நேரத்தில் வீட்டிற்குள் இருக்க நேர்ந்தால் கூட, காற்றில் வரும்
வாடையை வைத்தே வண்டியின் வருகையை உறுதி செய்து ஆனந்தியை நச்சரிக்கத்
தொடங்கிவிடுவான்.
பள்ளி இருக்கும்
நாட்களில் அவனது பிடிவாதம் குறைவாக இருக்கும்.
ஆனால் பள்ளி விடுமுறை நாட்களில் அவனைச் சமாளிப்பது சற்று கடினம். வீட்டிற்குள்ளேயே
அடைந்து கிடக்கும் அவனைப் பார்க்க ஆனந்திக்கு பாவமாக இருக்கும். அதனால் எவ்வளவு வீட்டு
வேலை இருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு ஒரு மணி நேரமாவது அவனைக் கீழே அழைத்துச் சென்றுவிடுவாள். இப்போது நாற்றம்
குறைந்திருந்தது. வண்டி கிளம்பிப்போகும் சத்தம் கேட்டது. ஆனால் கண்ணனோ அந்த இடத்தை
விட்டு நகராமல் தொடர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். “எதை இப்படி
பார்த்துக்கொண்டு நிற்கிறான்?” என்ற கேள்வி எழ ஆனந்தி கீழே எட்டிப்பார்த்தாள். குப்பை வண்டி நின்ற
இடத்தில் இப்போது இரண்டு சிறுவர்கள் பந்தை எட்டி உதைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
“கண்ணா!
வீட்டுக்குள் வா. அம்மா கதவைப் பூட்டப் போறேன்” திரும்பிப் பார்த்த
கண்ணன் எதுவும் பேசாமல் அவளைப் பின்தொடர்ந்து வந்தான். “மறந்துட்டானோ!
வழக்கமாக கேட்கிற கேள்வியை இன்னும் கேட்கலையே!” என்ற வியப்புடன்
ஆனந்தி வாசல் கதவைச் சாத்திவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள். வேகமாக அவனது
அறைக்குள் ஓடிய கண்ணன், ஓடிய வேகத்தில் திரும்பி அவளிடம் வந்தான். “அம்மா! விளையாடப்
போகலாமா?” என்று கேட்டவனின் கையில் போன மாதம் புதிதாக வாங்கிய பந்து இருந்தது.
******************************************
ஆனந்தியும், கண்ணனும்
விளையாட்டுத் திடலுக்கு வந்தபோது, மணி மாலை ஐந்தை நெருங்கிக்கொண்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால்
வழக்கத்தைவிட கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. மற்ற நாட்களில் அத்தி பூத்தாற் போல எப்போதாவது
ஒன்றிரண்டு சிறுவர்கள் பள்ளி விட்டு போகும் வழியில் சில நிமிடங்கள் விளையாடிவிட்டுக்
கடந்து போவார்கள்.
புளோக்கின்
அருகில் இருந்த திடல் அளவில் பெரியதாக இருந்தாலும், பத்து நிமிட
நடை தூரத்தில் இருந்த இந்தச் சிறிய திடல்தான் கண்ணனுக்குப் பிடித்திருந்தது. அதற்கு
முக்கிய காரணம் இங்கிருந்த ஊஞ்சல்கள்தான். சிறியதும், பெரியதுமாய்
மூன்று சறுக்கு மரங்கள், இரண்டு ஊஞ்சல்கள், ஒரு சீசா பலகை என்று இருக்கும் இந்த திடலுக்கு வந்தால் ஆனந்திக்கு
அம்மா சொன்னது தவறாமல் ஞாபகத்துக்கு வந்துவிடும்.
மலேசியா
கம்போங்கில் பிறந்து வளர்ந்த அம்மா ஒருமுறை இதைப் பார்த்துவிட்டு “இதைத்தான் பிளேகிரவுண்ட்ன்னு
நீயும், உன் பிள்ளையும் சொன்னிங்களா! புறாக்கூடு அளவுக்குத்தான் இருக்கு. நான்
என்னமோ நம்ம கம்போங் பக்கத்தில் இருக்கிற மாதிரி பெரிய மைதானமா இருக்கும்ன்னு நினைத்தேன்” என்றாள். “சிறியதாக
இருந்தால் என்ன! பத்து புளோக்குகளுக்கென்று பொதுவாக விளையாட ஓர் இடம் இருக்கிறதே!
