Tuesday, November 29, 2016

கம்பராமாயணம் - திரு அ.கி.வரதராசனுடன் சந்திப்பு 3
நவம்பர் 25, 2016 - ஜூரோங் ஈஸ்ட் பொது நூலகம்

திரு அ.கி.வரதராசனின் உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை

முன்னம் முடிந்தான்

இராமன் வனவாசத்திற்காக அயோத்தியை விட்டு நீங்க ஆயத்தமாகும்போது இலக்குமணன் தன் தாய் சுமித்திரையிடம் தானும் இராமனுடன் போக விழைவதாக கூறுகிறான். மகனே! வனவாசம் செல்வது உனக்கு முடியாத காரியமல்ல. இனிமேல் அவவனம்தான் உனக்கு அயோத்தி. இராமன்தான் உனக்கு அரசன். சீதைதான் உன் தாய். சற்றும் தாமதியாமல் உடனே புறப்படு. ஒரு தம்பியாக இல்லாமல் ஓர் அடிமையாக இராமனைப் பின்தொடர்ந்து செல். இராமன் அயோத்தி திரும்பி வந்தால் நீயும் வா. இல்லையென்றால் அவனுக்கு முன்னம் முடி என்று கூறி சுமித்திரை அவனை வழியனுப்புகிறாள் (பாடல்கள் கீழே). இராமனைக் காக்கும் பொருட்டு தன் உயிரை ஈந்து முன்னம் முடிந்த இலக்குமணனைப் பற்றி பார்ப்போம்.

அயோத்தியா காண்டம்நகர் நீங்கு படலம்:

”ஆகாதது அன்று; உனக்கு அவ் வானம் இவ் அயோத்தி,
மா காதலன் இராமன், நம் மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர், நம் பூங்குழல் சீதை என்றே,
ஏகாய் இனி இவ் வயின் நிற்றலும் ஏதம்“ என்றாள் (1745)

பின்னும் பகர்வாள்; மகனே! இவன் பின் செல்; தம்பி

என்னும் படியன்று; அடியாரின் ஏவல் செய்தி;

மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா; அது அன்றேல்,

முன்னம் முடி,” என்றனள், வார் விழி சோர நின்றாள் ”. (1746) 

யுத்த காண்டத்தில் இலக்குமணனை எதிர்கொள்ளும் இராவணன் அம்பெய்து இவனைக் கொல்வது கடினம். என்ன செய்யலாம்?” என்று சிந்திக்கிறான். பிரம்மாவிடமிருந்து பெற்றதும் சிவனின் படைக்கலனை அழித்ததுமான மோகனாஸ்திரத்தை எய்து கொல்லலாம் என முடிவெடுக்கிறான். அதற்குரிய மந்திரத்தைச் சொல்லி அதை விடத் தயாராகும்போது விபீடணன் இலக்குமணனின் அருகில் சென்று திருமாலின் படைக்கலனைப் பயன்படுத்து என்று ஆலோசனை கூறுகிறான். இலக்குமணனும் அவன் சொல்படியே செய்கிறான். இதைக் கண்ட இராவணன் விபீடணனின் சொற்படி இலக்குமணன் நடப்பதால் எனக்குத்தான் துன்பம் நேர்கிறது என்று எண்ணி கோபம்கொள்கிறான்.

விபீடணன் இருக்கும்வரை தன்னால் இலக்குமணனைக் கொல்ல இயலாது என்று நினைத்து தன் மாமனார் மயன் தந்த வேலை எய்து விபீடணனைக் கொல்ல முடிவு செய்கிறான் இராவணன். அந்த வேலின் மகிமையையும் சிறப்பையும் நன்கு அறிந்த விபீடணன் அவ்வேலுக்கு மாற்று படைக்கலமே கிடையாது. அது கட்டாயம் என்னைக் கொன்றுவிடும் என்று இலக்குமணனிடம் புலம்புகிறான். அச்சம் கொள்ளவேண்டாம். நான் இவ்வேலை முறியடிப்பேன் என்று பதிலுரைத்துவிட்டு இலக்குமணன் விடும் படைக்கலன்கள் அனைத்தும் வீணாகின்றன. விபீடணன் இறக்கப்போகிறான் என்று தேவர்கள் மனம் கலங்குகின்றனர்.        

