Sunday, November 6, 2016

யுத்தம் பெற்றெடுத்த குழந்தை

யுத்தம் பெற்றெடுத்த குழந்தை என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் நாற்பத்தொன்பது வயது குழந்தையான ஷோபாசக்தியைக் கடந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் பார்த்தும் பேசாமல் வந்துவிட்ட வருத்தத்தைப் போக்கியது இந்த வருட சிங்கப்பூர் எழுத்தாளர் விழா. நவம்பர் ஐந்தாம் தேதி, சனிக்கிழமை மாலை ஷோபாசக்தியும் ஆன்மாவின் அகதியும் என்ற தலைப்பில் நண்பர் நெப்போலியன் வழிநடத்திய அமர்வில், தனது படைப்புகளின் வழியாக தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் தனி அடையாளம் பெற்றுத் திகழ்கிற ஷோபாசக்தி மிக இயல்பாக உரையாடினார்.

வாழ்க்கை துயரமானது என்ற புத்தரின் வரியையும் தொழிலாளிகளுக்குத் தாய்நாடு என்று ஒன்று கிடையாது என்ற காரல்மார்க்ஸின் வரியையும் தனது பேச்சின் ஊடாக சொன்னவர் ஈழத்தின் மூத்த எழுத்தாளரான எஸ்.பொன்னுத்துரையை துரோணர் என்றும் தன்னை ஏகலைவன் என்றும் குறிப்பிட்டார்.    

எம்.ஜி.ஆர், வேலுப்பிள்ளை பிரபாகரன் இருவர் மீதும் விசுவாசம் கொண்டிருந்ததாகவும் வாழ்க்கையில் துரோகங்களுக்குப் பழகிவிட்டதாகவும் சொன்னவர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பாரிஸில் கழித்திருந்தாலும் தன் வாழ்க்கை இன்னும் மிச்சமிருப்பது யாழ்ப்பாணத்தில்தான் என்றபோது ஓர் அகதியின் வலியை உணரமுடிந்தது.

ஆன்மா, உடல், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகிய மூன்றும் ஒரு மனிதன் நிம்மதியாக வாழ அவசியமானவை. சிதைந்து கொண்டிருக்கிற உடலையும் போலி கடவுச்சீட்டையும் பெற்றிருந்தாலும் தன் ஆன்மாவை உயிர்ப்போடு வைத்திருப்பது இலக்கியம் என்றபோது அரங்கத்தில் கரவோசை எழுந்து அடங்கியது. ஷோபாசக்தியும் ஆன்மாவின் அகதியும் என்று தலைப்பிட்ட அமர்வில் பெரும்பாலான கேள்விகள் அகதி என்பதை மையப்படுத்தியே இருந்தன. ஒரு சாதாரண அகதியின் குரலுக்கு மதிப்பு ஏது? ஆனால் இலக்கியத்தை ஆன்மாவாக கொண்டதால்தான் இந்த அகதியின் குரலை உலகம் உற்று கவனிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்ததையும் தற்போது அவர்களது பெற்றோரின் கண்களைப் பார்க்க அஞ்சுவதாகவும் சொன்னபோது அந்தக் குற்ற உணர்வுக்கு வடிகாலகத்தான் குடியை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறாரோ என்று எண்ணினேன்.

மக்கள் தங்களுக்குள் எந்தவித பிரிவினையும் இல்லாமல் நிம்மதியாகத்தான் இருந்தார்கள். ஆனால் சிங்கள இனவாதிகளும் தமிழ் இனவாதிகளும் எம்மக்களைத் தங்கள் சுயலாபங்களுக்காக கொன்று குவித்தார்கள். ஆயுதப் போராட்டம் இந்தியா எங்கள் மீது திணித்த ஒன்று. உலகின் எந்த மூலையிலும் ஆயுதப் போராட்டம் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை என்பதை நாங்கள் தற்போது உணர்ந்திருக்கிறோம். எம்மக்கள் இனிமேலும் சாக விரும்பவில்லை. வாழ விரும்புகிறார்கள். சென்று சேருமிடம் மட்டும் சரியானதாக இருந்தால் போதாது. செல்லும் பாதையும் சரியானதாக இருக்க வேண்டும் என்று சொன்ன காந்தியிடம்தான் இப்போது அடைக்கலம் புகுந்திருக்கிறேன் என்று அவர் சொன்னபோது மனம் நெகிழ்ந்தது.  
            
யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்டபோது பைபிளும் பாரதியார் கவிதைகளும் மட்டுமே என் வழித்துணைவர்களாக வந்தன. அவற்றை நான்கு வருடங்கள் தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருந்த காரணத்தினால்தான் என் நாவல்களில் திட்டமிட்டே விவிலிய உரைநடை பாணியை பின்பற்றுகிறேன் என்றார்.   

உலகில் அனைத்தையும் விட பெரியது பசி என்றவர் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வளத்தை தேடி புலம் பெயர்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்றார். அப்படி புலம் பெயர்பவர்களின் வாரிசுகள் மொழியை விட்டுவிடுவது தவிர்க்க இயலாத ஒன்று என்ற உண்மையை உள்ளபடியே கூறியது எனக்கு பிடித்திருந்தது. 
  
வாழ்க்கையின் நிலையின்மையைப் பற்றி எழுந்த கேள்விக்கு இந்தக் கேள்வியை இரண்டு மாதத்திற்கு முன்பு சிங்கை வந்திருந்த எழுத்தாளர் ஜெயமோகனிடம் கேட்டிருக்க வேண்டும் என்று அவர் சொன்னபோது நான் வெடித்து சிரித்தேன். ஆண்டுதோறும் நடைபெறும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவைப் பற்றிய அவரது பார்வையில் இதுவரை வந்துசென்ற ஆளுமைகளில் வைரமுத்து இல்லை அல்லவா. அப்படி என்றால் இந்தவிழா சரியான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது என்று அவர் சொன்னதை இப்போதும் நினைத்து, நினைத்துச் சிரித்துக் கொண்டிருக்கிறேன். இளமை முதல் போராட்டங்கள், இயக்கப் போராளி, சிறை வாழ்வு, போர், இரத்தம், மரணம், நாடோடி வாழ்க்கை, இன்று வரை தாய்நாடு திரும்ப முடியாத அவலம் என பல இன்னல்களுக்கு மத்தியிலும் இந்தக் குழந்தையை இப்படியான பகடிகளோடும் எள்ளல்களோடும் வைத்திருக்கும் இலக்கியத்திற்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.

ரத்தமும் சதையுமாக போரின் அவலத்தை, துயரை கவிதைகளிலும் கதைகளிலும் தொடர்ந்து சத்தம் போட்டு கத்தி கொண்டிருக்கும் சில ஈழ எழுத்தாளர்களுக்கு மத்தியில் அதை உரக்கச் சொல்லாமல் தன் சுய அனுபவங்களின் ஊடாகவும் வலிகளின் ஊடாகவும் அமைதியாகவும் அதே சமயம் வாசிப்பவரைப் துயர் என்ற உக்கிரமான மனநிலைக்கு கொண்டு செல்லும் ஷோபாசக்தியின் எழுத்து அவர் சொல்வது போல யுத்த மறுப்பு இலக்கியம் என்ற வகையில்தான் அடங்கியிருக்கிறது. யுத்தத்தை பேசுவதின் வழியாக யுத்த மறுப்பை தனது படைப்புகளில் பேசிச் செல்வதுதான் அவரது சிறப்பு.  

பேசாமல் இருந்தாலும் சாகத்தான் போகிறேன். பேசிவிட்டு செத்துப் போகிறேன் என்றவர் தான் இதுவரை எதுவும் திட்டமிட்டு செய்ததில்லை. வாழ்க்கை தன்னை நகர்த்திக்கொண்டு செல்லும் பாதையில் பயணிக்கிறேன் என்றார். இந்த துயர் மிகுந்த வாழ்க்கை ஆன்மாவின் பாதையில் அவரை அழைத்துச் சென்று, எழுத்துகளின் வழியாக அவரை பேசச் செய்து, தமிழ் இலக்கிய உலகில் அவரை எப்போதும் வாழும்படி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.   

விடைபெறும்போது என் நூலை அவரிடம் கொடுத்தேன். நூலை படிப்பதற்கு முன் விமர்சனம் படித்துவிட்டேன் என்றார். அந்த விமர்சனத்தை உங்கள் எண்ணத்தில் இருந்து அழித்துவிட்டு நூலை வாசித்து கருத்து சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். அந்த ஆன்மாவின் அகதி சொல்லப்போகும் விமர்சனத்துக்காக காத்திருக்கிறேன். 

          

         



No comments:

Post a Comment