Sunday, November 20, 2016

கம்பராமாயணம் - திரு அ.கி.வரதராசனுடன் சந்திப்பு 2
நவம்பர் 18, 2016 - ஜூரோங் ஈஸ்ட் பொது நூலகம்

திரு அ.கி.வரதராசனின் உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை
இலக்குவன் செய்த சூளுரைகள்

இராமாயணத்தில் நான்கு இடங்களில் இலக்குவன் சூளுரை செய்கிறான். அதில் முதல் இரண்டு சூளுரைகளை இராமனின் ஒப்புதல் பெறாதவை என்றும் அடுத்த இரண்டு சூளுரைகளை இராமனின் ஒப்புதல் பெற்றவை என்றும் பிரிக்கலாம். முதல் சூளுரையில் இராமனுக்கு முடிசூட்டுவதை எதிர்ப்பவர்களைக் கொல்லப்போவதாகவும், இரண்டாவது சூளுரையில் பரதனைக் கொல்லப்போவதாகவும், மூன்று, நான்கு சூளுரைகளில் இந்திரசித்தைக் கொல்லப்போவதாகவும் இலக்குமணன் உரைக்கிறான். அனைத்து சூளுரைகளும் கொல்லுதலைப் பேசினாலும் அவை இராமனின் நலம் என்ற நல்ல நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.

முதல் சூளுரை

இராமனுக்குப் பட்டம் மறுக்கப்பட்டவுடன் இந்தச் சூளுரையை இலக்குமணன் உரைக்கிறான். இந்தப் பூமியின் பாரம் குறையுமாறு போருக்கு வருவோரை அழித்து அவர்களது உயிரற்ற உடல்களை உலகம் முழுதும் குவித்து என் அரசனாகிய இராமனுக்கு மௌலி சூட்டுவேன். இதைத் தடுப்பவர்கள் யாராவது இருந்தால் தடுத்துப் பாருங்கள். மும்மூர்த்திகள், விண்ணவர்கள், மனிதர்கள், நாகர்கள், எண்ணற்றவர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள் என அனைவரும் எதிர்த்து வந்தாலும் கைகேயி என்ற பெண்ணின் ஆசை நிறைவேற அனுமதிக்கமாட்டேன் என்று அயோத்தி வீதிகளில் வலம் வந்து ஆவேசத்துடன் கூறுகிறான். ஆனால் இராமனின் ஒப்புதல் இல்லாத காரணத்தால் இந்தச் சூளுரை அர்த்தமிழந்து போகின்றது. இதன் தொடர்புடைய பாடல்கள் கீழே.

அயோத்தியா காண்டம்நகர் நீங்கு படலம்:

புவிப் பாவை பரம் கெடப் போரில் வந்தோரை எல்லாம்
அவிப்பானும்; அவித்து, அவர்  ஆக்கையை அண்டம் முற்றக்
குவிப்பானும், எனக்கு ஒரு கோவினக் கொற்ற மௌலி
கவிப்பானும் நின்றேன்; இது காக்குநர் காமின்என்றான். (1716) 

விண் நாட்டவர்; மண்ணவர்; விஞ்சையர்; நாகர் மற்றும்
எண் நாட்டவர் யாவரும் நிற்க; ஓர் மூவர் ஆகி
மண் நாட்டுநர், காட்டுநர், வீட்டுநர் வந்த போதும்
பெண் நாட்டம் ஓட்டேன் இனிப் பேர் உலகத்துள் என்னா (1717) 

இரண்டாவது சூளுரை

தன் பாட்டனார் வீட்டிலிருந்து சத்ருக்கனனுடன் அயோத்தி திரும்பும் பரதன் நடந்தவற்றை அறிகிறான். மனம் வாடுகிறான். என் அண்ணன் இராமனே அரசன் என்று கூறிவிட்டு இராமனை அழைத்துவர பெரும் தானையுடன் அடவிக்கு  வருகிறான். அவனது வருகையை தொலைவிலிருந்து காணும் இலக்குமணன் பரதன் போருக்கு வருகிறான் என தவறாகப் புரிந்துகொண்டு அண்ணன் இராமனிடம் சூளுரைக்கிறான். தனக்குத் தரப்பட்ட பெரு நிலமான கோசல நாட்டை ஆள்வதற்குப் பதிலாக பரதனை நரகத்தை ஆளுமாறு  செய்வேன். காடேகிய உன் நிலை கண்டு உன் அன்னை கோசலை துயருற்றதைப் பார்த்து மனம் உவந்த கைகேயியை அழச் செய்வேன் என்று கர்ஜிக்கிறான் இலக்குமணன். முதல் சூளுரையைப் போல இதற்கும் இராமன் சம்மதம் இல்லாததால் இந்தச் சூளுரையும் சொல்லளவில் நின்றுபோகிறது. இதன் தொடர்புடைய பாடல்கள் கீழே.

