முனைவர்
ரெ கார்த்திகேசுவிற்கு ஒரு நினைவு அஞ்சலி
உட்லண்ட்ஸ்
வட்டார நூலகம் – நவம்பர் 19, 2016 - ஐந்து
நிமிட உரை
மறைந்த
மலேசிய எழுத்தாளர் முனைவர் ரெ கார்த்திகேசுவிற்கு நினைவு அஞ்சலி என்ற இந்த
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தேசிய நூலக வாரியத்திற்கும் சிங்கப்பூர் இந்திய
சங்கத்திற்கும் ஓர் இலக்கிய வாசகியாக முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு
ரெ கார்த்திகேசுவை நான் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். அதுதான் முதல்
சந்திப்பு. ஆனால் அதுவே கடைசி சந்திப்பாக இருக்கும் என நினைக்கவே இல்லை. கடந்த
வருடம் நண்பர் ஷாநவாஸிற்கு கரிகால் சோழன் விருது வழங்கப்பட்ட நிகழ்வில்
கலந்துகொள்ள கோலாலம்பூர் சென்றிருந்தபோது அவரைப் பார்த்தேன். என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.
அவர் உங்கள் கதைகளைப் படித்திருக்கிறேன் என்று மென்மையாகவும் கனிவாகவும் கூறி புன்னகைத்தார்.
பின்பு அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.
ஒரு
மனிதராக அவருடன் எனக்கு ஏற்பட்ட அந்தச் சந்திப்பு சில நிமிடங்கள்தான். ஆனால் அவரது
படைப்புகளுக்கும் வாசகியான எனக்குமான உறவு காலத்தைக் கடந்தது. அதனால் அவரது
படைப்புகளைப் பற்றி பேசுவதுதான் நான் அவருக்குச் செலுத்தும் ஆகச் சிறந்த அஞ்சலியாக
இருக்குமென நினைக்கிறேன்.
“வெள்ளத்தால் போகாது, வெந்தணலால்
வேகாது – கள்வரால்
கொள்ளத்தான் முடியாது, கொடுத்தாலும்
நிறையொழியக் குறைபடாது”
என்று தனது படைப்புகளைப் பற்றி ரெ.கா. தனது இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வளவு உண்மையான வார்த்தைகள்! எமன் என்ற கள்வனால் அவரது உயிர் திருடப்பட்டு, வெந்தணலால் உடல்
எரிக்கப்பட்டாலும் எதனாலும் அழியாத, அழிக்கமுடியாத தனது எழுத்துகளின் வழியாக ரெ.கா.
மரணத்தை வென்று காலம் கடந்து நிற்கப்போவது உறுதி.
ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து
நாவல்கள்,
இரண்டு விமர்சனக் கட்டுரை நூல்கள் ஆகிய 12 நூல்களை முனைவர் ரெ.கார்த்திகேசு எழுதியுள்ளார். இன்று அவரது
நாவல்களைப் பற்றி பேசலாம் என எண்ணுகிறேன். வானத்து வேலிகள், தேடியிருக்கும் தருணங்கள், அந்திம காலம், சூதாட்ட ஆடு காலம், காதலினால் அல்ல என ஐந்து
நாவல்களை ரெ.கா. எழுதியிருக்கிறார்.
‘என் நாவல்கள் என் வாழ்வை முற்றாகப்
பிரதிபலிப்பவை அல்ல. என் நாவல்கள் என் கற்பனா சக்தியையும் ‘மற்றவர்கள்’ வாழ்வு
பற்றிய என் பார்வையையுமே கொண்டிருக்கின்றன’ என்று தன் நாவல்களைப் பற்றி ரெ.கா. கூறுவது உண்மைதான்
என்பது நாவல்களை வாசிக்கையில் உணரமுடிகிறது.
