இராவணன் மைந்தர்கள்
முனைவர் தெ.ஞானசுந்தரம் - வானதி பதிப்பகம்
இந்நூல் கம்பராமாயணத்தை அறிந்து கொள்ளும் முயற்சியில்
இரண்டாவது நூலாக என் வாசிப்பின் கீழ் வந்தது. 140 பக்கங்களே
கொண்ட சிறிய புத்தகம். ஒரு மணி நேரத்தில் வாசித்து முடித்துவிட்டேன்.
குணத்தில், வீரத்தில், அழகில் தசரதனின்
பிள்ளைகளுக்குச் சற்றும் குறைந்தவர்கள் இல்லை இராவணனின் பிள்ளைகள் என்பதையும் தவறே
செய்யாமல் தங்கள் தந்தை அறம் மீறிய குற்றத்திற்காக பரிதாபமாக உயிரை இழந்தவர்கள்
என்பதையும் மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது இந்நூல்.
இராவணனுக்கு கணக்கில்லா மனைவியர் இருந்தாலும்
பட்டத்தரசிகளாக இருவர் இருந்துள்ளனர். ஒருத்தி மயன் மகள் மண்டோதரி. மற்றொருத்தி
தானியமாலி. கம்பனின் பாடல்களின் வழியாக இராவணனுக்கு ஆறு பிள்ளைகள் இருந்ததாக
இந்நூல் சொல்கிறது. இந்திர சித்தன், அக்க குமரன் (மண்டோதரிக்குப் பிறந்தவர்கள்), அதிகாயன் (தானியமாலிக்குப் பிறந்தவன்), தேவராந்தகன், நராந்தகன், திரிசிரா (தாய் யாரென்பது தெரியவில்லை).
அக்க குமாரன்
அனுமன் சீதையிடம் கணையாழியை அளித்து அவள் தந்த
சூடாமணியைப் பெற்றுத் திரும்பும்போது அவனைப் பிடித்து வர இராவணன் கட்டளை
இடுகிறான். சென்ற அனைவரையும் அனுமன் அழிக்க, இறுதியில் அக்க குமாரன் போருக்குச்
செல்கிறான். “தந்தையே! முன்பு நிகழ்ந்த போருக்கு நீங்கள்
என்னை அனுப்பாமல் அண்ணன் இந்திரசித்தை அனுப்பினீர்கள். இந்தக் குரங்கைப் பிடித்து
வரவாவது என்னை அனுமதியுங்கள்” என்று வேண்டுகிறான். தந்தையின்
அனுமதி கிடைத்தவுடன் பெரும் படையோடு புறப்படுகிறான். வயதில் சிறியவனாயும், அழகனாயும் இருக்கும் அக்க குமாரன் வீரத்துடன் போரிட்டு இறுதியில் அனுமனால்
கொல்லப்படுகிறான். பாசத்திற்குரியவனாக இருந்த அவனது மரணம் தாய் மண்டோதரியை
வதைக்கிறது. தந்தை இராவணன் கலங்குகிறான். அண்ணன் இந்திரசித்து கண்ணீர்
வடிக்கிறான்.
'நெருப்பின் வாய்ந்த அக்கன்' என்று கம்பரால்
குறிப்பிடப்படும் அக்க குமாரன் என்ற நெருப்பு அனுமனால் அணைக்கப்படுகிறது. அட்சய
குமாரன் என்னும் வடச்சொல்லே தமிழில் அக்க குமாரன் என்பது. க்ஷய என்பதற்கு அழிவு
என்பது பொருள். அக்ஷய என்றால் அழியாதது என்று பொருள். அழியாத பிள்ளை என்ற பொருளுடைய பெயரைக்
கொண்டவன் முதலில் இறப்பைச் சந்தித்தது உண்மையில் பரிதாபத்துக்குரியது.
அதிகாயன்
குடம் போன்ற காதினை உடையவன் என்பதால் கும்பகர்ணன், முறம் போன்ற நகங்களைக் பெற்றிருந்தமையால் சூர்ப்பணகை என்பன போல பெரிய
உருவம் கொண்டவன் என்பதால் அதிகாயன் என்று பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது. போரில்
கும்பகர்ணன் இறக்கிறான். “தந்தையே! நீங்கள் எப்படி தம்பியை
இழந்து துயர் அடைகிறீர்களோ, அதே போல் இராமனும் தம்பியை
இழந்து தவிக்க வேண்டும். இலக்குமணனைக் கொன்று திரும்புகிறேன்” என்று வஞ்சினம் உரைத்துவிட்டுப் போருக்குச் செல்கிறான் அதிகாயன்.