அயோத்தியா காண்டம்திருவடி சூட்டு படலம்:

இருமையும் இழந்த அப் பரதன் ஏந்து தோள்
பருமையும் அன்னவன் படைத்த சேனையின்
பெருமையும் நின் ஒரு பின்பு வந்த என்
ஒருமையும் கண்டு இனி உவத்தி, உள்ளம் நீ  (2404)

 


தழைத்த வான் சிறையன, தசையும் கவ்வின,


அழைத்த வான் பறவைகள்; அலங்கு பொன் வடிம்பு,


இழைத்த வான் பகழி புக்கு, இருவர் மார்பிடை,


புழைத்த வான் பெருவழி போகக் காண்டியால்.   (2412)


ஒரு மகள் காதலின்  உலகை நோய் செய்த

பெருமகன் ஏவலின் பரதன் தான் பெற்ற 

இருநிலம் ஆள்கை  விட்டு இன்று என் ஏவலால்  

அரு நரகு  ஆள்வது காண்டி , ஆழியாய் ! (2413)


வையகம் துறந்து  வந்து அடவி வைகுதல்
எய்தியது உனக்கென நின்னை ஈன்றவள்
நைதல் கண்டு உவந்தவள்; நவையின் ஓங்கிய
கைகயன் மகள், விழுந்து அரற்றக் காண்டியால். (2414)


அரம் சுட அழல் நிமிர் அலங்கல் வேலினாய்,
விரைஞ்சு ஒரு நொடியில் இவ் அனிக வேலையை,
உரம் சுடு வடிக்கணை ஒன்றில் வென்று,
முப் புரம் சுடும் ஒருவனின் பொலிவென் யான் எனா. (2415) 

மூன்றாவது சூளுரை

உலகமே பார்க்குமாறு நொடிப்பொழுதில் இந்திரனின் பகைவனான இந்திரசித்தின் சிரத்தை என் சரம் அறுக்கும். அதைச் செய்வதில் நான் தோற்றுவிட்டால் நான் எமனுக்கு விருந்தாவேன். மனிதர்களில் மிக, மிக கீழ்மையானவன் என என்னை ஞாலம் பழிக்கட்டும். இத்தனை நாட்கள் ஓர் அடிமையாய் உனக்கு நான் செய்த சேவை அனைத்தும் புகழ் குன்றி பயனொன்றும் இல்லாமல் வீணாய் போகட்டும் என்று இராமனிடம் சூளுரைக்கிறான் இலக்குமணன். இந்தச் சூளுரைக்கு வலு சேரக்கும் விதத்தில் உன்னால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும் என்று கேட்டு இராமன் ஊக்கமூட்டுகிறான். அண்ணனிடமிருந்து கிடைத்த ஊக்கத்தால் இலக்குமணன் வாள், வில், மற்போர் என மூன்று வகை போராக இருந்தாலும், எவ்விதமான படைக்கலத்தைக் கொண்டு நீ போரிட்டாலும் ஒரே குறிக்கோளுடன் உன்னை நான் போரில் வெல்வேன் என்று இந்திரசித்தை நோக்கி சூளுரைக்கிறான். ஆனால் இந்திரசித்தின் மாயப்போரில் பிரம்மாஸ்திரத்தால் தாக்கப்பட்டு இந்தச் சூளுரையை நடைமுறைப்படுத்த இயலாமல் தோற்கிறான் இலக்குமணன். அந்தத் தோல்வியின் அவமானத்தால் புழுங்குகிறான்.
நிகும்பலை யாகம் செய்யும் பொருட்டு தன் எதிரிகளைத் திசை திருப்புவதற்காக மாயா சீதையை உருவாக்கும் இந்திரசித்து அனுமன் முன்னால் அவளைக் கொன்றுவிட்டு அயோத்திக்குச் செல்லப்போவதாக கூறுகிறான். அதனை அறிந்த இராமன் அழுது புலம்புகிறான். இந்திரசித்திடம் தோற்க அயோத்தியில் இருக்கும் பரதன் ஒன்றும் இலக்குமணன் கிடையாது என்று சொல்வதன் மூலம் தனது மனப்புழுக்கத்தை இலக்குமணன் வெளிப்படுத்துகிறான். இப்பாடல் ஒன்றுதான் இலக்குமணன் பரதனைப் புகழும் பாடலாகவும் விளங்குகிறது.
இந்திரசித்தின் சூழ்ச்சியை விபீடணனின் வழியாக அறிந்தவுடன் நிகும்பலை யாகம் செய்யப்போகும் இந்திரசித்தை தடுத்து அவனது தலையைக் கொண்டு வருகிறேன் என்று சபதம் மேற்கொண்டு கிளம்புகிறான் இலக்குமணன். அவனது பிரிவால் வாடும் இராமனது நிலை தடாகையைக் கொல்வதற்கு விசுவாமித்திரருடன் இராமன் சென்றபோது துயருற்ற தசரதனின் நிலையை ஒத்திருந்தது என்கிறார் கம்பர். இராமனின் ஆதரவு இருந்தும் சூழலின் காரணமாக மூன்றாவது சூளுரையை இலக்குமணனால் நிறைவேற்ற முடியாமல் போகிறது. இதன் தொடர்புடைய பாடல்கள் கீழே.

