Sunday, November 13, 2016

கம்பராமாயணம் - திரு அ.கி.வரதராசனுடன் சந்திப்பு 1
நவம்பர் 11, 2016 - ஜூரோங் ஈஸ்ட் பொது நூலகம் 

திரு அ.கி.வரதராசனின் உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை

வாழ்வில் நாம் அனைவரும் தொடர்ந்து ஏதோ ஒரு முடிவை எடுத்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால் யாரும் தவறான முடிவை எடுக்க வேண்டும் என்று விரும்பி எடுப்பதில்லை. முடிவின் வெற்றியையும் தோல்வியையும் அந்த முடிவினால் ஏற்படும் பின்விளைவுகளே தீர்மானிக்கின்றன. இன்று மேலாண்மையில் முடிவு எடுப்பது ஒரு முக்கியத் திறனாக கருதப்படுகிறது. ஒரு சிறந்த தலைவன் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கக் கூடியவனாக இருப்பது மிக முக்கியம். முடிவுகள் மூன்று முறைகளில் எடுக்கப்படலாம்.
  1. ஜனநாயக முறை
  2. இரண்டும் கலந்த முறை
  3. ஏகாதிபத்திய முறை
இந்த மூன்று முறைகளில் கம்பனின் நடையில் நின்றுயர் நாயகன் இராமன் எடுத்த முடிவுகளைப் பார்க்கலாம். எந்த முறையை எப்போது பின்பற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்த வகையிலும் இராமன் ஒப்பற்றத் தலைவனாகத் திகழ்கிறான்.

ஜனநாயக முறை

வீடணன் (விபீஷணன்) தனது அமைச்சர்கள் நால்வருடன் வருகிறான். அவர்களைக் கண்ட வானரப்படைகள் தாக்க முற்படுகின்றன. வானரங்களைத் தடுத்து நிறுத்திய மயிந்தன் அவர்களின் நிலையை வினவுகிறான். வீடணனின் அமைச்சர்களில் ஒருவனான அனலன் வீடணனைப் பற்றியும், அவனுக்கும் இராவணனுக்கும் நடந்த வாக்குவாதத்தைப் பற்றியும் எடுத்துரைக்கிறான்.

வீடணனைத் தங்கள் பக்கம் சேர்த்துக்கொள்ளலாமா வேண்டாமா என்ற கேள்வி எழும் தருணத்தில் இராமன் மைந்தலனிடம் நடந்தவற்றைச் சொல்லுமாறு பணிக்கிறான். வாய்மையான் மயிந்தன் தான் கண்டதையும் கேட்டதையும் உள்ளது உள்ளபடி இயம்புகிறான். இப்போது இராமன் தன் நண்பர்களின் கருத்துக்களை கேட்கிறான்.

அனைவரின் கருத்துக்களையும் கேட்டபிறகு அனுமனின் கருத்துப்படி வீடணனைச் சேர்த்துக்கொள்ளலாம். போரில் வாழ்வானாலும் சரி. சாவானாலும் சரி. அடைக்கலம் என்று வந்த வீடணனை ஏற்றுக்கொள்வதுதான் முறை என்று தனது முடிவை ஜனநாயக முறைப்படி அறிவிக்கிறான் இராமன்.

இதன் தொடர்புடைய பாடல்கள் கீழே   

மயிந்தனை செய்தி தெரிவிக்கச் சொல்லுமாறு இராமன் பணித்தல்
(யுத்த காண்டம், வீடணன் அடைக்கலப் படலம்)
'உண்டு, உரை உணர்த்துவது, ஊழியாய்!' எனப்
புண்டரீகத் தடம் புரையும் பூட்சியான்,
மண்டிலச் சடை முடி துளக்கி, 'வாய்மையாய்!
கண்டதும் கேட்டதும் கழறுவாய்' என்றான். (6540)

மயிந்தன் தான் கண்டதும் கேட்டதும் கூறுதல்
(யுத்த காண்டம், வீடணன் அடைக்கலப் படலம்)
'விளைவினை அறிந்திலம்; வீடணப் பெயர்
நளிர் மலர்க் கையினன், நால்வரோடு உடன்,
களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு
இளவல், நம் சேனையின் நடுவண் எய்தினான். (6541)