தோற்றாலும் புகழ் நிற்கும். தர்மம் வெல்லும். நல்லவர்கள் பாராட்டுவார்கள். அடைக்கலமாக வந்தவனை காப்பாற்றாவிட்டால் பெரும்பழி வந்து சேரும். அதனால் அவ்வேலை நான் என் மார்பில் வாங்கிக் கொள்கிறேன் என்று இலக்குமணன் முன்வருகிறான். அவனைத் தடுத்து விபீடணன் முன்போக, விபீடணனைத் தடுத்து அங்கதன் முன்செல்ல, அங்கதனை விலக்கி கொண்டு சுக்ரீவன் போக, அனைவருக்கும் முன்னால் அனுமன் போகிறான். இதனைக் கண்ணுற்ற இலக்குமணன் அவர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி காற்றைவிட விரைந்து சென்று அவ்வேலை தன்மார்பில் ஏந்தி இறந்துபோகிறான். இலக்குமணன் இறந்தது தெரிந்தால் என் மன்னவன் இராமன் உயிர் வாழமாட்டான். பின் நான் மட்டும் இருந்து என்ன பயன்? நானும் உயிரை விடுகிறேன் என்று புலம்பும் விபீடணனைச் சாம்பவன் தடுத்து நிறுத்துகிறான்.

மூல பல சேனையோடு தனி ஒருவனாக போரிடும் இராமன் இருக்குமிடம் செல்லும் இராவணன் நான் மயன் தந்த வேலைக் கொண்டு இலக்குமணனைக் கொன்றுவிட்டேன். அதனைக் கண்டால் இராமன் உயிர்துறப்பது நிச்சயம். அதன்பிறகு வெற்றி எனக்குத்தான் என்று கூறி மகிழ்கிறான். அதனைக் கேட்டு கலக்குமுறும் இராமனுக்கு அனுமன் மீண்டும் கொண்டு வந்த சஞ்சீவி மலையால் இலக்குமணன் உயிர் பிழைத்த செய்த செய்தி சொல்லப்படுகிறது.

இலக்குவணனின் செயலால் மனம் மகிழ்ந்த இராமன் தன் இளவலை நோக்கி தம்பி! சூரிய வம்சத்தில் பிறந்தவன் என்பதை நிரூபித்துவிட்டாய். அடைக்கலம் என்று தஞ்சம் புகுந்தவனுக்காக நீ உயிர் விடத் துணிந்தது உன் தகுதிக்கு மீறிய செயல் அன்று. நீ செய்ய ஏற்ற செயல்தான் என்று புகழ்கிறான்.

அன்னை சொன்னது போலவே முன்னம் முடிகிறான் இலக்குமணன். விபீடணனுக்காக உயிர் துறந்தாலும் மறைமுகமாக இராமனுக்காகச் செய்த தியாகம் அது. ஒருவேளை இலக்குமணனுக்குப் பதிலாக விபீடணன் இறந்திருந்தால் அடைக்கலமாக வந்தவனை பலி கொடுத்துவிட்டோமே என்று மருகி இராமன் உயிர்துறப்பது நிச்சயம். அதைத் தடுக்க இலக்குமணன் முன்னம் முடிகிறான். இதன் தொடர்புடைய பாடல்கள் கீழே.

யுத்த காண்டம்வேல் ஏற்ற படலம்.
காக்கல் ஆகலாக் கடுப்பினில்  தொடுப்பன கணைகள்,
நூக்கினான், கணை நுறுக்கினான்,  அரக்கனும்,  “நூழில்
ஆக்கும் வெஞ்சமத்து அரிது இவன்தனை வெல்வது, அம்பால்;
நீக்கி என்  இனிச் செய்வது? என்று இராவணன் நினைந்தான். (9551)

மோகம் ஒன்று உண்டு; முதலவன் வகுத்தது முன்னாள்;
ஆகம் அற்றது; கொற்றமும் சிவன் தனை அழிப்பது;    
ஏகம் முற்றிய விஞ்சையை இவன் வயின் ஏவி,
காகம் உற்று உழல் களத்தினில் கிடத்துவென் கடிதின். (9553) 