ஐந்து குறுநாவல்களும் அவர் பார்த்த, கேட்ட மனிதர்களின் கதைகளை அவரது
புனைவு மொழியில் நமக்கு வாசிக்கத் தருகின்றன. ரெ.காவிடம் எனக்கு மிகவும் பிடித்த
அம்சம் அவரது மொழி நடை. மிக எளிமையாக அதே சமயம் தான் சொல்ல விரும்புவதை அழகாக
வாசகருக்கு கடத்திவிடக்கூடிய நடைக்குச் சொந்தக்காரர். ‘சரித்திரத்தை பதிவு செய்வதில் எனக்கு
விருப்பமில்லை’ என்று
கூறும் ரெ.காவின் குறுநாவல்கள் சமகால வாழ்க்கையை அவதானித்து எழுதப்பட்டவையாக உள்ளன.
எனது வாசிப்பில் இவரது நாவல்களை யதார்த்த
மற்றும் லட்சியவாத எழுத்துகளின் கலவையாக பார்க்கிறேன். குடும்பப் பிரச்சனைகள், சமூக சிக்கல்கள், மலேசியா என்ற பல்லின மக்கள் வாழும் நாட்டில் சிறுபான்மை
இனமான இந்தியர்கள் எதிர்கொள்ளும் வெல்விளிகள், அரசியலில் இந்தியர்களின் நிலைப்பாடு
ஆகியவற்றை அறிவுரைகள், தீர்வுகள், பிரச்சாரங்கள், கோஷங்கள் என உரத்த குரலில் சொல்லாமல் கதாபாத்திரங்களின்
வழியாக தனது யதார்த்தமான எழுத்துகளால் முன்வைக்கிறார்.
யதார்த்த எழுத்துக்குச் சொந்தக்காரரான
முனைவர் ரெ.கார்த்திகேசு தனது கதாபாத்திரங்களில் சிலரை உயர்ந்த இலக்கை நோக்கி பயணிக்கும்
லட்சியவாதிகளாகவும் வடிவமைக்கிறார். லட்சியவாதிகளான பாத்திரங்களைப் படைக்கும்
படைப்பாளிகள் அவர்களைக் கிட்டத்தட்ட கடவுளுக்கு இணையாக சித்தரிப்பது வழக்கம். உதாரணத்திற்கு
ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலில் வரும் ஹென்றியைச் சொல்லாம். ‘ஹென்றி மாதிரியான மனிதர்களை யதார்த்த
வாழ்வில் சந்திக்க முடியுமா?’ என்ற கேள்விக்கு ஜெயகாந்தனின் பதில் ‘தேடுங்கள் கண்டடைவீர்கள்’ என்பதுதான். ஆனால் ரெ.கா அப்படி ஒரு கேள்வி எழ இடம் தராமல், அந்த லட்சியவாதிகளின் மனதில்
ஏற்படும் கீழ்மைகளையும், அறத்திற்கு முரணான உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் நேர்மையாக
பதிவு செய்வதன் மூலம் ஒரு படைப்பாளியாக வெற்றி பெறுகிறார்.
விருதுகளும் பட்டங்களும்
பரிசுகளும் ஓர் எழுத்தாளனுக்குப் புறமகிழ்ச்சியைத் தரவல்லவையாக இருந்தாலும்
உண்மையான அகமகிழ்ச்சியைத் தரவல்லது அவனது படைப்புகள் வாசிக்கப்படுவதும்
பாராட்டப்படுவதும் விமர்சிக்கப்படுவதுமாகத்தான் இருக்கும். ஆகையால் நாம் அவரது
படைப்புகளை வாசிப்பதின் வழியாக அவருக்கு ஆத்மசாந்தியை அளிக்கமுடியும் என
நம்புகிறேன். அவரது ஐந்து குறுநாவல்களும் அவரது இணையப் பக்கத்தில் மின்
புத்தகங்களாக வாசிக்கக் கிடைக்கின்றன. நீங்கள் அனைவரும் முனைவர் ரெ.கார்த்திகேசுவின்
படைப்புகளை தேடி வாசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி
கூறி விடைபெறுகிறேன்.
No comments:
Post a Comment