"கொல்லுமின், பற்றுமின்" என்னும் கொள்கையான்,
பல் பெருந் தானை சென்று அடர்க்கப் பார்த்து, யான்,
"நில்லுமின்" என்று, "நீர் யாவிர்? நும் நிலை
சொல்லுமின்" என்ன, ஓர் துணைவன் சொல்லினான்: (6542)

'"முரண் புகு தீவினை முடித்த முன்னவன்
கரண் புகு சூழலே சூழ, காண்பது ஓர்
அரண் பிறிது இல் என, அருளின் வேலையைச்
சரண் புகுந்தனன்" என முன்னம் சாற்றினான். (6543)

'"ஆயவன், தருமமும், ஆதி மூர்த்திபால்
மேயது ஓர் சிந்தையும், மெய்யும், வேதியர்
நாயகன் தர, நெடுந் தவத்தின், நண்ணினன்;
தூயவன்" என்பது ஓர் பொருளும் சொல்லினான். (6544)

'"கற்புடைத் தேவியை விடாது காத்தியேல்,
எற்புடைக் குன்றம் ஆம் இலங்கை; ஏழை! நின்
பொற்புடை முடித் தலை புரளும் - என்று ஒரு
நற் பொருள் உணர்த்தினன்" என்றும் நாட்டினான். (6545)

'ஏந்து எழில் இராவணன், "இனைய சொன்ன நீ
சாம் தொழிற்கு உரியை, என் சார்பு நிற்றியேல்;
ஆம் தினைப் பொழுதினில் அகறியால் - எனப்
போந்தனன்" என்றனன்; புகுந்தது ஈது' என்றான். (6546)

இராமன் நண்பர்களிடம் வீடணன் அடைக்கலம் குறித்து ஆராய்தல்
(யுத்த காண்டம், வீடணன் அடைக்கலப் படலம்)
அப் பொழுது, இராமனும், அருகில் நண்பரை,
'இப் பொருள் கேட்ட நீர் இயம்புவீர் - இவன்
கைப்புகற்பாலனோ? கழியற்பாலனோ?-
ஒப்புற நோக்கி, நும் உணர்வினால்' என்றான். (6547)

இராமன் வீடணனை ஏற்றுக்கொள்வது பற்றி எடுத்துரைத்தல்
(யுத்த காண்டம், வீடணன் அடைக்கலப் படலம்)
'மற்று இனி உரைப்பது என்னோ? மாருதி வடித்துச் சொன்ன
பெற்றியே பெற்றி; அன்னது அன்று எனின், பிறிது ஒன்றானும்,
வெற்றியே பெறுக, தோற்க, வீக, வீயாது வாழ்க,
பற்றுதல் அன்றி உண்டோ , அடைக்கலம் பகர்கின்றானை? (6597)

ஏன் மயிந்தன் கூறியதைக் கேட்டு நாம் முடிவெடுக்க வேண்டும்? என்ற கேள்வி கூட்டத்திலிருந்து எழ வாய்ப்பிருப்பதால் அவர்களுக்குப் பதிலாக இராமன் மயிந்தனை வாய்மையாய்! என்று விளிக்கிறான். அந்த விளியின் மூலம் மயிந்தன் உண்மையை மட்டுமே பேசக்கூடியவன் என்பதை நண்பர்களுக்குத் தெரிவிக்கிறான். மேலும் உன் ஊகங்கள் எதையும் சேர்க்காமல் கண்டதும் கேட்டதும் கழறுவாய் என்று உத்தரவிடுவதின் மூலம் மயிந்தன் சொல்லும் தகவல்களின் அடிப்படையில் நாம் முடிவு எடுக்கலாம் என்ற நம்பகத்தன்மையை இராமன் மற்றவர்களுக்கு அளிக்கிறான்.

