திரு.ஷாநவாஸின் “மூன்றாவது கை” தொகுப்பிலுள்ள பன்னிரண்டு
சிறுகதைகளையும் படித்து முடித்தவுடன் சிங்கை மண்ணின் மொழியும், மனிதர்களின் மொழியும் என் மனதுக்குள் புதிய பரிமாணத்தை
தோற்றுவித்தன.
“அனுமானம்” கதை தலைமுறை
இடைவெளியை விவரிப்பதாக தோன்றினாலும், அது மனிதர்களின்
பொதுவான குணாதிசயத்தை கருவாக்கி கட்டமைக்கப்பட்டுள்ளது. அறிந்தவற்றிலிருந்து
அறியாதவைபற்றிச் செய்யப்படும் ஊகம்தான் (இன்ஃபெரன்ஸ்) அந்த குணாதிசயம். ஊகம் சரியாக
இருந்தால் அனுமானம் மேலும் வலுவடைகிறது. ஊகம் தவறினால் வாழ்க்கை நம்மை பார்த்து
கைகொட்டி சிரித்துவிட்டு அனுபவத்தையும், புதிய அனுமானத்தையும்
தந்துவிட்டு நகர்கிறது என்பதை ஆசிரியர் அழகாக பதிவு செய்துள்ளார். பெட்டியை
தூக்கிக்கொண்டு வரும் பயணி ஏர்போர்ட்டுக்குதான் போவார் என்ற டாக்ஸி டிரைவரின்
அனுமானத்துடன் கதையை முடித்திருப்பது மிக அருமை.
“நிஜங்கள்” கதையில்
தன் பணிப்பெண்ணின் மீதான மோகத்தினால்தான் தன்னுடன் நட்பு பாராட்ட இளைஞன் விழைகிறானோ
என்ற சந்தேகத்தோடு வலம்வரும் கதைநாயகன், இளைஞனின்
பண்பை அறிந்தவுடன் வெட்கி அவனது நட்புக்காக ஏங்குகிறான். “மூன்றாவது
கை” கதையில் சிங்கப்பூருக்கு வரும் பணிப்பெண்ணிடம் அவளது
தோழி முதலாளிகள் கொடுமைப்படுத்துவார்கள் என்று பயமுறுத்தி அனுப்ப, அமைந்த
முதலாளிகளோ அவளை சொந்த பெண் போல நடத்த ‘’தீதும் நன்றும்
பிறர் தர வாரா’’ என்பதை உணர்கிறாள். “காகிதச்
சிற்பம்” கதையில் தறுதலையான மகன் தந்தையின் இறப்புக்கு பின்
சொத்தை எடுத்துக்கொண்டு தாயை கவனிக்காமல் விட்டுவிடுவானோ என்று வக்கீல் சந்தேகம்
கொள்ள, அவனோ சொத்தை மறுத்துவிட்டு தாயை கவனித்துக்கொள்ள
முன்வருவது அற்புதம்.
இந்த மூன்று கதைகளிலும் மேலே சொன்ன “அனுமானம்”
கதையின் கருவும் இழைந்து ஓடுவதை உணரமுடிந்தது. நாம் அனுமானத்தின் அடிப்படையில்
ஒருவரை எடைபோடுவதும் அது தவறாகிப்போவதும், மனிதர்களின்
உளவியலை புரிந்துகொள்ளுதல் மிகப்பெரும் சவால் என்பதை சுட்டுகின்றன
“கறிவேப்பிலை” கதை இரண்டு
பக்கமும் அடி வாங்கும் மத்தளத்தை போல தாயிடமும் மனைவியிடமும் மாட்டிக்கொண்டு
முழிக்கும் ஆணின் கதை. ஆனால் கறிவேப்பிலை செடியை கொண்டு கதை சொல்லி இருக்கும்
உத்தி கவர்ந்திழுக்கிறது. மனைவிக்கு
பிடித்த செம்பருத்தி செடி நடப்பட்ட தொட்டியில் அம்மாவுக்கு பிடித்த கறிவேப்பிலை
செடியும் முளைத்திருப்பதாக கதை முடியும்பொழுது ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் தாய்
தனது இருப்பை நிலைநாட்ட தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறாளோ என்று எண்ணத் தோன்றுகிறது.
“அழைப்பு” கதை
நண்பனின் இழப்பு தரும் துயரத்தை மட்டும் பேசாமல் “நமக்கு
வரும் அழைப்புகளில் சிலவற்றை ஏற்று, சிலவற்றை மறுத்தாலும்
வாழ்வின் மீதான பிடிப்பால் ஒரு அழைப்புக்கு மட்டும் ஓடி ஒளிந்து,
பயந்து, போகாமல் இருக்க என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையும்
செய்கிறோம். அந்த அழைப்பு எமனிடமிருந்து வரும் அழைப்பு’’
என்பதையும் மறைமுகமாக பேசிச்செல்கிறது. “நீ
சிரித்தால்” கதை ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது போல ஆன்ட்டியின்
கையில் அம்மாவை தேடும் ஒரு வெளியாட்டு ஊழியரின் உணர்வுகளை படம்பிடித்துக் காட்டுகிறது.