யுத்த காண்டம்பிரம்மாத்திரப் படலம்:
இந்திரன் பகை எனும் இவனை என் சரம்
அந்தரத்து அருந் தலை அறுக்கலாது எனின்,
வெந் தொழிற் செய்கையன் விருந்தும் ஆய், நெடு
மைந்தரில் கடை எனப் படுவன், வாழியோய் !  (8481)

நின்னுடைய முன்னர்  இந்நெறி இல் நீர்மையான்
தன்னுடைச் சிரத்தை என் சரத்தின் தள்ளினால்,
பொன்னுடை வனை கழல் பொலம் பொன் தோளினாய்!
என்னுடை அடிமையும் இசையிற்று ஆம் அரோ!  (8482)

”கடிதினில் உலகு எல்லாம் கண்டு நிற்க, என்
சுடு சரம் இவன் தலை துணிக்கலாது எனின்,
முடிய ஒன்று உணர்த்துவென்; உனக்கு நான் முயல்
அடிமையின் பயன் இகந்து அறுக ஆழியாய்!“ (8483)

முறுவல் வாள் முகத்தினன், முளரிக் கண்ணனும்
அறிவ ! நீ, “ அடுவல்என்று அமைதி ஆம் எனின் ,
இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும்
வெறுவியர்; வேறு இனி விளைவது யாது?” என்றான். (8485)  

வாளின், திண் சிலைத் தொழிலின், மல்லின், மற்றை  
ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும், அமரில்
கோளுற்று, உன்னொடு குறித்து அமர் செய்து உயிர் கொள்வான்
சூளுற்றேன், இது சரதம்என்று, இலக்குவன் சொன்னான். (8502)   

யுத்த காண்டம்மாயா சீதைப் நீங்கு படலம்:
     தீக்கொண்டு வஞ்சன் வீச, திசைமுகன் பாசம் தீண்ட,

வீக்கொண்டு வீழ, யானோ பரதனும்? வெய்ய கூற்றைக்

கூய்க்கொண்டு, குத்துண்டு அன்னான் குலத்தொடு நிலத்தன் ஆதல்,

போய்க்கண்டு கோடி அன்றே? என்றனன் புழுங்குகின்றான். (8921) 

யுத்த காண்டம்நிகும்பலை யாகப் படலம்:

வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து மாள,

கல்லுதி தருமம் என்னும் கண் அகன் கருத்தைக் கண்டு,

பல் பெரும் போரும் செய்து, வருந்தலை அற்றம் பார்த்து,

கொல்லுதி அமரர் தங்கள் கூற்றினை, கூற்றம் ஒப்பாய். (8938)


பொலங் கொண்டல் அனைய மேனிப் புரவலன் பொருமிக் கண்ணீர்
நிலம் கொண்டு படா நின்று, நெஞ்சு அழிவானைதம்பி
வலம் கொண்டு  வயிர வில்  இடம் கொண்டு , வஞ்சன் மேலே 
சலம் கொண்டு கடிது சென்றான்;  “தலை கொண்டு  வருவென்என்றே . (8946)  

