Tuesday, February 21, 2017

கானகனோடு கழித்த கணங்கள்

எழுத்தாளரும் நண்பருமான லஷ்மி சரவணகுமார் அவர்களை முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு நடந்த புத்தகக் கண்காட்சியில் சந்தித்தேன். பிறகு சிங்கைக்குப் புறப்படுமன்று விமான நிலையத்திற்கு வழியனுப்ப வந்திருந்த அவருடன் நடந்த உரையாடல் மறக்கவே முடியாத ஒன்று. அதன் பிறகு உரையாடல் வாட்ஸ்அப்பில் தொடர்ந்தது. சமீபத்தில் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா ஆகிய இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போகிறேன் என்று அவர் சொன்னவுடன் அவருடனான அடுத்த சந்திப்புக்கு ஆவலாக காத்திருந்தேன்.

பொதுவாக இங்கே எழுத்தாளர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களது நூலை எடுத்து வாசிப்பது என் வழக்கம். அதனால் லஷ்மியின் மயான காண்டத்தோடும், யானையோடும் அலைந்து கொண்டிருந்தேன். ஏற்கனவே கானகன் நாவலை வாசித்து வாசிப்பனுபவத்தை அவரிடம் பகிர்ந்திருக்கிறேன். அவரது சிறுகதைத் தொகுப்புகள் லஷ்மியை வேறு ஓர் ஆளாக எனக்கு அறிமுகப்படுத்தின என்றுதான் சொல்லவேண்டும். நாவல் என்ற களத்தைவிட சிறுகதை என்ற களத்தில் லஷ்மி அதிகமாக ஸ்கோர் செய்கிறார் என்பதை உணர்ந்தேன்.

அவர் வந்தவுடன் சந்திக்கலாம் என்று பேசி முடிவு செய்த நாளில் என் உடல்நலக்குறைவு காரணமாக சந்திக்க இயலாமல் போனது மிகுந்த வருத்தத்தை அளித்தது. நல்லவேளையாக, பிப்ரவரி 12 ஆம் தேதி ஞாயிறு மாலை தங்கமீன் வாசகர் வட்டத்தில் அவர் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்முறை தவறவிடக்கூடாது என்று நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் முன்பாகவே சில நண்பர்களோடு அவரைச் சந்தித்தேன். லேசான மழைச்சாரலோடும்   சூடான தேநீரோடும் ஒரு மணி நேரம் சென்றதே தெரியாமல் அற்புதமான உரையாடல் நடந்தேறியது. அதன்பிறகு அனைவரும் தங்கமீன் வாசகர் வட்ட நிகழ்ச்சிக்குச் சென்றோம். அங்கும் வாசகர்களின் கேள்விகளுக்கு லஷ்மி உற்சாகமாக பதிலளித்தார்.

குடும்பச்சூழலின் காரணமாக அனாதை ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டதையும் அங்கு தனது முதல் வாசிப்பாக பைபிள் இருந்ததையும் (கடந்த வருடம் சிங்கை வந்திருந்த எழுத்தாளர் திரு.ஷோபாசக்தி தான் அதிக முறை வாசித்தது பைபிள்தான் என்று சொன்னது நினைவுக்கு வந்து மீண்டது) குறிப்பிட்டவர் வாசிப்பிலிருந்து எழுத்துக்கு வந்ததற்கு முக்கிய காரணமாக தனது ஆசிரியர்களைக் குறிப்பிட்டார். அவர்கள் அறிமுகப்படுத்திய இலக்கியம் குறிப்பாக ரஷ்ய இலக்கியம் அதுவரை பைபிள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த தனக்கு முற்றிலும் புதுமையான, வித்தியாசமான அனுபவமாக அமைந்தது என்றார்.