என்பது உன்னி அவ் விஞ்சையை மனத்திடை எண்ணி,
முன்பன்மேல் வரத் துரந்தனன் ; அது கண்டு முடுகி,
அன்பின் வீடணன், “ ஆழியான் படையினின் அறுத்தி
என்பது ஓதினன்; இலக்குவன் அது தொடுத்து எய்தான். (9554)

வீடணன் சொல்ல விண்டுவின் படைக்கலம் விட்டான்.  
மூடு  வெஞ்சின மோகத்தை நீக்கலும், முனிந்தான்.
மாடு  நின்றவன் உபாயங்கள் மதித்திடவந்த 
கேடு நம்தமக்குஎன்பது  மனம் கொண்டு கிளர்ந்தான். (9555)

மயன் கொடுத்தது; மகளொடு; வயங்கு அனல் வேள்வி
அயன் படைத்துளது; ஆழியும் குலிசமும் அனையது;
உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது; உருமின்,
சயம்தனைப் பொரும் தம்பியை உயிர் கொளச் சமைந்தான் (9556)

விட்ட போதினின் ஒருவனை வீட்டியே மீளும்,
பட்ட போது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும்.
வட்ட வேல் அது வலம் கொண்டு வாங்கினன், வணங்கி,
எட்ட நிற்கலாத் தம்பிமேல் வல்விசைத்து எறிந்தான். (9557)

எறிந்த காலையில் வீடணன் அதன் நிலை எல்லாம்
அறிந்த சிந்தையன், “ ஐய ! ஈது என்னுயிர் அழிக்கும்.
பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலைஎன்றலும் பெரியோன்,
அறிந்து போக்குவல், அஞ்சல் நீஎன்று இடை அணைந்தான். (9558)

எய்த வாளியும் ஏவின படைக்கலம் யாவும்,
செய்த மா தவத்து ஒருவனைச் சிறு தொழில் தீயோன்
வைத வைவினில் ஒழிந்தன;  “ வீடணன் மாண்டான்
உய்தல் இல்லை “  என்று உம்பரும் பெரு மனம் உலைந்தார். (9559)  
    
தோற்பென் என்னினும் புகழ் நிற்கும் ; தருமமும் தொடரும்
ஆர்ப்பர்  நல்லவர் ; அடைக்கலம் புகுந்தவன் அழியப் 
பார்ப்பது என்? நெடும் பழி வந்து தொடர்வதன் முன்னம் 
ஏற்பென் என் தனி மார்பின் என்று இலக்குவன் எதிர்ந்தான். (9560)
    
இலக்குவற்கு முன் வீடணன் புகும்; இருவரையும்
விலக்கி அங்கதன் மேற்செல்லும் ; அவனையும் விலக்கி,
கலக்கும் வானரக் காவலன்; அனுமன் முன் கடுகும்;
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ? (9651)

முன் நின்றார் எலாம் பின் உற, காலினும் முடுகி,
நின்மின்; யான் இது விலக்குவென்என்று உரை நேரா
மின்னும் வேலினை, விண்ணவர் கண் புடைத்து இரங்கப்,
பொன்னின் மார்பிடை ஏற்றான், முதுகிடைப் போக.  (9652)

பொன் அரும்பு உறு தார்ப் புயப் பொருப்பினான் பொன்ற,
என் இருந்து நான்? இறப்பபென் , இக்கணத்துஎனை ஆளும்
மன் இருந்து இனி வாழ்கிலன்: என்றனன் மறுக,
நில் நில்என்றனன் சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும். (9658)
 
இளவலை நோக்கி , ஐய! இரவிதன் குலத்துக்கு ஏற்ற,
அளவினம்; அடைந்தோர்க்கு ஆகி, மன் உயிர் கொடுத்த வன்மைத்
துளவு இயல் தொங்கலாய்! நீ அன்னது துணிந்தாய் என்றால்,
அளவு இயல் அன்று; செய்தற்கு அடுப்பதேஆகும் அன்றே (9578)

யுத்த காண்டம்இராவணன் களம் காண் படலம்.