அதுவே பெரிய விஷயம்தானே!” என்று ஆனந்தி நினைத்துக்கொள்வாள்.
மாலை நேரத்தில் திடலின்
மூலையில் இருந்த அந்த மரத்திலிருந்து ஒலிக்கும் பறவைகளின் ரம்மியமான சத்தம்
ஆனந்திக்குப் பிடித்தமான ஒன்று. சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய கண்கவர் வண்ணங்களோடு இருந்த திடலில் பெரியவர்கள் உட்கார ஏதுவாக
இரண்டு நீல நிற இருக்கைகள் இருந்தன. வழக்கம்போல, கண்ணன் வேகமாக
ஓடிப்போய் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடத்தொடங்கினான். அவன் ஆடிமுடித்து எழுந்து வர
குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும் என்பதால் கையில் வைத்திருந்த பந்து, தண்ணீர் பாட்டிலோடு
ஆனந்தி இருக்கையில் சென்று அமர்ந்தாள். மாலை நேரத்து சூரியன் எட்டிப்பார்ப்பதும், மறைவதுமாக அவன்
பங்குக்குத் தனது விளையாட்டைக் காட்டிக்கொண்டிருந்தான். உட்கார்ந்தவள், தன்னை
ஆசுவாசப்படுத்திக்கொண்டு மெதுவாக சுற்றும் முற்றும் தனது பார்வையைச் சுழலவிட்டாள்.
கண்ணன் வயதையொத்த
குழந்தை ஒன்று கூட இல்லை. குறைந்தது எட்டு வயதுக்கு மேலிருந்த சிறுவர்கள் குழு, குழுவாக
பிரிந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். மூன்று சிறுவர்கள் கொண்ட குழு காற்பந்து விளையாடிக்
கொண்டிருந்தது. திடலின் எதிர்ப்புறத்தில் கார்களை நிறுத்தும் புளோக் இருந்ததால் வண்டிகள்
வருவதும் போவதுமாக இருந்த பக்கத்து சாலையில் உதை வாங்கிய பந்து பறந்து போய் விழுவதும், அதை எடுக்க
சிறுவர்கள் ஓடுவதும் ஆனந்தியின் மனதை பதைபதைக்கச் செய்தது. ஆனால் சிறுவர்கள்
அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம்கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அர்ச்சுனனுக்கு பறவையின்
கண்ணைத் தவிர வேறு எதுவும் புலப்படாதது போல அவர்களுக்கும் காற்பந்தைத் தவிர வேறு
எதுவுமே பெரிதாகப்படவில்லை.
இரண்டு சீன சிறுவர்கள்
தனியாக இறகுப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கையில் மட்டையை
பிடித்திருந்த விதமே அவர்களை கற்றுக்குட்டிகள் என்று காட்டிக்கொடுத்தது. பெயருக்கு
விளையாடிக் கொண்டிருந்தார்களே தவிர அவர்கள் கவனமெல்லாம் காற்பந்தின் மீதுதான்
இருந்தது என்பதைக் கையில் வைத்திருந்த மட்டையை அவ்வப்போது கீழே போட்டுவிட்டு
காற்பந்தை எடுத்துக்கொடுக்க தலைதெறிக்க ஓடும் அவர்களது ஓட்டத்தின் மூலம் ஆனந்தி புரிந்துகொண்டாள்.
கண்ணனுக்கு கூட காற்பந்து விளையாட்டின் மீதுதான் ஈர்ப்பு அதிகம். ஆனந்தியின்
கணவனுக்கோ இறகுப்பந்தாட்டம் விளையாடத்தான் மிகவும் விருப்பம். வாராவாரம் புதன்கிழமை
மாலையில் அலுவலக நண்பர்களுடன் இறகுப்பந்தாட்டம்
விளையாடுவது அவரது வழக்கம். எப்படியாவது கண்ணனுக்கும் இந்த விளையாட்டில் ஆர்வத்தைக்
கொண்டு வந்துவிடவேண்டும் என்று அவர் எடுத்த அத்தனை முயற்சிகளும் வீணாகத்தான்
போயின.