உலக அளவில் பரவலான கவனத்தைப் பெற்றதும் இந்தியாவில் அதிர்வுகளை ஏற்படுத்தி சில ஆண்டுகள் தடை செய்யப்பட்டதுமான RAM KE NAAM (ANAND PATVARDAN) என்ற ஆவணப்படத்தைப் பார்க்க நேரிட்டதையும் அதன் மூலம் வாசிப்பது, புத்தகம் படிப்பது மட்டுமே அல்லாமல் PRESENTATION  என்பது முக்கியம் என்பதையும்  எதைப் படைக்க வேண்டும், நாம் யோசிக்கும் ஒரு விஷயத்தை எப்படி மக்கள் முன்வைக்க வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டதாக சொன்னார். ஆரம்பத்தில் இடதுசாரி இயக்கம் சார்ந்த, தத்துவங்கள் சார்ந்த நூல்களை வாசித்ததால் தொடக்கத்தில் கட்டுரைகள்  எழுதிக்கொண்டிருந்ததாகவும் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அதில் ஏற்பட்ட சோர்வாலும் அது தனக்கான வடிவம் இல்லை என்ற தெளிவாலும் சிறுகதை எழுத ஆரம்பித்ததாக கூறினார்.

விமர்சனத்தைப் பற்றிய கேள்வி எழுந்தபோது யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால் விமர்சனம் என்று வரும்போது குறைந்தபட்சம் சில அடிப்படைகளையாவது விமர்சகர் அறிந்திருக்க வேண்டும் என்றார். க.ந.சு. தமிழுக்கு செய்தது மாபெரும் கொடை என்றாலும் ஒரு படைப்பை முற்றிலும் ஆதரிப்பது அல்லது முற்றிலும் நிராகரிப்பது என்ற அவரது விமர்சனப் பார்வையில் தனக்கு உடன்பாடில்லை என்றார். தமிழ் விமர்சன வரலாற்றில் ஈழ எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது என்றவர் அங்கிருந்துதான் ஒரு படைப்பைக் கோட்பாட்டின் அடிப்படையில் (மார்க்சியம், பின்நவீனத்துவம்......) எப்படி அணுகுவது என்பது தொடங்கியது என்று குறிப்பிட்டார்.

சில குறிப்பிட்ட வார்த்தைகளை வைத்துக் கொண்டு அவற்றை மாற்றி போட்டோ,  கலைத்துப் போட்டோ ஒரு கவிதையை உருவாக்க முடியும். அதே போல ஒரு தமிழ் அகராதியும், பத்து புகழ்பெற்ற சிறுகதைகளையும் வைத்துக்கொண்டு ஒரு சிறுகதையை உருவாக்கி விட முடியும். கவிதைகள், சிறுகதைகள் ஆகியவை TECNIQUE ஆக மாறி வருவது போல விமர்சனமும் ஒரு TECNIQUE ஆகிவிடுமோ என்ற கவலை தனக்குண்டு என்றார்.   

எல்லாக் கலை வடிவங்களுக்கும் ஒரு கோட்பாடு அவசியம், கோட்பாட்டின் ரீதியாக ஒரு கலையைப் பார்க்கும்போது அது முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தை அடைகிறது. அனைவருக்கும் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லாவிட்டாலும் ஆர்வம் இருப்பவர்கள் அதை தேடிச் சென்று படிக்கலாம். இங்கு பெரும்பாலானோர் கோட்பாடு என்பதற்கும் இலக்கியத்திற்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறார்கள். அது தவறு. கோட்பாடு என்பது ஓர் அனுமானம். நாம் வாழும் காலத்தில் சமூகத்தில் வாழ்க்கை முறை எவ்வாறு உள்ளது. அந்த வாழக்கை முறையைப் பிரதிபலிக்கும் கலை எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்வதுதான் கோட்பாட்டின் அடிப்படை. ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்க்கை முறை மாறும்போது கோட்பாடு மாறும். இப்படித்தான் இருத்தலியம், போஸ்ட் காலனிசம், போஸ்ட் மாடர்னிசம் என்று மாறிக்கொண்டே உள்ளன. தற்போது ஓவியக் கோட்பாடுகளைப் பற்றி சி.மோகன் எழுதுகிறார். இசைக் கோட்பாடுகளை பற்றி எழுத தனி பயிற்சி தேவை. சினிமாக் கோட்பாடுகளைப் பற்றி எழுதுபவர்கள் இப்போது வர ஆரம்பித்திருக்கிறார்கள் என்று கோட்பாட்டைப் பற்றி தனது பார்வையை விரிவாக முனைவைத்தார்.