“இடைவெளி”, “பேசாமொழி” கதைகளில்
மனிதர்களின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம் அன்பில்லாமை அல்ல,
புரிதல் இல்லாமைதான் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுடன்
பேச நினைத்து ஆனால் பேச முடியாத ஒரு மொழியோடு வாழ்வதுதான் பல சிக்கல்களுக்கு
காரணமோ என்ற கேள்வி எழுகிறது.
“தோடம்பழம்” கதை சின்னவீடு
வைத்திருக்கும் முதலாளியிடம் வேலை பார்க்கும் பணியாளின் பார்வை. தோடம்பழ செடியை மனைவிக்கு
குறியீடாகவும், அரநெல்லி மரத்தை சின்னவீட்டிற்கான குறியீடாகவும் கொண்டுள்ளது.
அரநெல்லி மற்ற எதையும் வளரவிடாமல் வேரறுத்துவிடுவது போல சின்னவீடும் புல்லுருவி போல
குடும்பத்தை அழித்துவிடும் என்ற கருவை சுமந்த கதையிது. ஏன் எப்பொழுதும் மனைவி
நல்லவளாகவும் சின்னவீடு கெட்டவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள் என்ற
மாற்றுச்சிந்தனையும் மனதின் ஒருபுறத்தில் ஓடுகிறது.
“ஒரு சொல்
வெல்லும்! ஒரு சொல் கொல்லும்” என்பதை மிக ஆழமாக வலியுறுத்தும் கதை “வேர்ச்சொல்”. ஒரு ஆசிரியர்
ஓய்வு பெறும் நாளன்று பள்ளியும்,
மாணவர்களும் நன்றி கலந்த கண்ணீரோடு விடைகொடுக்கும் தருணத்தில், அவர்
சொன்ன ஒற்றை சொல்லால் மாணவன் ஒருவன் தற்கொலைக்கு முயற்சித்திருப்பது தெரிந்தவுடன், அதை தனது
நல்லாசிரியர் வாழ்வின் மிகப்பெரிய கரும்புள்ளியாக நினைத்து அவர் கலங்குவது
அற்புதம். “சாட்சி” கதை நவீன
உலகில் நாம் இழந்து வரும் அறம் சார்ந்த விழுமியங்களை கேள்விக்கு உட்படுத்துகிறது. சகமனிதர்களின்
துன்பங்களில் நாம் ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்துவிட்டு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும்
இல்லாமல் தொடர்ந்து பயணிப்பதை கன்னத்தில் அறைந்தாற்போல சொல்கிறது.
சாலா – தவறு, காலியா, காலிச்சா, கருபிலம் – கறிவேப்பிலை, மீத்தா நிமை –வேப்பிலை, பட்டு கிலிங் – அம்மி, தாங்கா – ஏணி, அபாங் – சகொதரர், தோலோங் சிக்கிட் - கொஞ்சம் உதவி பண்ண
முடியுமா?, தமோ - .இல்லை (அ) வேண்டாம், இப்படியாக பல மலாய் வழக்கு சொற்களை தொகுப்பு
முழுவதும் காணமுடிகிறது.
அனைத்து கதைகளின் நேர்த்தியும்,
நுணுக்கமான பல அரிய தகவல்களும் என்னை வியப்பில் ஆழ்த்தின. அல்ஜைமர் மற்றும்
டெமென்ஷியா வியாதிகள், இலைகளை நேசித்த ஆங்கிலக் கவிஞர் எமிலி டிக்கன்ஸ், கறிவேப்பிலையை
ஏன் வேப்பிலை சாதியில் சேர்த்தார்கள்?, ஜப்பானிய கலையான
ஓரி காமி, தோட்டக் கலையின் அழகியல், சைகை
மொழி, புளியை பதப்படுத்தும் முறை...........என்று எத்தனை
விதமான தகவல்கள்!!
இதில் பெரும்பாலான கதைகள் புனைவுகள் அல்ல என்று திரு.ஷாநவாஸ் சொல்வது அவர்
எந்த அளவிற்கு தன்னை சுற்றியுள்ள மனிதர்களை அவதானிக்கிறார் என்பதை காட்டுகிறது. சிங்கை
வாழ்க்கையையும், மனிதர்களையும்,
மொழியையும் அச்சு அசலாக, அழகாக தனது கதைகளில் பிரதிபலித்து ஒரு சிறந்த சிறுகதை தொகுப்பை
சிங்கை இலக்கியத்திற்கு வழங்கியுள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது.
No comments:
Post a Comment