Tuesday, November 1, 2016



Image result for அன்னையின் ஆணை - அ.கி.வரதராசன்
அன்னையின் ஆணை - அ.கி.வரதராசன் – உமா பதிப்பகம்

ஆன்றோரும் சான்றோரும் கம்பனின் கவிநயத்தைப் புகழ்ந்தும் போற்றியும் ஆற்றிய பல உரைகளைக் கேட்டு கம்பராமாயணத்தைச் செவி வழியாக ருசித்திருந்தாலும், வாசித்து மனதால் ருசிக்க வேண்டும் என்ற எண்ணம் தற்போதுதான் தீவிரமாகி உள்ளது. அதன் விளைவாக கம்பராமாயணத்தைப் பற்றிய நூல்களை வாசிக்கலாம் என்ற முடிவோடு தேடியபோது நூலகத்தில் கைக்கு கிடைத்த முதல் நூல் சிங்கை எழுத்தாளர் அ.கி.வரதராசன் அவர்களால் எழுதப்பட்ட அன்னையின் ஆணை’.

மன்னவன் பணி அன்றாகிலும் நும் பணி மறுப்பேனோ என
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ
என் இனி உறுதி அப்பால் இப்பணி தலைமேல் கொண்டேன்
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்

என்ற பாடல் வழியாக, அரசன் ஆணை இல்லாவிட்டாலும் தாயே! உங்களுடைய ஆணை என்றால் நான் மறுக்கவா போகிறேன்?” என்று கைகேயிக்கு மறுமொழி சொல்லிவிட்டு வனவாசம் சென்ற ராமனின் கதையாக இருக்கும் என்று ஊகித்தேன். ஆனால் புத்தகத்தை வாசிக்க தொடங்கியவுடன்தான் என் ஊகம் தவறென புரிந்தது. இந்நூல் தந்தையின் கட்டளையை ஏற்று பித்ரு வாக்கிய பரிபாலனம் செய்த ராமனைப் பற்றியது அல்ல. மாத்ரு வாக்கிய பரிபாலனம் செய்த மகனைப் பற்றிய நூல்.   

அன்னையின் ஆணையில் அன்னை என்று ஆசிரியர் குறிப்பிடுவது சுமித்திரையை. அவளது ஆணையை சிரமேற்கொண்ட புதல்வன் இலக்குவனைப் பற்றி இந்நூல் விலாவாரியாக பேசுகிறது. இலக்குவன் என்ற கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அக்கதாபாத்திரத்தின் இயல்புகளை, குணாதிசயங்களை, சிறப்புகளை, மேன்மைகளை, கம்பனின் பாடல்கள் வழியாகவும் தனது கற்பனையின் வழியாகவும் விரித்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

பின்னும் பகர்வாள், ‘மகனே! இவன்பின் செல்; தம்பி
என்னும்படி அன்று, அடியாரினின் ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின், வா; அது அன்றேல்,
முன்னம் முடிஎன்றனள், வார் விழி சோர நின்றாள்.

சுமித்திரையின் குரலாக ஒலிக்கும் கம்பனின் இந்தப் பாடல்தான் இந்நூலுக்கு அடித்தளம். இப்பாடலில் அன்னை ஆணை இடுகிறாள். மகனாகிய இலக்குவன் அதைச் சரியாகச் செய்வதற்கு எதிர்கொண்ட இடர்களையும் அவற்றை முறியடித்து அவன் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் பேசுகிறது இந்நூல். கம்பராமாயணத்தில் இலக்குவன் இடம்பெறும் முக்கிய காட்சிகளையும் அவனது குரலையும் தனியாகப் பிரித்தெடுத்து அதன் வழியாக இலக்குவன் என்ற பாத்திரத்தின் மகிமையை உரக்கச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.

கம்பராமாயணத்தை முதன்முதலில் வாசிக்கத் தொடங்குபவர்களுக்கு இந்நூல் கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை அறிமுகம் செய்வது சிறப்பு. மேலும் சில புதிய தகவல்களையும் இந்நூல் அளிக்கிறது. எடுத்துக்காட்டாக அயோமுகி படலத்தை வால்மீகி எட்டே எட்டு பாடல்களில் சொல்லியிருக்கிறார். ஆனால் கம்பன் இப்படலத்தை விரிவாக 102 பாடல்களில் சொல்லியிருக்கிறார் என்று குறிப்பிடும் செய்தியைச் சொல்லலாம். புதிதாக கம்பனை அறிந்துகொள்ள விழைபவர்களுக்கு இந்நூல் அறிமுக நூலாக இருந்தாலும் கம்பனை முற்றும் அறிந்தவர்களுக்கு இதில் சுவைக்கப் பெரிதாக ஒன்றுமில்லை என்றுதான் தோன்றுகிறது.

நூலின் குறையாக என் மனதில் தோன்றியது ஒரே செய்தியை மீண்டும் மீண்டும் கூறுதல். அது வாசிப்பவர்களுக்கு ஒருவித சலிப்பையும் அயர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. கிட்டத்தட்ட நானூறு பக்கங்களைக் கொண்ட இந்நூல் கூறியது கூறலைத் தவிர்த்திருந்தால் இருநூறு பக்கங்களில் செறிவாகவும் வாசிப்பவரை உள்ளிழுப்பதாகவும் இருந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் பாடல்களுக்கு கீழே பொருளையும் தந்திருந்தால் இராமாயணத்துக்குள் முதல் அடி எடுத்து வைப்பவர்கள் புதிய சொற்களைக் கண்டு வழுக்கி விழுந்து விடாமல் எளிதாக மேலேற வசதியாக இருக்கும் என்பது எனது கருத்து.   

இலக்குவனின் சிறப்புகளோடு குறைகளையும் சேர்த்து அலசி இருந்தால் இந்நூல் வேறு ஒரு பரிமாணம் எடுத்திருக்கும். தாய் சொல்லைத் தட்டாத பிள்ளைஎன்ற நேர்மறையான பிம்பத்தைக் கடைசிவரை கட்டிக்காக்க வேண்டும் என்ற முடிவோடு ஆசிரியர் எழுதியிருப்பதால் இலக்குவனின் குறைகளையும் நியாயப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன். கம்பன் என் காதலன் என்று வாழும் அ.கி.வரதராசன் அவர்களின் தேர்ந்த இலக்கியப் புலமைக்கு இந்நூல் நல்லதொரு சாட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.



No comments:

Post a Comment