நான்கு மலாய் சிறுவர்கள்
அவர்களது பாரம்பரிய விளையாட்டான செபாக் ராகாவை விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைப்
பார்த்தவுடன் ஆனந்திக்கு, பதினைந்து வயதில் அல்பாயிசில் இறந்துபோன அண்ணன் குமாரின் நினைவு
வந்தது. கம்போங்கில் சிறுவயதில் அவன் செபாக் ராகாவை விளையாடுவதைப் பார்த்து
மலாய்க்காரர்கள் வாயைப் பிளப்பார்கள். பிறப்பில் இந்தியனாக இருந்தாலும் அவனது
உடம்பில் மலாய் ஜீன் ஒட்டிக்கொண்டிருப்பதாக சொல்வார்கள். அவர்கள் சொன்னதுபோல மரபியலுக்கும்
விளையாட்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் இன்று வரை ஆனந்திக்கு
உண்டு. அண்ணனின் மறைவுக்குப் பிறகான இந்த இருபது வருட கால இடைவெளியில், செபாக் ராகாவை யார்
விளையாடினாலும் அவர்களது உருவத்தில் குமார் அண்ணனைப் பார்த்துவிடுவாள்.
திடலின்
மூலையில் மூன்று சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கு
நின்றிருந்த மரத்தின் பருத்த, தடித்த அடிப்பகுதியை ஸ்டம்ப்பாக மாற்றி இருந்தார்கள். சமீப காலமாகத்தான்
கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களை சிங்கப்பூரில் பார்க்கமுடிகிறது. ஒருவன் மட்டையைப்
பிடித்திருக்க இன்னொருவன் பந்து வீசிக்கொண்டிருந்தான். மூன்றாமவனுக்கு பந்து
பொறுக்கும் வேலையை கொடுத்திருந்தார்கள். அவனுக்கு அது பிடிக்கவில்லை என்பது அவனது
செய்கையிலேயே தெரிந்தது. பந்து அருகில் விழுந்தால் மட்டுமே ஓடிப்போய் எடுத்தவன், தொலைவில்
விழும்போது தனக்கும் அந்த விளையாட்டுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது போல
விளையாடும் மற்ற குழுக்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். அப்போதெல்லாம் அவனைப்
பார்த்து சத்தமாக ஆங்கிலத்தில் திட்டிவிட்டு, மற்ற இருவரும் ஓடிப்போய்
பந்தை எடுத்து வந்தார்கள். அதை பார்த்த ஆனந்திக்குச் சிரிப்பு வந்தது.
கண்ணனைப் பார்த்தாள்.
அவனுக்கு ஊஞ்சல் அலுத்துவிட்டது போலும்! குட்டி ஏணியிலும், சிறிய படிகளிலும்
ஏறிப்போய் ஒவ்வொரு சறுக்கு மரத்திலும் மாறி, மாறி சறுக்கிக் கொண்டிருந்தான்.
இடைஇடையே காற்பந்தை எடுக்க அவன் சாலையை நோக்கி ஓட முற்படுவதும் ஆனந்தி சத்தம் போட்டு
அதட்டியவுடன் மீண்டும் தனது விளையாட்டைத் தொடர்வதுமாக இருந்தவன் திடீரென்று
ஆனந்தியை நோக்கி ஓடிவந்தான்.
“அம்மா! டாய்லெட்
போகணும்”
“இங்கே எங்கே போறது? வா வீட்டுக்குப்
போவோம்” என்று கூறிக்கொண்டே ஆனந்தி வேகமாக எழுந்தாள்.
“அம்மா! மூச்சா
வந்திருச்சும்மா” என்று சிறுநீரை அடக்கமுடியாமல் கால்களைப் பின்னிக்கொண்டு நெளிந்தான்
கண்ணன்.
“உனக்கு எத்தனை
தடவை சொல்லி இருக்கேன்! கடைசி நிமிஷத்துல சொல்லாதேன்னு” என்று
அதட்டியவள் அவனைப் பக்கத்திலிருந்த கோப்பித்தியாம் டாய்லெட்டிற்கு அழைத்துச்
சென்று, சிறுநீர் கழிக்கவைத்து திடலுக்கு திரும்ப அழைத்துவர பதினைந்து
நிமிடங்கள் பிடித்தன. அவளுக்கு முன்பாக திடலுக்கு ஓடிவந்த கண்ணன் இருக்கையில்
இருந்த பாட்டிலை எடுத்து மடக் மடக்கென்று தண்ணீரை குடித்துவிட்டு கொண்டு வந்திருந்த
புதிய பந்தை எடுத்து உதைக்கத் தொடங்கியிருந்தான். மீண்டும் இருக்கையில் வந்து
அமர்ந்த ஆனந்திக்கு திடலில் நிலவிய அமைதி ஆச்சர்யத்தைக் கொடுத்தது.