தான் பிரிகின்றிலாத தம்பி வெங் கடுப்பின் செல்வான்;
ஊன் பிரிகின்றிலாத உயிர் என மறைதலோடும்,
வான் பெரு வேள்வி காக்க, வளர்கின்ற பருவ நாளில்,
தான் பிரிந்து ஏகக் கண்ட தயரதன் தன்னை ஒத்தான். (8947)  

நான்காவது சூளுரை

எல்லா மறைகளும் அறியக்கூடியவனும் வேதியர்கள் வணங்கக்கூடியவனுமாகிய இராமன் அறத்தின் நாயகன் என்றால் பிறை போன்ற பற்களைக் கொண்ட இந்திரசித்தைக் கொல்வேன் என்று முழக்கமிட்டு இலக்குமணன் அம்பை விடுகிறான். விஷ்ணுவின் சக்கரமும், இந்திரனின் வஜ்ராயுதமும், சிவனின் சூலாயுதமும், நான்முகனின் ஆயுதமும் நாணுமாறு இலக்குமணன் எய்த தெய்வாம்சம் பொருந்திய பகழி இந்திரசித்தின் தலையைக் கொய்தது. இதன் தொடர்புடைய பாடல்கள் கீழே.

யுத்த காண்டம்இந்திரசித்து வதைப் படலம் :
மறைகளே தேறத் தக்க, வேதியர் வணங்கற் பால,
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்தி என்னின்,
பிறை எயிற்று இவனைக் கோறிஎன்று, ஒரு பிறைவாய் வாளி
நிறை உற வாங்கி விட்டான், உலகு எல்லாம் நிறுத்தி நின்றான். (9166)

நேமியும் குலிச வேலும் நெற்றியின் நெருப்புக் கண்ணான்
நாம வேல்தானும் மற்றும் நான்முகன் படையும் , நாணத்
தீ முகம் கதுவ ஓடிச் சென்று அவன் சிரத்தைத் தள்ளிப்
பூமழை அமரர் சிந்த பொலிந்தது அப் பகழிப் புத்தேள். (9167) 

எனது பார்வை

முதல் சூளுரையை ஆங்கிலத்தில் சொல்வதென்றால் Promise & Proclamation என்று சொல்லலாம். (A promise is a commitment by someone to do or not do something. A proclamation is an official declaration). இதை அயோத்தி மக்கள் முன் பொது பிரகடனமாக சொல்கிறான். இரண்டாவது சூளுரையை ஆங்கிலத்தில் வெறும் Promise என்று சொல்லலாம். இதை குறிப்பாக இராமனிடம் உரைக்கிறான். மூன்றாவது சூளுரையை ஆங்கிலத்தில் Vow எனலாம். இதில் இலக்குமணன் தான் தோற்றுவிட்டால் தனது உயிரை, தனது நற்பெயரை, அண்ணனுக்குச் செய்த சேவையின் பலனை தருவதாக சூளுரைக்கிறான். (A Vow is to pledge to do, make, give, observe, etc.). நான்காவதாக ராமனின் அறத்தை முன்வைத்து சூளுரைப்பதால் அதை Oath எனக் குறிபபிடலாம். (An oath is either a  statement of fact or  a promise with wording relating to something considered sacred as a sign of verity).


முதல் மூன்று சூளுரைகளிலும் தன் வீரத்தின் மீது அளவில்லா நம்பிக்கை கொண்டிருந்த இலக்குமணன் இந்திரசித்திடம் தோற்பதன் மூலம் நிலைகுலைகிறான். தன் வீரத்தைவிட தன் அண்ணனின் அறம் உயர்ந்தது (இராமனைக் கடவுள் எனக் கருதினால் சரணாகதி தத்துவம்) என்ற உண்மையை முழுமையாக மனதில் உள்வாங்கி அம்பை விட்டு (நிறை உற வாங்கி விட்டான்) இந்திரசித்தைக் கொல்கிறான். இராமனின் அறத்தை முன்வைத்து சூளுரைக்கையில் இலக்குமணனுக்கு அதில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட அவனது வினையூக்கம் அதிகமாகிறது. 

No comments:

Post a Comment