அதிகமாக எழுதுவதோ குறைவாக எழுதுவதோ ஓர் எழுத்தாளனின் ஆளுமையைப் பொறுத்தது என்றவர் அதிகமாக எழுதும்போது சொந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட அது ஒரு சுயவதையாக இருந்தாலும் எழுத்தாளனை வதைக்கும் விஷயங்களைக் எழுத்தில் கொட்டிய பிறகு கிடைக்கும் விடுதலை அதில் உள்ள அனுகூலம் என்றார்.

என்னைப் போன்று கோணங்கியைப் போன்று ஒரு நாடோடித்தனமான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு நிறைய வாழ்க்கை வாழவும் நிறைய மனிதர்களைச் சந்திக்கவும் வாய்ப்பு கிட்டுகிறது. என் கதைகள் என் அனுபவம் மட்டுமல்ல. நான் சார்ந்த மனிதர்களின் அனுபவங்களும்தான் என்றார். நாடக கலைஞர்களைப் பற்றிய கதையில் நீங்கள் எழுதியிருப்பது போல அவ்வளவு மோசமான வாழ்க்கையா அவர்களுடையது?” என்று எழுந்த கேள்விக்கு உங்களுக்கு அது மோசமான வாழ்க்கையாகத் தெரியலாம். என்னுடைய, அவர்களுடைய பார்வையில் அது மோசமான வாழ்க்கை கிடையாது. உலகில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் வழிபாடு என்பது அடிப்படை காரணமாக இருப்பதால் அதற்கு எதிராக என் கதையை முன்வைக்க விரும்பினேன்”, என்றார். அதே சமயம் குறுகிய காலத்தில் நடக்கும் ஒரு சிறுகதையில் அதிர்ச்சியூட்டும் வகையில் திணிக்கப்பட்ட பாலியல் விஷயங்கள் அவசியம்தானா என்ற கேள்விக்கு அதை கருத்தில் கொள்வதாக பதிலளித்தார்.

எழுதுவதே மட்டுமே அல்ல நான். இந்த சமூகம் சார்ந்த மனிதனும்தான் நான். ஒரு பிரச்சனை நடக்கப்போகிறது என்று கைகாட்டுபவன் எழுத்தாளன் அல்ல. அந்தப் பாதையில் முன்னால் சென்று அதன் சாதக, பாதகங்களை முன்கூட்டியே சொல்பவன் எழுத்தாளன். அப்படி இருக்கவே நான் விரும்புகிறேன் என்றார். ஏற்கனவே பல தகவல்களையும் செய்திகளையும் சேகரித்து வைத்திருந்தாலும் பண நெருக்கடியான சூழலில் போட்டியில் கிடைக்கும் பரிசுத் தொகைக்காக இரண்டே நாளில் கானகனை எழுதி முடித்தேன் என்றார்.

மொழி சார்ந்து இயங்கும் ஓர் எழுத்தாளன் மொழி சார்ந்த ஒரு சிக்கலை சமூகம் எதிர்கொள்ளும்போது அதிகார மையம் தனக்கு அளித்த அங்கீகாரத்தைத் திருப்பி தருவதன் மூலம் தனது எதிர்ப்பை பதிவு செய்வது தார்மீக கடமை என்று உணர்ந்ததால் யுவபுரஸ்கார் விருதை திருப்பி அளித்தேன். எந்த ஒரு கவன ஈர்ப்புக்காகவும் நான் அதை செய்யவில்லை என்றார்.

எழுத்தாளனைக் கொண்டாடுவது, புத்தக வாசிப்பு போன்றவற்றில் தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் உள்ள பெரிய வேறுபாட்டை கூறியவர் கேரளாவில் சமூகப் பிரச்சனைக்கு முதலில் தெருவில் இறங்குபவன் எழுத்தாளன்தான். ஆனால் தமிழகச்சூழலில் எந்தவித செயல்பாடுமற்ற எழுத்தாளர்கள் சமூகத்தைக் குறை சொல்வது தவறு. மக்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான நெருக்கம் இதுபோன்ற செயல்பாடுகளால்தான் அதிகரிக்கும் என்றார்.

