அ.கா.பெருமாள் –
காலச்சுவடு பதிப்பகம்
கம்பராமாயணத்தைப் பற்றி பல்வேறு செய்திகளை
அறிந்துகொள்ள விழைபவர்கள் தவறாமல் வாசிக்க வேண்டிய நூல் என்று இதை உறுதியாகச்
சொல்லலாம். நகரப் பண்பாட்டில் மட்டுமல்லாமல் நாட்டார் (FOLKLORE) பண்பாட்டிலும் கொட்டிக் கிடக்கும் இராமனின்
பன்முகத் தோற்றங்களையயும் அவற்றை ஒட்டிய கதைகளையும் 25 கட்டுரைகளின் வழியாக கூறுகிறது
இந்நூல். நூலாசிரியர் அ.கா.பெருமாளுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால் அவரை
அறியாதவர்கள் இந்த இணைப்புகளின் வழியாக தெரிந்துகொள்ளலாம்.
இந்நூலின் இறுதியில் தரப்பட்டுள்ள இராமாயணச் சிற்பங்கள்
இடம்பெற்றுள்ள கோயில்களின் பட்டியல், இராமாயணக் கதைநிகழ்ச்சிகள் வரும் புராணங்களின் பட்டியல், மலையாளத்தில் வந்த இராமாயண நூல்களின் பட்டியல்,
தெலுங்கு மொழி இராமாயண நூல்களின் பட்டியல், கன்னட மொழியில்
வெளிவந்த புத்தகங்களின் பட்டியல் ஆகிய ஐந்து பின்னிணைப்புகளும் இராமாயணத்தை
ஆழ்ந்து வாசிக்க, ஆராய விரும்புபவர்களுக்குச் சிறந்த தகவல்
பெட்டகம் என்று சொல்லலாம்.
முதல் பகுதியில் உள்ள எட்டு கட்டுரைகளும் பல்வேறு
இராமாயணங்களையும், இராமாயணத்தைப் பாடுபொருளாகக் கொண்ட நிகழ்த்துக் கலைகளான தோல்பாவைக்
கூத்து, இராம கீர்த்தனம் ஆகியவற்றைப்பற்றியும் நுட்பமான பல
தகவல்களை வழங்குகின்றன. இரண்டாம்
பகுதியில் உள்ள பதினேழு கட்டுரைகளும் இராமாயணக் கதாபாத்திரங்களைப் பற்றி நாட்டார்
வழக்கில் வாய்மொழியாக சொல்லப்படும் கதைகளை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.
“மகாபாரதத்தைவிட இராமாயணத்துக்குத்தான் அதிக அளவில் வேறுபட்ட வடிவங்கள்
கிடைக்கின்றன. குறிப்பாக உத்திர காண்டம் வேறு, வேறு
வடிவங்களை உருவாக்குவதற்குரிய தளத்தைக் கொண்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு
வட்டாரத்திலும் இராமாயண நிகழச்சிகளுடன் தொடர்புடைய ஊர்கள்,
கோவில்கள், மலைகள், நதிகள், சிற்றூர்கள், நினைவு வடிவங்கள் உள்ளன. இவையும்
வட்டார ரீதியான இராமாயணக் கதை வடிவங்களும் முழு அளவில் இன்னும் தொகுக்கப்படவில்லை” என்று ஆசிரியர் தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நூலின் வழியாக நான்
அறிந்த புதிய தகவல்களை மட்டும் சுருக்கமாக எழுதலாம் என்று எண்ணுகிறேன். ஆனால்
இச்சுருக்கம் மட்டுமே இந்நூல் கிடையாது. ஒவ்வொரு கட்டுரையிலும் எண்ணற்ற தகவல்களைக்
கொண்டுள்ள அற்புதமான புத்தகம்.