“என்னவாயிற்று
இந்த சிறுவர்களுக்கு? ஏன் எல்லோரும் விளையாடுவதை நிறுத்திவிட்டார்கள்? குழுக்களுக்கு
இடையில் சண்டையா! பதினைந்து நிமிட இடைவெளியில் என்ன நடந்திருக்கும்? எல்லோரும் ஒரே நேரத்தில் விளையாடுவதை நிறுத்தி இருக்கிறார்கள்
என்றால் கட்டாயம் வலுவான காரணம் இருக்கவேண்டும். என்னவாக இருக்கும்?” என்றெல்லாம் பல
கேள்விகள் ஆனந்தியின் மனதை துளைத்து எடுத்தன.
அவர்கள்
விளையாடியபோது பறந்த பந்தை எடுத்துக் கொடுக்க கண்ணன் ஓடியது போக, இப்போது கண்ணன்
உதைக்கும் பந்தை எடுத்துக் கொடுப்பதற்காக ஒன்றிரண்டு சிறுவர்கள் விழுந்தடித்து
ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் ஆனந்தி கவனித்தாள். மற்றொரு இருக்கையில் ஒரு வயதான
தாத்தா இறுக்கமான முகத்தோடு அமர்ந்திருந்தார். “இவர் எப்போது
வந்தார்? கண்ணனை சிறுநீர் கழிக்க அழைத்துச் சென்றபோது வந்திருப்பாரோ! ஏன்
முகத்தை இவ்வளவு கடுமையாக வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்? இந்த
சிறுவர்கள் அவரை ஏதாவது தொந்தரவு செய்திருப்பார்களோ? பந்தை அவர் மீது
அடித்துவிட்டார்களோ! அதனால்தான் விளையாடாமல் நிற்கிறார்களோ!” என்று
அடுக்கடுக்காக பல சந்தேகங்களும், யூகங்களும் அவள் மனதில் வந்து விழுந்தன. அவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள, தொலைவில் நின்றிருந்த
தமிழ்ப்பொடியன் ஒருவனை அழைத்தாள்.
“என்னாச்சு? விளையாடலையா?”
“இல்லை ஆண்ட்டி!
நாங்க விளையாடினா அந்தத் தாத்தா திட்டுவாரு”
“தாத்தா
திட்டுவாரா! அவரு ஏன் உங்களைத் திட்டணும்?”
“சில்ட்ரன்ஸ்
பிளேகிரவுண்ட்ல மத்த கேம்ஸ் விளையாடக்கூடாது ஆண்ட்டி. அதோ அந்த போர்டில் ரூல்ஸ் போட்டிருக்கு
பாருங்க. அதனால்தான் தாத்தா எங்களை விளையாடக் கூடாதுன்னு சொல்லிட்டார்”
“ஓ! அப்படியா!”
மீண்டும்
தாத்தாவைப் பார்த்தாள். கடுகடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு விறைப்பாக
உட்காரந்திருந்தார். முகத்தில் தெரிந்த சுருக்கங்களும், தலையில்
பரவிக்கிடந்த வெண்முடிகளும் தோராயமாக அவருக்கு வயது அறுபதுக்கு மேல் இருக்கும்
என்று சொல்லின. முகத்தில் தெரிந்த முதுமை கொஞ்சம்கூட உடலில் தெரியவே இல்லை. திண்ணென்று
இருந்த தோள்களோடும், உருளைக்கட்டை போன்ற கை, கால்களோடும், கட்டுமஸ்தான உடலோடும் இருந்தவரை பார்த்த ஆனந்திக்கு அவர் காவல்
அதிகாரியாகவோ அல்லது ராணுவத்திலோ பணி புரிந்திருக்கலாம் என்று தோன்றியது. சில
ஆட்களை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விடும். காரணம் கேட்டால்
குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமே இருக்காது. ஆனந்திக்கும் அந்தத் தாத்தாவை முதல்
பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட்டது. ஆனால் அதற்கு காரணம் இருந்தது. உற்சாகமாக
விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் உலகத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து அவர்களின்
ஆனந்தத்தை நொடிப்பொழுதில் கலைத்துவிட்டாரே என்று அவர் மீது கோபமும், எரிச்சலும்
மண்டியது.