சமகாலத்தைத்தான் எழுதவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் கடந்தகாலத்தை எழுதும்போது அதை யாருடைய பார்வையில் எழுதுகிறோம் என்பது முக்கியமாகிறது. இங்கு எழுதப்பட்ட அத்தனை வரலாறும் அரசர்களின் பார்வையில்தான் இருக்கிறது. ஓர் எளிய குடிமகனின் பார்வையில் கடந்த கால வரலாற்றைப் பதிவு செய்வது எழுத்தாளனின் கடமையாகிறது என்றார். 

சிங்கை, மலேசிய இலக்கியங்களைப் பற்றிய கேள்விக்கு தான் அதிகம் வாசித்ததில்லை என்றாலும் ஒன்றிரண்டு வருடங்கள் கவனித்ததில் என்னால் சிலவற்றை உணர முடிந்தது என்றார். மலேசிய இலக்கியத்தில் குறைகள் இருந்தாலும் சிறிய வளர்ச்சி தென்படுகிறது. ஆனால் சிங்கையில் எழுதுபவர்களிடம் ஓர் அடையாளச் சிக்கல் காணப்படுகிறது. கவிதைகள், கதைகள் எல்லாவற்றிலும் பெரும்பாலும் NOSTALGIA தான் பிரதிபலிக்கிறது. கிட்டத்தட்ட தமிழகச் சூழலைத்தான் பிரதிபலிக்கிறது. எழுதப்பட்ட இடத்தில் உள்ள வாழ்க்கையைப் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் எழுகிறது. இச்சூழலுக்கு வெளியே இருப்பவர்கள் சொல்லும் கருத்துகளைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி நடக்கும் இடத்தில் கலாச்சாரச் சிக்கல்கள் அதிக அளவில் உண்டாகும். ஆனால் இங்குள்ள கலை அதை சரியாகப் பிரதிபலிக்கவில்லை. மற்ற இனத்தவர்களுடனான கலை இலக்கிய உரையாடல்கள் நிகழாதது குறையாகத் தோன்றுகிறது. ஒரு நாளில் ஓர் எழுத்தாளனை மதிப்பிட முடியாது. தொடர்ந்து எழுத்தில் அவனது செயல்பாட்டை வைத்துதான் அவனை மதிப்பிட முடியும். எந்த வடிவம் (கவிதை, சிறுகதை, நாவல்) தனக்குச் சரியாக வருகிறது என்பதை ஓர் எழுத்தாளன் தொடர் செயல்பாட்டில் மட்டுமே கண்டறிய முடியும் என்றார்.

கதைகளில் கவித்துவமாக தருணங்களை எழுதிக்கொண்டு வரும்போது சட்டென்று நாடகத்தனமான காட்சிகளை முன்வைப்பது அவசியம்தானா என்று எழுந்த கேள்விக்கு நிறைய எழுதும்போது வரும் சிக்கல் இது என்றவர், வாசகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக செய்யும் சில கிம்மிக்ஸ்கள்தான் இவை. கட்டாயம் இவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பதை ஒப்புக்கொண்டார்.

தமிழ்நாட்டில் இருக்கும் சில எழுத்தாளர்கள் மீது இங்கிருப்பவர்களுக்கு அதிக மயக்கம் இருப்பது போலத் தெரிகிறது என்றார். திருமணம் முடிந்தவுடன் மனைவியை அழைத்துக்கொண்டு மலையாள எழுத்தாளர் பஷீரைச் சந்திக்க லஷ்மி சென்றதும் அப்படியான ஒரு மயக்கத்தில்தான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பல விஷயங்களை வெளிப்படையாகவும் சரியான தரவுகளோடும் முன்வைத்த லஷ்மி உடனான கலந்துரையாடல் மனதுக்கு நிறைவாக இருந்தது.        


 புகைப்பட உதவிதிருமதி.ரமா சுரேஷ் 

        

No comments:

Post a Comment