தக்கை இராமாயணம் – இது தக்கை என்னும் இசைக்கருவியின் தாளத்துக்கு ஏற்றபடி
அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது. தக்கை கொங்கு நாட்டில் பிரபலமான இசைக் கருவி. கொங்கு
நாட்டு மக்கள் படிப்பதற்கு எளிமையாக, கம்பராமாயணத்தைப் அப்படியே பின்பற்றி 3250 பாடல்களில் சுருக்கமாக
எழுதப்பட்டுள்ளது. ஏறத்தாழ கி.பி 1600 இல் இயற்றப்பட்ட இந்த
இராமாயணம் ஓசையுடன் படிப்பதற்கு உரியது. இதை இயற்றியவர் எம்பெருமான் கவிராயர். தக்கை
இராமயணத்தைப் பதிப்பித்த அருணாசலக் கவுண்டர், எம்பெருமான் கவிராயரை கொங்கு நாட்டு டி.கே.சி. என்கிறார். டி.கே.சி
கம்பனைப் புரிந்து தெரிந்து தொகுத்தார். எம்பெருமான் கம்பனைப் படித்து தன்
மொழியில் பாடல்களை உருவாக்கினார்.
சூர்ப்பனகை – செவ்விலக்கிய கதைகளில் காமவல்லியாகச் சித்தரிக்கப்படும்
சூர்ப்பனகை,
நாட்டார் கதைகளில் கணவனைக் கொன்றதற்காக இராவணனையும் மகனைக் கொன்றதற்காக
இலக்குமணனையும் பழிவாங்கக் கூடியவளாக காட்டப்படுகிறாள். மரபு சார்ந்த
மனிதநேயத்தைக் கதைகளின் அடிப்படையாக்குவது என்னும் நாட்டார் பாடகனின் பார்வைக்குச்
சூர்ப்பனகையின் பழிவாங்கல் நியாயமாகத் தோன்றுகிறது. வட இந்திய ராமலீலா
நிகழ்ச்சியில் பாடப்படும் ராதேஸ்ய இராமாயணம் “சூர்ப்பனகையைக்
கொன்றுவிடாதே” என்று சீதை இலக்குமணனிடம் கெஞ்சி கேட்பதாக
கூறுகிறது. ஒருவரை அவமானப்படுத்த மூக்கை அறுப்பது நடைமுறையில் இருந்துள்ளது.
திருமலை நாயக்கரின் மைசூர் போர் ‘மூக்கறுப்புப் போர்’ என்று வழங்கப்பட்டுள்ளது.
இராம கீர்த்தனம் – வில்லிசை என்னும் நிகழ்த்துக் கலைக்காகவே
எழுதப்பட்ட கதைப்பாடல் இராம கீர்த்தனம். இதன் ஆசிரியர் திருவானந்தம். இவர் சைவ
வேளாள சாதியைச் சார்ந்தவர். ஆதலால் இந்நூல் சிவனை முழுமுதல் கடவுளாகவும் சிவனின்
ஆணைப்படியே திருமால் இராம அவதாரம் எடுத்ததாகவும் காட்டுகிறது. மூலக்கதையிலிருந்து
வேறுபடும் பகுதிகள் நூலில் பட்டியல் இடப்பட்டுள்ளன.
தோல்பாவைக் கூத்து – இராமாயணக் கதையை நிகழ்த்தி
காட்டுவதற்கென்றே உருவாக்கப்பட்ட கலை. இக்கலைக்குரிய இராமாயணக் கதை வாய்மொழி
மரபில் மட்டுமே உள்ளது. இதற்கென்று ஏடுகளோ, கையெழுத்துப் பிரதிகளோ இல்லை. கதையைப் பத்துப் பகுதிகளாகப்
பகுத்துக்கொண்டு கூத்தைப் பத்து நாட்கள் நடத்துகின்றனர். பார்வையாளர்களாகிய
கிராமத்து மக்களின் நம்பிக்கையையும் வழக்காறுகளின் போக்குகளையும் அடிப்படையாகக்
கொண்டு இக்கலை நிகழ்த்தப்படுகிறது. தோல்பாவைக் கூத்து ஒருவகையில் சூர்ப்பனகையின்
பார்வையில் பார்க்கப்படுவதாகவும் கொள்ளலாம்.