அனைவரையும் கருத்து கூறுமாறு கேட்ட இராமன் இலக்குவனைக் கேட்கவில்லை. இலக்குவணன் கருத்து சரியாக இருந்து, அதை இராமனும் ஒத்துக்கொண்டுவிட்டால் தம்பி சொல்வதை ஏற்றுக்கொள்கிறான். நாம் சொல்வதற்கு மதிப்பில்லை என்று மற்றவர்கள் கருதலாம் என்பது காரணமாக இருக்குமோ என்று எனக்குத் தோன்றியது.   
விபீடணனின் சார்பில் பேசும் அவனது அமைச்சன் அனலன் தனது முதல் வார்த்தைகளை மிக கவனமாகத் தேர்ந்தெடுத்து முன்வைக்கிறான். அறத்திற்கு முரணாக வினை செய்யும் இராவணனின் எண்ணம், சொல், செயல் (திரிகரண்) ஆகிய மூன்றும் தீமையால் சூழப்பட்டுள்ளன. அதிலிருந்து தப்பிக்க வேறு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் அருள் கடலான இராமனைச் சரண் அடைய வந்துள்ளான் என்று முதலில் உரைத்துவிட்டு பின்பு விபீடணனின் குணாதிசயத்தையும் இராவணனோடு அவனுக்கு ஏற்பட்ட முரண்பாட்டையும் சொல்வதன் மூலம் அனலன் விபீடணனுக்கு சிறந்த பிரதிநிதியாக செயல்படுகிறான்.

இராமன் இறுதியின் மாருதியின் சொல்படி முடிவு எடுப்பதாக கூறுகிறான். அனுமன் ஏற்கனவே விபீடணனை இலங்கையில் சந்தித்து அவனது இயல்புகளை ஓரளவு அறிந்திருக்கிறான் என்பததுதான் இதற்கான காரணமாகும்.

இரண்டும் கலந்த முறை

போருக்குத் தயாராக தனது சேனைகளோடு இராமன் காத்திருக்கிறான். ஆனால் இராவணனைக் காணவில்லை. அப்போது அவனது மனதில் உதித்த ஓர் எண்ணத்தை வீடணனுக்கு உரைத்து அவனது கருத்தைக் கேட்கிறான். சீதையை விட்டுவிடு என்ற செய்தியோடு ஒரு தூதுவனை அனுப்புவோம். இராவணன் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தால் போர் புரிவோம். அதுதான் அறம். அதுதான் நீதி என்று கருணையின் வடிவான இராமன் தனது கருத்தை முன்வைத்து வீடணனின் கருத்தைக் கேட்பதின் வழியாக ஜனநாயகம், ஏகாதிபத்தியம் இரண்டும் கலந்த முறையில் முடிவெடுக்க முயல்கிறான்.

இதன் தொடர்புடைய பாடல்கள் கீழே  
இராவணனது வருகையைக் காணாது, இராமன் தூது போக்குதல் குறித்து, வீடணனுக்கு உரைத்தல்
(யுத்த காண்டம், அங்கதன் தூதுப் படலம்)
வள்ளலும் விரைவின் எய்தி, வட திசை வாயில் முற்றி,
வெள்ளம் ஓர் ஏழு - பத்துக் கணித்த வெஞ் சேனையோடும்,
கள்ளனை வரவு நோக்கி, நின்றனன், காண்கிலாதான்,
'ஒள்ளியது உணர்ந்தேன்' என்ன, வீடணற்கு உரைப்பதானான் (7101)

'தூதுவன் ஒருவன்தன்னை இவ் வழி விரைவில் தூண்டி
"மாதினை விடுதியோ?" என்று உணர்த்தவே, மறுக்கும் ஆகின்,
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது; அறனும் அஃதே;
நீதியும் அஃதே' என்றான் - கருணையின் நிலயம் அன்னான் (7102)