தொடர்ந்து
விளையாடவும் முடியாமல், வெறுமனே நிற்கவும் முடியாமல், வீட்டுக்கு போகவும்
விருப்பமில்லாமல் குழு, குழுவாக கூடி நின்று தங்களுக்குள் மெதுவான குரலில் பேசிக்கொண்டிருந்த
சிறுவர்களைப் பார்க்க அவளுக்குப் பாவமாக இருந்தது. “வயதானாலே
யாரையாவது, எதையாவது குறை சொல்லத் தோன்றுமோ! கூடிப்போனால் இன்னும் அரைமணி நேரம் இந்தப்
பிள்ளைகள் விளையாடப்போறாங்க. அதற்கப்புறம் வீட்டுக்குப் போயிடுவாங்க. அதுக்குள்ள
ரூல்ஸ் அது இதுன்னு பேசி அவங்களை விளையாட விடாமல் செஞ்சிட்டாரே” என்று மனதுக்குள்
வருந்தினாள்.
அப்போது கண்ணன்
அடித்த பந்து தாத்தாவின் காலில் பட்டு கீழே விழுந்தது. குனிந்து பந்தை எடுத்தவர்
கண்ணனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு “ஹாய் பாய்! கேட்ச் இட்” என்று சொல்லிக்கொண்டே அவனை நோக்கி உற்சாகமாக பந்தை வீசினார். அவரது இடது
கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை பார்த்த ஆனந்திக்கு எரிச்சல் மேலும்
அதிகமாகியது. “சே! என்ன மனிதர் இவர்! பெரிசா சட்டம் பேசுறார். ஆனால் சின்னபிள்ளைங்க
இருக்கிற இடத்துல சிகரெட் பிடிக்கக்கூடாதுன்னு இவருக்குத் தெரியலையே!”
அவர் மீது
கோபத்தை காட்ட வழியில்லாததால் கண்ணனை நோக்கி “கண்ணா! இந்தப்
பக்கம் வந்து விளையாடு! அங்கே போனால் அடி வாங்குவ!” என்று
கத்தினாள். கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் தற்போது சறுக்கு மரங்களில் சறுக்கி விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
இறகுப்பந்தாட்டம் விளையாடிய சீனச்சிறுவர்கள் இருவரும் சீசா பலகையில்
ஆடிக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு கத்தினாலும் கண்ணன் எதையும் காதில்
போட்டுக்கொள்ளாமல் அந்தத் தாத்தா அருகிலேயே நின்று பந்தை அடித்து
விளையாடிக்கொண்டிருந்தான். அவ்வப்போது அவனது பந்து விளையாட்டில் தாத்தாவும்
பங்கெடுத்ததால் அவரை கண்ணனுக்கு பிடித்துபோய்விட்டது. அது என்ன மாயமோ தெரியவில்லை!
குழந்தைகளும், வயதானவர்களும் ஒருவருக்கொருவர் மிக எளிதாக நெருக்கமாகிவிடுகிறார்கள்.
“சொய்...சொய்....சொய்....சொய்....கை
அளவு நெஞ்சத்தில கடல் அளவு ஆசை மச்சான்”, ஆனந்தியின் கைத்தொலைபேசி அழகாகப் பாடி அழைத்தது. எதிர்முனையில்
அவளது கணவன் பேசினார்.
“ம்...சொல்லுங்க.
ஆஃபிஸிலிருந்து கிளம்பிட்டிங்களா?”
“இப்பதான் கிளம்புறேன்.
இன்னும் நாப்பது நிமிடத்தில் வந்துடுவேன். நீ வீட்லதானே இருக்க?”
“இல்லை. நான்
கண்ணனை விளையாட கீழே கூட்டிகிட்டு வந்தேன்”
“ஓ அப்படியா! நான்
வீட்டுச் சாவியை எடுத்துட்டு வர மறந்துட்டேன். நீ கண்ணனை கூட்டிட்டு வீட்டுக்கு வர
முடியுமா?”