தானியமாலிக்குப் பிறந்த இவன் வீரத்தில் இந்திரசித்துக்கு இணையானவன். இவனுக்கும்
இந்திரசித்தன் என்ற பெயர் வந்திருக்கும். ஆனால் இவனால் வெற்றிகொள்ளப் பெறுவதற்கு
இன்னொரு இந்திரன் இல்லாததால் அதிகாயன் என்றழைக்கப்படுகிறான் என்று கம்பர்
கூறுகிறார். வாலியின் மைந்தன் அங்கதனின் தோளில் அமர்ந்து கொண்டு போரிடும்
இலக்குவனால் அதிகாயன் கொல்லப்படுகிறான்.
தேவராந்தகன், நராந்தகன், திரிசிரா
இந்த மூன்று புதல்வர்களும் அதிகாயனோடு போருக்குச்
சென்று மாண்டு போகிறார்கள். தேவராந்தகன் என்பதன் பொருள் தேவர்களை அழித்தவன்.
மனிதர்களை அழித்தவன் என்பது நராந்தகன். திரிசிரா என்பது மூன்று தலைகளைக் கொண்டவன்.
இவர்களுள் தேவராந்தகனும், திரிசிராவும் இலக்குமணால் கொல்லப்பட
நராந்தகன் அங்கதனால் வதைக்கப்படுகிறான்.
இந்திரசித்தன்
இராவணனின் முதல் மைந்தன். ஈடு இணையில்லா ஆற்றல்
உடையவன். பிறந்தவுடன் இடி முழக்கம் போல அழுததால் மேகநாதன் என்ற பெயரைப் பெற்றவன்.
இந்திரனை வென்று இந்திர சித்தனானவன். அழகன். வீரன். தம்பியர்கள் இறந்தவுடன் தந்தை
மீது சீற்றம் கொண்டவன். “சீதை மீது கொண்ட ஆசையை விட்டொழி” என்று தந்தையிடம் கெஞ்சியவன். தந்தை தவறிழைக்கிறான் என்று அறிந்தும் அவன்
மீது அளவிலா பாசம் வைத்தவன். “நான் அழிந்த பிறகாவது நல்லதை
உணர்ந்துகொள்” என்று கூறிவிட்டு மரணம் நிச்சயம் என்ற
நிலையில் போர்க்களம் புகுந்து இறந்து போனவன். மற்றவர்களை ஒப்பிடும்போது அதிக
நாட்கள் போர்க்களத்தில் இருந்தவன்.
சீதையைச் சந்திக்க இலங்கைக்கு வரும் அனுமனைத் தனது
பிரம்மாஸ்திரத்தால் கட்டிப் போட்டவன். போரில் நாகபாசத்தாலும் பிரம்மாஸ்திரத்தாலும்
இலக்குமணனையும் வானரப் படையையும் நிலை குலையச் செய்தவன். இது போன்ற சில தற்காலிக
வெற்றிகளை அடைந்து தந்தையைக் குளிரச் செய்தாலும் நிரந்தரமான வெற்றி பெறுவதில்
தோல்வியைத் தழுவியவன். தனது இறப்பின் மூலம் இராவணனின் தோல்வி நிச்சயம் என்று
மற்றவர்களை எண்ணச் செய்த ஒப்பற்ற மாவீரன்.
மகாபாரதத்தில் தன் தந்தை யயாதிக்காக முதுமையை
மனமுவந்து ஏற்றுக்கொண்ட புரு, தன் தந்தை சந்தனுவுக்காக
பிரம்மச்சரியத்தை ஏற்றுக்கொண்ட பீஷ்மர் இவர்களைப் போல தன் தந்தையின் அறம் மீறிய
செயலுக்காக மரணத்தை ஏற்றுக்கொண்ட இப்புதல்வர்கள் உண்மையில் போற்றுதலுக்குரியவர்கள்.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச்
செயல். ஆனால் இராவணன் தம் மக்களை அதர்மத்தின் பக்கம் நிறுத்தியதால் மரணத்தில்
முந்தியிருக்கச் செய்தவன். மகன் தந்தைக்காற்றும
உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல் என்பதற்கேற்ப வாழ்ந்து
மரித்திருந்தாலும், தந்தை செய்த பிழையால் இந்தக் குமாரர்களின் மேன்மை ஒளியிழந்து குன்றியது வருத்தத்திற்குரிய
ஒன்று.
No comments:
Post a Comment