ஜைன இராமாயணம் (பத்ம புராணம்) – இதன் ஆசிரியர் இரவிசேனாச்சாரியார். சமஸ்கிருதத்தில்
எழுதப்பட்டுள்ளது. இந்த இராமயணக் கதையின் சுருக்கம் நூலில் தரப்பட்டுள்ளது. இதன் முடிவு
வித்தியாசமாக இருக்கிறது. அக்கினிப் பிரவேசம் செய்து மீண்ட சீதை இராமனுடன் அயோத்திக்குச்
செல்லாமல் தலைமயிரைக் களைந்து வெள்ளாடை உடுத்தி துறவியாகிறாள். இராமன் இறந்து போனான்
என்ற பொய்யான செய்தியைக் கேட்ட இலக்குமணன் தற்கொலை செய்து கொள்கிறான். இதனால் மனம்
வருந்தி இராமனும் துறவறம் மேற்கொள்கிறான்.
கிழக்கில் பரவிய இராமாயணம் - இக்கட்டுரையில் கீழை நாடுகளான இலங்கை, தாய்லாந்து, மலேசியா, ஜாவா, பர்மா போன்றவற்றிலும்
பிலிப்பைன்ஸ், வியட்நாம், கம்போடியா, திபெத், கிழக்கு பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் வழக்கில்
உள்ள இராமாயணத்தைப் பற்றிய பல தகவல்கள் ஆச்சர்யமூட்டுகின்றன.
இலங்கையில் ‘இராம சீதா கதா தசரத சதம்’ என்ற சிங்கள மொழியில் எழுதப்பட்ட
இராமாயணத்தில் சிங்களச் செல்வாக்கு அதிகமாக உள்ளது. மலேசியாவில் ‘ஹிகாயட் செரி இராமா’ எனும் மலாய் மொழி இராமாயணம் உள்ளது.
மலேசிய வாய்மொழி மரபில் இராமன் சாதாரண தலைவனாகவும், இலக்குமணன்
மாபெரும் தியாகியாகவும் வீரனாகவும் காட்டப்படுகிறான். மேலும் இசுலாமியக் கலாச்சாரத்
தாக்கமும் உள்ளது. இராமன் சீதையை மீண்டும் காட்டுக்கு அனுப்பியதற்கு காரணம் அவள் இராவணனின்
ஓவியத்தை ரகசியமாக பாதுகாத்ததுதான் என்ற கதையும் உள்ளது.
தாய்லாந்தின் மொத்தக் கலாச்சாரத்தில் இராமாயணம் இரண்டறக் கலந்துள்ளது.
‘இராமகீயான்’ என்பது இந்நாட்டின் இராமாயணம். இக்கதையில் சீதை இராவணனின் மகள் என்றும், இலக்குவனின் மகளை இந்திரஜித்து மணம் செய்துக்கொண்டான் என்று கூறும் வடிவங்கள்
உள்ளன. ஜாவா, கம்போடியா நாடுகளில் வாய்மொழி இராமாயணக் கதைகள்
புழக்கத்தில் உள்ளன.
பர்மாவில் எட்டுக்கும் மேற்பட்ட இராமாயணக் கதைகள் முழு வடிவத்தில்
கிடைத்துள்ளன. பர்மிய இராமாயணத்தில் இராமன் போதி சத்துருவருடன் இணைக்கப்படுகிறான்.
பிலிப்பைன்ஸில் இராமாயணப் பாத்திரங்களின் பெயர்களை ஆட்பெயராக விடும் பழக்கம் இருந்துள்ளது.
இராமாயணக் கதாபாத்திரப் பெயருடன் கத்தோலிக்கப் பெயரைச் சேர்த்து கூறும் வழக்கமும் இருந்துள்ளது.
வியட்நாமில், இராமாயணம் வழக்கில் இருந்ததற்கு கல்வெட்டுகளில் சான்றுகள் உள்ளன. இலட்சுமணனுக்கு
அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. திபெத்தின் வாய்மொழி இராமாயணத்தில் மூல வடிவத்திலுருந்து
முற்றிலும் மாறுபட்ட வடிவங்கள் காணக்கிடைக்கின்றன. இராமன் மட்டுமே காட்டுக்குச் செல்வதாகவும்
இலக்குமணன் அயோத்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பங்களாதேஷ் வாய்மொழிக் கதையில்
சீதை இராமர், இலக்குமணன் இருவருக்கும் மனைவி எனக் கூறப்படுகிறது.