இலக்குவன் தன்னை வேலால் எறிந்து, உயிர் கூற்றுக்கு ஈந்தேன்   அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர் ; அதனைக் கண்டால் உலக்குமால் இராமன்; பின்னர் உயிர்ப் பொறை உகவான்; உற்ற   மலக்கம்  உண்கின் ஆக ; வாகை என் வயத்தது என்றான். (9633)

மேலே நிகழ்ந்த காட்சிக்கான ஒரு குறிப்பை கும்பகர்ணன் வதைப்படலத்திலேயே கம்பன் கோடிட்டுக் காட்டுகிறார். இறக்கும் தருவாயில் கும்பகர்ணன் இராமனிடம் தனது கடைசி ஆசையாக விபீடணனை எப்படியாவது இராவணனிடமிருந்து காப்பாற்றும்படி வேண்டுகிறான். இராவணன் விபீடணன் மீது அளவில்லா வஞ்சம் கொண்டிருக்கிறான். தம்பி என்றும் பாராமல் ஒருநாள் அந்த வேல் அரக்கன் விபீடணனைக் கொல்ல முயல்வான். அதனால் உன் தம்பி. நீ, அனுமன் மூவரும் அவனைவிட்டுப் பிரியாமல் இருந்து காக்கவேண்டும் என்று இரைஞ்சுகிறான். வரிசையில் இலக்குமணனைத்தான் முதலில் குறிப்பிடுகிறான். அதன்படி இலக்குமணனே விபீடணனைக் காப்பாற்றுவது கம்பனின் சிறப்பு.    
யுத்த காண்டம்கும்பகருணன் வதைப் படலம்.

வெல்லுமா நினக்கின்ற வேல் அரக்கன், “வேரொடும்
கல்லுமா முயல்கின்றான், இவன்என்னும் கறுவுடையான்.
ஒல்லுமாறு இயலுமேல், உடன் பிறப்பின் பயன் ஓரான்,
கொல்லுமால், அவன் இவனை ; குறிக்கோடி, கோடாதாய்! (7626)

தம்பி என நினைத்து இரங்கித் தவிரான் அத் தகவு இலான்;
நம்பி இவன் தனைக் காணின் கொல்லும்; இறை நல்கானால்;
உம்பியைத்தான், உன்னைத்தான், அனுமனைத்தான் ஒருபொழுதும்
எம்பி பிரியானாக அருளுதி; யான் வேண்டினேன் (7627)

ஒருவேளை இலக்குமணன் உயிர் விடாமல் தோற்றுப் போய் இராவணனுக்கு போர் அடிமையாக மாறி இருந்தால் அவனது நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை கீழே உள்ள பாடல்களின் வழியாக நாம் ஊகிக்கலாம். இராவணனின் சபையில் பணை என்ற கருவி ஒலிக்கும் போதெல்லாம் நாள் பலன்களைக் கூறிக்கொண்டு நிற்கும் எமதர்மனின் நிலை இலக்குமணனுக்கும் ஏற்பட்டிருக்காலம். இல்லையென்றால் இராவணனின் மாளிகையில் விளக்குகளை ஏற்றி பணிபுரியும் அக்னிபகவானின் நிலை ஏற்பட்டிருக்கலாம். இதுபோன்ற இழிவான நிலைக்கு ஆளாகாமல் இலக்குமணன் உயிர்விட்டதுதான் செய்யத்தக்க செயல் என்று இராமன் சுட்டிக்காட்டுகிறான்.  

ஆரணிய காண்டம்சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்

சூலமே முதலிய துறந்து, சுற்றிய
சேலையால் செறிய வாய் புதைத்த செங்கையன்,
தோலுடை நெடும் பணை துவைக்குந்தோறு எலாம்
காலன் நின்று இசைக்கும் நாள் கடிகை கூறவே. (3083)

நயம் கிளர் நான நெய் அளாவி, நந்தல் இல்
வியன் கருப்பூரம் மென் பஞ்சின் மீக்கொளீஇ
கயங்களில் மரை மலர்க் காடு பூத்தென்ன,   
வயங்கு எரிக் கடவுள் விளக்கம் மாட்டவே. (3084) 


No comments:

Post a Comment