இராமன் ஏன் மற்றவர்களிடம் உரைக்காமல் விபீடணனிடம் கூறினான்?
ஏனென்றால் போரில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் பாதிப்பிற்கு உள்ளாவது அவன் ஒருவனே. வெற்றி பெற்றால் சகோதரனை இழப்பான். தோல்வி பெற்றால் நாட்டை இழப்பான்.
மற்றொரு காரணமும் இருக்கலாம். அடைக்கலம் புகுந்தவனை தங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக இராமன் அவனிடம் சொன்னதாகவும் கருதலாம்.
தான் அனுப்ப விரும்பும் தூது முயற்சி வெற்றி பெறுமா? பெறாதா? என்பது இராவணனைப் பற்றி அதிகம் அறிந்த விபீடணனுக்குத்தான் தெரியும் என்பதால் இராமன் அவனிடம் மட்டும் கூறியிருக்கலாம் (எனது பார்வை)  
   
ஏகாதிபத்திய முறை

வாலியைப் பழி வாங்கும் முடிவோடு சுக்ரீவன் இராமனைத் தஞ்சம் அடைகிறான். அனைவரும் வாலி வாழும் கிட்கிந்தைக்குப் பயணமாகிறார்கள். அங்கு சென்று சேர்ந்தவுடன் இனிமேல் என்ன செய்வது என்று இராமனை வினவுகிறார்கள். அப்போது இராமன் யாரிடமும் எதுவும் கலந்தாலோசிக்காமல் சுக்ரீவனை நோக்கி நீ சென்று வாலியை அழைத்து வா. நான் வேறு ஓர் இடத்தில் மறைந்து நின்று அம்பெய்தி அவனைக் கொல்கிறேன் என்கிறான்.

ஒரு முடிவினால் தன்னைச் சார்ந்தவர்களுக்கு பழி வந்து சேரலாம் என்ற நிலையில் அந்த முடிவுக்கான முழு பொறுப்பையும் தனதாக ஏற்றுக் கொள்பவனே சிறந்த தலைவன். அந்த வகையில் வாலியைக் மறைந்து நின்று கொல்வது என்ற முடிவை ஏகாதிபத்திய முறையில் எடுத்து தன்னைச் சார்ந்தவர்களின் மீது பழி விழாமல் தடுக்கிறான் கம்பனின் நாயகன்.      

இதன் தொடர்புடைய பாடல்கள் கீழே  
வாலி வாழும் கிட்கிந்தையை அனைவரும் சேர்தல்
(கிட்கிந்தா காண்டம், வாலி வதைப் படலம்)
அன்னது ஆய குன்றின் ஆறு, சென்ற வீரர், ஐந்தொடு ஐந்து
என்னல் ஆய யோசனைக்கும் உம்பர் ஏறி, இம்பரில்
பொன்னின் நாடு இழிந்தது அன்ன, வாலி வாழ் பொருப்பு இடம்
துன்னினார்கள்; 'செய்வது என்னை?' என்று நின்று சொல்லுவார் (4046)

இராமன் தன் கருத்தை வெளியிடுதல்
(கிட்கிந்தா காண்டம், வாலி வதைப் படலம்)
அவ் இடத்து, இராமன், 'நீ அழைத்து, வாலி ஆனது ஓர்
வெவ் விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வை, வேறு நின்று,
எவ்விடத் துணிந்து அமைந்தது; என் கருத்து இது' என்றனன்;
தெவ் அடக்கும் வென்றியானும், 'நன்று இது' என்று சிந்தியா, (4047)



2 comments:

  1. சந்திப்பை தொகுத்துவழங்கியமைக்கு நன்றி நிலா. ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும் ராமன் ஏன் அவ்வாறு எடுத்தான் என்பதையும் அறிந்துபோது சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி.

    ReplyDelete
  2. நன்றி எம்.கே. அதையும் எழுதலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்தக் காரணங்கள் வாசகர்களின் கற்பனையைப் பொறுத்து மாறுபடலாம் என்பதால் அவரவர் கற்பனைக்கு இடமளித்து எழுதாமல் விட்டுவிட்டேன். (எழுத சோம்பேறித்தனமாய் இருக்கிறது என்பதை எப்படியெல்லாம் சொல்லி மழுப்ப வேண்டியுள்ளது. ஹா ஹா)

    ReplyDelete