“சரி வர்றேன்! இன்னும்
பத்து நிமிஷத்துல கிளம்பிடுறேன்”
ஆனந்தி கண்ணனை
அழைக்கத் திரும்பினாள். அவன் தாத்தாவோடு மும்முரமாக பந்து
விளையாடிக்கொண்டிருந்தான்.
“கண்ணா! கண்ணா!
வா வீட்டுக்கு கிளம்பலாம். நேரமாச்சு”
அவள்
அழைத்தவுடன் திரும்பிப்பார்த்த கண்ணன் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் தனது
விளையாட்டை தொடர்ந்தான். வேகமாக இருக்கையை விட்டு எழுந்த அவள் அவனை நோக்கி
நடந்தாள்.
“கண்ணா! வா வீட்டுக்கு
போகலாம். அப்பா வந்துட்டாங்க”
“போம்மா! நான் வரமாட்டேன்”
“நாளைக்கு வரலாம்
கண்ணா!”
அவள் குரலை
உயர்த்தியதிலிருந்து தாத்தா அவளது எரிச்சலையும், கோபத்தையும்
புரிந்துகொண்டார் போலும். “ஹே பாய்! மம்மி இஸ் காலிங் யு. கம் டுமாரோ. வீ வில் பிளே” என்று அவர் கண்ணனைப்
பார்த்துச் சொன்ன மறுநொடி அவன் பெட்டிப்பாம்பாக மாறி வீட்டிற்குக் கிளம்ப
ஆயத்தமானான். அவள் முகத்தில் ஆச்சர்யக்குறியைத் தேக்கி கண்கள் விரிய அவரைப்
பார்க்க அவர் ஆங்கிலத்தில் தனது பேச்சை தொடர்ந்தார்.
“ஸ்மார்ட் பாய்! ரொம்ப
நேரமா தனியாக விளையாடிட்டு இருந்தான் இல்லையா! சலிப்பாக இருந்திருக்கும். நான் அவனோடு
விளையாடியவுடன் என்னை அவனுக்குப் பிடித்துவிட்டது. என்னை நண்பனாகப் பார்க்க
ஆரம்பித்துவிட்டான். பார்! நான் சொன்னவுடன் மறுபேச்சு பேசாமல் கிளம்புகிறான்.
தனியாக விளையாடுவதில் என்ன சுவாரஸ்யம் இருக்கமுடியும்? கொஞ்ச
நேரத்துக்கு முன்னால் அந்தப் பிள்ளைகளையும் அதற்காகத்தான் அதட்டினேன். ரூல்ஸைக்
காரணம் காட்டி சத்தம் போட்டேன். இருப்பதோ சின்ன விளையாட்டுத் திடல். இதில் குழு, குழுவாக பிரிந்து
விளையாடுவதில் அப்படி என்ன பெரிதாக மகிழ்ச்சி வந்துவிடும்?!” என்று
கூறிவிட்டு கையில் இருந்த சிகரெட்டைப் புகைக்க ஆரம்பித்தார்.
கண்ணனின் கையைப்
பிடித்துக்கொண்டு வீடு நோக்கி நடந்த ஆனந்தி திரும்பிப் பார்த்தாள். பத்து, பன்னிரண்டு
சிறுவர்களும் ஒன்றாக சேர்ந்து ஒரே குழுவாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள்
முகத்தில் அளவிட முடியாத மகிழ்ச்சியும் ஆனந்தமும் தாண்டவமாடின. அந்த திடலில்
இருந்து விண்ணை பிளக்கும் அளவிற்கு ஆரவாரம் எழுந்து காற்றில் மிதந்து வந்தது. பத்தடி
தூரம் நடந்த பின்பு திடலைத் திரும்பிப் பார்த்த கண்ணன், அந்த முதியவரிடம்
கையைத் தூக்கி அசைத்து விடைபெற்றான். ஆனந்தியும் அந்த ஆடுகளத்தின் நாயகனிடமிருந்து
விடைபெற தன்னை அறியாமல் கையை உயர்த்தி அசைக்க ஆரம்பித்தாள். தெருவில் வெயில்
குறைந்திருந்தது.
No comments:
Post a Comment