இராமன் எத்தனை இராமனடி என்ற கட்டுரையில் இராமாயணத்தைப் பற்றிய
பொது அறிமுகம், இராமாயணக் கதைகள் இடம்பெற்றுள்ள மற்ற இலக்கியங்கள்,
இராமாயத்தைப் பற்றிய ஓவியங்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள் என ஏராளமான நுண்தகவல்கள் கிடைக்கின்றன.
இரண்டாம் பாகத்தில் தரப்பட்டுள்ள வாய்மொழிக் கதைகள் வாசிப்பதற்கு
சுவாரஸ்யமாக உள்ளன. கோசலை வயிற்றில் பிறப்பவனால் தனக்கு அழிவு என்பதை அறிந்த இராவணன்
கோசலையைக் கடத்திக்கொண்டு போகிறான். பிறகு தசரதன் அவளை மீட்கிறான். அரசன் ஒருவனின்
தவத்தின் பலனாக கிடைக்கும் மாம்பழத்திலிருந்து சீதை பிறப்பதாக ஒரு கதை உள்ளது.
இராவணன் கர்ப்பமடைந்து அவனது மூக்கிலிருந்து சீதை பிறப்பதாக
உள்ள கதை வேடிக்கையாக இருந்தது. மற்றொரு கதை
சீதை மண்டோதரிக்குப் பிறந்தவள் என்று கூறுகிறது. சிவதனுசுவை சர்வசாதாரணமாக சீதா தூக்கிய
கதை ஒன்று உள்ளது.
அயோத்தியில் மகிழ்ச்சியாக ஆட்சி புரியும் இராமனின் நிம்மதியைக்
குலைக்க சூர்ப்பனகை மீண்டும் திட்டமிடுகிறாள். துறவியாக சீதையிடம் சென்று இராவணனின்
ஓவியத்தை வரையச் சொல்கிறாள். சீதை இராவணனின் பாதங்களை வரைகிறாள். அந்த ஓவியம் உயிர்பெற்று
எழுந்து சீதையைத் துரத்துகிறது. இதை அறிந்த இராமன் கோபம் கொண்டு சீதையைக் காட்டுக்குச்
செல்ல ஆணையிடுவதாக ஒரு கதை.
இராமன் ஏழு ஆச்சா மரங்களை ஒரே பாணத்தில் வீழ்த்தியதன் பிண்ணனிக்
கதை தரப்பட்டுள்ளது. இராமன் இலட்சுமணனின் காலைத் தொட்டு வணங்குவதும் ஊர்மிளையின் தாகமும்
ஒரு கதையில் பேசப்படுகிறது. இராமனும் அனுமனும் ஒரே வாழை இலையில் சாப்பிட்ட கதை உள்ளது.
சுக்ரீவனின் வீரனான வசந்தன் உயிர்பெற்று எழுந்த கதை இருக்கிறது.
அனுமனின் பிறப்பு பற்றிய கதை, இராவணன் ஆத்மலிங்கம் பெற்ற கதை, சுமந்திரன் கதை, மயில் இராவணன் கதை என ஏகப்பட்ட கதைகள்.
அனுமன் பிரம்மச்சாரி இல்லை, அவனுக்கு மகன் இருந்தான் என்று ஒரு
கதை சொல்கிறது. மண்டோதரியின் முகத்தில் இருந்த விஷ்ணுவின் அம்சத்திற்கு காரணமான கதை.
இந்நூலைப் படித்து முடித்தவுடன் நான் உணர்ந்தது இதுதான். செவ்விலக்கியத்தில்
காணப்படும் கதாபாத்திர சார்பு நிலைகளோ, புனிதத் தன்மைகளோ நாட்டார் கதைகளில் அறவே இல்லை. பாமர மக்களின் வாழ்வில் இயல்பாக
காணப்படும் குணாதிசயங்களும் உணர்வு நிலைகளும் வாய்மொழிக் கதைகளின் கதாபாத்திரங்கள்
மீது ஏற்றப்படுவதால் இராமயாணக் கதை மாந்தர்கள் அனைவருமே இப்போது என் மனதுக்கு மிக நெருக்கமானவர்களாக
மாறிவிட்டார்கள்.
No comments:
Post a Comment